வேதியா, வேதகீதா, விண்ணவரண்ணா, என்றன்சோதியே, மலர்கள் தூவியொருங்கி நின்கழல்கள் காண பாதியோர் பெண்ணைக் கொண்டவனே, படர்சடை மதியஞ்சூடும் ஆதியே, ஆண்டவனே, அழகனே, அறிவனே என்று
அல்லும் பகலும் அனவரதமும் தம் உள்ளத்திலே கொண்டு, தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் சிவத்தொண்டுக்காகவே தத்தம் செய்து, மெய்யிலே திருநீறு, வாயிலே திருவைந்தெழுத்து, நினைவிலே சிவ உருவு, நெஞ்சிலே சிவநேசம், உணர்விலே சிவபக்தி, சிந்தனையெல்லாம் சிவமயம் என்று வாழ்ந்து சிவத்தொண்டிற்காக, எவரும் செய்ய நினைக்கக் கூடிய செயல்களை செய்த தொண்டர்கள்தாம் 63 நாயன்மார்கள்.
சிவனடியே சிந்தித்து, சிவத் தொண்டிற்கே தங்களை அர்பணித்துக் கொண்டு, உடல் பொருள் ஆவி அனைத்தையும் அந்த சிவபெருமானுக்கே தத்தம் செய்த அன்பர்களை பெருமைப் படுத்தும் நாள். இறைவன் கழல் ஏத்தும் செல்வமே செல்வம், சிவத்தொண்டே தம் வாழ்க்கை இலட்சியமாக வாழ்ந்து பெறக்கரிய பேறு பெற்ற அறுபத்து மூவர்களுக்கும் ஐயன் அருள் வழங்கும் நாள்தான் அறுபத்து மூவர் திருவிழா.
<!--[if gte mso 9]>
அன்பர்கள் ஐயனை வணங்கியபடி முன்னே செல்ல ஐயன் அவர்களுக்கு காட்சி கொடுத்துக் கொண்டே பின்னே செல்லும் நாள். மொத்த தமிழகமும் அந்த மாட வீதிகளிலே குவியும் நாள் மயிலையில் மற்ற தெய்வங்களும் ஐயனுடன் வலம் வரும் நாள் மண்குடத்திலே தாங்கள் வேண்டிக் கொண்டபடி பிரசாதம் இறைவனுக்கு படைத்து அதை அன்பர்களுக்கு வழங்கும் நாள். அறுபத்து மூவர் பெருவிழா என்று அழைக்கப்படும் அந்த நாளின் சிறப்பைக் கூறிக்கொண்டே செல்லலாம். 'தொண்டர் தன் பெருமை சொல்லவும் அரிதே" என்று வியந்து தமிழ் மூதாட்டி பாராட்டியது போல ஐயனின் தொண்டர்கள் அறுபத்து மூவரையும் சிறப்பிக்கும் விழா. இவர்கள் பல்வேறு கால கட்டங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில், பல்வேறு குலங்களில், தோன்றியும் கூட சிவபக்தி என்னும் ஒரே சீர்மை பெற்ற அருள் கூடாரத்துள் ஒன்றுபட்டவர்கள். இவர்களுள் கிரகஸ்தர்களும் உண்டு, பிரம்மச்சாரிகளும் உண்டு. இசைஞானியார், அனைத்துயிர்களுக்கும் அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைத்த காரைக்கலம்மையார், கூன் பாண்டியனாய் இருந்து நின்ற சீர் நெடுமாறனாக ஞானசம்பந்தப் பெருமானால் மாற்றப்பட்ட பாண்டியனின் துணைவி மங்கையர்க்கரசியார் ஆகிய மூன்று பெண்களும் உண்டு.
திருஞான சம்பந்தரால் என்பிலிருந்து பெண்ணாகிய
அங்கம் பூம்பாவை
காலை சுமார் பத்து மனியளவில் தொடங்குகின்றது இந்த அற்புதத் திருவிழா.அம்மையின் ஞானப்பலுண்டு ஐயனிடம் பொற் தாளமும், முத்துப் பந்தலும், முத்துசிவிகையும் பெற்ற திருஞானசம்பந்தப்பெருமான் இந்த திருமயிலையில் நிகழ்த்திய அந்த அற்புத நிகழ்ச்சியாம் என்பான பெண்ணை உயிருடன் கொண்டு வந்த வரலற்றை ஐதீக முறைப்படி நிகழ்த்திக் காட்டுவதை மையமாகக் கொண்டே இவ்விழா சிறக்கின்றது. ஆலயத்திற்கு மேற் புறத்தில் உள்ள எட்டுக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார் ஞான சம்பந்தப்பெருமான் அவரது தந்தையார் சிவபாத இருதயரும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அப்போது மயிலை அன்பர் சிவநேச செட்டியார் சம்பந்தருக்கென்று நிச்சியித்து வைத்திருந்து அரவம் தீண்டி இறந்த பூம்பாவையின் அஸ்தி (இன்று மலர்) கலசத்துடன் அங்கு எழுந்தருளுகின்றார். அம்மண்டபத்தில் அன்று கபாலீச்சுரம் அமர்ந்தான் திருவிழா காணாதே போதியோ பூம்பாவாய் என்று ஆளுடையப்பிள்ளையார் பாடிய பதிகத்தை இன்று ஓதுவா மூர்த்திகள் பாடுகின்றார். சம்பந்தப்பெருமானே பதிகம் பாடுவதாக ஐதீகம், ஒவ்வொரு பாடலின் முடிவிலும் தூப தீப ஆராதனைகள் நிகழ்கின்றன. பத்தாவது பாடலை பாடி முடித்ததும் அந்த அஸ்தி கலசத்திலிருந்து அங்கம் பூம்பாவை உயிர் பெற்று எழுகின்ற வைபவம் பக்த கோடிகளின் பேரார்வ முழக்கத்திற்கிடையே நிகழ்கின்றது. சிவநேசர் அங்கம் பூம்பாவையை ஏற்றுக் கொள்ள வேண்ட இவள் நும் செல்வியல்ல இறையருளால் தோன்றிய எம் செல்வி என்று அங்கம் பூம்பாவையை சிவத்தொண்டில் ஈடுபடுத்திகின்றார் சம்பந்தப் பெருமான்.
மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும்
அண்ணலார் அடியார்தம்மை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல்
உண்மையாம் எனில் உலகர் முன் வருகென உரைப்பார் என்று சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் சீர் பரவும் பெரிய புராணத்தில் அங்கம் பூம்பாவையை உயிருடன் ஞான சம்பந்த பெருமான் அம்மையப்பர் அருளால் எழுப்பிய அற்புதத்தை பாடுகின்றார்.
சிவநேச செட்டியாரும்
மாலை 3 மணியளவில் அம்மையப்பர் 63 நாயன்மார்களுக்கு அருட்காட்சி தரும் நிகழ்ச்சி துவங்குகின்றது ஐயன் சர்வ அலங்காரத்தில் வெள்ளி விமானத்திலும் அம்மையும், சண்முகரும், வினாயகரும், சண்டிகேஸ்வரரும் விமானத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கும் அலங்கார தீபத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்று, பின் திருக்கோவில் வலம் வந்து யாக சாலை பூஜை கண்டருளி பின் விமானங்களில் எழுந்தருளி கோபுர வாசல் வழியாக பஞ்ச மூர்த்திகள் பதினாறு கால் மண்டபம் வந்து அருட்காட்சி தருகின்றனர். முதலில் நால்வர் பெருமக்களும் தனித்தனி பல்லக்கில் வந்து அம்மையப்பர் முன் வந்து வணங்கி நிற்க ஒரே சமயத்தில் ஐயனுக்கும் நாயன்மார்களுக்கும் தீபாராதனை நடைபெறுகின்றது. பின் அவர்கள் அம்மையப்பரை வலம் வந்து அம்மையப்பரை நோக்கியபடி முன் செல்கின்றனர். பின் அங்கம் பூம்பாவையும் சிவநேச செட்டியாரும் வந்து அம்மையப்பரை வணங்கி செல்கின்றனர். பின் மற்ற நாயன்மார்கள் அனைவரும் பவளக்கால் சப்பரத்தில் , நால்வர் ஒரு சப்பரத்தில் எழுந்தருளி அருள் பெற்று செல்கின்றனர் அனைத்து நாயன்மார்களும் அம்மையப்பரை வணங்கி சென்ற பின் அம்மையப்பர் மண்டபத்தை விட்டு திருவீதி உலா புறப்படுகின்றனர். அப்போதே மாட வீதியெங்கும் மக்கள் வெள்ளம், திருமயிலையின் நடுவே உள்ள கோவிலை நோக்கி வருகின்ற எல்லா வழிகளிலும் மக்கள் கூட்டம் தேன் கூட்டை நோக்கி தேனீக்கள் வருவது போல அறுபத்து மூவர் திருவிழாவை காண வருகின்றது.
மாட வீதியில் மயிலையின் முண்டககக்கண்ணி அம்மன், கோலவிழியம்மன், திரௌபதி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகியோர் பக்தர்களுக்கு அருட் காட்சி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். பின் வினாயகப்பெருமான் முன்னே வர அறுபத்து மூவர்கள் ஐயனை நோக்கியபடி வரிசைக்கு இரண்டு சப்பரமாக வருகின்றனர் அவர்களுக்கு அருட்காடசி தந்த படி வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரர் வருகின்றார் அவருக்குப் பின்னால் அம்மை கற்பகவல்லி, பின் சண்முகர் அவருக்குப்பின் சண்டிகேஸ்வரர் என்று கபாலீச்சுவரத்தின் மூர்த்திகள் வர அவர்களுக்குப் பின் வாசுகியுடன் உலக பொதுமறையாம் திருக்குறள் அருளிய திருவள்ளுவர் வருகின்றார். அவர்களுக்குப்பின் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வந்த சுப்பிரமணியரும் திருவீதி உலா வருகின்றார். பின் பிரம்மாண்டமாய் கோலவிழி அம்மன் வருகின்றார்.
அறுபத்து மூவருக்கும் அருள் பாலிக்கும் கோலம்
4 comments:
கட்டுரைக்கும், தரிசனத்திற்கும் நன்றி ஐயா.
தங்களின் எழுத்து "போதியோ பூம்பாவாய்" நிகழ்வை கண் முன்னே நிகழ்த்தியுள்ளது.
நன்றி ஐயா.
தாங்கள் என்ன ஆயிற்று சில மாதங்களாக பதிவு எதுவும் இடவில்லை என்று கேட்டதால் அவசரமாக இட்ட பதிவு.குறைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளவும். இன்னும் படங்கள் அடுத்த பதிவில் இடுகின்றேன் ஐயா.
மிக்க நன்றி குமரன் ஐயா, தங்கள் பங்குனி உத்திர பதிவு அருமையாக இருந்தது.
Post a Comment