Sunday, February 22, 2009

மஹா சிவராத்திரி விரதம்

அன்னை பார்வதி சிவ பூஜை செய்யும் காட்சி



விரி கடலும், மண்ணும், விண்ணும், மிகு தீயும், புனல், காற்றாகி எட்டு திசையான சங்க வெண்குழைக் காதுடை செம்பவள மேனி எம் இறைவன் சிவ பரம் பொருளுக்கு மிகவும் உகந்த அஷ்ட மஹா விரதங்களாக ஸ்கந்த புராணம் கூறுபவை 1. சோம வார விரதம், 2.திருவாதிரை, 3.உமா மஹேஸ்வர விரதம், 4. மஹா சிவராத்திரி விரதம், 5.கேதார விரதம், 6. கல்யாண விரதம், 7. சூல விரதம் 8. ரிஷப விரதம், ஆகியவை ஆகும்।



இந்த விரதங்கள் அனைத்தும் நமது உடலையும் உள்ளத்தையும் து‘ய்மைப்படுத்தி இந்த சம்சார சாகரத்திலிருந்து நம்மை விடுவித்து அந்த இறைவனுடைய திருவடியில் சரணடைய உதவுகின்றன। இவற்றுள் மஹா சிவராத்திரியின் மேன்மையையும், அதைக் கொண்டாடுவதால் நாம் அடையும் பலன்களையும் இந்த நன்னாளை ஒட்டி திருவிழாக்கள் நடைபெரும் இரு அம்மன்களின் வரலாறுகளையும் பற்றிப் பார்ப்போமா?


மஹா சிவராத்திரி நாள்: அகில உலகமும் பெருங் கடல் மூடிப் பிரளயம் ஏற்படும் ஊழிக் காலத்தில் சகல ஜீவ ராசிகளும் எம் ஐயனின் காலடியில் ஒடுங்குகின்றன. அப்போது கங்காளராய் எம் ஐயன் மீண்டும் படைப்புத் தொழிலைத் தொடங்க ஓம் என்னும் பிரணவத்தை நல் வீணையில் வாசித்துக் கொண்டு இருப்பார். இதை அப்பர் பெருமான் தம் பதிகத்தில் இவ்வாறு பாடுகின்றார்,

பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் கபேளரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை நல் வீணை வாசிக்குமே!.


திருக்காளத்தி வாயு லிங்கம்


அந்த பிரளய காலத்தில் எம் அம்மை பார்வதி உயிர்களுக்கு இரங்கி தவம் கிடந்து இறைவனை பூஜை செய்த இரவே சிவராத்திரி ஆகும். பின்னர் படைப்பு தொடங்கிய பிறகு இந்நாளில் இறைவனை வணங்குபவர்களுக்கு இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் எல்லா நன்மைகளையும் வழங்க வேண்டும் என்ற அம்மையின் வேண்டுகோளுக்கிணங்கி சிவ ராத்திரி நன்னாளில் அவரை வழிபடுபவர்களுக்கு இம்மையில் எல்லா சுகங்களையும் அளிப்பதுடன் வீடுப் பேற்றையும் அருளுகின்றார்.



தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் விஷ்ணுவும் சண்டையிட்டனர், அவர்களது கர்வத்தை அடக்க சிவ பெருமான் பெரிய நெருப்பு பிழம்பாய் நின்று அடியும் முடியும் கண்டு பிடிக்குமாறு கூற இருவராலும் கண்டுபிடிக்க முடியாமற் போனது। இவ்வாறு எம்பெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாய் நின்ற நாள் திருக்கார்த்திகை ஆகும். பின் இருவரும் சிவ லிங்க ரூபமாக அவரை வணங்காத தமது தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்ட, மஹா சிவராத்திரி நன்னாளில் எம்பெருமான் லிங்க ரூபமாக தோன்றி இருவருக்கும் அருள் வழங்கின நாள் என்பதும் ஒரு ஐதீகம்.

தேவி தவமிருந்து இடப்பாகம் பெற்ற நாள்,

அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதம் பெற்ற நாள்,

கண்ணப்பர் கண்ணை அப்பி முக்தி பெற்ற நாள்,

பாகீரதன் தவம் செய்து கங்கையை நிலவுலகிற்கு கொண்டு வந்த நாள்
\
என்று இந்நாளின் சிறப்புக்காக பல்வேறு ஐதீகங்கள் உள்ளன.

சிவராத்திரி நித்ய, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணம் கூறுகின்றது.

நித்ய சிவராத்திரி : தினம் தோறும் வரும் இரவு நித்ய சிவராத்திரி ஆகும்.

மாத சிவராத்திரி : ஒவ்வொரு மாதமும் வரும் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி மாத சிவராத்திரி ஆகும்.

பக்ஷ சிவராத்திரி : மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ பிரதமை முதல் சதுர்த்தசி வரை 13 நாட்கள் பக்ஷ சிவராத்திரி ஆகும்.

யோக சிவராத்திரி : திங்கட்கிழமையில் இரவு பகல் முழுவதும் அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி ஆகும்.

மஹா சிவராத்திரி : மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி இரவு மஹா சிவராத்திரி.

இவற்றுள் மஹா சிவராத்திரி விரதம் தான் வெகு சிறப்பாக பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

சிவராத்திரி விரத முறை : சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக்கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். பிறகு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இரவில் அபிஷேகப் பிரியரான லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்து,

த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச
த்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏகபில்வம் சிவார்ப்பணம்

என்றபடி ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை அழிக்க வல்ல மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தென்னகத்திலே திருக்கோவில்களிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திகளுக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் வட நாட்டிலே எல்லா திருக்கோவில்களிலும் சிவராத்திரியன்று நாமே சென்று நம் கையால் நீராலோ, பாலாலோ லிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்ய முடியும்.

மஹா சிவராத்திரி விரதப்பலன்: அம்மை வேண்டிக் கொண்டதற்கிணங்க நாம் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் அந்த கயிலை நாதன் நமக்கு இம்மையில் நம்து எல்லா தோஷங்களியும் நீக்கி, பய உணர்வை அகற்றி, தீராப் பிணிகளை தீர்த்து, மனக்கவலைகளை மாற்றி சகல மங்களங்களையும் வழங்குவதுடன் நமக்கு மறு பிறப்பு இல்லாமல் சிவகணங்களுள் ஒருவராகும் வாய்ப்பையும் வழங்குகிறார். எடுத்துக்காட்டாக புராணங்களில் கூறப்பட்டுள்ள ஒரு வேடனின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் ஒரு வேடன் வாழ்ந்து வந்தான் ஒரு நாள் அவன் வேட்டை ஆடும் போது ஒரு புலி அவனை துரத்தியது. புலியிடமிருந்து தப்பிக்க அவன் ஒரு மரத்தின் மேலே ஏறிக் -காண்டான்.புலியும் மரத்தின் கீழே அவன் இறங்கி வந்தால் அவனைக் கொன்று புசிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தது. பகல் முழுவதும் இவ்வாறு அவன் ஒன்றும் சாப்பிடாமல் மரத்தின் மேலேயே இருந்தான். அந்தியும் ஆகியது புலியும் நகர வில்லை வேடனாலும் கீழே வர முடியவில்லை. இரவிலே து‘ங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். நடு நடுவே தன் குடுவையில் இருந்த தண்ணிரையும் கீழே ஊற்றிக் கொண்டிருந்தான். காலை புலர்ந்தது புலி ஓடி விட்டது, வேடனும் கீழிறங்கி வந்து தன் இருப்பிடம்் சென்றான். அவன் அவ்வாறு அமர்ந்திருந்த மரத்தின் அடியில் ஒரு சிவ லிங்கம் இருந்ததாலும், அந்த மரம் வில்வ மரமாக இருந்ததாலும், அந்த இரவு சிவராத்திரியாக இருந்ததாலும் புலியின் பயத்தினாலேயே வேடன் இவ்வாறு பகலில் உணவு உண்ணாமலும் இரவிலே லிங்க மூர்த்திக்கு அபிஷேகமும் வில்வ தளங்களால் அர்ச்சனை செய்ததால் வேடனுக்கு சிவராத்திரி விரதப் பலனைக்கொடுத்து முக்தி கொடுத்தருளினார் எம்பெருமான். நாமும் து‘ய மனத்தோடு இந்த விரதத்தை மேற்கொண்டால் அந்த இறைவனது அருளைப் பெறலாமே.

வேடன் இவ்வாறு முக்தி பெற்ற ஐதீகம் நடைபெற்றதாகக் கூறப்படும் தலங்கள் திருவைகாவூர் மற்றும் பெரும் புலியூர் ஆகும் இத்தலங்களில் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் மற்ற தலங்கள் ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீ கோகர்ணம் ஆகும்.

சிவராத்திரியுடன் தொடர்புடைய மற்றொரு ஐதீகம், ஆதி சேஷன் எப்போதும் இந்த பூவுலகைச் சுமந்து கொண்டிருப்பதால் தன் பலமனைத்தையும் இழந்து தவித்த போது, ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் திருக்குடந்தையில் (கும்பகோணம்) நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேஸ்வரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீஸ்வரரையும், நான்காம் ஜாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் தரிசித்ததால் தான் இழந்த பலமனைத்தையும் பெற்றார் என்பதால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்பதும் சர்ப்ப தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.

இத்தகைய சிறப்புகளையுடைய மஹா சிவராத்திரி நன்னாளில் நாமும் விரதம் அனுஷ்டித்து மாதொரு பாகனான எம் பெருமானின் அருளுக்கும், அம்மையின் அருளுக்கும் பாத்திரமாவோமாக.
*******

இது ஒரு மீள் பதிவு சென்ற வருடம் வெளியிட்ட பதிவை மீண்டும் சிறிய திருத்தங்களுடன் இன்று பதிவிட்டிருக்கின்றேன்.

நாளை மஹாசிவராத்திரியன்று அங்காளம்மன் வைபவம் காண்போம்.

7 comments:

Anonymous said...

மஹாசிவராத்திரியன்று அங்காளம்மன் வைபவம் காண்போம்.
//

தரிசிப்போம்.இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

jeevagv said...

மகேஸ்வரன் அருளாடு, மங்களம் பெருகட்டும்!

Anonymous said...

அருமையா கட்டுரை

S.Muruganandam said...

வாருங்கள் கடையம் ஆனந்த். அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

S.Muruganandam said...

சங்கரன் என்றால் மங்களம் தானே, அவர் அருளால் எங்கும் மங்களம் பெருகட்டும் ஜீவா ஐயா.

S.Muruganandam said...

வாருங்கள் கலாநிதி ஐயா முதல் தடவை வருகின்றீர்கள்.

ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

Anonymous said...

Sivaya nama arumaiyana thoguppu. Pl. Add more information.