Friday, July 4, 2008

பஞ்ச சபைகள் - தாமிர அம்பலம் - திருநெல்வேலி

அம்பலத்தாடும் எம் ஐயன் ஆடல் காணீரோ
ஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.


தாமிர சபை

மாயைதனையுதறி வல்வினையை சுட்டுமலம்

சாய அமுக்கி அருள்தான் எடுத்து - நேயத்தால்

ஆனந்த வாரிதியதில் ஆன்மாவைத்தான் அழுத்தல்

தான் எந்தையார் பரதம் தான்.

படைப்புத் தொழிலைக் குறிக்கும் உடுக்கை ஏந்திய கரத்தால் மாயையை உதறி, அழித்தல் தொழிலை குறிக்கும் அனலேந்திய கையால் கன்மத்தை சுட்டும், மறைத்தல் தொழிலைக்குறிக்கும் ஊன்றிய பாதத்தால் ஆணவ மலத்தின் வலிமையைக் கெடுத்தும் அருளளை குறிக்கும் தூக்கிய குஞ்சித பாததால் முக்தி அளித்து ஆட்கொள்ளும் அருட்பிரான் உயிர்கள் மேல் வைத்த கருணையினால் தன் திருவடிக்குக்க்கீழே உயிர்களை அழுத்தி பேரின்பத்தை துய்க்க செய்கின்றார் இதுவே ஞான நடனம். இவ்வாறு மஞ்சாடும் மங்கை மணாளர் ஆடிடும் பஞ்ச சபைகளுள் மூன்றாம் சபையாகிய தாமிர அம்பலத்தில் சபாபதியை இன்று தரிசனம் செய்யலாம்.


நெல்லையப்பர் ஆலய் இராஜ கோபுரம்

தாமிரபரணி ஆறு பாய்ந்து வளம் கொழிக்கும் நெல்லை என்று அழைக்கப்படும் காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் ஆலயத்தில் அமைந்துள்ளது தாமிர அம்பலம் பாண்டி நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று இத்தலம். ஆளுடையப்பிள்ளையாம் திருஞான சம்பந்தர் பதிகம் பாடிய தலம். முதலில் கோவிலின் தல வரலாற்றைப் பற்றி காண்போம். பண்டைக்காலத்தில் இத்தலம் மூங்கில்க் காடாக இருந்தது. அப்போது ஒரு இடையன் அரசனுக்காக கொண்டு சென்ற பால் இந்த வேணு வனத்தில் ஒரு மூங்கில் புதரில் தானே கொட்டி விட தினமும் பால் குறைவாக வருவதைக் கண்டு கோபம் கொண்ட மன்னன் இடையனை விசாரிக்க அவனும் இவ்வாறு பால் கொட்டி விடும் விஷயத்தை கூறினான். அடுத்த நாள் அரசனும் அவனுடன் அங்கு செல்ல பால் தானாக கொட்டியது, அங்கு என்ன உள்ளது என்பதை அறிய மன்னன் மூங்கில் புதரை வெட்ட அங்கிருந்து இரத்தம் வடிந்தது. மன்னன் தவறுணர்ந்து மயங்கி விழ அரன் அசரீரியாய் தானே சுயம்புவாய் அங்கிருப்பதாய் அறிவித்தார். இன்றும் ஐயன் திருமேனியில் வெட்டுக்காயம் உள்ளது. வேதங்களே ஐயனுக்கு காவலாக நின்ற வேணு வன நாதர், வேய் முத்து நாதர், வேணுவனமஹாலிங்கேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். இறைவனின் மற்ற திருநாமங்கள் சாலிவாடீசர், நெல்லையப்பர், நெல்வேலி நாதர். இனி இத்தலம் திருநெல்வேலி என்னும் பெயர் பெறக்காரணமான திருவிளையாடலைப்பற்றிக் காண்போமா?வேத சன்மன் என்ற வேதியன் நாள் தோறும் தனது வீட்டு முற்றத்தில் உலர வைத்த நெல்லைக் குத்தி அதனால் செய்த அமுதைக் கொண்டு நெல்லையப்பருக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஒரு நாள் அவ்வாறு உலர வைத்த போது பெரும் மழை பெய்தது வெள்ள நீர் புரண்டோடியது. மனம் நொந்த வேத சன்மன் இறைவனை வேண்ட இறைவன் அருளால் அவன் நெல்லை உலர வைத்த இடம் நீங்கலாக மற்ற இடமெல்லாம் மழை பெய்தது. இவ்வாறு நெல்லை வேலி போல காத்தருளியதால், நெல்லை வேலியிட்டுக்காத்தவர் நெல்லையப்பர் ஆனார் தலமும் திருநெல்வேலியானது.

இத்தலத்தில் மூன்று லிங்கங்களாக ஐயன் அருள் பாலிக்கின்றார். வேண்ட வளர்ந்த நாதர் (நெல்லையப்பர்) சுயம்பு மூர்த்தி, லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் உள்ளதால் சக்தி லிங்கம். இப்போது நாம் தரிசிக்கும் ஆவுடை 21வது என்றும் முந்தைய இருபதும் பூமிக்குள் அழுந்தி விட்டதாக ஐதீகம். மஹா விஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், பாதாளத்தில் திருமூல மஹா லிங்கமும் உள்ளது. அம்மையின் திருநாமம் காந்திமதியம்மன் கோடி சூரிய பிரகாசத்துடனும் அதே சமயம் மதியை( சந்திரனை) போன்று குளிர்ச்சியுடன் அருள் பாலிக்கும் வடிவுடையம்மை நான்கு கரங்களுடன் எழிற் கோலம் காட்டுகின்றாள் அன்னை. திருகாமகோட்டமுடைய நாச்சியார் என்ற திருநாமமும் உண்டு. அர்த்த ஜாமத்தில் அம்பிகைக்கு வெண்ணிற ஆடை அலங்காரம், மறு நாள் காலை விளா பூஜை .இறுதி காலத்தில் அனைத்து உயிர்களும் அன்னையிடம் அடங்குவதாக ஐதீகம். ஐயனுக்கு வலப்புறம் தனிக்கோவில் கொண்டு செங்கோல் ஏந்தி இராஜராஜேஸ்வரியாய் அருளாட்சி புரிபவள். காந்திமதி அம்பாள் உச்சிக் காலத்தில் ஐயனுக்கு அன்னம் பரிமாறி உபசரித்து வழி படுவதாக ஐதீகம். மூலஸ்தானம் அருகில் திருமால் பள்ளி கொண்ட கோலத்தில் சிவபூஜை செய்தபடி அருள் பாலிக்கின்றார். ,கங்கையும் யமுனையும் அம்மனுக்கு துவார பாலகிகள்.பிரதோஷ காலத்தில் அம்பிகைக்கு எதிரே உள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடைபெறுகின்றது. அம்பிகையும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றாள். சிவராத்திரியன்று அம்பிகைக்கும் நான்கு கால அபிஷேகம். சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்தும் வகையில்.வெள்ளிக்கிழமைகளில் தங்கப்பாவாடையில் தரிசனம் தயாபரி காந்திமதி. தாமிரபரணித்தாய் சிலை வடிவில் எழுந்தருளியுள்ளாள். தல விநாயகர் முக்குறுணி விநாயகர் வலது கையில் மோதகம் இடது கையில் தந்தம் என்று மாறிய கோலத்தில் அருட்காட்சி தருகின்றார். முருகர் ஆறுமுக நாயனார். இவர் அருணகிரி நாதரால் பாடப்பெற்றவர்.

ஏனைவெண் கொம்பொடு மெழில் திகழ் மத்தமு

கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்

ஆனினில் ஐந்துசந் தாடுவார் பாடுவா ரருமறைகள்

தேனில் வண்டமர்பொழிற் திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.

தேனிக்கள் தேனை சுவைக்கும் மலர்ச்சோலைகள் நிறைந்த திருநெல்வேலியில் உறையும் இறைவர், திருமாலாகிய பன்றியின் வெள்ளிக் கொம்பையும், ஊமத்தை மலரையும், வளைந்த பிறை மதியையும் அணிந்த சடையை உடையவர், கொல்லும் புலித்தோலை அரைக்கசைத்த புனிதர். புனிதமான் பசுவின் ஐந்து கவ்வியங்களில் ஆடுபவ்ர் அரிய மறைகளை நாம் உய்ய அருளியவர் என்று ஞான சம்பந்த்ப்பெருமான் பாடிய நடராஜரின் சபை
மேற்குப்பகுதியில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. ஐயன் காளிகா தாண்டவமாடிய சபை இந்த தாமிர சபை. சபையின் பின்புறம் சந்தன சபாபதியின் திருவுருவம் உள்ளது. எப்போதும் சந்தனக் காப்புடன் விளங்குவதால் ஐயனுக்கு இத்திருநாமம். மரத்திலான கூரையும் ஏழு அடுக்களுடன் உள்ள தாமிரத் தகடுகளுடான கூரை கொண்டு விளங்குகின்றது தாமிர சபை.மார்கழி திருவாதிரையின் போது ஆனந்த நடராசரின் நடனக் காட்சி தாமிர அம்பலத்தில் நடைபெறுகின்றது. இரவு பன்னிரண்டு மணிக்கு சந்தன சபாபதிக்கு அபிஷேகம் அலங்காரம். அதிகாலை 4.30 மணிக்கு பசு தீபாராதணை 5.15 மணிக்கு திருநடனக்காட்சி நடைபெறுகின்றது. திருமால், அக்னி பகவான், அகஸ்தியர், முழுதுங்கண்ட ராம பாண்டியன் ஆகியோருக்கு நடன காட்சி தந்த தலம்.அக்கினி சபாபதி என்றழைக்கப்படும் நடராசர் சன்னதியும் உள்ளது. மிகப்பெரிய திருமேனி. ஐயனின் திருமுன்பில் காரைக்காலம்மையார் திருவுருவம் உள்ளது.

காண்தகு மலைமகள் கதிர்நிலா
முறுவல் செய்து அருளவேயும்பூண்டநா கம்புறங் காடு அரங்
காநட மாடல்பேணிஈண்டுமா மாடங்கண் மாளிகை
மீது எழ கொடி மதியம்
தீண்டி வந்து உலவிய திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.

துர்க்கையம்மன் சிங்கம் மற்றும் மான் வாகனத்துடன் எழுந்தருளியுள்ளார். அம்பாள் சன்னதியில் பண்டாசுரனை வதம் செய்த அம்பாள் மஞ்சன வடிவாம்பிகையாக எழுந்தருளியுள்ளாள். நவக்கிரக சன்னதியில் புதன் மாறுபட்டு கிழக்கு நோக்காமல் வடக்கு நோக்கியுள்ளார். இவரை வணங்குவதால் படித்தவர்கள் செல்வாக்கு பெறுவர்.

தாமிர சபை

(தாமிர சபையின் பின்னே சந்தன சபாபதி காட்சி தரும் அழகுதான் என்னே)

தாமிரபரணி ஆறு சுற்றிப் பாயும் திருநெல்வேலி நகரின் நடு நாயகமாக அமைந்துள்ளது திருக்கோவில். பொற்றாமரைக்குளம், கருமாரி தீர்த்தம், தாமிரபரணி வயிரவ தீர்த்தம் என்று மொத்தம் 32 தீர்த்தங்கள். துறை சிந்து பூந்துறை இத்துறையில் சிந்திய எலும்புகள் பூக்கள் ஆயின. ஏழாம் நூற்றாண்டில் நின்ற சீர் நெடுமாறன் ஐயனுக்கும் அம்மைக்கும் தனித் தனி கோவில் கட்டினான். ஐயன் கோவிலுக்கு நான்கு இராஜ கோபுரங்கள், அம்மன் கோவிலுக்கு ஒரு இராஜ கோபுரம், இரண்டு கோவில்களின் வெளிச்சுற்றுகளை இனைத்து ஒரு வாயில் உள்ளது இவ்வாயில் நீண்டு அமைந்துள்ளது. சங்கிலி மண்டபம் என்று அழைக்கப்படுகின்றது.அம்மன் கோவிலில் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இலட்ச தீபம் இம்மண்டபத்தில் ஏற்றப்படுகின்றது. ஆயிரங்கால் மண்டபமும் அம்மன் கோவிலில் உள்ளது இங்கு ஐப்பசியில் திருமணமும், செங்கோல் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றது.பெரிய சுதை நந்தி மண்டபத்தூண்களில் அற்புதமான சிற்பங்கள். நாதப்பமணி மண்டபத்தில் இசைத்தூண்கள் உள்ளன.
சித்ரா பௌர்ணமி, ஆனித் தேரோட்டம் பத்து நாள் உற்சவம், ஆவணி மூலம், ஐப்பசி பிரம்மோற்சவம் பத்து நாள் அம்பாள் தபசு, பத்தாம் நாள் அம்பாள் கம்பா நதிக்கரைக்கு எழுந்தருளுகின்றாள் 11ம் நாள் மஹா விஷ்ணு தங்கையை மணம் செய்து கொள்ள நெல்லையப்பரை அழைக்கின்றார் பின் திருக்கல்யாணம்.பன்னிரண்டாம் நாளிலிருந்து மூன்று நாட்கள் ஊஞ்சல் உற்சவம். 14ம் நாள் சிவன் சன்னதிக்கு மறு வீடு. அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு சீர் கொண்டு செல்கிறாள் இது காந்திமதி சீர் எனப்படுகிறது. கந்தர் சஷ்டியின் போது ஆறுமுக நாயனாருக்கு லட்சார்ச்சனை., உத்திராயண புண்ணிய காலத்தில் நெல்லுக்கு வேலி கட்டிய லீலை உற்சவம் நடைபெறுகின்றது. காலையில் ஐயனுக்கும் அம்பிகைக்கும் 108 சங்காபிஷேகம், அம்மையப்பர் வெள்ளி ரிஷ்ப வாகனக் காட்சி, பஞ்ச மூர்த்திகள் ரத வீதியுலா. தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் என்று வருடம் முழுவதும் திருநாள்தான் அம்மையப்பர் சன்னதியில். வரும் பதிவில் சித்திர சபையாம் திருக்குற்றாலத்தில் ஆடல் வல்லான் தரிசனம் காண்போம்.
தில்லை ஆனி உத்திர உற்சவம்: இன்று ஐந்தாம் நாள் எம்பெருமானின் வாகன்மும் கொடியும் ஆன விருஷ்ப வாகன சேவை. தெருவடைச்சான் சப்பரம். ஆறாம் நாள் வெள்ளி யானை வாகனக் காட்சி.

2 comments:

ஜீவா (Jeeva Venkataraman) said...

ஆனி மாதச் சிறப்பினை படித்தின்புற்று வருகிறேன், மிக்க நன்றிகள்.

Kailashi said...
This comment has been removed by the author.