என்சிறு வயதில் எனக்கும் என் தம்பிக்கும் உணவு ஊட்டும் போது பல முறை கம்பா நதிக்கரையில் எம் அம்மை செய்த இந்த திருவிலையாடலைக் கதையாகக் கூறி உணவுடன் ஆன்மிக உணைவையும் ஊட்டிய என் அன்னைக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன்.
நம்மை உய்விக்க எம் அம்மையும் அப்பனும் நடத்தும் திருவிளையாடல்தான் எத்தனை எத்தனை? பூமியாகிய விராட புருஷனின் இடுப்பு ஒட்டியாணமாக (காஞ்சி) திகழ்கின்ற நகரேக்ஷு காஞ்சி என்று அழைக்கப்படும், சக்தி பீடமான கச்சியம்பதியிலே தண் துளப மாலையணி அத்தி வரதன் தங்கையாகிய நம் அம்மை காமாக்ஷி, ஐயன் தந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் நடத்திக் காட்டியும், கம்பா நதிக் கரையில் சிவபூஜை செய்தும் நாம் அனைவரும் உய்ய நம் அனைவருக்கும் மணக்கோலம் காட்டி அருளிய திருவிளையாடல் அவைகளில் ஒன்று ஆகும். இத்திருவிளையாடலைப் பற்றி அறிந்து கொள்வோமா?
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகவும், பின்னைப் புதுமைக்கும் போற்றும் அப்பெற்றியனான எம் ஐயம் சிவபெருமான், ஒரு நாள் தன் நாயகியாம் உமையம்மையுடன் திருக்கைலாய மலையிலே அமர்ந்திருக்கும் போது உமையம்மை, சூரிய சந்திரர்களான ஐயனின் கண்களை விளயாட்டாக பொத்தினாள். உடனே அண்ட சராசரங்களும் இருளில் மூழ்கி திண்டாடியது. மக்களும் தேவர்களும், கடவுட் பூஜையிலிருந்து வழுவினர். இப்பாவம் அம்மையை சாராது என்றாலும், உலகத்தோர் உய்யும் பொருட்டும் அவர்கள் 32 அறங்களையும் சரியான முறையில் அறிந்து கொள்ளும் பொருட்டும் அம்மையே உலகமக்கட்க்கு அவற்றை நடத்தி காட்ட வேண்டி பூலோகத்திற்கு சென்று காஞ்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்து சிவ பூஜை செய்யுமாறும், பின் தாமே வந்து மணம் செய்தருளுவதாகவும் அருளினார் சிவபெருமான்.
பின் அம்மை மாங்காட்டுப் பதியிலே வந்து ஐந்து குண்டங்களிலே அக்னி வளர்த்து நடுக்குண்டத்தில் ஒற்றைக்காலில் சிவ பெருமானைக் குறித்து கடுந்தவம் புரியலுற்றாள் அம்மை காமாக்ஷி. அம்மையின் தவத்தில் அகம் மகிழ்ந்த ஐயன் அசரீரியாக காஞ்சி நகருக்கு வருமாறு பணிக்கிறார். அம்மையும் காஞ்சிக்கு வந்து கம்பாநதிக்கரையில் , நான்கு வேதங்களுமே நான்கு கிளைகளாக அமையப் பெற்ற அற்புத மாமரத்தின் அடியிலே, மணலாலேயே சிவலிங்கம் அமைத்து, ஐயன் அழித்த இருநாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் முறையாக செய்து சிவபூஜை செய்து வரலானாள். இதையே
ஐயன் அளந்தபடி இரு நாழி-காண்டு அண்டமெல்லாம்
உய்ய அறஞ்செய்யும் உன்னையும் போற்றி .......
என்று அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டர் பாடுகின்றார்.
( காமாக்ஷி அம்மை சிவ பூஜை காட்சியை, நவராத்திரி நன்னாளில் ஒரு நாள் அலங்காரமாக நாம் எல்லா கோவில்களிலும் பார்க்கின்றோமல்லவா? அந்த அலங்காரம் இந்த திருவிளையாடலிலிருந்து வந்ததுதான்). அம்மை மணலால் சிவலிங்கம் அமைத்ததால் இத்தலமும் பஞ்ச பூதத்தலங்களில் "பிருத்வித் தலமாக(பூமித் தலம்)" விளங்குகின்றது. இன்றும் ஏகாம்பரேஸ்வரருக்கு அபிஷேகம் கிடையாது புனுகு மட்டுமே பூசப்படுகின்றது.
கம்பாநதிக் காட்சி
நான் அனைவரும் அறிந்து கொள்ள அம்மை செய்த முப்பத்திரண்டு அறங்களாவன 1.தேவ யாகம், 2. பிதிர் யாகம், 3.பூத யாகம், 4.மானிட யாகம், 5. பிரம யாகம், 6. வறியவருக்கு ஈகை, 7. துறவியருக்கு மடம், 8. இல்வாழ்வாருக்கு வீடு, 9. இல்வாழ்க்கைக்குரிய பொருட்கள், 10.தண்ணிர்ப் பந்தல், 11. பூஞ்சோலை, 12. அங்கஹ“ணர்களை ஆதரித்தல், 13.நோய்க்கு மருந்து கொடுத்தல், 14.குழந்தை வளர்ப்பு, 15. சுண்ணம் கொடுத்தல், 16. தாம்பூலம் கொடுத்தல், 17.தலைக்கு எண்ணெய் கொடுத்தல், 18. அரப்புப் பொடிகள் கொடுத்தல், 19.படுக்கை அளித்தல், 20. பூ தானம், 21. கோ தானம், 22.கன்னிகா தானம், 23. மணம் செய்வித்தல், 24. விளக்கு கொடுத்தல், 25. தீராக் கடன் தீர்த்தல், 26. சிவனடியாருக்கு வேண்டுவன அளித்தல், 27.திரு வெண்ணிறு அளித்தல், 28. பூசை பொருட்கள் கொடுத்தல், 29. சமய நூல்கள் அளித்தல், 31. சிவ பக்தியை உண்டாக்குதல், 32. அபயமளித்தல், ஆகியவை ஆகும்.
இவ்வாறு அம்மை சிவபூஜை மாவடியிலே செய்து வரும் போது சிவன் உமையை தவத்திலிருந்து எழுப்ப கொட்டிசேதம் என்னும் ஆட்டத்தை ஆடினார். அதனால் எல்லாம் கவனம் திரும்பாது தவத்திலிருந்த பார்வதியே அஞ்சுமாறு கங்கையை அந்த கம்பாநதியிலே அந்தர் வாகினியாக பெருக்கெடுத்கோடி வரச் செய்தார் எம்பெருமான். அடித்து புரண்டு ஓடி வருகின்ற அலை வெள்ளத்தினால் எங்கே ஐயனுக்கு ஊறு விளைந்து விடுமோ, என்று அஞ்சிய அந்த அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையாம் உமையம்மை மானிட இயல்பால் அந்த லிங்கத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு காப்பாற்றினாள். அப்போது ஐயன் தன்னை கட்டிக் கொண்டிருக்கும் அம்மைக்காக அங்கங் குழைந்து, தன் திருமேனியிலே வளைச் சுவடும், முலைச் சுவடும் பெற்று அம்மைக்கு அருள் பாலித்தார். அம்மையும் தவம் கலைந்து உண்மை உணர்ந்தாள். எனவே அம்மை "குழையத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கை வல்லி" என்றும், ஐயன் "தழுவக் குழைந்த நாதர்" என்ற திருநாமமும் பெற்றனர். பின் பங்குனி உத்திர நன்னாளில் ஏழவார் குழலி அம்மையை எம் ஐயனாம் ஏகம்பன் நாம் அனைவரும் உய்ய மணம் செய்தருளினார்.
தேவார பாடிய மூவர்களும் இறைவனையும் இறைவியையும் எப்படி பாடினர் என்று பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். திருநாவுக்கரசர் தமது கடமையை மறந்து சமண வழியில் சென்று நிலை தடுமாறிய போது கருணைக் கடலாம் என் ஐயன் அவரை நல்வழிப்படுத்த அவருக்கு சூலை நோயை கொடுத்து தம் வழி வரப்படுத்தியதால் அவர் பாடிய பதிகங்கள் அனைத்தும் அவர் இறைவனை கெஞ்சும் வண்ணமாக கெஞ்சு தமிழால் அமைந்தன.
இரண்டாமவரான ஆளுடையப் பிள்ளையாம் திருஞான சம்பந்தரோ எம் அம்மையின் அருளுக்கு பாத்திரராகி அவளுடைய ஞானப்பால் உண்டு சிறு வயதிலேயே பாடத் தொடங்கியதால் அவரது பாடல்கள் அனைத்தும் கொஞ்சு தமிழால் அமைந்தன. எம்பிரான் தோழர் அல்லவா சுந்தர மூர்த்தி நாயனார் அவரது பாடல்கள் எல்லாம் நட்பு முறையிலேயே வன்தொண்டர் என்ற முறையில் மிஞ்சு தமிழிலில் அமைந்தன. இந்த இனிய திருவிலையாடலை எம்பிரான் தோழன் என்று போற்றப்படும் சுந்தரர் எவ்வாறு பாடுகின்றார் என்று பார்ப்போமா? திருவொற்றியூரிலே சத்தியத்தை மீறி சங்கிலியாரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் கண்களை இழந்த சுந்தரர், காஞ்சித் தலம் அடைந்து கச்சி ஏகம்பன் மேல் பதிகம் பாடி இடக்கண் பார்வை திரும்பப் பெற்ற போது பாடிய இந்த ப்பதிகத்தில் சுந்தரர் தமது மிஞ்சு தமிழில் இவ்வாறு பாடுகின்றார்
எள்கலின்றி யிமைவர் கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வழிபடுச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி வெருவியோடித் தழுவ வெளிப்பட்ட
கள்ள கம்பனை யெங்கள் பிரானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே.
நாம் அனைவரும் உய்ய நமக்காக அம்மை 32 அறங்களையும் சிறப்பாக செய்து சிவ பூஜை செய்ததை விளக்கவே சுந்தரரும் வழிபாடு செய்வாள் போல என்று பாடுகின்றார். இறைவனும் இறைவியும் நடத்தும் திருவிளையாடல் என்பதை விளக்க இறைவனை கள்ளக் கம்பனை என்று பாடுகின்றார்.
காஞ்சியில் ஆண்டு தோறும் இந்த கல்யாணத்திருக்கோல வைபவம் பத்து நாடகள் பிரம்மோற்சவமாக ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் இன்றும் நடைபெறுகின்றது. கல்யாணத் திருகோலத்தில் ஏகம்பரும் ஏழவார் குழலி அம்மையும் தரும் அருட்காட்சியைத்தான் கண்டுகளியுங்களேன்.
ஸகல அகிலாண்ட பிரபஞ்சமும் அழிவுபடும் பிரளயத்தில் கூட அழியாமல் நிற்கும் பிரளயஜித் என்னும் உத்தமோத்தம தலமாம் காஞ்சியில், ஊழி வெள்ளத்திலும் தலை ஓங்கி நிற்கும் மாமரத்தின் அடியிலே தோன்றி உமையம்மையை மணந்த, கம்பா நதிக்கரையில் உள்ள மாமரம் மாவடி எனப் பெயர் பெற்றது. "மா" மரம் தான் அது - மஹா பெருமை பொருந்தியது. நான்கு வேதங்களுமே நான்கு கிளைகளாக கொண்ட ஆம்ர விருக்ஷம் அது. நான்கு வேதங்களின் எண்ணிலடங்கா சாகைகளுக்கும் பலம் (பயன்) ஒன்றேயான பரம்பொருள் என்று உணர்த்த ஒரே ஒரு பலம்(பழம்) பழுக்கும் மரம் அது. அதானாலேயே இத்தலம் எகாமரம் (ஏகாம்பரம்) என்று பேர் பெறுகின்றது. ஊழிக் காலத்தும் தான் ஒன்றே ஒன்று மட்டும் உயர்ந்து நிற்பதாலும் இது ஏகாம்பரமாகிறது. அத்தகைய அற்புத மாவடியின் மூலமாகிய அடியில் இருந்து சிவபெருமான் தோன்றியதால் அவரும் மாமூலன் எனப்பட்டார். இன்றும் இறைவனின் திருக்கல்யாண தினமான பங்குனி உத்திரத்தன்று இத்திருக்கோவிலில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வதும், இறைவனின் திருக்கல்யாணத்தை தரிசிப்பதும் தேவாரக் காலம் முதல் இருந்து வரும் வழக்கம். என்ன நீங்களும் கிளம்பிவிட்டீர்களா? காஞ்சிபுரத்தில் அம்மையப்பரின் திருக்கல்யாணத்தை காண. சென்று வந்து அருள் பெறுங்கள்.
* * * * * * *
மேலும் அம்மையப்பரின் கல்யாணக் கோலங்களை தரிசிக்க சொடுக்கவும்
http://thirumylai.blogspot.com/2008/03/blog-post_5217.html