Saturday, September 27, 2014

நவராத்திரி நாயகி - 4

ஓமந்தூர்  பாலம்பிகை  மூலவர் அலங்காரங்கள்

வனவாசத்தின் போது பீமனுக்கு பசி போக்க பால் வழங்கியவள் என்பதால் அம்மனின் திருநாமம்  "பாலம்பிகை"  (க்ஷீராம்பிகை) பீமன் வழிபட்டதால் ஐயனுக்கு "பீமேசுவரர்"  என்று திருநாமம். இவ்வலங்காரங்கள் சென்ற வருடத்தியவை. 

மதுரை மீனாட்சி அலங்காரம்


காஞ்சி காமாட்சி அலங்காரம் 

வாராகி அலங்காரம்


அன்னபூரணி அலங்காரம்

அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே|

ஞான வைராக்ய சித்தியர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி||  

கருமாரி அம்மன் அலங்காரம் 

உமையொரு  பாகர் அலங்காரம்

அம்மையப்பர் போற்றி

தேவார திருவாசங்களில் திரட்டிய போற்றிகள்

ஓம் அணங்கின் மணவாளா போற்றி
ஓம் அம்மையப்பா போற்றி
ஓம் அம்மையே அப்பா ஒப்பிலா மணீயே போற்றி
ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி
ஓம் அரியாடிய கண்ணாள் பங்க போற்றி
ஓம் அரிதரு கண்ணி யாள் ஒரு பாகா போற்றி
ஓம் இமவான் மகட்கு தன்னுடைய கேள்வனே போற்றி
ஓம் இளமுலையாள் உமை பாகா போற்றி
ஒம் இமயமென்னும் குன்றரைக் கண்ணன் குலமகட் பாவை கூற போற்றி
ஓம் உடையாள் உன் தன் நடுவிருக்க உடையாள் நடுவுள் நீயிருத்தி போற்றி
ஓம் உண்ணாமுலை உமையாளுடனாகிய ஒருவன் போற்றி
ஓம் உமையாள் கணவா  போற்றி
ஓம் உமையவள் பங்கா போற்றி
ஓம் உமை நங்கையோர் பங்குடையாய் போற்றி
ஓம் ஏலம் ஏலும் நற்குழலி பங்கனே போற்றி
ஓம் ஏலவார் குழலி நாயக்னே போற்றி
ஓம் ஏலவார் குழல் உமை நங்கை ஏத்தி வழிபட்ட காலகாலனே போற்றி
ஓம் கயல்மாண்ட கண்ணி தன் பங்க போற்றி
ஓம் காவி சேரும் கயல் கண்ணாள் பங்கா போற்றி
ஓம் கிளி வந்த மென்மொழியாள் கேழ் கிளரும் பாதியனே போற்றி
ஓம் குரவங்கமழ் நறுமென் குழல் உமை பங்க போற்றி
ஓம் கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே போற்றி
ஓம் கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி
ஓம் கொத்தலர் குழலி பாக போற்றி
ஓம் கொம்மை வரிமுலை கொம்பு அணிஅயாள் கூற போற்றி
ஓம் கோல் வளையாள் பாகா போற்றி
ஓம் கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூற போற்றி
ஓம் கோலப் பொங்கு அரா அல்குல் செவ்வாய் வெண்ணகைக் கரியவாள்கண்
       மங்கையோர் பங்க போற்றி
ஓம் கோல் வளையாள் பங்க போற்றி
ஓம் சிறு மருங்குல் மை ஆர் தடங்கண் மடந்தை மணவாளா போற்றி
ஓம் சுரிகுழல பணை முலை மடந்தை பாதியே போற்றி
ஓம் செப்பு ஆர் முலை பங்கனே போற்றி
ஓம் செப்பிள முலை நன் மங்கை யொரு பாக போற்றி
ஓம் செந்துவர் வாயுமை பங்க போற்றி
ஓம் தளரா முலை முறுவல்லுமை தலைவா போற்றி
ஓம் திதலைச்செய் பூண்முலை மங்கை பங்க போற்றி
ஓம் துடி கொள் நேர் இடையாள் சுரி குழல் மடந்தை பங்கனே போற்றி
ஓம் தையல் ஒர் பங்கினர் போற்றி
ஓம் தையல் ஒர் பாகம் வாழ் ஜகந்நாதனே போற்றி
ஓம் தையல் இடம் கொண்ட பிரான் போற்றி
ஓம் தோடுடைய சிவியா போற்றி
ஓம் மதி நுதல் மங்கை பங்க போற்றி
ஓம் மலைக்கு மருகனே போற்றி
ஓம் மலையான் மருகனாய் நின்றாய் போற்றி
ஓம் மலை மாது ஒரு பாகா போற்றி
ஓம் மலையரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திரு நாயக போற்றி
ஓம் மலை மகளை ஒரு பாகம் வைத்தானே போற்றி
ஓம் மரு ஆர் மலர்க்குழல் மாது பங்க போற்றி
ஓம் மட்டுவார் குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகா போற்றி
ஓம் மாவடு வகிர் அன்ன  கண்ணி பங்க போற்றி
ஓம் மாது இருக்கும் பாதியனே போற்றி
ஓம் மாது நல்லாள் உமை மங்கை பங்கன் போற்றி
ஓம் மாது ஒரு கூறு உடைய பிரான் தன் கழலே போற்றி
ஓம் மாதினுக்கு உடம்பிடம் கொடுத்தானே போற்றி
ஓம் மைத்தடங்கண் வெருள்புரி மான் அன்ன நோக்கி தன் பங்க போற்றி
ஓம் மையார் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே போற்றி
ஓம் பஞ்சேர் அடியாள் பங்க போற்றி
ஓம் பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா போற்றி
ஓம் பஞ்சின் மெல்லடியாள் பங்க போற்றி
ஓம் பந்து அணை விரலி(விரலாள்) பங்க போற்றி
ஓம் பருவரை மங்கை  தன் பங்க போற்றி
ஓம் பணைமுலைப் பாக போற்றி
ஓம் பண் தனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க போற்றி
ஓம் பண்ணின் நேர் மொழியாள் பங்க போற்றி
ஓம் பண் ஆர்ந்த மொழி மங்கை பங்க போற்றி
ஓம் பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி
ஓம் பாடக மெல் அடி ஆர்க்கும் மங்கை பங்க போற்றி
ஓம் பாதி மாதொடும் கூடிய பரம்பரனே போற்றி
ஓம் பழுது இல் தொல் புகழாள் பங்க போற்றி
ஓம் புன வேய் அனவளை தோளி பங்க போற்றி
ஓம் பூண் முலையாள் பங்க போற்றி
ஓம் பெண் சுமந்த பாகத்தா போற்றி
ஓம் பெண் ஆளும் பாகனே போற்றி
ஓம் பெண் பால் உகந்த பெரும் பித்தா போற்றி
ஓம் பெண்ணை தென் பால் வைத்தாய் போற்றி
ஓம் பெண்ணின் நல்லாள் பங்க போற்றி
ஓம் பெண்ணோர் பாகா போற்றி
ஓம் பெண்ணாகிய பெருமான் போற்றி
ஓம் பெந்நாப்பட அரவு ஏர் அல்குல் உமை பாகா போற்றி
ஓம் போகமார்த்த பூண் முலையாள் பாகா போற்றி
ஓம் போரில் பொலியும் வெள்கண்ணாள் பங்க போற்றி
ஓம் மாதொரு பாகனே போற்றி
ஓம் மாது இயலும் பாதியனே போற்றி
ஓம் மாது ஆடும் பாகத்தா போற்றி
ஓம் மஞ்சாடும் ,மங்கை மணாளா போற்றி
ஓம் மான் ஓர் பங்கா போற்றி
ஓம் மானேர் நோக்கி மணாளா போற்றி
ஓம் மான் நேர் நோக்கி  உமையாள் பங்க போற்றி
ஓம் மான் பழித்து ஆண்ட மெல் நோக்கி மணாளா போற்றீ
ஓம் மலையாள் மணவாளா போற்றி
ஓம் மை இலங்கு நல்கண்ணி பங்கனே போற்றி
ஓம் நங்கடம்பனை பெற்றவள் பங்க போற்றி
ஓம் நாரி பாகனே போற்றி
ஓம் வரை ஆடு மங்கை தன் பங்க போற்றி
ஓம் வார் உறு பூண் முலையாள் பங்க போற்றி
ஓம் வார்கொண்ட வன முலையாள் உமை பங்க போற்றி
ஓம் வெண்ணகை கருங்கண்  திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் புயங்க போற்றி
ஓம் வேயுறு தோளி பங்க போற்றி


கலை மகள் அலங்காரம் 

பிரத்தியங்கிரா தேவி அலங்காரம் 

புகைப்படங்கள்  அடியேனது நண்பர் சுந்தர் அவர்களுடையது. அவருடைய அருமையான புகைப்படங்களை இங்கு காணலாம் சுந்தரின் புகைப்படங்கள்

                                                 அபிராமி அம்மை பதிகம்

நீடுலகங்களுக்கு ஆதாரமாய் நின்று 
நித்தமும் மூர்த்தி வடிவாய்

நியமமுடன் முப்பத்திரண்டு அறம் வளர்க்கின்ற
 நீ மனைவியாய் இருந்தும்

வீடு வீடுகள் தோறும் ஓடிப்புகுந்து கால்
வேஸற்று இலச்சையும் போய்

வெண்துகில் அரைக்கணிய விதியற்று நிர்வாண
வேடமும் கொண்டு கைக்கோர்

ஓடு ஏந்தி நாடெங்கும் உள்ளம் தளர்ந்து நின்று
உன்மத்தன் ஆகி அம்மா

உன் கணவன் எங்கெங்கும் ஐயம் புகுந்து ஏங்கி
உழல்கின்றது ஏது சொல்லாய்?

ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும்
                                                       ஆதி கடவூரின் வாழ்வே!
 
                              அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
                                                  அருள்வாமி! அபிராமியே!   (7)



பொருள்: அன்னை அபிராமியே அனைத்து  உலங்களுக்கும் ஆதாரமாக இருப்பவள்.  அவளே பல ஸ்தலங்களில் பல் வேறு வடிவங்களில் அன்பர்களுக்கு  அருள் புரிகின்றாள். சிவபெருமான் அளித்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பதிரண்டு அறங்களையும்  முறையாக செய்த தர்ம ஸம்வர்த்தினியும் அவளே . இவ்வளவு  சிறப்புக்களையும்   நீ பெற்ற  இருந்தும் உன் கணவனாகிய சிவபெருமான், வீடு தோறும் சென்று,  கால் நோக  வெட்கத்தையும் விட்டு, இதையில் அணிய ஆடையும் இல்லாமல் திகம்பரராக  கையில் ஓடு ஏந்தி மனம் தளர்ந்து பித்தனாகி பிச்சைக் கேட்டு அலைவது ஏன்? என்று கொடிகள் ஆடி அசைகின்ற மாடங்களில் பெண்கள் விளையாடுகின்ற பெருமை வாய்ந்த திருக்கடவூரின் வாழ்வை ! அமிர்த கடேஸ்வரரின் இடப்பாகம் அகலாத அன்னையை ! கிளியை திருக்கரத்தில் ஏந்தியவளை! அனைவருக்கும் அருள்புரிபவளை! அபிராமி அன்னையை உரிமையுடன் வினவுகின்றார் அபிராமி பட்டர். 

                                                                                                                                                                                    அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

Friday, September 26, 2014

நவராத்திரி நாயகி - 3

திருமயிலை வெள்ளீச்சுரம் காமாக்ஷி அம்பாள்
 அன்ன வாகன சேவை



அலை மகள் கலை மகளுடன் மலை மகள் 

காமாக்ஷி அம்பாள் 


அம்மன் அன்ன வாகனத்தில் கொலு




லை மகள் 
மற்றும் வெள்ளீஸ்வர ஐதீகம்
சுக்கிராச்சாரியார் வெள்ளீஸ்வரரை வழி பட்டு  கண் பெறுதல் 

கலைமகள்



அபிராமி அம்மை பதிகம்

வாடாமல் உயிர் எனும் பயிர் தழைத்து ஓங்கி வர 
அருள் மழை பொழிந்தும் இன்ப

வாரிதியிலே நின்ன(து) அன்பெனுஞ் சிறகால்
வருந்தாமலே அணைத்துக்

கோடாமல் வளர்குஞ்சரம்  தொட்டுஎறும்பு கடை
கொண்டகரு ஆன சீவ

கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினைல் 
குறையாமலே கொடுத்து 

நீடாழி உலகங்கள்யாவையும் திருஉந்தி
நெட்டு தனிலே தரிக்கும் 

நின்னை அகிலங்களுக்கு அன்னை என்று ஓதாமல்
நீலி என்று ஒதுவாரோ?

ஆடாய நான் மறையின்  வேள்வியால் ஓங்கு புகழ் 
ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!   (5)


பொருள்: சீவராசிகள் என்னும் உயிர்களை படைப்பவள் அன்னை. அந்த்ப்பப்யிர்கள் வாடாமல் என்றும் தழைத்து ஓங்கி உயர்ந்து  வளர, தன்  அருள் மழை பொழிந்து  அப்பயிர்களை இன்பக்கடலிலே ஆழ்த்தி தன் அன்பென்னும் சிறகால் அணைத்துக் கொள்பவளும் அவளே. வேதங்களின் வாக்குப்படி ந்தைபேரும்  யாகங்களால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலமான திருக்கடவூரில் உறைபவளே! அமுதீசரின் இட பாகத்தை விட்டு ஒரு போதும் அகலாதவளே! கிளியை தன் திருக்கரத்தில் ஏந்தியவளே!அனைவருக்கும் அருள் புரிபவளே! அபிராமியே என்று அன்னையின் கருணையை வியந்து பாடுகின்றார் அபிராமி பட்டர்.

பல்குஞ்சரம் தொட்டு எறும்புகடை ஆனது ஒரு 
பல் உயிர்க்கும் கல் இடைப்

 பட்ட தேரைக்கும் அன்றுப்பவித்திடு கருப்
பையுறு ஜீவனுக்கும்

மல்கும் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்

மற்றும்  ஓரு மூவருக்கும் யாவர்க்கும் அவரவர்
மனசலிப்பு இல்லாமலே

நல்கும் தொழிற்பெருமை உண்டாய் இருத்தும்மிகு
நவநிதி உனக்கு இருந்தும்

நான் ஒருவன் வறுமைய்யால் சிறியன் ஆனால்அந்
நகைப்பு உனக்கே அல்லவோ?

அல்கலந்து உம்பர்நாடு அளவேதுக்கும் சோலை
                                                    ஆதி கடவூரின் வாழ்வே!
 
                              அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
                                                  அருள்வாமி! அபிராமியே!   (6)

பொருள்: யானை முதல் எறும்பு வரை உள்ள பல்விதமான உயிர்களுக்கும், கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும், கருவில் உள்ள ஜீவனுக்கும் மற்றும் அசையும், அசையா பொருள்களுக்கும், தேவர் கூட்டத்திற்கும், மும்மூர்த்திகளுக்கும், மற்றும் அகிலத்தி; உள்ள அனைவருக்கும் அவரவர் மனம் சோர்வடையாதபடி அவர்கள் செய்ய வேண்டிய தொழில்களை தந்தருளும் பெருமைஉனக்கு உண்டு. அடர்ந்து இருள் செறிந்து வானுலகை அளப்பது போல் வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரின் வாழ்வே! அமுதீசர் இடப்பாகம் ஒரு போதும் அகலாத அன்னையே! கிளியை திருக்கரத்தில் ஏந்தியவளே! அனைவருக்கும் அளவிலாது அருள்புரிபவளே! அபிராமவல்லியே! நவநிதியும் உன்னிடம் இருந்தும் உன் பகதனாகிய நான் வறுமையில் வாடினால் அதனால் உண்டாகும் இகழ்ச்சி உனக்கல்லவோ? என்று அன்னையிடம் வினவுகிறார் அபிராமி பட்டர்.      

                                                                                                                                                                                             அம்மன் அருள் தொடரும். . . . .. ...  
 

Thursday, September 25, 2014

நவராத்திரி நாயகி - 2

                                 திருமயிலை கற்பகாம்பாள் அன்ன வாகனம் -2


நவராத்திரி மண்டபம் முழுவதும் 
எழிலாக அலங்கரிக்கப்பட்டுள்ளது


அலைமகள் கலைமகளுடன் 
மலைமகள் கற்பகாம்பாள் கொலு 



அன்ன வாகனத்தில் கற்பகாம்பாள்



 மலையரையன் பொற்பாவை கற்பகவல்லி


அலை மகள்



கலைமகள்


பொம்மைக் கொலு
 
                                                                                 கிராமம்  கொலு


திருவாதவூரரும் வைகையும் 



அபிராமி அம்மை பதிகம்

மகரவார் குழைமேல் அடர்ந்து குமிழ் மிதினில்
மறைந்து வாளைத் துரத்தி

மைக்கயலை வென்றநின் செங்கமல விழியருள்
வரம் பெற்ற பேர்கள் அன்றோ?

செகமுழுதும் ஒற்றைத் தனிக்குடை கவித்து மேல்
சிங்காதனத்தில் உற்றுச்

செங்கோலும் மனுநீதி முறைமையும் பெற்று  மிகு
திகிரி உலகு ஆண்டு பின்பு 

புகர்முகத்து ஐராவதப்பாகர் ஆகி நிறை
புத்தேளிர் வந்து போற்றிப்

போக தேவேந்திரன்  எனப்புகழ விண்ணில்
புலோமசையோடும் சுகிப்பர்

அகர முதல் ஆகிவளர் ஆனந்த ரூபியே! 
ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (3)

பொருள்:  அன்னையின் நீண்ட கரிய விழியருள் பெற்ற அன்பர்கள்  ஒப்பற்ற வெண் கொற்றக் குடையின் கீழ்  உயரிய சிம்மாசனத்தில் அமர்ந்து, ஐராவதத்தின் மேல் அமர்ந்து   தேவலோகத்தையும் ஆளும் தேவேந்திரப்பதவியை பெறுவர்.  அமரர்கலும் வந்து போற்ற இந்திராணியுடன் சுகித்திருப்பர்.  இந்த அரியப்பேற்றை அளிப்பவள் ஆனந்தமே வடிவாய்க்கொண்டு, புராதன திருக்கடவூரின் உயிராய் விளங்கும், அமுதீசரின் வாம பாகம் அகலாத , கிளியை தன் திருக்கரத்தில் தாங்கியிருக்கும், அருளைப்பொழியும் அபிராமி அன்னை என்று பாடுகின்றார் அபிராமி பட்டர்.  


மறிகடல்கள் ஏழையும் திகிரி இரு நான்கையும்
மாதிரக்கரி எட்டையும்

மாநாகம் ஆனதையும் மாமேரு ஆனதையும்
மாகூர்மம் ஆனதையும் ஓர்

பொறிஅரவு தாங்கிவரு புவனம் ஈர் ஏழையும்
புத்தேளிர் கூட்டத்தையும்

பூமகனையும் திகிரி மாயனையும் அரையினிற்
புலியாடை உடையானையும்

முறைமுறைகளாய் ஈன்ற முதியளாய்ப் பழைமை தலை
முறைகள் தெரியாத நின்னை

மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல்
மொழிகின்றது ஏது சொல்லாய்?

அறிவுடைய பேர் மனத்து ஆனந்த வாரியே
ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (4) 

பொருள்: ஏழு கடல்களையும், எட்டு மலைகளையும்,  அஷ்ட திக் கஜங்களையும், பெரிய நாகத்தையும், மகா மேருவையும், பெரிய கூர்மத்தையும், ஆதி சேடன் தாங்கும்  பதினான்கு புவனங்களையும், தேவர் குழாத்தையும்,   தாமரையில் உறையும்  பிரம்மனையும்,  சக்கரத்தை ஏந்திய திருமாலையும், புலித்தோலை அணிந்த ஈசனையும் படைத்த முதியவள் நீ!  இப்படிப்பட்ட உன்னை மூவுலகில் உள்ளவர்கள் வாலைச்சிறுமி என்று அழைப்பது என்ன மடமை. ஞானமுடையோர் உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஆனந்தக் கடலே! திருக்கடவூரின் உயிரே! அமுதீசரின் இடப்பாகம் அகலாதவளே! கிளியை திருக்கரத்தில் தாங்கியவளே! அருள் புரிபவளே! அபிராமியே!. அம்மா அன்னை நீயே அனைத்திற்கும் ஆதி மூலம் என்று பாடுகின்றார் அபிராமிபட்டர்.   


                                                                                                                                                                                         அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

நவராத்திரி நாயகி - 1

திருமயிலை கற்பகாம்பாள் அன்ன வாகனம்

வழக்கம் போல இந்த நவராத்திரி சமயத்தில் அன்னையின் அருட்கோலங்கள் கண்டு அருள் பெறுங்கள் அன்பர்களே. உடன் அபிராமி பட்டர் இயற்றிய பதிகங்கள் .   

கொலு மண்டபத்திற்கு எழுந்தருள 
இருக்கின்றாள்  கற்பகவல்லி

அன்னையின் அழகு  



ஊஞ்சல் மண்டபத்தில் திருக்கயிலாய காட்சி 


ருத்திராக்ஷம் மற்றும்  மலர் அலங்காரம் 





அலங்கார மண்டபத்திலிருந்து கொலு மண்டபத்திற்கு 
எழுந்தருளுகின்றாள் விரை மலர் குழல் வல்லி
 மரைமலர் பதவல்லி  விமலி கற்பகவல்லி 


அம்மனின் முதல் நாள் கொலு 
அன்ன வாகனம் 




ஆடும் மயிலாய் உருவெடுத்து இறைவன் தாள்
 நாடி அர்சித்த நாயகி 



அன்னையின் பின்னழகு 


அபிராமி அம்மை பதிகம்

காப்பு

தூய தமிழ் பாமாலை சூட்டுதற்கு மும்மதன் நால்
வாய் ஐங்கரன்தாள் வழுத்துவாம் - நேயர் நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள் அபிராமவல்லி
நண்ணும் பொற்பாதத்தில் நன்கு.

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் 
கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும் 
கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும் 

தாழாத கீர்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லா வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய 
தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!   (1)

பொருள்: திருக்கடவூரில் வாழ்கின்ற அபிராமி அம்மையே! கிளியை திருக்கரத்தில் ஏந்தியவளே! அருளைப் பொழிபவளே! அமிர்த கடேஸ்வரரின் வாம பாகம் அகலாமல் இருக்கும் அன்னையே!  பாற்கடலில் யோக நித்திரை கொள்ளூம் மாயன் திருமாலின் தங்கையே!  உன்னை வணங்கும் அன்பர்களுக்கு பதினாறு பேறுகளையும் வழங்கு அம்மா என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர். 


காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும்
கரிய புருவச் சிலைகளும்

கர்ண குண்டலுமு(ம்) மதிமுக மண்டலம் நுதற்
கத்தூரிப்பொட்டும் இட்டுக்

கூர் அணிந்திடுவிழியும் அமுத மொழியும் சிறிய 
கொவ்வையின் கனி அதரமும்

குமிழ் அனைய நாசியும் குந்தநிகர் தந்தமும்
கோடு சோடான களமும்

வார் அணிந்து இறுமாந்த வனமுலையும் மேகலையும்
மணி நூபுரப்பாதமும்

வந்து எனது முன்னின்று மந்தகாசமுமாக 
 வல்வினைகள் மாற்றுவாயே

ஆரமணி வானிலுறை தாரகைகள் போல நிறை 
ஆதிகடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!   (2)

பொருள்: வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் போல பிரகாசிக்கும் மணி மாலைகள் பூண்ட அபிராமி அம்மையே! அமிர்த கடேஸ்வரரின் வாம பாகம்  அகலாதவளே!. கிளியைத் திருக்கரத்தில் எந்தியவளே! அருளை வழங்கும் அபிராமியே!  மேகம் போன்ற கரிய கூந்தல், அதில் மலர் மாலைகள், வில் போன்ற கரிய புருவங்கள், காதுகளில் விளங்கும் குண்டலங்கள், அழகிய திருமுகத்தில் கஸ்தூரிப்பொட்டு,  அமுத மொழி, கொவ்வைப்பஜம் போன்ற இதழ்கள், குமிழம்பூ போன்ற நாசி,  சங்கு போன்ற கழுத்து, தளராத திருத்தனங்கள்,  மெல்லிய இடையில் மேகலை , திருப்பாதங்களில் நூபுரங்களுடன் அடியேன் முன் புன்னகையுடன்  தோன்றி    என் கொடிய வினைகளை அகற்றி ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர். 



அம்மன் அருள் தொடரும். . . . .. ...