ஹரித்வாரம்
ஹரி-கா-பௌரியின் மணிக்கூண்டு
இமயத்தின் ஒரு உச்சியில் கோமுக்கில் உற்பத்தியாகும் பாகீரதி பல்வேறு ஆறுகளுடன் கூடி மலைகளில் சுமார் 253 கி.மீ பாய்ந்தோடி வந்து சமவெளியைத்தொடும் இடம்தான் ஹரித்வாரம். துவாரம் என்றால் கதவு, ஆம் பல்வேறு புண்ணியத்தலங்களுக்கு ஹரித்வார்தான் நுழைவு வாயில். ஹரித்வாரம் என்பதை ஹரியின் நுழைவு வாயில் அதாவது பத்ரிநாத்திற்கான வாயில், ஹரனின் நுழைவு வாயில் அதாவது கேதார்நாத்திற்கான வாயில் என்றும் கொள்ளலாம். மேலும் இந்நகரை கங்கா துவார் மற்றும் சொர்க்க துவார், மாயாபுரி, மாயா க்ஷேத்திரம் என்றும் அழைக்கின்றனர். உத்தராகாண்ட் மாநிலத்தின் மேற்குப்பகுதியான கர்வால் பகுதியில் அமைந்துள்ள அனைத்து புண்ணிய தலங்களுக்கும் செல்ல நாம் ஹரித்வாரை கடந்துதான் செல்ல வேண்டும்.
சிவாலிக் குன்றுகளின் அடிவாரத்தில் இந்த புண்ணிய
நகரம் கடல் மட்டத்திலிருந்து 951 மீ
உயரத்தில் அமைந்துள்ளது. நமது பாரதபூமியின் முக்தி நகரங்கள் ஏழினுள் ஒன்று இந்த
ஹரித்வாரம் ஆகும். மற்ற முக்தி நகரங்கள் துவாரகை, மதுராபுரி, காஞ்சிபுரம், அயோத்தி, அவந்திகா, காசிஆகியவை ஆகும். இந்த ஏழு தலங்களில் முக்தி அடைந்தால் மீண்டும் மனித பிறப்பு இல்லை என்பது ஐதீகம்
விஷ்ணு பாதத்தில் கங்கை பாயும் அழகு
பண்டைக்காலத்தில் இங்கே கங்காத்வார் என்னும் கோயில் இங்கு இருந்ததாக நம்பப்படுகின்றது. ஆதி காலத்தில் பாகீரதனின் முன்னோர்களான சகரர்களை எரித்த கபில முனிவர் தவம் செய்துள்ளார். எனவே இத்தலம் கபில ஸ்தலம் என்றும் அழைக்கப்படுகின்றது. சமவெளியை அடைந்த கங்கை இங்கே பல்வேறு கால்வாய்களாக ஓடுகின்றாள். கங்கை இங்கு இரண்டு கி.மீ அகலம். மிகவும் புராதானமான இந்நகரில் பல புண்ணிய தலங்கள் உள்ளன, அவற்றுள் முதன்மையானது ஹரி-கா-பௌரி என்னும் படித்துறை. இங்குதான் ஹரியின் பாதம் (விஷ்ணு பாதம்) அமைந்துள்ளது. பத்ரிநாத்திலிருந்து ஹரித்வார் வரை உள்ள விஷ்ணுவின் பாதம் இங்குதான் அமைந்துள்ளது. மாலையில் கங்கைக்கு காட்டப்படும் ஆரத்தி ஹரியின் பாதத்திற்கு காட்டப்படும் ஆரத்திதான். இந்த கங்கையின் கட்டத்தை கட்டியவர் மால்வாவின் அரசன் யசோதர்மன் ஆகும்.
சண்டி தேவி உடண் கடோலா இழுவை வண்டிகள்
குரு மேஷ இராசியில் பிரவேசிக்கும் போது 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் முழு கும்பமேளாவும் , ஆறு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் அர்த்த(பாதி)கும்பமேளாவும் இந்த படித்துறையில்தான் நடைபெறுகின்றது. மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும் கொண்டு கூர்ம அவதாரம் எடுத்து மஹா விஷ்ணு மந்தார மலையை தாங்க பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது முதலில் ஆலம் (விஷம்) வந்தத, வலி தாங்காமல் வாசுகியும் விஷத்தை கக்கினாள். இரண்டும் சேர்ந்து ஆலாலமாகி அனைவரையும் மிரட்ட, தேவர்கள் சிவபெருமானை சரண் அடைய அந்த பரம கருணாமூர்த்தி அந்த ஆலாலத்தை எடுத்து விழுங்கினார், அம்பிகை தன் தளிரண்ண கரத்தினால் அவ்விடத்தை ஐயனின் கண்டத்திலேயே நிறுத்தினாள் எனவே ஐயனின் கண்டம் நீலநிறமானது அவரும் நீலகண்டரானார். பின்னர் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர் ஐராவதம், உச்சிரவசு, கற்பக மரம், காமதேனு, மஹா லக்ஷ்மி, சிந்தாமணி, எல்லாம் பாற்கடலில் இருந்து வந்தது. இறுதியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி வந்தார். பின்னர் அந்த அமிர்த கலசத்தை கைப்பற்ற தேவர்களும், அசுரர்களும் முயன்றனர் இவ்வாறு அவர்கள் போட்டியிட்ட போது அமிர்தத்துளிகள் நான்கு இடங்களில் சிந்தியது. இந்த நான்கு தலங்களிலும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகின்றது. கும்பமேளா நடைபெறும் மற்ற தலங்கள் நாசிக், அலகாபாத் மற்றும் உஜ்ஜயினி ஆகும். பின்னர் மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து சாதுர்யமாக தேவர்களுக்கு அமிர்தத்தை அளித்தார். தேவர்களும் அமரர்கள் ஆனார்கள்.
மேலிருந்து ஹரித்வார் நகரின் காட்சி
(இழுவை வண்டியில் செல்லும் போது கிடைக்கும் காட்சி)
கங்கைக்கரை முழுவதும்
கட்டிடங்களும் கோயில்களும் நிறைந்திருக்கின்றன. மேலும் நகர் முழுவது எண்ணற்ற
வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான சில, மலை மேல் அமைந்திருக்கும் மானஸதேவி ஆலயம்
மற்றும் சண்டிதேவி ஆலயம் ஆகும் இவை இரண்டும் சக்தி பீடங்கள் ஆகும். இவ்வூரில் சித்தி பீடம் அதாவது மன விருப்பத்தை பூர்த்தி செய்யும் தலங்கள் என்று அழைக்கின்றனர். தக்ஷன் தவம்
செய்த குண்டமும், சதி தேவி தன் உடலை தியாகம் செய்த இடம் தக்ஷேஸ்வரர் மஹாதேவ் ஆலயம்
உள்ளது. அன்னையின் இருதயம் விழுந்த இடம் மாயா தேவி ஆலயம் ஹரித்வாரின் மூன்றாவது சக்தி பீடம் ஆகும். இதல்லாமல் ம்ருத்யுஞ்சய் மஹாதேவ் ஆலயம், பைரவர், நாராயணர், பீமா கோடா , பாரத மாதா ஆலயங்கள் உள்ளன. பாரத மாதா ஆலயத்தில் ஒன்பது அடுக்கடுக்கான மாடங்களில் ஒவ்வொரு மாடத்திற்கும் பாரத திருநாட்டில் இருந்த ஆன்மீக மற்றும் அரசியல் முன்னோடிகளை கடவுள்களைப் பற்றிய குறிப்புக்களும் சிலைகளும் என அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. ஹரித்வாரில் மற்ற பார்க்கவேண்டிய இடங்கள்
சப்தரிஷி ஆசிரமம் மற்றும் சப்த் சரோவர்
ஆகும். காஸ்யபர், பரத்வாஜர், அத்ரி, கௌதமர், ஜமதக்னி, விஸ்வாமித்திரர் என்னும்
சப்த ரிஷிகள் இங்கே தவம் செய்த போது கங்கை அவர்களது தவத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க ஏழு அருவிகளாக ஓடினாள் என்பது ஐதீகம். பீமா கோடா
குளம் பீமன் குளிப்பதற்காக தனது
முழங்காலினால் உருவாக்கியது என்பது ஐதீகம்.
சண்டி தேவி ஆலயம்
இந்த வருட இரண்டு ஆலய யாத்திரையின் எட்டாம் நாள் 02.09.2011 அன்று காலை எழுந்து ஹரித்வாருக்கு
ஆட்டோ மூலமாக வந்து சேர்ந்தோம் அங்கு முதலில் ஹரி-கா-பௌரி கட்டத்தில் முதலில் புனித நீராடினோம். தண்ணீர் மிகவும் குளிராகத்தான் இருந்தது. இங்கு பக்தர்கள் குளிப்பதற்கு ஏதுவாக இரும்பு சங்கலிகள் மற்றும் கம்பி தடுப்பு அமைத்துள்ளனர். முதலில் மலை
மேல் அமைந்துள்ள மன்ஸா தேவி கோவிலுக்கு சென்றோம். மன்ஸா தேவி கோவிலுக்கு படிகள் ஏறியும்
செல்லலாம். அல்லது இழுவை வண்டி (கேபிள் கார்) மூலமாகவும் செல்லலாம்.
சண்டி தேவி உடண் கடோலா என்ற நிறுவனத்தினர் இழுவை வண்டியைத் தொடரை இயக்குகின்றனர். சண்டி
தேவியிலும் இவர்களே கேபிள்காரை இயக்குகின்றனர்.
இரண்டு ஆலயங்களுக்கும் மற்றும் இவற்றின் இடையில்
செல்வதற்குமாக சேர்த்து ஒன்றாக டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்.
நாங்கள் சென்ற போது மிகவும் கூட்டமாக இருந்ததால் டிக்கெட் தருவதை நிறுத்தி வைத்திருந்தனர்.
என்ன செய்வது படியேறி சென்றால் நேரம் அதிகமாகுமே என்று யோசித்துக் கொண்டிருந்த போது தனுஷ்கோடி அவர்கள் தனக்கு தெரிந்த ருத்ராக்க்ஷங்கள்
மற்றும் பூஜை பொருட்கள் விற்கும் கடைக்கு அழைத்து சென்றார். அங்கு சென்று ருத்திராக்ஷ
மாலைகள், முத்து மாலைகள், சுவாமி சிலைகளுக்கு அலங்காரப் பொருட்கள், கவரி ஆகியன வங்கினோம்.
கடைக்காரரே தனது கடை வேலைக்காரரை அனுப்பி அனைவருக்கும் டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
இழுவை
வண்டியில் செல்வதே ஒரு இனிமையான அனுபவம். பயண தூரம் சுமார் 540 மீட்டர் தூரம். ஒரு
பெட்டியில் நான்கு பேர் பயணம் செய்யலாம். கண்ணாடி வழியாக சுற்றுப்புறத்தை நன்றாகப் பார்க்கலாம். மேலே செல்ல செல்ல ஹரித்வாரின் முழு தரிசனமும்
நன்றாக தெரிகின்றது. கங்கை ஆற்றையும் அதன்
இரு கரையிலும் உள்ள கட்டிடங்களையும் தூரத்தில்
உள்ள சண்டி தேவி ஆலயத்தையும் ஸ்பஷ்டமாக காணலாம் செல்லும் வழியெங்கும் அழகான மலர் தோட்டங்கள வைத்து பராமரித்து வருகின்றனர்.
மேலிருந்து பார்க்கையில் சரிவில் பலவிதமான வண்ணங்களில் இந்த மலர்த் தோட்டங்களை காண்பதே
ஒரு சுகமான அனுபவம் என்பதில் ஐயமில்லை. சுமார்
1 நிமிடத்தில் மேலே சென்று சேர்ந்தோம் ஆனால்
இந்த பத்து நிமிடப்பயணத்திற்காக சுமார் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
மன்ஸா தேவி ஆலய கோபுரம்
சக்தி பீடமான மன்சா தேவி ஆலயம் சிவாலிக் குன்றுகளின் பில்வ
மலையில் அமைந்துள்ளது. அன்னை பார்வதியின் ஒரு அவதாரம்தான் மானசா தேவி. மனஸ் என்றால்
மனது, பக்தர்களின் மன கவலைகளை எல்லாம் நீக்கி அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதாலும்,
காஷ்யப ரிஷியின் மனதில் இருந்து தோன்றிய மானச புத்ரி என்பதாலும் அன்னைக்கு இந்த திருநாமம். அன்னைக்கு நேர்ந்து கொள்பவர்கள் ஒரு கயிற்றை வாங்கி
பிரகாரத்தில் உள்ள மரத்தில் கட்டி விட்டு செல்கின்றனர்.
தங்கள் பிரார்த்தனை நிறைவேறிய பின்னர் பின்னொரு தடவை வந்து அன்னைக்கு பூஜை செய்து விட்டு
அந்த கயிற்றை அவிழ்த்து செல்கின்றனர். எப்போது
சென்றாலும் கோவிலில் கூட்டம்தான். படிகளில்
இறங்கி கீழே சென்று வரிசையில் நின்று அம்மனை தரிசிக்க சென்றோம். தலையில் ஜெய் மாதா
தீ! என்று அச்சிடப்பட்ட சிவப்பு துணிகளை கட்டிய பக்தர்கள் பஜனை செய்து கொண்டே அன்னையை ஓம் சக்தியை தரிசிக்க செல்கின்றனர். கர்ப்ப கிரகத்தில்
இரண்டு தெய்வ மூர்த்தங்கள் உள்ளன ஒரு அம்மனுக்கு ஐந்து முகங்களும் பத்து கரங்களும்
உள்ளன. இன்னோரு மூர்த்தத்திற்கு பதினெட்டு கரங்கள் உள்ளன. மனதார அனைவரும் நன்றாக இருக்க
வேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொண்டே மிக்க மன அமைதியுடன் வெளியே வந்து தல மரத்தை வணங்கி விட்டு இழுவை வண்டி
மூலம் கீழே வந்து சேர்ந்தோம். நவராத்ரி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது ஆயிரக்கணக்கான
பக்தர்கள் இங்கு குழுமி அன்னையை வணங்கி செல்கின்றனர்.
.
மன்ஸா தேவி ஆலயம் ஹரித்வார் நகரின் உள்ளே ஹரி-கா-பௌரிக்கு
அருகிலேயே உள்ளது. ஆனால் சண்டி தேவி ஆலயம் ஹரித்வாரில் இருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில்
ஹரித்வாரிலிருந்து ரிஷிகேஷ் செல்லும் ஒரு சுற்றுப்பதையில் உள்ளது உள்ளது. நாங்கள் மொத்த டிக்கெட் வாங்கி விட்ததால்
இவர்களின் வண்டி மூலமாக சண்டி தேவி ஆலயத்திற்கு
சென்றோம். அங்கும் சரியான கூட்டம் சுமார் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.
அதன் பின்னும் வண்டியில் நின்றே செல்லுகின்றோம் என்று கூறி கிடைத்த முதல் வண்டியிலேயே
ஏறி சென்றோம் இல்லாவிட்டால் இன்னும் நேரம் அதிமாக ஆகிவிட்டிருக்கும் இவ்வாறாக
சண்டி தேவி வந்தடைந்தோம்.
சண்டி தேவி ஆலயமும் மலையின் மேல் அமைந்துள்ளது இந்த மலைக்கு பெயர் நீலாசலம் என்று பெயர் இங்கும்
படியேறியும் செல்லலாம் ரோப் கார் மூலமாகவும் செல்லலாம். ரோப்வேயின் நீளம் 740 மீ உயரம் 208
மீ.இந்த
ஆலயத்தையும் தங்கள் மன விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் சித்தி பீடமாக பக்தர்கள்
கொண்டாடுகின்றனர். துஷ்டர்களை
அழித்து பக்தர்களை காக்கும் ஜகதம்பா பார்வதி தேவி , சும்ப நிசும்ப அசுரர்களை வதம் செய்ய மஹா த்ரிபுர சுந்தரியாக அவதாரம் செய்து இமய மலை
சாரலுக்கு வந்தாள். அன்னையின் பேரழகைக்கண்டு சும்பன் அவளை மணக்க விரும்பினான்.
அன்னை மறுக்க தனது தளபதிகளான சண்ட முண்டர்களான
அனுப்பினான். அவர்களை அன்னையின் திருமேனியிலிருந்து தோன்றிய காளிகா வதம்
செய்தாள். பின்னர் தானே சும்ப நிசும்பர்களை வதம் செய்து அன்னை மனிதர்களையும்
தேவர்களையும் காப்பாற்றினாள். இதனால் அன்னை சாமுண்டி, சண்டி, சண்டிகா என்றும் அழைக்கப்படுகின்றாள். துஷ்ட
நிக்ரஹம் முடிந்து திரும்பிசெல்லும் போது அன்னை இங்கே தங்கியதாக ஐதீகம். ஒரு சமயம் அன்னை
ஒரு ஸ்வயம்புவாக தூணில்
வெளிப்பட்டாள். இன்றும் அந்த எண் கோண தூண்
புனிதமானதாக வணங்கப்படுகின்றது. அன்னையின்
திருஉருவச்சிலையை 8ம் நூற்றாண்டில் ஸ்தாபிதம் செய்தார். அன்னையின் உக்கிரம் கருதி
வழிபாடுகள் இல்லாமல் போய்விட்டது. 1929ல்
காஷ்மிரின் அரசன் சுஸத் சிங் தற்போதைய கோவிலைக்கட்டினார். பின்னர் பக்தர்கள் பெருமளவில் வர ஆரம்பித்தனர் .தற்போது
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனிடம் தங்கள் மனக்குறைகளை கூறி
செல்கின்றனர். அவளருளால் அவை அனைத்தும் நீங்குகின்றன. தேவி மஹாத்மியத்தில் சிறப்பிக்கபடுபவள் சண்டி.
மஹா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி மூவரும் சேர்ந்த சக்தியே சண்டி, நவராத்ரி
சமயத்தில் சண்டியை வணங்குவது மிகவும் சிறப்பானது. எனவே நவராத்திரி சமயத்தில்
பக்தர் இங்கு குவிகின்றனர். மேலும் சண்டி சௌதாஸும் இங்கு விசேஷம். இரண்டு
ஆலயங்களிலும், தோல் பொருட்களை அணிந்து கொண்டு செல்லக்கூடாது. மாமிசம்
சாப்பிட்டவர்களும்,மது அருந்தியவர்களுக்கும் அனுமதி இல்லை.
அன்னையை மூல மந்திரம் ஜபித்து கண்ணை
மூடி வணங்கி நின்ற முடித்து கண்ணை திறந்த போது ஒரு ஆச்சரியம் நடந்தது. பண்டா என்ன நினைத்தாரோ தெரியவில்லை அன்னைக் சாற்றிய சுன்ரி (முக்காடு) ஒன்றை அளித்தார்.
நம்மூரில்தான் முக்காடு என்பது இழிவாக கருதப்படுகின்றது. ஆனால் வடநாட்டில் பெண்கள் எல்லாம் முக்காடு அணிவதால் அது
மங்களமானதாகவே கருதப்படுகின்றது. குறிப்பாக எல்லா அம்மன் கோவில்களுக்கும் அம்மனுக்கு
சிவப்பு நிற தங்க சரிகைகள் கூடிய இந்த சுன்ரியை அர்ப்பணம் செய்கின்றனர். அம்மன் அருளால்தான் அவளுக்கு
சாற்றிய வஸ்திரம் அடியேனுக்கு கிடைத்தது.
பின்னர் என்னுடன் பணிபுரியும் அன்பரிடம் விசாரித்தேன் அவர் அம்மனுக்கு சாற்றிய
சுன்ரியை பெண்கள் கல்யாணம் ஆகிச் செல்லும் போது சீதனமாக கொடுத்து அனுப்புவோம்.
தாங்களும் அவ்வாறே இந்த வஸ்திரத்தை பூஜை அறையில் வைத்திருந்து உங்கள் பெண்ணுக்கு
திருமணம் ஆகும் போது அவளுக்கு கொடுத்து அனுப்புங்கள் அம்மன் அருள் அவளுக்கு
கிட்டும் என்று கூறினார். எல்லாம் அவள் அருள்.
முக்தி தாயினி
மகரவாகினி
கங்கா மய்யா கீ ஜே