Showing posts with label ஸ்வர்க்க்காரோகணம். Show all posts
Showing posts with label ஸ்வர்க்க்காரோகணம். Show all posts

Friday, August 3, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -29

அந்தக் கதை பஞ்சபாண்டவர்கள் சொர்க்கம் சென்ற கதையாகும்.  மஹா பாரதப்போரில் வென்ற பஞ்சபாண்டவர்கள் சிறப்பாக இராஜ்ய பரிபாலனம் செய்து இறுதியாக சொர்க்கம் செல்லுவோம் என்று இராஜ்யத்தை பரிக்ஷித்திடம் ஒப்படைத்து விட்டு இமயமலைக்கு வந்து கேதாரீஸ்வரரை பணிந்து கோத்ரஹத்யா (தன் உறவினர்களை கொன்ற பாவம்), பிராமணஹத்யா (பிரமாணர்களை கொன்ற பாவம்) நீங்கப்பெற்று பின் நிறைவாக  பத்ரிநாதரை தரிசனம் செய்து விட்டு சொர்க்கம் செல்ல புறப்பட்டனர். சரஸ்வதி நதியை பீமன் அமைத்த பாலத்தினால் கடந்து யோகத்தை மனதில் நிறுத்தி அவர்கள் கடந்தனர்.  

பீமன் பாலம்
பாலத்தை கடந்த சிறிது நேரத்தில்  திரௌபதி கால்கள் தள்ளாடி கீழே விழுந்தாள். அதைக்கண்ட பீமசேனன் தர்மபுத்திரரிடம், தவத்தில் சிறந்தவரே, அரசகுமாரி திரௌபதி   ஒரு பாவமும் செய்யவில்லையே  அவள் விழுந்ததற்குக் காரணமென்ன? என்று வினவினான். 
மானா கிராமத்தின் முட்டைக்கோஸ் தோட்டம்
பீமனுடைய கேள்வியைக் கேட்ட தர்மபுத்திரர் பின்னால் திரும்பாமல் நடந்து கொண்டே பதில் கூறினார் – “அவளுடைய உள்ளத்தில் அர்ஜுனனிடம் மட்டும் மிகுதியான அன்பு இருந்தது.” சிறிது நேரம் கழித்து லக்ஷ்மி வனத்தை அடைந்த போது சகதேவன் பூமியில் விழுந்தான். அதைப் பார்த்த பீமன்- அண்ணா சகதேவனின் மனதில் சிறிதும் அகந்தை இருந்ததில்லை அவன் ஏன் இறந்தான் என்று கேட்டான். அதற்கு தர்மபுத்திரர், “தன்னைப் போன்ற புத்திமான் வேறு யாரும் இல்லை" என்ற அகந்தையினால்தான் அவன் விழுந்தான் என்று பதிலிறுத்துவிட்டு தொடர்ந்து நடந்தார் தர்மர். மற்ற சகோதரர்கள் மற்றும் தொடர்ந்து பின் வந்த நாயுடன் தர்மர் சென்று கொண்டிருந்த போது சகஸ்ரதாராவின் அருகே மற்றொரு மாத்ரி புத்திரனான நகுலனும் கீழே விழுந்தான். பீமன் மீண்டும் – அண்ணா அறத்திலிருந்து வழுவாத நம்முடைய  பிரியமான  நகுலன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான்.  அதற்கு  தர்மர்  “ தன்னைப் போன்ற அழகன் வேறு யாருமில்லை" என்ற அகந்தைதான் காரணம் , வா தம்பி என்று தொடர்ந்தார் தர்மர், சிறிது தூரம் சென்று   சக்ரதீர்த்த்தின் அருகே வில் வீரன் அர்ச்சுனனும் விழுந்தவுடன் பீமன்,  அரசே,அர்ஜுனன் விளையாட்டாக கூட பொய் பேசியதில்லையே அவன் ஏன் விழுந்தான் என்று வினவ தரிமபுத்திரர் அர்ஜுனனுக்கு தன் வீரம் பற்றிய அகந்தை இருந்தது என்றார். சிறிது தூரம் சென்று சதோபன்த் ஏரியை அடைந்த போது இது வரை கேள்வி கேட்டுக்கொண்டிருந்த பீமசேனனும் விழுந்தான். விழுந்ததும் அவன் தர்மரை அழைத்து, இதோ பாருங்கள் நானும் விழுந்து விட்டேன். இதற்கு என்ன காரணம் என்று வினவ, தர்மபுத்திரர் கூறினார் தம்பி "உனக்கு உணவில் மிக்க விருப்பம். மேலும் மற்ரவர்களை நீ துச்சமாக நினைத்து தற்பெருமை பேசிக்கொண்டிப்பாய்". அதனால்தான் நீ கீழே விழ வேண்டி வந்தது என்று கூறி விட்டு முன்னே நடந்தார். ஸ்வர்க்காரோகணி என்னும் மலை சிகரத்தில் ஏறி  நின்ற தர்மரை சொர்க்கம் அழைத்து செல்ல புஷ்பக விமானம் வந்தது. தர்மருடன் நாயும் விமானத்தில் ஏற முயன்ற போது தேவ தூதர்கள அதை தடுத்தனர். தர்மர் இந்த நாய் என்னுடனே வந்து கொண்டிருக்கின்றது எனவே அதையும் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கு தேவதூதர்கள் மறுப்புக்கூற தர்மர் விமானத்தில் இருந்து இறங்கி, நாய் வரவில்லையானால் நானும் வரவில்லை என்று கூறி நின்றார். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது நாய் எமதர்மராஜனாக மாறி, தர்மம் தவறாத, தன்னலமில்லாத  நீயே எனக்கு ஏற்ற மகன் என்று வாழ்த்தி தர்மபுத்திரரை  பூத உடலுடன் சொர்க்கம் அழைத்து சென்றார். இவ்வாறு  மஹாபாரதத்தின் நூலும் பாவும் இமயமலையுடன்  இனைந்துள்ளது.  
சரஸ்வதி அன்னை ஆலயம்
இவ்வாறு பஞ்ச பாண்டவர்கள் சென்ற இந்த வழியில் ஸ்வர்க்காரோகிணி வரையில்  மிகவும் கடினமான சதோபந்த (சத்தியத்தின் பாதை) யாத்திரையை மேற்கொள்ளும் அன்பர்கள் இருக்கின்றனர். பனி உருகிய பின் பத்ரிநாத்திலிருந்து பீமன் பாலத்தின் மூலம் சரஸ்வதி நதியை கடந்து மாதா மூர்த்தியின் அருள்பெற்று, மானாவிலிருந்து 3  கி.மீ தொலைவில் உள்ள, 122  மீ உயரத்தில் இருந்து விழும்  வசுதாரா நீர் வீழ்ச்சியை கண்டு களித்து லக்ஷ்மி தவம் செய்த  லக்ஷ்மி வனம், குபேரனின் அளகாபுரி பளிங்குப்பாறை பகுதி என்று நான்கு நாட்கள் நடைபயணம் மேற்கொள்கின்றனர். மிகவும் கடினமான பாதை, சில இடங்களில் கத்தி முனை போல இருக்கும் மலை முகட்டில் நடந்து செல்ல வேண்டும் கரணம் தப்பினால் மரணம் தான். வழிகாட்டி மிகவும் அவசியம். சாப்பிட வேண்டிய பொருட்களை போர்ட்டர்கள் மூலமாக கொண்டு செல்ல வேண்டும். மேகி(Maggie), பிரசர் குக்கர், ஸ்டவ்  என்று எல்லா பொருட்களையும் உடன் எடுத்து செல்ல வேண்டும். சதோபந்த் ஏரி 4000  அடி உயரத்தில் அமைந்துள்ளது. அருகே சோன்குண்ட், விஷ்ணுகுண்ட், சூரிய குண்ட் என்னும் சிறிய குளங்கள் உள்ளன. ஸ்வர்க்காரோஹன் சிகரம் பனிச்சிகரமாகும். தர்மர்,  எறிச்சென்ற எழு படிகளை மேகம் இல்லாவிட்டால் தரிசிக்கலாமாம்.  எங்களுடன் பயணம் செய்த முட்கல் இந்த வருடம் மே மாதம்,  சதோபந்த யாத்திரையை முடித்திருந்தார் அவரது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். தர்ம புத்திரர் புண்ணியம் செய்தவர் அவர் ஒரு தடவை சென்றவர் திரும்பி வரவில்லை, நான் திரும்பி இந்த கர்மபூமிக்கு வந்துள்ளேன் என்று வேடிக்கையாகக் கூறினார்.  
இந்திய திருநாட்டின் இறுதிக் கிராமம்  

இந்த கிராமத்திலும் இந்திய ஸ்டேட் வங்கி

மானா கிராமத்தின் வளத்தையும் மக்களின் வாழக்கை முறையையும் பார்க்க கிட்டியது. வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் அதிகமாக முட்டைகோஸ் கடுகு பயிரிட்டிருந்தனர் அதிலே  சிறு முயல்கள் துள்ளி ஓடிக் கொண்டிருந்தன. வழியெங்கும் இமய மலைக்கே உரித்தான  வண்ண வண்ண  ஆர்க்கிட் மலர்கள்.  ஆடு மேய்த்து அதன் முடியை  எடுத்து கம்பளி  ஆடைகள் தயாரிக்கின்றனர். மலையில் கிடைக்கும் மூலிகைகளை கொண்டு வந்து விற்கின்றனர். இங்கு கிடைக்கும்  வாடா மலர்களை இடித்து பனிக்காலத்திற்காக  சேர்த்து வைக்கின்றர்.  பனி காலத்தில் மானா கிராமத்தை காலி செய்து விட்டு கீழே வந்து  வசிக்கின்றனர்.  இவர்களுடைய குல தெய்வம்தான் கண்டா கர்ணன், இவரது சன்னதி பத்ரிநாதர் ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில்  உள்ளது.


பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள மானா கிராமத்து முதியவர்கள்

சுமார் 2 கி.மீ தூரம் நடந்து பீமன் பாலத்தை அடைந்தோம். சுவர்க்கத்திற்காக பஞ்ச பாண்டவர்கள் புறப்பட்ட போது முதலில் அவர்கள் சரஸ்வதி நதியை அடைந்தபோது சரஸ்வதி ஆறு நுப்பும் நுரையுமாக ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டு பயந்த திரௌபதி எப்படி இந்த நதியைக் கடப்பது என்று தயங்கி நின்ற போது பீமன் ஒரு பெரிய பாறையை எடுத்து நதியின் குறுக்கே அநாயாசமாக வைத்தார், பஞ்ச பாண்டவர்கள் பின் சரஸ்வதி நதியை கடந்து சென்றனர்.  இன்றும் அந்தப் பாறையை நாம் பாலமாக  காணலாம். தற்போது கீழிறங்கி சென்று  பீமன் பாலத்தையும் கேசவ ப்ரயாகையைய்ம் காணும் வகையில் படிகள் அமைத்துள்ளனர்.
சரஸ்வதி நதி

  குகைகளில் சாதுக்கள்





இந்த இடம்தான் நமது இந்திய நாட்டின் இறுதி கிராமம் ஆகும் ஏனென்றால் இது சீன இந்திய எல்லையில் அமைந்துள்ளது. இங்கு ஒரு தேநீர்க்கடைக்காரர் அனைத்து இந்திய மொழியிலும் இது தான் இந்தியாவின் கடைசி டீக்கடைக்கு வரவேற்கின்றோம் என்று அனைவரையும் வரவேற்று தேநீர் அளிக்கின்றார். சரஸ்வதி நதியின் கரையில் சரஸ்வதி தேவிக்கு ஒரு ஆலயம் அமைந்துள்ளது. நதியாக ஓடி வரும் அன்னையை இங்கு மூர்த்தியாக (சிலையாக) தரிசனம் செய்கின்றோம்.   கலைமகளை   மனதார   வழிபட்டோம். சரஸ்வதி நதி
அலக்நந்தாவின் சங்கமம் கேசவப்ரயாகை  என்று அழைக்கப்படுகின்றது. வழியில் குகைகளில் பல்வேறு சாதுகளை தரிசித்தோம்.  அருகே ஒரு குறும்பு தேநீர்க்கடைக்காரர் இந்தியாவின் நிறை தேநீர்க்கடை, ஒரு இந்திய சகோதரனுக்கு சேவை  செய்யும் வாய்ப்பை அளியுங்கள் என்று வேண்டு்கின்றார்.  திரும்பி வரும் வழியில் மலை உச்சியில் ஆடுகளை மேய்க்கும் பாங்கை கண்டோம்.

பீமன் பாலம்
பீமன் பாலத்தில் தேஷ்பாண்டே குடும்பத்தினர்




அலக்நந்தா நதிக்கரையோரம் பீமன் லம் செல்ம் பாதை

னாவில் இருந்து திரும்பி வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துகொண்டு பின்னர் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்திற்காக மீண்டும் ஆலயம் சென்றோம். மதியத்திற்குப்பின் கட்டண சேவைகள் துவங்குகின்றன. அப்போது சென்றால் பத்ரிநாதரை மிக அருகில் சென்று  தரிசனம் செய்யலாம். நாங்கள் சென்று வரிசையில் நின்றோம். மழை பெய்தது அப்படியே வரிசையில் தங்க ஆரத்தி, வெள்ளி ஆரத்தி சேவைகள் முடிந்தபின் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்திற்க்காக  மண்டபத்தில் அமர்ந்தோம். விஜயதசமி, திருவோண நாளில் பூலோக வைகுண்டமான பத்ரிநாதத்தில் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. ஒரு பட்டர் நாமங்களை சேவிக்க அனைவரும் உடன் சேவித்தோம். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்திற்கு பிறகு திவ்யமாக கற்பூர ஆரத்தியில் பத்மாசனத்தில் வைர மகுடத்துடன் சேவை சாதிக்கும் பெருமாளை திவ்யமாக சேவித்தோம்.
மின்னொளியில் பத்ரிநாத் சிம்மதுவாரம்  
 பின்னர் வெளியே வந்து மின்னொளியில் சிங்கதுவாரம் ஒளிரும் அழகைக் கண்டு களித்தோம். காலை அபிஷேகத்திற்கான அனுமதி சீட்டு வாங்க முயற்சி செய்தோம் ஆனால் முடிந்து விட்டிருந்தது. இவ்வாறு இன்றைய தினம் மிக்க அருமையான நாளாக நிறைவு பெற்றது.   காலையில் அபிஷேகம் பார்க்க முடிந்ததா? என்று அறிந்து கொள்ள அடுத்த பதிவு வரை பொறுத்திருங்கள் அன்பர்களே.