Saturday, September 4, 2010

மணக்குள விநாயகர்

பாண்டிச்சேரி மணக்குள விநாயகர்



நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்;
உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை
வாழ்விப்பான்;
சிந்தையே யிம்மூன்றும் செய்

மஹாகவி பாரதியாரின் இப்பாடலின் முதல் இரண்டு வரிகளை தமிழ் கூறும் நல்லோர் அனைவரும் அறிவர் ஆனால் பின் இரு வரிகளில் அவர் பாடியுள்ள உமைக்கினிய மைந்தன் கணநாதன் எந்த தலத்தில் குடி கொண்டுள்ளார் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில் நாம் அந்த கணபதியைத் தான் தரிசனம் செய்யப் போகின்றோம்.

என்ன அன்பர்களே அவர் யார் என்று யூகிக்க முடிகிறதா? பரவாயில்லை ஒரு குறிப்புத் தருகின்றேன். தாங்கள் சரித்திரம் படித்திருந்தால் இதற்கான விடை உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். என்ன இன்னும் தெரியவில்லையா? பரவாயில்லை வெள்ளையனிடமிருந்து தப்பிக்க பாரதியார் சென்று தங்கிய ஊரில் உள்ள பிள்ளையார்தான் இவர்.

எங்கள் அடுக்குமாடி கட்டிட விநாயகர் சதுர்த்தி பூஜை

அட சரியா சொல்லீட்டிங்களே! புதுவை மணக்குள விநாயகர் மேல்தான் பாரதியார் தனது விநாயகர் நான்மணிமாலையில் இப்பாடலை பாடியுள்ளார். இனி இம்மணக்குள விநாயகர் திருக்கோவில் பற்றி இப்பதிவில் காண்போம்.

குளக்கரை எங்கும் அரச மரத்தடியில் வீற்றிருக்கும் முழு முதற்கடவுள் இங்கே புதுச்சேரியில் அலை பாயும் கடல் ஒரத்தில் அமர்ந்திருக்கின்றார். முற்காலத்தில் புதுவை வேதபுரி என்று அழைக்கப்பட்டது, சிவபெருமான் வேத புரீஸ்வரர் என்ற பெயரின் ஊரின் நடுவே எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். சிவசக்தியின் மூத்த பிள்ளை இங்கு வர காரணமானவர்கள் இப்பகுதியில் வசித்த நெசவாளர்கள். பிரெஞ்சுக்காரர்கள் புதுவையைக் கைபற்றும் முன்னரே ஒரு மணற் குளத்தின் கரையில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் கோயில் கொண்டார் பிள்ளையார். மணற்குளம் என்பது இன்று மருவி மணக்குளம் ஆகிவிட்டது. அக்காலத்தில் கடல் இன்னும் உள் வாங்கி இருந்தது என்றும் இக்குளத்தில் நல்ல தண்ணீர் இருந்ததாம்.

எங்கள் அடுக்குமாடி கட்டிட விநாயகர் சதுர்த்தி பூஜை

இவ்வாறு கடற்கரையில் வந்து கோவில் கொண்ட பிள்ளையார் பிரெஞ்சுக் காரர்கள் வந்து கோட்டை கட்டிய போது அவர்கள் கோட்டைக்கு வெளிப்புறம் அமைந்து விட்டார். எனவே இவரை எப்படியாவது அங்கிருந்து அகற்றி விட வேண்டும் என்று பிரெஞ்சுக்காரர்கள் முயன்றார்களாம், அவ்வாறு அவர்கள் அகற்றிய போதெல்லாம் கணபதி தானே மறுபடியும் தோன்றிக் கொண்டே இருந்தாராம். மேலும் இந்துக்கள் நடத்திய விநாயகரின் பண்டிகை கொண்டாட்டங்களை பிரெஞ்சுக்காரர்கள் தடை செய்த போது சுமார் 15000 நெசவாளர்கள் சென்னை செல்ல முடிவு செய்தனர் அதனால் அடி பணிந்த டியூப்ளே பின்னர் மணக்குள விநாயாகர் பக்தர் ஆனார் என்பதே உண்மை, பின்னர் வெள்ளைக்காரர்கள் வழிபட்டதால் மணக்குள விநாயகர் வெள்ளைக்கார பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகின்றார். இன்றும் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் சிலர் எந்த காரியம் துவங்குவதற்கு முன் மணக்குள விநாயகரை வணங்கி தங்கள் காரியத்தை ஆரம்பிக்கின்றனர்.

தன்னை வணங்கி நிற்கும் அன்பர்களுக்கு எல்லா விக்னங்களையும் போக்கும் விக்னராஜர் கல்யாண வரம், பிள்ளை வரம் முதலியன அருளி அனைவருக்கும் அருள் பாலிக்கின்றார். புதுச்சேரியில் புது வண்டி வாங்குபவர்கள் இங்கு வந்துதான் முதல் பூஜை போடுகின்றனர். வெளி நாட்டு அன்பர்கள் பலர் சேர்ந்து இப்பிள்ளையாருக்கு அமெரிக்கன் வைரங்களிலான கவசம் செய்து தந்துள்ளனர். வெள்ளி கவசம் முன்னரே இருந்தது சமீப காலத்தில் தங்க கவசமும் செய்து மணக்குள கணபதிக்கு அன்பர்கள் செய்து காணிக்கையாக்கியுள்ளனர்.


வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணி மலரே; ஆழ்க வுள்ளஞ் சலனமிலா தாண்ட வெளிக்கண் அன்பினையே சூழ்க; துயர்கள் தொலைந்திடுக; தொலையா இன்பம் விளைந்திடுக வீழ்க கலியின் வலியெல்லாம். கிருதயுகந்தான் மேவுகவே.

என்று பாரதி பாடிய மணக்குள விநாயகர் ஆலயத்தை வலம் வருவோமா? வியாசருக்காக தமது தந்ததை உடைத்து பாரதம் எழுதிய விநாயகரின் 24 அடி இராஜ கோபுரம் நெடிதுயர்ந்து கம்பீரமாக முதலில் நம்மை வரவேற்கின்றது. கோபுர தரிசனம் கோடி புண்ணீயம், . அக் கோபுரத்தை விநாயகரின் பல் வேறு சுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. அங்கிருந்தபடியே கணபதியை கை கூப்பி உள்ளே பிரகாரத்தில் நுழைந்ததும் நம் கண்ணில் படுவது ஒரு கல்வெட்டு. அதில் . பாண்டிச்சேரி அன்னை அவர்கள் இலவசமாக மணக்குள விநாயகருக்கு வழங்கிய இடத்தில் இப்பிரகாரம் கட்டப்பட்டுள்ளது என்பதை இயம்புகின்றது. ஆம் அரவிந்தரும் அன்னையும் கணநாதரின் பக்தர்கள். கோவிலும் அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. பிரகாரமெங்கும் உலகின் பல்வேறு நாட்டிலும் பிள்ளையார் எவ்வாறு தரிசனம் தந்து அருள் பாலிக்கின்றார் என்பதை விளக்கும் சுதை சிற்பங்கள் மற்றும் கூரை முழுவதும் கந்தனுக்கு மூத்தோனின் திருவிளையாடல்களை கூறும் அழகு ஒவியங்கள். சுவற்றில் பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலையை கல்வெட்டாக அமைத்துள்ளனர்.



ஐயனின் விமானம் பொன் விமானம் என்பது தனிசிறப்பு. சுற்றிலும் பாதுகாப்பு வளையத்துடன் பெரிய விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இரவில் தரிசனம் செய்தால் மிகவும் அருமையாக இருக்கும். பிரகாரத்தின் பின் பக்கம் இக்கோவிலில் தங்கியிருந்த தொள்ளைக் காது சித்தரின் திருவுருவச்சிலை, மற்றும் முருகரின் சன்னதி உள்ளது. வடப்பிரகாரத்தில் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கும் மணி மண்டபம் உள்ளது. இம்மணி மண்டபத்தில் இராவணன் கொண்டு சென்ற இரங்க விமானத்தை இங்கே திருச்சியிலேயே நிறுத்திய உச்சிப்பிள்ளையாரை நர்த்தன கணபதி, சித்திபுத்தி கணபதி, இலட்சுமி கணபதி, பால கணபதி என்னும் ரூபங்களில் தரிசனம் செய்கின்றோம். மேலும் பால சுப்பிரமணியர், ஸ்படிக லிங்கம், சைவக்குரவர்கள் நால்வர் ஆகிய மூர்த்திகளும் அருள் பாலிக்கின்றனர். அடியேன் சென்ற சமயம் ஸ்படிக லிங்கத்திற்க்கு நடக்கும் அபிஷேகம் காணும் பாக்கியம் கிட்டியது. இப்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளது.

பிரகார வலம் முடித்து ஐயனை நோக்கி திரும்பினால் தங்க கவசம் பூண்ட 18 அடி உயர் கொடி மரம். மஹா மண்டபத்தின் கூரையிலும் அழகிய ஓவியங்கள். பின்னர் அர்த்த மண்டபத்திற்க்குள் நுழைந்து காக்கையாக வந்து கமண்டலத்தை கவிழ்த்து காவிரியை ஓட விட்ட கணபதியை தரிசிக்கின்றோம். புவனேச மூர்த்தம் என்னும் வகையில் சதுர கருவறையில் அங்குசம் பாசம் மேற்கரங்களில் ஏந்தி, கீழ்க்கரங்களில் அபய வரத முத்திரையுடன் அமர்ந்த கோலத்தில் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களின் குறை தீர்க்கும் பொற்பத கணபதி அருள் பாலிக்கின்றார். தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணமிட்டு அவரின் திருப்பதம் பணிந்து

விதியே வாழி, விநாயகா வாழி, பதியே வாழி, பரமா வாழி, சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி! புதுவிணை காட்டும் புண்ணியா, போற்றி!

என்று பாரதியின் பாடல் பாடி நெஞ்சுருக எல்லாரும் இன்புற்றிருக்க வணங்குகிறோம். மூலவருக்கு இடப்புறத்தில் மணற்குளம் சதுர குளம் இன்றும் உள்ளது. அதன் ஆழம் எவ்வளவு என்று அறிந்தவரில்லை. அதன் நீர் ஔஷதம் என்று அழைக்கப்படுகின்றது. அர்த்த மண்டபத்தில் புதுமையாக இரு புறம் இரு வாயில்கள் அமைந்துள்ளதால் அன்பர்கள் இரு புறமும் சென்று ஐயனை தரிசனம் செய்ய ஏதுவாக உள்ளது.



இனி இவ்வாலயத்தின் சில தனி சிறப்புகள். சித்தி புத்தி விநாயகர் எழுந்தருளியுள்ளதால், பிரம்மனின் மகள்களான சித்தி புத்தி திருக்கல்யாணம் நடைபெறுவது ஒரு தனி சிறப்பு. மேலும் பள்ளியறை இத்திருக்கோவிலில் அமைந்துள்ளதும் ஒரு சிறப்பு. இரவு அர்த்தஜாம பூஜைக்குப்பின் பல்ளியறைக்கு விநாயகர் எழுந்தருளுகின்றார். கார்த்திகை தீபத்தன்று தங்கத்தேரில் வலம் வந்து அருள் பாலிக்கின்றார் கற்பக கணபதி. பிரதோஷ தினத்தன்று ஸ்படிக லிங்க மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

இனி இத்திருக்கோவிலின் விழாக்கள். மாத சங்கடஹர சதுர்த்தி, மாசிமகம், விநாயகர் சதுர்த்தி முதலியவையும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. விநாயகர் சதுர்த்தியன்று வில் புருவமும், மூன்று பதமும் பொருந்திய உற்சவ மூர்த்தி தங்க கவசத்தில் சகலாபரண பூஷிதராக அரூட்காட்சி தந்து வீதி வலம் வந்து அருளுகின்றார். எல்லா நாளுமே கூட்டம்தான் ஹேரம்பர் சன்னதியில் வெள்ளியன்று கூட்டம் அலை கடலென கூடுகின்றது.

அச்ச மில்லை அமுங்குத லில்லை நடுங்குதலில்லை, நாணுதலில்லை பாவமில்லை பதுங்குதலில்லை; ஏது நேரினு மிடர்ப்பட மாட்டோம்;

என்று பாரதியார் வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று நான்கு யாப்பில் அந்தாதி தொடையுடன் நாற்பது பாடல்கள் கொண்ட விநாயகர் நான்மணி மாலை இயற்றியுள்ளார். அவை பிள்ளையாரின் சிறப்புகளைக் கூறி., படிப்பவர்களுக்கு நன்மை பயக்கும் அற்புத ஸ்தோத்திரங்கள். பிள்ளையாரை நினைத்து கொண்டு அதை முழுவதும் படித்தால் ஒரு பரவசம் ஏற்படுவதை உணரலாம். பாரதிதாசனும் மணக்குள விநாயகர் திருப்புகழ் பாடியுள்ளார். சமயம் கிடைக்கும் போது புதுவை சென்று மணக்குள விநாயகரை தரிசித்து வருமாறு வேண்டுகிறேன்.

(விநாயகர் சதுர்த்தியன்று பதிவிடத்தான் எண்ணியிருந்தேன் ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் 10 நாட்கள் முன்னரே மணக்குள விநாயகர் தங்களுக்கு தரிசனம் தர முடிவு செய்து விட்டார் பார்த்து படித்து அருள் பெறுங்கள்)