கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர் தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீ ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எணை மணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே!
சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலயம் சைதை
அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலை மேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப்பிரியாத நினைப் பிரியாத நிலைமையும்வேண்டுவனே.
அருட்சோதித் தெய்வமெனைஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரு மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வமுயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெணையுஞ் சிவமாக்குந் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுங் களிப்பே
காணார்க்குங் கண்டவர்க்குங் கண்ணளிக்குங் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே
என்னரசே யான் புகலும் இசையுமணிந் தருளே.