Sunday, April 22, 2018

பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 3

முதலாம் திருநாள்  இரவு உற்சவம்


தல விருட்சத்தினடியில் பாரத்வாஜேஸ்வரர் 

ஒரு முறை சப்த ரிஷிகளில் ஒருவரான பாரத்வாஜர் கருங்குருவியாக வலியன் உருவெடுத்து பூவுலகிலுள்ள பரத கண்டத்தில் தொண்டை மண்டத்திலுள்ள சென்னையம்பதியில் பாடி என்னும் திருவலிதாயத்தில் சிவபெருமானை பூசித்து சுய உருவம் பெற்றார்.  பின்னர் திருக்கயிலாயம் செல்லும் போது இத்தலத்தில் சிவபரம் பொருளை வழிபட்டதாக தொன் நம்பிக்கை.  எனவே  இத்தலம் பாரத்வாஜேஸ்வரம் என்றழைக்கப்படுகின்றது. 


முதலாம் திருநாள் இரவு உற்சவம் ஸ்தல விருட்ச சேவை ஆகும். இத்தலத்தின் தல விருட்சம் நாகலிங்க மரம் ஆகும்.  இம்மரத்தின் அடியில் இன்று சேவை சாதிக்கின்றார் பாரத்வாஜேஸ்வரர்.


 ஸ்ரீ பக்த  கணபதி
 அம்மையப்பர்
சொர்ணாம்பிகை 


 சுப்பிரமணியர் 


 சண்டிகேஸ்வரர் 
அம்பாள் கண்ணாடி சேவை 

அம்பாள் மாவடி சேவைசுப்பிரமணியர்   தீப ஆரத்தி  

மலர் தூவும் கந்தருவி 

Friday, April 20, 2018

இராமானுஜர் ஜெயந்தி

இன்றுலகீர்! சித்திரையிலேய்ந்த  திருவாதிரை நாள்
என்றையினு மின்றிதனுக்கேற்றமென்தான்? - என்றவர்க்குச்
சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர்தம் பிறப்பால்
நாற்றிசையும் கொண்டாடும் நாள். 

சித்திரை திருவாதிரையன்று ஸ்ரீபெரும்புதூரில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளின் கருணையினால்  இளையாழ்வாராக, இராமானுஜர் அவதரித்தார்.  இவரது  ஜெயந்தி விழா,  ஸ்ரீபெரும்புதூரில் 10  நாள்  சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் அருள் பாலிக்கின்றார்  இராமானுஜர். அவரது  1001வது  அவதார திருவிழாவின்  போது  தானுகந்த திருமேனியை ஒரு நாள் சென்று  சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 
எம்பெருமானாரின் திருமுகமண்டலம் 


யோநித்ய மச்யுத பதாம்புஜ யுக்மருக்ம
வ்யாமோஹ தஸ்ததி தராணி த்ருணாயமேநே |
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே.||பின்னழகு

முனியார்துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார்மனம் கண்ணமங்கைநின்றானை கலைபரவும்
தனியானையைத்தண்தமிழ்செய்த நீலன்தனக்கு உலகில்
இனியானை எங்களிராமானுசனைவந்தெய்தினரே.


கோடைக்காலம் என்பதால் திருமேனியில் சந்தனம் சார்த்தியுள்ளதை கவனியுங்கள்.  மற்றும் திருமங்கையாழ்வார் (நீலன்) பதக்கத்தையும்  படத்தைப் பெரிதாக்கிக் காணலாம்.


தங்கத்தொட்டியில் இராமானுஜர் 
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்போர் நல்லோர் அவை தம்மொடும் வந்து
இருப்பிடம்மாயன் இராமானுசன் மனத்து இன்று அவன் வந்து
இருப்பிடம் என்தனிதயத்துள்ளே தனக்கின்புறவே.

பின்னழகு 

காரேய் கருணை இராமானுசா! இக்கடலிடத்தில்
ஆரேயறிபவர் நின்னருளின் தன்மை? அல்லலுக்கு
நேரேயுறைவிடம் நான்வந்து நீயென்னையுத்தபின் உன்
சீரேயுயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே. 


பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 2

கொடியேற்றம் 

இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுகளில்  இத்தலம் "திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீவிஜய கண்ட சோழரால் 29வது ஆண்டு கட்டப்பட்ட ஜயங்கொண்ட சோழ மண்டலத்தின் புலியூர் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டுப் புலியூர் திருக்கோயில்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இக்கல்வெட்டு இத்தலத்தின் பின்புறம் உள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீவிஜயகண்ட சோழர்(29வது பட்டம்) அந்தி(காலை), சந்தி(மாலை) ஆகிய இரு வேளைகளிலும் விளக்கேற்றுவதற்காக ஆயிரம் ஆடுகளையும், ஆயிரம் பசுக்களையும் இத்திருத்தலத்து இறைவனுக்கு தானமாக தந்துள்ளார். இச்செய்தி சுவாமி சன்னதியில்  மேற்கு நோக்கி உபபீடம் அதிஷ்டான வர்க்கத்தில் ஜெகதி வரியில்  பொறிக்கப்பட்டுள்ளது.  தொல்லியல் துறையின் மதிப்பின்படி இக்கலவெட்டு 800 ஆண்டுகளுக்கு முந்தையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆந்திராவை சேர்ந்த மன்னன் ஸ்ரீபெத்தப்ப சோழன் இத்திருத்தலத்திற்கு  திருப்பணி செய்துள்ளதாகவும் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.

மேலும் குஜராத்தை சார்ந்த சிற்றரசரான பக்திமான் ஸ்ரீ இராமநாத பாண்டியாஜி சுமார் 300 ஆண்டுகளுக்கு  முன் இத்தலத்திற்கு வந்து  இறைவனை வழிபட்டு  பிள்ளைப் பேறு பெற்றான். பிறந்த அப்பிள்ளைக்கு மன்னன் சிவசங்கரன் என்று பெயரிட்டான். 

வளர்ந்து பெரியவனான சிவசங்கரன் பக்தியுடன் இவ்வூரிலேயே தங்கி, மல்லிப்பூந்தோட்டங்கள், குளங்கள் அமைத்து சிவபூஜை செய்து வந்தான்.  இவ்விடத்தில்  குடியிருப்புகளை அமைத்து காஞ்சி மாநகரிலுள்ள ஏகாம்பரநாதர்  தேவஸ்தானத்திலிருந்து திரு. சுப்புராய சிவாச்சாரியார் அவர்களை வரவழைத்து, தகுந்த ஏற்பாடுகளை செய்து தந்துள்ளார்.  அன்று முதல் அவரது வம்சத்தினரே  பாரத்வாஜேஸ்வரருக்கு மிகுந்த சிரத்தையுடனும், செம்மையாகவும் சிவபூஜைகளை செய்து வருகின்றனர்.  


ஒன்றாம் திருநாள் காலை உற்சவம் கொடியேற்றம் ஆகும். முப்பத்து முக்கோடி  தேவர்களையும் உற்சவத்திற்கு அழைத்து அனைவரையும் கொடி மரத்தில் எழுந்தருளச்செய்வதே கொடியேற்றம் ஆகும். 


விநாயகர் 

 ரிஷபக் கொடி 

கொடிக் கம்பம் 

அனுக்ஞை விநாயகர்,  திருநீற்று பூதங்கள் 

கொடி மர பீடத்திற்கு அபிஷேகம் 

பால் அபிஷேகம் 

கற்பூர ஆரத்தி 

கொடி மண்டபத்தில் பாரத்வாஜேஸ்வரர்

கொடியேற்றத்தின் போது  இறைவன் எழுந்தருளும் கொடி மண்டபம்,  தல விருட்சம் நாக லிங்க மரத்தின் அடியில் அமைந்துள்ளது. ஐந்து கலசங்கள். கற்றளி அமைப்பு. முன் பக்க சுதை சிற்பம் மந்திரியாக மாணிக்க வாசக சுவாமிகள். பின் பக்கம் குதிரை மேல் சிவபெருமான். பரிதனை நரியாக்கிய திருவிளையாடலின் நாயகன். குதிரைச் சேவகன். இரு பக்கங்களிலும் திருப்பெருந்துறையில் உள்ளது போல ஐயன் மற்றும் அம்மையின் திருவடிகளுடன் எழிலாக அமைந்துள்ளது. 


 அம்மையப்பர் 

சிவ சொர்ணாம்பிகைமுருகர் 


சண்டிகேஸ்வரர் அஸ்திர தேவர் 

பெருவிழா அருட்காட்சிகள் தொடரும் . . . . . . . .

Thursday, April 19, 2018

சங்கர ஜெயந்தி

சதாசிவ ஸமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம் | 
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் || 

குரு சரணாரவிந்தாப்யாம் நமோ நம: || 

இன்று சித்திரைப் பஞ்சமி  சிவபெருமானின் அம்சமாக காலடியில் அவதரித்து  சனாதன தர்மத்திற்கு புத்துயிரூட்டிய ஆதி சங்கர பகவத் பாதாள் அவர்களின் திருவவதார தினம். இந்நன்னாளில்  காலடியில் அமைந்துள்ள அவரின் ஜன்ம தலத்தை தரிசியுங்கள் அன்பர்களே.  

ஆதி சங்கரரின் ஜன்மஸ்தலம்

ஆதி சங்கரரின் தாய்க்காக  அவர்களின் இல்லத்திற்கு அருகில் ஓடிய பூர்ணா நதிக்கரையில் இத்தலம் அமைந்துள்ளது. உள்ளே சப்த மாதர்கள்,  ஆதி சங்கரரின் அன்னை ஆரியாம்பாளின் சன்னதி, ஆதி சங்கரரின் சன்னதி அமைந்துள்ளன. ஆதி சங்கரரின் வாழ்க்கை  வரலாறு முழுவதும் அழகிய ஓவியங்களாக மிளிர்கின்றன. 


முகப்பில் ஆதி சங்கரர் ஏழ்மையிலும்  பிச்சை கேட்டு வந்த தனக்காக தன்னிடமிருந்த ஒரே நெல்லிக்கனியை பிச்சையாக அளித்த  பெண்மணிக்காக கனகதாரா ஸ்தோத்திரம்  பாடி  மஹாலக்ஷ்மியை தங்க நெல்லிக்கனி பொழிய வைத்த வரலாறு அழகிய கேரள பாணி ஓவியமாக வரையப்பட்டுள்ளது அதன் காட்சிகள் கீழே.

மஹாலக்ஷ்மி தங்க நெல்லி மழை பொழியும் காட்சி  


தேவர்கள் வாழ்த்தும் காட்சி 

கனக தாரா ஸ்தோத்திர வரலாறு 

தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேற சிறுவன் சங்கரன் சன்னியாசம் எடுத்துக்கொள்ள விழைகின்றார். ஆனால் ஒரே மகன் சன்னியாசி ஆவதில் தாயார் ஆரியாம்பாளுக்கு விருப்பமில்லை. அச்சமயம் ஒரு நாள் சிவனருளாக் பூர்ணாவில் சங்கரர் நீராடும் போது ஒரு முதலை அவரது காலைப் பற்றிக்கொள்கின்றது.  அப்போது சங்கரர் தன் தாயிடம் தான் சன்னியாசம் மேற்கொண்டால் முதலை தன்னை விட்டு விடும் என்று  கூற தாயாரும் சம்மதிக்க சன்னியாசி ஆகின்றார். ஆயினும் தாயினுடைய விருப்பதிற்காக அவரது இறுதி காலத்தில் வந்து தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து  முடிக்கின்றார். அவ்வரலாறு கீழே. 


சிவபெருமான் 

மஹா விஷ்ணு 

தேவர்கள் 


சங்கரர் சன்னியாசம் ஏற்ற வரலாறு 

ஜன்மஸ்தானத்திற்கு அருகில் சங்கரரின் குல தெய்வமான கிருஷ்ணரின் ஆலயம் அமைந்துள்ளது. 

ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம்  ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் ||