Monday, July 14, 2008

மஹா கும்பாபிஷேகம்

மேற்கு மாம்பலம் விசாலாக்ஷி உடனமர் காசி விஸ்வநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்










காசி விஸ்வநாதர் - விசாலாக்ஷி

இன்று கான்க்ரீட் காடாக விளங்கும் சென்னை மாம்பலம் பகுதி வில்வ மரக் காடாக இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? கொஞ்சம் கூட சந்தேகம் வேண்டாம், அக்காலத்தில் இவ்விடம் மாபிலம் அதாவது பெரிய குகை(பிலம்) ஆக விளங்கியது. சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இவ்விடத்தில் உருவான பழமையான கோவில்தான் விசாலாக்ஷி உடனமர் காசி விஸ்வநாதர் ஆலயம்.





அம்மன் இராஜ கோபுரம் மற்றும் மண்டபம்

சுமார் 90 ஆண்டுகளுக்கு முன் இத்திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது அதன் பின் ஆகமவிதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம் நடைபெறாததால் திருக்கோவில் சிறிது சிறிதாக சிதிலம் அடைந்து வந்தது. 2005 வருடத்தில் ஐயன் விமானம் விழும் நிலையும் ஏற்பட்டது.







இராஜ கோபுரத்தின் வடக்கு முகத் தோற்றம்



இராஜ கோபுரத்தின் தெற்குமுகத் தோற்றம்

தெற்கு இராஜ கோபுரம்

எனவே ஆஸ்திக அன்பர்களால் திருக்கோவில் முழுவதையும் மொத்தமாக மாற்றி அமைத்து கிழக்கு வாயில் ஏழு நிலை இராஜ கோபுரத்துடனும். தெற்கு வாயிலில் ஐந்து நிலை இராஜ கோபுரத்துடனும் மற்றும் விநாயகர், முருகர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கு தனி சன்னதியுடனும் ஒரு மண்டபத்துடன் புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டு இந்து அறநலத் துறையின் அனுமதியும் பெறப்பட்டு 2005ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.





புது மண்டபத்தின் அழகிய சுதைச் சிற்பங்கள்


ஆலமர் கடவுள்




ரிஷபாரூடர்






மீனாக்ஷி திருக்கல்யாணம்





கல்யாண சுந்தரர்



பல்வேறு மெய்யன்பர்களின் உதவியுடன் திருக்கோவில் முழுமையாகக் கட்டப்பட்டு புது இராஜ கோபுரங்கள், புது சன்னதிகள், புது மண்டபம், புது கொடிக்கம்பம் ஆகியவற்றுக்கு ஆகமமுறைப்படி இன்று ( 14-07-08) காலை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோவிலின் இன்றைய பொலிவை இப்பதிவில் காண்கின்றீர்கள்.





சோமாஸ்கந்தர்




எழிற் குமரன்




கிராதகர்
நந்தியம்பெருமான்


புதுக்கொடிமரம்

இன்று இரவு திருக்கல்யாணமும், அன்பர்களால வழங்கப்பட்ட புது வாகனங்களில் ( விநாயக்ருக்கு மூஷிகம், ஐயனுகு ரிஷபம், அம்மனுக்கு காமதேனு, முருகருக்கு மயில், சண்டிகேஸ்வரருக்கு சிறிய ரிஷபம் ) பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் சிறப்பாக நடைபெற உள்ளது. முடிந்த அன்பர்கள் கலந்து கொண்டு அருள் பெற பிரார்த்திக்கின்றேன்.



Friday, July 11, 2008

ஆனித் திருமஞ்சனம்

அம்பலத்தாடும் எம் ஐயன் ஆடல் காணீரோ
ஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.






ஆனி உத்திர நந்நாளில் ஆனந்தக் கூத்தனுக்கு ஒரு போற்றி


கனக சபேசா கயிலை மலையானே போற்றி போற்றி

காருண்யா மூர்த்தி கங்காளனே போற்றி போற்றி

கிஞ்சுக வாயவள் பாகா போற்றி போற்றி

கீதா நாயகன் காணா மல்ர்ப்பாதா போற்றி போற்றி

குரு மூர்த்தியாய் அறமுரைத்தவனே போற்றி போற்றி


கூடல் இலங்கு குருமணி போற்றி போற்றி

கெடில நாடா அப்பருக்கு அருளியவா போற்றி போற்றி

கேடில் விழுப்பொருளே போற்றி போற்றி

கைலை நாதா கனகமணிக்குன்றே போற்றி போற்றி

கொல் புலித்தோல் அணிந்தவா போற்றி போற்றி

கோயிலில் ஆடும் ஆனந்தக் கூத்தனே போற்றி போற்றி

கௌபீனம் அணிந்தவனே போற்றி போற்றி.

* * * * * * *

பரையிடமா நின்று மிக பஞ்சாக்கரத்தால்

உரையுணர்வுக்கு எட்டா ஒருவன் - வரை மகள் தான்

காணும் படியே கருணையுருக் கொண்டாடல்

பேணும் அவர்க்கு உண்டோ பிறப்பு.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியான ஆனந்த தாண்டவன் திருவந்தெழுத்தாலாகிய திருமேனியுடன்,

ந - திருவடி,

ம - உதரம்,

சி - தோள்,

வ - திருமுகம்,

ய - திருமுடி.


மருவுந் துடியுடன் மன்னிய வீச்சு


மருவிய அப்பும் அனலுடன் கையும்


கருவின் மிதித்த கமலபாதமும்


உருவில் சிவாய நம எனஓதே

ஓம் - திருவாசி

சி - உடுக்கை,

வா - வீசுகரம்,

ய - அபய கரம்,

ந - அனல்,

ம -ஊன்றிய கால்



என்று ஐயன் , மலையரசன் பொற்பாவையை இடமாகக் கொண்டு அவ்ள் மகிழ்ந்து காண ஆடும் ஆனந்தக்கூத்தினை கண்டவர்களுக்கு மறு பிறவியில்லை. எனவே ஆனி உத்திர திருமஞ்சன தினத்தில் ஆனந்த நடராசரின் அழகு மிகு தரிசனங்கள் கண்டு உய்வோம்.







திருவாரூர் ஆலயத்தின் இரு ஓவியங்கள்







ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஓவியம்




ஆடும் படிகேள் நல் அம்பலத்தான் ஐயனே




நாடுந் திருவடியிலே நகரம் - கூடும்




மகரம் உதரம் வள்ர் தோள் சிகரம்




பகருமுகம் வா முடியப்பார்.



கருப்பு வெள்ளைப் படங்களில் ஐயனின் எழிற் கோலம்










திருத்தேரில் மரச்சிற்பமாய் ஐயன்
என் ஐயனின் எழிற் கோலத்தை எப்படி தரிசித்தாலும் ஆனந்தமே. ஆனந்தத்தாண்டவனை தரிசித்தால் மட்டும் போதும் முக்தியே.



தில்லையில் பத்தாம் நாள் ஆனி திருமஞ்சன தினத்த்ன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் இராஜ சபையின் முகப்பு மண்டபத்தில் அம்மைக்கும் அப்பனுக்கும் ஆயிரங் குடங்கள் பால், தயிர், தேன், பஞ்சாமிதம், பன்னீர், இளநீர், விபூதி, மஞ்சள், சந்தனம் என்று அற்புதத் திருமஞ்சனம் என்னும் மஹாபிஷேகம்.




பகல் பத்து மணிக்கு இராஜ சபையில் உள்ளே அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகர், சகல புவனங்களையும் படைத்தும் காத்தும், கரந்தும் விளையாடும் அண்டர் நாயகனுக்கும் அவரின் வாம பாகத்தில் நீங்காமல் இருக்கும் சிவானந்தவல்லிக்கும் திருவாபரண அலங்கார காட்சி. சகல புவன இராஜாவிற்கு சிறப்பு பூஜைகள்.



பகல் பன்னிரண்டு மணிக்கு ஆனித் திருமஞ்சன மஹா தரிசனம். சித் சபையில் இரகசிய பூஜை. பஞ்ச மூர்த்திகள் உலா மற்றும் தீர்த்தவாரி. இராஜ சபையிலிருந்து ஆனந்த தாண்டவத்துடன் ஞானகாச சித்சபா பிரவேச தரிசனம்.




சென்ற வருட ஆன உத்திர பதிவுகளைக் காண சொடுக்குங்கள் இங்கே













பாட வேண்டும் நான்; போற்றி! நின்னையே

பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு



ஆட வேண்டும் நான்; போற்றி அம்பலத்து

ஆடும் நின் கழல் போது நாயினேன்



கூட வேண்டும் நான்; போற்றி! இப்புழுக்

கூடு நீக்கு எனைப் போற்றி! பொய் எலாம்



வீட வேண்டும் நான்; போற்றி வீடு தந்து

அருளு; போற்றி! நின் மெய்யர் மெய்யனே!



தென் தில்லை மன்றினுள் ஆனந்தக் கூத்தாடும் மையிலங்கு கண்ணி பங்க , மானேர் நோக்கி உடையாள் மணவாளா, கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீறா, தில்லை சிற்றம்பலவா! என்று நான் உன்னை போற்றிப் பாடுதல் வேண்டும் . பாட்டிலே அப்படியே மனம் அழிந்தழிந்து கரைந்து உடல் நெகிழ்ந்து நெகிழ்ந்து கூத்தாட வேண்டும் போற்றி. நாம் உய்ய பஞ்ச சபையில் (அனைவர் இதயத்திலும்) ஆனந்த கூத்தாடுகின்ற உன் திருவடித்தாமரையை நான் அடைய வேண்டும் போற்றி. முன் கர்ம வினையினால் பெற்ற இந்தப் புழுக்கூடான சரீரத்தில் இருந்து விடுதலை செய்தருள வேண்டும் போற்றி.பொய்யிடத்தை விட்டு உன் திருவடி நீழலில் இருக்க அருள வேண்டும் போற்றி. உன் மெய்யன்பர்களுக்கு மெய்யாய் இருப்பவனே இனி ஒரு அன்னை கருப்பை வராமல் கா போற்றி.
சுபம்

Sunday, July 6, 2008

பஞ்ச சபைகள் - சித்திர அம்பலம் - திருக்குற்றாலம்

அம்பலத்தாடும் எம் ஐயன் ஆடல் காணீரோ
ஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.








சித்திர சபை




அருவியை ஒட்டி குறும்பலாவின் ஈசர் ஆலயம்







மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்

தான் அந்த மானிடத்தே தங்கி விடும் - ஆனந்தம்

மொண்டு அருந்த நின்றாடல் காணும் அருள் மூர்த்தியாக

கொண்ட திருஅம்பலத்தான் கூத்து.

உரையும் உணர்வும் அற்று நிற்கும் ஞானியர் தம் மும்மலங்களின் வாசனையை முழுவதுமாக நீக்கி, ஆணவம் முழுவதும் ஒழிந்த நிலையில் கிடைக்கின்ற பேரின்பத்தை துய்த்து இன்புறுவதன் பொருட்டு உமையம்மை தம் ஆடலைக் கண்டு வழிபடுமாறு செய்தருளும் கூத்தப்பெருமான் ஆடும் ஐந்து அம்பலங்களுள் நான்காவது அம்பலம் திருக்குற்றாலத்தின் சித்திர அம்பலம்.


குறும்பலாவின் ஈசர் குற்றாலநாதர் அருள் பாலிக்கும் திரி கூட மலை என்றழைக்கப்படும் திருகுற்றாலமலை மூன்று சிகரங்களை உடையது இவை மும்மூர்த்திகளை குறிக்கின்றது. எனவே மலையே இங்கு திருத்தலம். சித்ரா அருவியே தீர்த்தம். குழல்வாய்மொழி அம்மையின் கருணையே அருவி வெள்ளம். செண்பக மரம் நிறைந்த மலை பராசக்தியின் பச்சைத்திருமேனி, கருமேகம் அன்னையின் கடைக்கண்கள். பொதிகை மலையிலிருந்து வீசுகின்ற தென்றல் அன்னையின் அருள். கு+ தாலம் அதாவது பிறவிப்பிணியை நீக்கும் தலம் சித்ர அம்பலம் கொண்டுள்ள திருகுற்றாலம்.

திருக்குற்றாலம் பண்டை காலத்தில் மாலவன் கோவிலாக இருந்தது. அது எவ்வாறு மஹேஸ்வரன் ஆலய்மாக மாறியது, அவ்வாறு மாற்றியது யார் என்று பார்ப்போமா? அன்னை தாக்ஷாயணி, தட்சனுக்கு மகளாக பிறந்து அவனின் இச்சைக்கு புறம்பாக சிவபெருமானை மண்ந்து கொண்டதால் ஆணவம் கொண்ட தட்சன் சிவபெருமானை இழிவு படுத்துவதாக நினைத்துக்கொண்டு ஒரு யாகம் நடத்துகின்றான், அதற்கு அம்மையப்பருக்கு அவன் அழைப்பும் அனுப்பவில்லை, சிவ பெருமானுக்கு தர வேண்டிய அவிர்பாகத்தையும் தர மறுக்கின்றான். ஆயினும் பாசத்தால் தந்தை நடத்தும் யாகத்திற்கு செல்கின்ற சதி தேவி, அவ்னால் அவமானபடுத்தப்பட அவன் யாகத்தை அழிக்க யாக குண்டத்தில் குதிக்கின்றாள். பின் அம்மைர் இமவானுக்கு மகளாக பிறந்து பார்வதியாக வளர்ந்து சிவபெருமானை குறித்து தவம் இருந்து ஐயனை மணக்கும் பேறைப் பெறுகின்றார். சிவ பார்வதி திருக்கல்யாணம் திருக்கையிலையிலே நடைபெறும் போது அனைத்து தேவர்களும், முனிவர்களும், திருக்கைலாயத்திலே கூட வடக்கு திசை தாழ்ந்து தெற்கு திசை உயர்கின்றது. எனவே உலகை சமப்படுத்த ஐயன் அகத்திய முனிவரை தென் திசைக்கு அனுப்புகின்றார். தான் மட்டும் அம்மையப்பரின் திருக்கல்யாணத்தை காண முடியாமல் போய் விடுமே என்று அகத்தியர் வேண்ட, தகுந்த சமயத்தில் உமக்கு நான் திருமணக் காட்சியை தந்தருளுவோம் என்று ஐயன் அவரை சமானப்படுததி அனுப்ப்புகின்றார். இவ்வாறு மலைமகள் தன்னை தாம் மணந்த திருமணக்கோலத்தை அகத்தியருக்கு காட்டிய தலம் தான் திருக்குற்றாலம். அகத்தியரும் இந்த பொதிகை மலையிலே தங்கி தவம் செய்து தமிழ் வளர்த்தார்.





ஆனந்த நடராஜேஸ்வரர் அம்மை சிவகாமியுடன்






ஒரு சமயம் குறு முனி அகத்தியர் திருமால் கோவிலில் உள்ளே சென்று வழிபட முயன்ற போது அவர் உடலில் சிவ சின்னமான திருநீறு இருந்ததால் அவரை வைஷ்ணவாச்சாரியார்கள் அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட அகத்தியர் தன் உடலில் வைணவ சின்னமான திருமண் இட்டு மிகவும் கோபத்துடன் கோவிலின் உள்ளே சென்று நீண்டு நெடுமாலாக நின்ற இறைவன் தலையில் அழுத்தி "குறுகுக குறுகுக "என்று கொட்டியதால் மாலவனும் குறுகி மஹாலிங்கமானதாக ஐதீகம். கோவிலும் சங்கு அமைப்பில் இருப்பதும் இதற்கு ஒரு சான்று. பெருமாளின் இரு தேவியரில் ஸ்ரீ தேவியை குழல் வாய் மொழி அம்மையாகவும், பூ தேவியை பராசக்தியாக மாற்றினார் அகத்தியர். குழல் வாய் மொழி அம்மை ஐயனுக்கு வலப்பக்கத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். பராசக்தி யோக பீட நாயகியாய் எழுந்தருளியுள்ளாள், எனவே இத்தலத்தை தரணி பீடம் என்றும் சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதுகின்றனர்.

அகத்தியர் அழுத்திய வடுக்கள் இன்றும் ஐயன் திருமேனியில் உள்ளது. அவர் அழுத்தியதால் ஏற்பட்ட தலை வலியைப் போக்க இன்றும் மருந்து சரக்குகள், வேர்கள் சேர்த்து காய்ச்சப்படும் சந்தனாதி மூலிகை தைலத்தால் தினமும் லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. மிகுந்த கோபத்துடன் அகத்தியர் உள்ளே நுழைந்ததால் துவார பாலகர்கள் அவரை தடுக்க முடியாமல் கையிலிருந்த ஆயுதங்களை கீழே போட்டு விட்டதால் இன்றும் அவர்கள் ஆயுதங்கள் இல்லாமலேயே காட்சி தருகின்றனர். தீர்த்தம் அருவியே. சிவனை மதியாது பூமிக்கு வந்த கங்கையை தனது சடையில் தாங்கினார் இங்கு. சிவபெருமானின் சொல்லை மதியாதற்கு பிராயசித்தமாக மூன்று மலைகள் கூடும் திரிகூட மலையில் உள்ள லிங்கத்தை தேன் கொண்டு பூஜித்து நற்கதி பெற்றாள்.கங்கை இவ்வாறு தேன் கொண்டு பூஜித்ததால் இத்தல தீர்த்தம் சிவ கங்கையாயிற்று. இதுவே இன்று தேனருவியாக பாய்கின்றது. அருவிக்கரையின் அருகில் இருப்பதால் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சளி பிடிக்கக்கூடாது என்று இரவில் சுக்கு கஷாயம் நைவேத்தியம் செய்யப்படுகின்றது.

ஐயன் அம்மைகள் இருவர் மூன்று சன்னதிகளையும் உள்ளடக்கி செல்லும் திருச்சுற்றுக்கு சங்க வீதி என்று பெயர்.கோவிலும் சங்ககோவில்.முதலில் அகலமான மணி மண்டபம், நேர்த்தியான தூண்கள், வாயிலில் அம்பல விநாயகர், சுப்பிரமணியர், நடுவில் கொடிமரம், பலி பீடம் நந்தி. அலங்கார மண்டபத்தில் தென்புற வாயில் வழியாக சென்றால் அர்த்த மண்டபம். ஆயுதம் இல்லாமல் துவார பாலகர்கள். அகத்தியரின் கை ரேகைகளை தன் திருமேனியில் தாங்கிய குறும்பலாவின் ஈசரை, குற்றால நாதரை, கூத்தரை, திரிகூடாசலேஸ்வரரை தரிசனம் செய்கின்றோம். இவரை மாணிக்க வாசகர் திருவாசகத்தில் " குற்றாலத்து குறியாய் இருந்தும்" அதாவது திருக்குற்றாலத்திலே சிவலிங்கமாக எழுந்தருளியுள்ள கூத்தனே என்று பாடுகின்றார்.

திருசுற்றில் அதிகார நந்தி சூரியன், தக்ஷிணா மூர்த்தி, பஞ்சபூத லிங்கங்கள் சுப்பிரமணியரை தரிசித்து பின் அன்னை குழல்வாய் மொழி அம்மையை தரிசிக்கின்றோம், நின்ற கோலத்தில் கருணை முகத்துடன் எழிலாக அருட்காட்சி தருகின்றாள் அருளை அருவியாகப் பொழியும் அன்னை. திருசுற்றில் கயிலாயநாதர் துர்க்கையம்மன் சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. வடப்புறம் பள்ளியறை. இடப்பக்கம் யோக பீட நாயகி பராசக்தி. தலமரம் குறும்பலா.

அரவின் அனையானும் நான்முகனும் காண்பரிய அண்ணல் செக்கி





விரவி மதி அணிந்த விகிதர்க்கு இடம் போலும் விரி பூஞ்சாரல்



மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்தகீ



குரவமறு வலி செய்யும் குன்றிடம் சூழ் தண் சாரக் குறும்பலாவே.




என்று சம்பந்தப்பெருமான் குறும்பலாவின் மீது ஒரு 11 பாடல்கள் கொண்ட முழுப்பதிகமே பாடியுள்ளார். நான்கு வேதங்களுமே பலா மரமாக நின்று தவம் செய்திருப்பதாக ஐதீகம்.





சித்திரம்பலம்







மஹா மண்டபத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் அன்னை சிவகாமி சமேதராக அருட்காட்சி தருகின்றார். மார்கழித்திருவாதிரையன்று இத்திருமேனியையே சித்திர சபைக்கு எடுத்து சென்று அபிஷேக ஆராதணைகள் நடத்துகின்றனர். முதல் பூஜை ஆன்ந்த நடராஜேஸ்வரருக்கே நடைபெறுகின்றது









திரிபுர தாண்டவ மூர்த்தி





குற்றாலத்து எம் கூத்தா போற்றி




காவாய் கனகக் கடலே போற்றி




கயிலை மலையானே போற்றி போற்றி.

கோவிலின் வடக்கே அருகில் சித்திர சபை உள்ளது . இரு மண்டபங்கள் உள்ளன, கேரளப்பாணியில் கட்டப்பட்டுள்ளன்.ஒரு மண்டபத்தில் நிறைய சாளரங்கள் உள்ளன. நடுவே ஒரு சிறு வசந்த மேடை. மரக்கூரை கூரை செப்புத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. எட்டு கலசங்கள்.சித்திர சபையெங்கும் சித்திரங்கள் மூலிகைகளை குழைத்து தீட்டிய வண்ணம். தஞ்சாவூர் ஓவியம் போன்று சிவப்பு, நீலம், தங்க நிறத்தில் அற்புதமான சித்திரங்கள்.யமனை வென்ற மிருத்யுஞ்சய மூர்த்தியாக , ஆனந்த நடராஜேஸ்வரராக தலையில் பிறை சூடி , அம்மை சிவகாம சுந்தரியை இடப்பக்கதில் சுமந்து மார்க்கண்டனுக்க்கு அருளிய மூர்த்தியாக ஆன்ந்த தாண்டவம் ஆடும் சித்திரம் அருமை. முப்பத்து முக்கோடி தேவர்களும் ஐயனின் அடிபணிந்து ஆனந்த தாண்டவத்தை கண்டு களிக்கின்றனர். தாமரைகள் மலர்ந்திருக்க, வண்டுகள் ரீங்காரமிட மயில்கள் ஆட அருமையாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சித்திர சபையில் ஐயன் திரிபுர தாண்டவம் ஆடுவதாக ஐதீகம். பிரம்மன் தான் கண்ட அந்த தாண்டவத்தை தானே வரைந்ததாக ஐதீகம். புராண நிகழ்ச்சிகளை ஒட்டிய சித்திரங்களும், 64 திருவிளையாடல்களை விளக்கும் சித்திரங்கள் என்று சபை எங்கும் நிறைந்திருக்கின்றன. ஸ்படிக லிங்கமும் சக்கரமும் உள்ளன. திருவாதிரை உற்சவ பத்து நாள் உற்சவத்தின் போது தினமும் காலையிலும் மாலையிலும் திருவெம்பாவை, தேவாரம், பல்லாண்டு பாடப்பட்டபின்னரே ஆசிர்வாத நிகழ்ச்சி வட மொழியில் நிகழ்த்தப்படுகின்றது. ஆருத்ரா தரிசனத்தன்று தாண்டவ தீபாரதனை நடைபெறுகின்றது.





சித்திர சபையில் உள்ள சித்திரங்கள்


உற்றாரையான் வேண்டேன்
ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்




கற்றாரையான் வேண்டேன்
கற்பனவும் இனியமையும்



குற்றாலத்து அமர்ந்துறையும்
கூத்தாஉன் குரைக்கழற்கே



கற்றாவின் மனம் போலக்
கசிந்துருக வேண்டுவனே.




என்று மாணிக்க வாசகர் பாடிய குற்றாலத்து கூத்தனைக் கண்டு ஆன்ந்த பாஷ்பம் கண்ணில்வழிய வணங்குகின்றோம்,

தேவார மூவர்கள், மாணிக்க வாசகர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடல் பாடியுள்ளனர். திரிகூட ராசப்ப கவிராயர் தலபுராணம் பாடியுள்ளார். கந்த புராணம், திருப்பத்தூர் புராணத்தில் குற்றாலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சித்திர சபைக்கு எதிரே தெப்பக்குளம் உள்ளது. இவ்வாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று புகழ் பெற்ற குற்றாலத்தானை

காலன் வருமுன்னே
கண்பஞ் சடை முன்னே



பாலுண் கடைவாய்
படு முன்னே - மேல் விழுந்தே



உற்றார் அழுமுன்னே
ஊரார் சுடுமுன்னே



குற்றாலத்தானையே கூறு



என்றபடி பட்டினத்தடிகள் பாடிய்படி நாளைக்கென்று ஒதுக்கி வைக்காமல் இன்றே ஆனந்த நடராஜேஸ்வரரின் தரிசனம் பெற்று முக்தியடைவோமாக.






தில்லை ஆனி உத்திரப்பெருவிழா: ஏழாம் நாள் தங்க கைலாய வாகனக் காட்சி. எட்டாம் நாள் தங்க இரதத்தில் பிக்ஷாடணர் வெட்டுங்குதிரைக் காட்சி. இன்று சித்சபையில் அம்மையப்பரின் முக தரிசனம் மட்டுமே கிட்டும்.


அடுத்த பதிவில் திருவாலங்காட்டில் இரத்தின சபையில் ஊர்த்துவத் தாண்டவம் ஆடும் ஐயனின் தரிசனம் பெறுவோம்.


Saturday, July 5, 2008

பஞ்ச சபைகள் - மணியம்பலம் - திருவாலங்காடு



அம்பலத்தாடும் எம் ஐயன் ஆடல் காணீரோ
ஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.







இரத்தின சபை







தோலுந் துகிலும்
குழையும் சுருள் தோடும்






பால் வெள்ளை நீறும்
பசுஞ் சாந்தும் பைங்கிளியும்






சூலமும் தொக்க
வளையுடைத் தொன்மைக்






கோலமே நோக்கிக்
குளிந் தூதாய் கோத்தும்பி.


என்றுபடி ஒரு காதில் தோடும் மறு காதில் குழையும் அணிந்து ஆணோ, பெண்ணோ, அரிவையோ என்று யாரும் உணரா மாதொருபாகத்தன், மஞ்சாடும் மங்கை மணாளன், வேயுறு தோளி பங்கன், ஆனந்த கூத்தாடும் பஞ்ச சபைகளுள் ஐந்தாவது சபை ஐயன் ஊர்த்துவத் தாண்டவம் ஆடும் திருவாலங்காடு.



திருவாலங்காடு இராஜ கோபுரம்


ஒரு காலத்தில் அடர்ந்த ஆலங்காடாக இருந்த இத்தலத்தில் கார்கோடகன் மற்றும் முஞ்சிகேசர் என்ற இரு முனிவர்கள் ஐயனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண வேண்டி கடுமையான தவம் செய்து வந்தனர். இவர்கள் தில்லையில் ஐயனின் ஆனந்த தாண்டவம் கண்ட பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாதர் என்பாரும் உண்டு. இவ்வாறு அவர்களும் மற்ற பல ரிஷிகளும் தவம் செய்து கொண்டிருந்த போது அக்காட்டில் இருந்த அசுரர்கள் அவர்களுக்கு பெரும் துன்பம் தந்து கொண்டிருந்தனர். அசுரர்களை அழிக்கவும் அதே சமயம் முனிவர்களுக்கு அருளவும் திருவுள்ளம் கொண்ட ஐயன் அம்மையின் அம்சமான காளியை எட்டுக் கரங்களுடன் திருக்கயிலாயத்திலிருந்து ஆலங்காட்டிற்க்கு அனுப்பினார். காளியும் வந்து அசுரர்களுடன் போர் புரிந்த போது ஒரு அசுரனின் இரத்த துளியிலிருந்து மேலும் அசுரர்கள் தோன்றிக்கொண்டிருந்தனர். அவனை அழிக்க காளி கபாலத்தில் அரக்கனின் அசுரனுடைய இரத்தம் பூமியில் விழாதவாறு பிடித்து அப்படியே குடித்து விட்டாள். அசுரர்கள் அனைவரும் அழிந்தனர், ஆனால் அசுர இரத்தத்தால் அம்மைக்கு ஆங்காரம் அதிகமாகியது, காக்க வந்த அன்னையே தாக்கத் தொடங்கினாள் ஆலங்காட்டில் உள்ளவர்களை. எனவே முனிவர்கள் அனைவரும் ஐயனிடம் சரணடைந்து தங்களைக் காக்க வேண்டினர். அனைவரையும் காக்க ஐயன் தன் வீரக்கழலணிந்த திருப்பாதம் பூமியில் பட சுந்தரராக இறங்கி வந்தார்.

ஐயனைக் கண்ட காளி ஐயனுடன் போருக்கு வந்தாள். இது தன்னுடைய இடம் எங்கிருந்தோ வந்த நீ சென்று விடு என்றாள் காளி, இல்லை இது என்னுடைய இடம் என்றார் ஐயன். இறுதியில் இருவருக்கும் ஒரு போட்டி வைப்பது அதில் வென்றவரே தலைவர் என்று முடிவானது. நடனப் போட்டி நடத்த முடிவு செய்யபட்டது. மிக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டது. முனிவர்கள் அனைவரும் கூடி நின்றனர் அற்புத நடனப்போட்டியைக் காண, தேவர்கள் அனைவரும் வானத்தில் குழுமினர். நடனப் போட்டி ஆரம்பமானது. முதலில் மெல்ல தொடங்கியது, ஐயனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே பிரதிபலித்தாள் காளி ஆக்ரோஷமாக. மெல்ல மெல்ல சூடு பிடித்தது ஆட்டம். அனைவரும் தம்மை மறந்து பார்க்க ஆரம்பித்தனர் போட்டியை. "சபாஷ் சரியான போட்டி" என்று சிலாகித்தன்ர். மெள்ள மெள்ள வேகம் கூடியது பார்ப்பவர்கள் இதயமும் வேகம் கூடியது. உச்சத்தை நோக்கி நடன் வேகம் சென்ற நேரத்தில் ஐயன் தன் இடது காதில் இருந்த குண்டலததை விழ வைத்தார், குண்டலம் நிலத்தைத் தொடுவதற்கு முன் சர்ரென்று ஐயனின் கால் கீழே இறங்கியது அடுத்த க்ஷணமே மேலே உயர்ந்து ஐயனின் காதை அடைந்தது. அப்படியே அண்டத்தை அளப்பது போல ஐயனின் திருப்பாதங்கள் செங்குத்தாக ஊர்த்தவ தாண்டவ கோலத்தில் நின்றது. அந்தக்கணமே அனைத்து அண்டங்களும் அசையாமல் நின்றன, ஐயனின் திருப்பாதத்தை உற்று நோக்கிய காளி தான் தோற்றதை உணர்ந்தாள். அவ்ரைப் போல காலை தூக்க முடியாமையால் அப்படியே நின்றாள். நக்கீரர் ஐயன் அவ்வாறு ஊர்த்துவத்தாண்டவ்ராய் நின்று வென்ற அழகை இப்படிப் பாடுகின்றார்.

தாளொன்றால் பாதாளம் ஊடுருவி நீள் விசும்பில்


தாளொன்றால் அண்டம் கடந்துருவி தோள் ஒன்றால்

திக்கனைத்தும் பேரும் திறன் காளி காளத்தி

நக்கனைத்தான் கண்ட நடம்

அம்மையை கோபம் தணிந்து அங்கேயே வட பத்ர காளியாய் கோவில் கொள்ள பணித்தார் ஐயன் தானும் ஆலங்காட்டப்பராயாய், ஊர்த்துவதாண்டவேஸ்வரராய் மணியம்பலத்தில் திருக்கோவில் கொண்டார். இன்றும் ஊர்த்துவ தாண்டவராய் நம்க்கு அருட் காட்சி தருகின்றார். கார்கோடகருக்கும், முஞ்சிகேஸ்வரருக்கும் அருளிய மாப்பெருங் கருணைக் கடல்.



ஊர்த்துவ தாண்டவேஸ்வரர்

காரைக்காலம்மையார் இன்றும் ஐயனின் திருவடி நிழலில் அமர்ந்து தாளம் இசைத்துக் கொண்டிருக்க அதற்கு மகிழ்ந்து ஐயன் ஆடிக்கொண்டிருக்கும் தலம் இந்த வடவாரண்யேஸ்வரம். அவருடைய கணவர் தன்னை தெய்வமென கால்களில் வீழ்ந்து வணங்கியவுடன் ஊனுடைவனப்பை எல்லாம் உதறி ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும் என்று பரன் தாள் பரவி நின்றார். அந்நிலையில் அவருக்கு உலக பந்த பாசங்கள் அனைத்தும் நீங்கி உணர்வெல்லாம் சிவமேயாகும் ஒப்புயர்வற்ற ஞானம் உதித்ததுஅந்த அற்புத ஆனந்த ஞான நிலையிலேயே அம்மையார் அற்புதத்திருவந்தாதி பாடியருளினார்.பொற்பதம் போற்றும் நற்கணங்களுள் நாமும் ஒன்று ஆனேன் என்று மகிழ்ச்சி கொண்டார். வானவர் பூமாரி பொழிந்தனர். சிவகணங்கள் ஆனந்த பெருங்கூத்து ஆடின. வானவரெல்லாம் மகிழ்ந்து பாரட்டும் போது, அம்மையார் முன்னே நின்றிருந்த மானுடமாகிய சுற்றத்தார் எல்லாம் அஞ்சி அகன்றனர். பேய் உரு ஏற்று திருக்கைலாயம் ஏகினார்.



திருக்கைலாய மலையிலே தன் கால்கள் படக்க்கூடாது என்று தலையாலே நடந்து செல்லும் போது




இவரை பார்த்த உமையம்மை, " இறைவா வருவது யார்" ? என்று வினவ,




எம் ஐயனும் "வருமிவள் நம்மைப் பேணும் அம்மை காண்" என்று கூறினார்.





மேலும் "அம்மையே வருக" என்று அழைத்து,





வேண்டும் வரம் யாது ? என வினவ,


இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்.


பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி


"அறவா நீ ஆடும் போதுன் அடியின் கீழ் இருக்க"





என்று எப்போதும் தங்களின் பாத மலரடிகளிலேயே அமர்ந்து தங்களின் பெருமையை பாடிக்கொண்டிருக்க வேண்டும் என்ற வரம் கேட்க, ஐயனும் அவ்வாறே ஆகட்டும், "திருவாலங்காட்டிலே எம் திருவடிக்கீழ் வந்து சேர்க" என்று பணிக்க இன்றும் அம்மையார் இறைவனின் திருவடி நிழலில் அங்கு வாழுகின்றார்.








இம்மையிலே புவியுள்ளோர் யாரும் காண

ஏழுலுகும் போற்றிசைப்ப எம்மை ஆளும்

அம்மைத் திருத் தலையாலே நடந்து போற்றும்

அம்மையப்பர் திருவாலங்காடாம் - திருஞான சம்பந்தர்


காரைக்காலம்மையார் திருக்கயிலாய மலையிலிருந்து மயான பூமியான திருவாலங்காட்டில் வந்து கால் பதித்த போது அவர் கால் பட்ட இடத்தில் சிவ லிங்கம் தோன்றியதாம், எனவே அம்மை தலையால் நடந்த தலம் இது என்பதால் திருஞான சம்பந்த பெருமான் இத்தலத்தில் கால் பதிக்காமல் இத்தலத்தை விடுத்து பழையனூர் சென்று தங்குகிறார். இறைவன் அவரது கனவில் சென்று எம்மை மறந்தனையோ? என்று வினவ , ஆளுடையப்பிள்ளையும் ஆலங்காட்டப்பர் மேல் பதிகம் பாடியுள்ளார்.

பழனை என்னும் பழையனூர் என்னும் தலம் திருவாலங்காட்டிற்க்கு கிழக்கே 1 கி.மீ தூரத்தில் உள்ளது. பழையனூர் நீலியின் சாகசத்தால் கணவனை இழந்த செட்டிப்பெண்ணுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு இணங்க வேளாளர்கள் 70 பேர் தீப்பாய்ந்து தங்கள் வாக்கை மெய்ப்பித்தனர், அவர் வம்சா வழியினர் இன்றும் ஆலங்காட்டப்பரை வழிபட்டு வருகின்றனர். சோழர் காலத்திய திருவாலங்காட்டு செப்பேடுகள் மிகவும் பிரசித்தம் இவ்வாறு பண்டைத் தொன்மையுடன் வரலாற்று பொக்கிஷமாகவும் விளங்குகின்றது இரத்தின சபை அமைந்துள்ள திருவாலங்காட்டு திருத்தலம். செப்பேடுகளில் ஐயன் "அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

இனி வடவாரண்யேஸ்வரம் என்றும் போற்றப்படும் இத்தலத்தை வலம் வருவோம். நம்மை முதலில் வரவேற்பது மூன்றாவது சுற்றின் நெடிதுயர்ந்த மதில்களும் ஐந்து நிலை இராஜ கோபுரமும் . இத்தலத்தில் காளிக்குத் தான் முதல் மரியாதை, தன்னை வணங்க வருபவர்கள் முதலில் காளியம்மனை தரிசனம் செய்த பின்னரே தனனை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐயன் வாக்கு என்பதால் திருக்கோவிலை வலம் வந்து காளியம்மன் சன்னதி அடைவோம். வட பத்ர காளியம்மன் சன்னதி, முக்தி தீர்த்தம் என்னும் குளக்கரையின் கரையில் அமைந்துள்ளது. திருவாரூர் கமலாலயதிற்க்கு அடுத்த இரண்டாவது பெரிய திருக்குளம் இது. அன்னையின் சன்னதிக்கு செல்லும் கோபுரத்தில் ஐயன் ஊர்த்துவத்தாண்டராய் காளியை தோற்க்கடித்த சுதை சிற்பம் எழிலாக விளங்குகின்றது. ஒரு சுற்று சன்னதி வடக்கு நோக்கி ஆக்ரோஷத்துடனும், அதே சமயம் அன்பர்களுக்கு அருள் புரியும் திறத்திலும் ஐயனின் உயர்த்திய காலை பார்க்கும் வகையில் நாட்டிய கோலத்தில் மேல் நோக்கி அருள் பாலிக்கின்றாள் அன்னை.



முக்தி தீர்த்தம்


அன்னைக்கு எதிரே சிம்ம வாஹனம் மற்றும் திரிசூல மேடை. அன்னையை தரிசித்து விட்டு மணியமபலத்திற்குள் நுழையும் போது இராஜ கோபுரத்தின் இடப்புறம் வல்லப கணபதி, வலப்புறம் ஸ்ரீ சண்முகர் மூன்று நிலை இரண்டாவது இராஜ கோபுரத்தைக் காணலாம். இருபுறமும் காரக்காலம்மையார் சரிதத்தை விளக்கும் சுதை சிற்பமும், மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாணக்கோல சுதை சிற்பமும் நம்மை மகிழ்விக்கின்றன. இரண்டாவது சுற்றில் வண்டார் குழலி அம்மன் திருச்சன்னதி அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்ற கோலத்தில் அருட்கோலம் காட்டுகின்றாள் அன்னை தயாபரி, பிரம்மராளகாம்பாள் என்றும் போற்றப்படும் அன்னை பார்வதி.

மூன்றாவது சுற்றுக்கு உள் செல்லும் வாயிலில் ஐந்து சபைகளில் ஐயனின் திருநடனக் காட்சி சுதை சிற்பம். இந்த பஞ்சசபை பதிவுகளில் தாங்கள் காணும் படம்தான் இந்த சுதை சிற்பம். திருக்கோவிலின் உள்ளே நுழைந்தால் தெற்கு நோக்கி இடது காலை அண்டமுற தூக்கிய நிலையில் எட்டுக் கரங்களுடன் அருட்காட்சி தருகின்றார் ஊர்த்துவதாண்டவேஸ்வரர் இரத்தின சபையில். அபயகரம், உடுக்கை, திரிசூலம்,மான், அக்னி, நாக பாசம், அருள் கரம், நாட்டிய முத்திரை என்று தரிச்னம் தரும் ஐயனை கண்டவுடன் உள்ளம் சிலிர்க்கின்றது, கண்ணில் ஆனந்தக் கண்ணீர் எத்தனை கோடி யுக தவமோ ஐயா உனது தரிசனம் பெற என்று மனது நிறைவடைகின்றது. திருவாலங்காட்டில் சிவகாம சுந்தரிக்கு சமிசீனாம்பிகை என்று திருநாமம். சீனம் என்றால் ஆச்சரியம். ஐயனின் ஆட்டத்திற்கு இனையாக காளி ஆட இப்படியும் ஒரு பெண்ணால் ஆட முடியுமா என்று மலைத்தாளாம் மனை அன்னை பார்வதி. அப்போது இடது கை நடு விரலை மடக்கி கன்னத்தில் கை வைக்கப்போகும் ஆச்சாரியமான முக அமைப்புடன் உள்ளதால் அம்பாளுக்கு இத்திருநாமம்.
சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகத லிங்கமும், திருமுறைக்கோவிலும் உள்ளன. ஐயனின் திருவடி நீழலில் தாளம் இசைத்த வண்ணம் பேயுருவில் காரைக்காலம்மையார். அந்த அற்புத பக்தரின் மனத்தினமைதான் என்னே? அவர் சரிதத்தை படிக்க சுட்டியை அழுத்துங்கள்.
திருவாலங்காட்டில் பெருமாள் கோவில்கள் போல தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகின்றது. சுவாமி ஊர்த்துவத்தாப்டியம் ஆடிய போது அவரது உக்கிரம் தாங்க முடியாமல் தேவர்கள் மயக்க நிலைக்கு சென்றார்களாம். அப்போது பரம கருணாமூர்த்தியான தியகராஜர் தமது ஜடாமுடியிலிருந்து கங்கையை தெளித்து அவர்களை எழுப்பியதால் இவ்வாறு இன்றும் தீர்த்தம் வழங்கப்படுகின்றதாம்.
வீடு நமக்குத் திருவாலங்
காடு விமலர் தந்த

ஓடு நமக்குண்டு வற்றாத
பாத்திரம் ஓங்குசெல்வம்

நாடு நமக்குண்டு கேட்டதெல்லாம்
தர நன்னெஞ்சமே

ஈடு நமக்கு சொலவோ
ஒருவரும் இங்கில்லையே




என்று ஐயனை துதித்து எதிரே நோக்கினாள். காளியம்மன் உற்சவ மூர்த்தியாய் எழுந்தருளியுள்ளாள். அம்மையின் கண்களில் தெரிவது ஆச்சரியமா? கோபமா? வெட்கமா? அத்தனையும் கலந்த ஒரு கலவை. ஐயனின் திருப்பாதத்தை ஊர்த்துவ தாண்டவத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு தரிசனம் தருகின்றாள் அன்னை.

காளி அம்மன்


கூடினார் உமை தன்னோடே குறிப்புடை வேடம்கொண்டு


சூடினார் கங்கையாளை சுவரிடு சடையர் போலும்

பாடினார் சாமவேதம் பைம்பொழிற் பழனை மேயார்


ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே



ன்னும் அப்ப்ர் பெருமானின் பதிகம் நெஞ்சில் ஓடுகின்றது. அம்மையை வணங்கி விட்டு உள்ளே சென்று உள் சுற்றை வலம் வந்து பஞ்ச பூத லிங்கங்களை வணங்கி அர்த்த மண்டபத்தில் நுழைந்தால் உள்ளே ஆனந்த நடராஜரின் இன்னொரு சபை, இடது பதம் தூக்கிய ஆனந்த தாண்டவத்தில் அம்மை சிவானந்த வல்லியுடன் காட்சி தருகின்றார். கருவறையில் பெரிய லிங்கத் திருமேனியாக அருள் பாலிக்கின்றார் ஆலங்காட்டப்பர். தேவர் சிங்கப்பெருமான், வடவாரண்யேஸ்வரர் என்று ஆயிரம் திருநாமம் ஐயனுக்கு. ஐப்பசி முழுநிலவன்று ஐயனை தரிசனம் செய்ய எல்லா இன்பங்களும் அருளுவார் என்பது ஐதீகம். வெளி சுற்றில் தலமரம் ஆலமரம் வடக்கு பக்கத்தில் உள்ளது நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து ஐயனின் அம்பல செப்புக்கூரையையும் ஐந்து கலசங்களையும் தரிசனம் செய்யலாம்.

தில்லை ஆனி உத்திரப்பெருவிழா: விழாவின் ஒன்பதாம் நாள் ஆனந்த நடராஜரும், சிவகாமி அம்மையும் எளி வந்த கருணையினால் தாங்களாகவே சித் சபையை விடுத்து வெளியே வந்து திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர்.

அத்தனை முப்பத்து முக்கோடி
தேவர்க்கதிபதியை

நித்தனை அம்மை சிவகாம
சுந்தரி நேசனைஎம்

கத்தனை பொன்னம்பலத்தாடும்
ஐயனைக் காணக் கண்கள்

எத்தனை கோடி யுகமோ
தவம்செய் திருக்கின்றவே

என்ற படி அம்பலத்தாடும் ஐயனை தேரில் கண்டு தரிசனம் பெறுவோர் பேறு பெற்றோர் என்பதில் ஐயம் இல்லை. மாலை வரை திருத்தேரில் தரிசனம் தந்த பக்தி வலையில் படும் அம்மையப்ப்ர் மாலை திருத்தேரிலிருந்து இராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு ஆனந்த தாண்டவத்துடன் எழுந்தருளுகின்றனர் . அங்கு அண்டர் கோனுக்கு ஏக தின லக்ஷார்ச்சனை நடைபெறுகின்றது.


இது வரை பஞ்ச சபைகளின் தரிசனம் கண்ட அன்பர்களுக்கு நன்றி நாளை ஆனித்திருமஞ்சனம் ஐயனின் அருள் தரிசனம் பெற வாருங்கள்.

Friday, July 4, 2008

பஞ்ச சபைகள் - தாமிர அம்பலம் - திருநெல்வேலி

அம்பலத்தாடும் எம் ஐயன் ஆடல் காணீரோ
ஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.


தாமிர சபை

மாயைதனையுதறி வல்வினையை சுட்டுமலம்

சாய அமுக்கி அருள்தான் எடுத்து - நேயத்தால்

ஆனந்த வாரிதியதில் ஆன்மாவைத்தான் அழுத்தல்

தான் எந்தையார் பரதம் தான்.

படைப்புத் தொழிலைக் குறிக்கும் உடுக்கை ஏந்திய கரத்தால் மாயையை உதறி, அழித்தல் தொழிலை குறிக்கும் அனலேந்திய கையால் கன்மத்தை சுட்டும், மறைத்தல் தொழிலைக்குறிக்கும் ஊன்றிய பாதத்தால் ஆணவ மலத்தின் வலிமையைக் கெடுத்தும் அருளளை குறிக்கும் தூக்கிய குஞ்சித பாததால் முக்தி அளித்து ஆட்கொள்ளும் அருட்பிரான் உயிர்கள் மேல் வைத்த கருணையினால் தன் திருவடிக்குக்க்கீழே உயிர்களை அழுத்தி பேரின்பத்தை துய்க்க செய்கின்றார் இதுவே ஞான நடனம். இவ்வாறு மஞ்சாடும் மங்கை மணாளர் ஆடிடும் பஞ்ச சபைகளுள் மூன்றாம் சபையாகிய தாமிர அம்பலத்தில் சபாபதியை இன்று தரிசனம் செய்யலாம்.


நெல்லையப்பர் ஆலய் இராஜ கோபுரம்

தாமிரபரணி ஆறு பாய்ந்து வளம் கொழிக்கும் நெல்லை என்று அழைக்கப்படும் காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் ஆலயத்தில் அமைந்துள்ளது தாமிர அம்பலம் பாண்டி நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று இத்தலம். ஆளுடையப்பிள்ளையாம் திருஞான சம்பந்தர் பதிகம் பாடிய தலம். முதலில் கோவிலின் தல வரலாற்றைப் பற்றி காண்போம். பண்டைக்காலத்தில் இத்தலம் மூங்கில்க் காடாக இருந்தது. அப்போது ஒரு இடையன் அரசனுக்காக கொண்டு சென்ற பால் இந்த வேணு வனத்தில் ஒரு மூங்கில் புதரில் தானே கொட்டி விட தினமும் பால் குறைவாக வருவதைக் கண்டு கோபம் கொண்ட மன்னன் இடையனை விசாரிக்க அவனும் இவ்வாறு பால் கொட்டி விடும் விஷயத்தை கூறினான். அடுத்த நாள் அரசனும் அவனுடன் அங்கு செல்ல பால் தானாக கொட்டியது, அங்கு என்ன உள்ளது என்பதை அறிய மன்னன் மூங்கில் புதரை வெட்ட அங்கிருந்து இரத்தம் வடிந்தது. மன்னன் தவறுணர்ந்து மயங்கி விழ அரன் அசரீரியாய் தானே சுயம்புவாய் அங்கிருப்பதாய் அறிவித்தார். இன்றும் ஐயன் திருமேனியில் வெட்டுக்காயம் உள்ளது. வேதங்களே ஐயனுக்கு காவலாக நின்ற வேணு வன நாதர், வேய் முத்து நாதர், வேணுவனமஹாலிங்கேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். இறைவனின் மற்ற திருநாமங்கள் சாலிவாடீசர், நெல்லையப்பர், நெல்வேலி நாதர். இனி இத்தலம் திருநெல்வேலி என்னும் பெயர் பெறக்காரணமான திருவிளையாடலைப்பற்றிக் காண்போமா?



வேத சன்மன் என்ற வேதியன் நாள் தோறும் தனது வீட்டு முற்றத்தில் உலர வைத்த நெல்லைக் குத்தி அதனால் செய்த அமுதைக் கொண்டு நெல்லையப்பருக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஒரு நாள் அவ்வாறு உலர வைத்த போது பெரும் மழை பெய்தது வெள்ள நீர் புரண்டோடியது. மனம் நொந்த வேத சன்மன் இறைவனை வேண்ட இறைவன் அருளால் அவன் நெல்லை உலர வைத்த இடம் நீங்கலாக மற்ற இடமெல்லாம் மழை பெய்தது. இவ்வாறு நெல்லை வேலி போல காத்தருளியதால், நெல்லை வேலியிட்டுக்காத்தவர் நெல்லையப்பர் ஆனார் தலமும் திருநெல்வேலியானது.

இத்தலத்தில் மூன்று லிங்கங்களாக ஐயன் அருள் பாலிக்கின்றார். வேண்ட வளர்ந்த நாதர் (நெல்லையப்பர்) சுயம்பு மூர்த்தி, லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் உள்ளதால் சக்தி லிங்கம். இப்போது நாம் தரிசிக்கும் ஆவுடை 21வது என்றும் முந்தைய இருபதும் பூமிக்குள் அழுந்தி விட்டதாக ஐதீகம். மஹா விஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், பாதாளத்தில் திருமூல மஹா லிங்கமும் உள்ளது. அம்மையின் திருநாமம் காந்திமதியம்மன் கோடி சூரிய பிரகாசத்துடனும் அதே சமயம் மதியை( சந்திரனை) போன்று குளிர்ச்சியுடன் அருள் பாலிக்கும் வடிவுடையம்மை நான்கு கரங்களுடன் எழிற் கோலம் காட்டுகின்றாள் அன்னை. திருகாமகோட்டமுடைய நாச்சியார் என்ற திருநாமமும் உண்டு. அர்த்த ஜாமத்தில் அம்பிகைக்கு வெண்ணிற ஆடை அலங்காரம், மறு நாள் காலை விளா பூஜை .இறுதி காலத்தில் அனைத்து உயிர்களும் அன்னையிடம் அடங்குவதாக ஐதீகம். ஐயனுக்கு வலப்புறம் தனிக்கோவில் கொண்டு செங்கோல் ஏந்தி இராஜராஜேஸ்வரியாய் அருளாட்சி புரிபவள். காந்திமதி அம்பாள் உச்சிக் காலத்தில் ஐயனுக்கு அன்னம் பரிமாறி உபசரித்து வழி படுவதாக ஐதீகம். மூலஸ்தானம் அருகில் திருமால் பள்ளி கொண்ட கோலத்தில் சிவபூஜை செய்தபடி அருள் பாலிக்கின்றார். ,கங்கையும் யமுனையும் அம்மனுக்கு துவார பாலகிகள்.பிரதோஷ காலத்தில் அம்பிகைக்கு எதிரே உள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடைபெறுகின்றது. அம்பிகையும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றாள். சிவராத்திரியன்று அம்பிகைக்கும் நான்கு கால அபிஷேகம். சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்தும் வகையில்.வெள்ளிக்கிழமைகளில் தங்கப்பாவாடையில் தரிசனம் தயாபரி காந்திமதி. தாமிரபரணித்தாய் சிலை வடிவில் எழுந்தருளியுள்ளாள். தல விநாயகர் முக்குறுணி விநாயகர் வலது கையில் மோதகம் இடது கையில் தந்தம் என்று மாறிய கோலத்தில் அருட்காட்சி தருகின்றார். முருகர் ஆறுமுக நாயனார். இவர் அருணகிரி நாதரால் பாடப்பெற்றவர்.

ஏனைவெண் கொம்பொடு மெழில் திகழ் மத்தமு

கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்

ஆனினில் ஐந்துசந் தாடுவார் பாடுவா ரருமறைகள்

தேனில் வண்டமர்பொழிற் திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.

தேனிக்கள் தேனை சுவைக்கும் மலர்ச்சோலைகள் நிறைந்த திருநெல்வேலியில் உறையும் இறைவர், திருமாலாகிய பன்றியின் வெள்ளிக் கொம்பையும், ஊமத்தை மலரையும், வளைந்த பிறை மதியையும் அணிந்த சடையை உடையவர், கொல்லும் புலித்தோலை அரைக்கசைத்த புனிதர். புனிதமான் பசுவின் ஐந்து கவ்வியங்களில் ஆடுபவ்ர் அரிய மறைகளை நாம் உய்ய அருளியவர் என்று ஞான சம்பந்த்ப்பெருமான் பாடிய நடராஜரின் சபை
மேற்குப்பகுதியில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. ஐயன் காளிகா தாண்டவமாடிய சபை இந்த தாமிர சபை. சபையின் பின்புறம் சந்தன சபாபதியின் திருவுருவம் உள்ளது. எப்போதும் சந்தனக் காப்புடன் விளங்குவதால் ஐயனுக்கு இத்திருநாமம். மரத்திலான கூரையும் ஏழு அடுக்களுடன் உள்ள தாமிரத் தகடுகளுடான கூரை கொண்டு விளங்குகின்றது தாமிர சபை.மார்கழி திருவாதிரையின் போது ஆனந்த நடராசரின் நடனக் காட்சி தாமிர அம்பலத்தில் நடைபெறுகின்றது. இரவு பன்னிரண்டு மணிக்கு சந்தன சபாபதிக்கு அபிஷேகம் அலங்காரம். அதிகாலை 4.30 மணிக்கு பசு தீபாராதணை 5.15 மணிக்கு திருநடனக்காட்சி நடைபெறுகின்றது. திருமால், அக்னி பகவான், அகஸ்தியர், முழுதுங்கண்ட ராம பாண்டியன் ஆகியோருக்கு நடன காட்சி தந்த தலம்.அக்கினி சபாபதி என்றழைக்கப்படும் நடராசர் சன்னதியும் உள்ளது. மிகப்பெரிய திருமேனி. ஐயனின் திருமுன்பில் காரைக்காலம்மையார் திருவுருவம் உள்ளது.

காண்தகு மலைமகள் கதிர்நிலா
முறுவல் செய்து அருளவேயும்



பூண்டநா கம்புறங் காடு அரங்
காநட மாடல்பேணி



ஈண்டுமா மாடங்கண் மாளிகை
மீது எழ கொடி மதியம்




தீண்டி வந்து உலவிய திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.

துர்க்கையம்மன் சிங்கம் மற்றும் மான் வாகனத்துடன் எழுந்தருளியுள்ளார். அம்பாள் சன்னதியில் பண்டாசுரனை வதம் செய்த அம்பாள் மஞ்சன வடிவாம்பிகையாக எழுந்தருளியுள்ளாள். நவக்கிரக சன்னதியில் புதன் மாறுபட்டு கிழக்கு நோக்காமல் வடக்கு நோக்கியுள்ளார். இவரை வணங்குவதால் படித்தவர்கள் செல்வாக்கு பெறுவர்.

தாமிர சபை

(தாமிர சபையின் பின்னே சந்தன சபாபதி காட்சி தரும் அழகுதான் என்னே)





தாமிரபரணி ஆறு சுற்றிப் பாயும் திருநெல்வேலி நகரின் நடு நாயகமாக அமைந்துள்ளது திருக்கோவில். பொற்றாமரைக்குளம், கருமாரி தீர்த்தம், தாமிரபரணி வயிரவ தீர்த்தம் என்று மொத்தம் 32 தீர்த்தங்கள். துறை சிந்து பூந்துறை இத்துறையில் சிந்திய எலும்புகள் பூக்கள் ஆயின. ஏழாம் நூற்றாண்டில் நின்ற சீர் நெடுமாறன் ஐயனுக்கும் அம்மைக்கும் தனித் தனி கோவில் கட்டினான். ஐயன் கோவிலுக்கு நான்கு இராஜ கோபுரங்கள், அம்மன் கோவிலுக்கு ஒரு இராஜ கோபுரம், இரண்டு கோவில்களின் வெளிச்சுற்றுகளை இனைத்து ஒரு வாயில் உள்ளது இவ்வாயில் நீண்டு அமைந்துள்ளது. சங்கிலி மண்டபம் என்று அழைக்கப்படுகின்றது.அம்மன் கோவிலில் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இலட்ச தீபம் இம்மண்டபத்தில் ஏற்றப்படுகின்றது. ஆயிரங்கால் மண்டபமும் அம்மன் கோவிலில் உள்ளது இங்கு ஐப்பசியில் திருமணமும், செங்கோல் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றது.பெரிய சுதை நந்தி மண்டபத்தூண்களில் அற்புதமான சிற்பங்கள். நாதப்பமணி மண்டபத்தில் இசைத்தூண்கள் உள்ளன.




சித்ரா பௌர்ணமி, ஆனித் தேரோட்டம் பத்து நாள் உற்சவம், ஆவணி மூலம், ஐப்பசி பிரம்மோற்சவம் பத்து நாள் அம்பாள் தபசு, பத்தாம் நாள் அம்பாள் கம்பா நதிக்கரைக்கு எழுந்தருளுகின்றாள் 11ம் நாள் மஹா விஷ்ணு தங்கையை மணம் செய்து கொள்ள நெல்லையப்பரை அழைக்கின்றார் பின் திருக்கல்யாணம்.பன்னிரண்டாம் நாளிலிருந்து மூன்று நாட்கள் ஊஞ்சல் உற்சவம். 14ம் நாள் சிவன் சன்னதிக்கு மறு வீடு. அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு சீர் கொண்டு செல்கிறாள் இது காந்திமதி சீர் எனப்படுகிறது. கந்தர் சஷ்டியின் போது ஆறுமுக நாயனாருக்கு லட்சார்ச்சனை., உத்திராயண புண்ணிய காலத்தில் நெல்லுக்கு வேலி கட்டிய லீலை உற்சவம் நடைபெறுகின்றது. காலையில் ஐயனுக்கும் அம்பிகைக்கும் 108 சங்காபிஷேகம், அம்மையப்பர் வெள்ளி ரிஷ்ப வாகனக் காட்சி, பஞ்ச மூர்த்திகள் ரத வீதியுலா. தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் என்று வருடம் முழுவதும் திருநாள்தான் அம்மையப்பர் சன்னதியில். வரும் பதிவில் சித்திர சபையாம் திருக்குற்றாலத்தில் ஆடல் வல்லான் தரிசனம் காண்போம்.
தில்லை ஆனி உத்திர உற்சவம்: இன்று ஐந்தாம் நாள் எம்பெருமானின் வாகன்மும் கொடியும் ஆன விருஷ்ப வாகன சேவை. தெருவடைச்சான் சப்பரம். ஆறாம் நாள் வெள்ளி யானை வாகனக் காட்சி.