Tuesday, June 17, 2008

மாங்கனி மழையில் நனைய வாருங்கள்

மாங்கனித்திருவிழா





பிச்சைப்பெருமான் பிச்சைக்கு புறப்பாடு




மாங்கனித் திருவிழாவின் பூர்வமாக காரைக்காலம்மையாரின் சரித்திரத்தையும், பிக்ஷாடணரின் வைபவத்தையும் பார்த்தோம் இனி இப்பதிவில் மாங்கனித்திருவிழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம், வீட்டின் கூரைகளிலிருந்து கூடை கூடையாக மாங்கனிகள் வீசப்படும் அழகையும், அந்த மாங்கனி மழையில் நனையவும் வாருங்கள் தங்களை இருகரம் கூப்பி அழைக்கிறேன்.




காரைக்கால் அம்மையாரின் இந்த அமுது படையல் நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று "மாங்கனித் திருவிழாவாக" காரைக்காலிலே கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் காரைக்கால சௌந்தராம்பிகா உடனமர் கைலாச நாதர் ஆலயத்தில் நடைபெறுகின்றது. இத்தலத்தின் தல வரலாறு, பொன்னி நதி பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை வளநாட்டிலே ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது உயிர்கள் எல்லாம் உய்யும் பொருட்டு எம் அம்மை ஜகத்ஜனனி சாகம்பரியாக , தானே பூவுலகிற்கு அரி சொல் ஆற்றங்கரையிலே ( அரிசலாறு) திருக்கயிலை மலையிலிருந்து தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ய இறையருளால் மழை பெய்து எங்கும் சுபிக் ஷம் ஏற்பட்டது. பின் அங்கேயே அம்மையும் சௌந்தராம்பிகை என்னும் திருநாமத்துடன், கைலாயநாதருடன் திருக்கோவில் கொள்கின்றாள். இந்த புண்ணிய தலத்திலும், இவ்வாலயத்திற்கு எதிரே சோமநாயகி உடனமர் சோமநாயகி ஆலய வளாகம் உள்ளது, இவ்வளாகத்தில்தான் காரைக்காலம்மையாரின் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நின்று அன்னம் பாலிக்கும் கோலத்தில் காரைக்காலம்மையார் அருள் பாலிக்கின்றார். இவ்விரு ஆலயங்களிலும், ஆற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்திலும் இந்த அடியாரின் பொருட்டு ஒவ்வொரு ஆனி பௌர்ணமியன்றும் மஹா தேவன் அம்மையாருக்கு அளித்ததும் அவர் இறைவனுக்கு படைத்ததும் ஆன மாங்கனியின் பெயாராலேயே "மாங்கனித் திருவிழா" சிறப்பாக நடைபெறுகின்றது.



இத்திருவிழா நான்கு நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இத்திருவிழாவின் முதல் நாள் மாலை விக்னங்களை எல்லாம் தீர்க்கும் விக்னேஸ்வர பூசையுடன் திருவிழா தொடங்குகின்றது. அன்று இரவு பரமதத்த செட்டியாரை ஆற்றங்கரை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக அழைத்து வரும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடை பெறுகின்றது.



இரண்டாம் நாள் அதி காலை ஸ்ரீ புனிதவதியார் தீர்த்தக்கரைக்கு வரும் நிகழ்ச்சியும், பின்னர் பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் கல்யாண மண்டபம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. பின்னர் காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.




பிச்சாண்டவர் வெள்ளை சாத்தி புறப்பாடு




அன்று மாலை பிக்ஷாடண மூர்த்தி "வெள்ளை சாத்தி புறப்படும்" நிகழ்ச்சி நடைபெறும், அப்போது முழுதும் மல்லிகைப்பூவினால் அலங்கரிக்கப்பட்ட பிக்ஷாடணர், கையில் சூலத்துடனும், பாம்பு கழுத்தில் தொங்க சர்வ அலங்காரத்துடன், தாருகாவனத்தில் அன்று ரிஷி பத்தினிகளின் நிறையழித்து ரிஷிகளின் கர்வத்தை அடக்கியபின் ஆடிய ஆனந்தத்தாண்டவமாடி கோவிலை சுற்றி வருவார். அவர் ஆடி வரும் அழகே அழகு. ஐயனை எடுத்து ஆடி வர இளைஞர்களும் முதியர்வர்களும் போட்டி போட்டுக்கொண்டு வரும் பாங்கைப் பார்த்தால் மட்டுமே நம்ப முடியும். நம் மனத்தில் உள்ள அழுக்குத்தான் வெள்ளை அதை நாம் க்ளைந்தால் இறை தரிசனம் காணலாம் என்பதை விளக்குவதே வெள்ளை சாத்தி புறப்படுதலின் தாத்பரியம்.



பின்னர் ஸ்ரீ புனிதவதியாரும் பரம தத்தரும் "முத்துச் சிவிகையில்" புதுக்கல்யாண தம்பதிகளாய் திருவீதி உலா வருகின்றனர்.





இரவு 3 மணிக்கு பிக்ஷாடணருக்கும் மற்றும் பஞ்ச மூர்த்திகள், காரைக்காலம்மையார், அதிகாரநந்தி ஆகியோருக்கு ருத்ர ஜபத்துடன் மஹா அபிஷேகம் நடைபெறுகின்றது. நதியாய் பாயும் பால், தயிர், பழ ரசங்கள், முக்கியமாக மாங்கனிச்சாறு, தேன், இளநீர், பன்னீர் முதலியவற்றால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக "மஹா அபிஷேகம்" நடைபெறுகின்றது.




பிக்ஷாடணர் நகர் வலம்





மஹா அபிஷேகம் முடிந்து உதயாதி நாழிகையில், மஞ்சள் பட்டாடை உடுத்தி, பால் வெந்நீற்று காப்புடன், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்புடன் கொண்டையிட்டு, சடாமுடி தரித்து, தோளிலே சூலம் தாங்கி வலக்கரத்திலே உடுக்கையும், இடக்கரத்திலே பிச்சைப் பாத்திரத்தில் மாங்கனியும் ஏந்தி எம் ஐயன் தரும் மஹா தரிசனத்தை பார்த்து பரவசம் அடைய எத்தனையோ கோடி தவம் செய்திருக்கவேண்டும். சுந்தர மூர்த்தியாக எம் ஐயனின் அழகே அழகு அந்த அழகைப் பார்க்கும் போது இத்தகைய பேரழகை பார்த்து தருகாவனத்து ரிஷி பத்தினிகள் எவ்வாறு மயங்காமல் இருந்திருக்கக் கூடும் என்பது நம் மனதில் நிச்சயமாக தோன்றும். இந்த தரிசனம் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே கிடைக்கும். முற்பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த திவ்ய தரிசனம் கிட்டும் என்பது மட்டுமே உண்மை.




பவளக்கால் விமானத்தில் பிக்ஷாடணர் புறப்பாடு





மூன்றாம் நாள் காலை 8 மணி அளவில் பரமதத்தர் காசுக்கடை மண்டபத்திற்க்கு வருதல் மற்றும் வர்த்தகர்கள் இருவர் அவருக்கு இரு மாங்கனி கொடுத்தல் பின் செட்டியார் அம்மாங்கனிகளை தம் வீட்டுக்கு அனுப்புதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.






இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆனி பௌர்ணமியன்று காலை 10 மணியளவில் தொடங்குகின்றது. எம்பெருமான் அடியார் கோலத்துடன் பவளக்கால் வினத்தில் பத்மாசனத்தமர்ந்து வேத பாராயணத்துடன், வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ புனிதவதியார் திருமாளிகைக்கு பிச்சைக்காக எழுந்தருளுகின்றார். கிண் கிணி என்று ஆயிரம் மணிகள் ஓசையிட எம் ஐயன் பிக்ஷாடணராக, குண்டோதரன் குடை பிடிக்க, வெட்டி வேர் திருவாசியுடன், தங்க கவசம், சர்வாபரணதாரியாக, வெள்ளிக் குடையுடன் நகர் வலம் வரும் போது, எம் ஐயனின் எழிற்கோலத்தைக் காணவும் அவருக்கு மாங்கனி படைக்கவும் கூட்டம் அலை மோதும். இறைவன் பிச்சைக்கு வரும் போது அவருக்கு தேங்காய் உடைக்க படுவதில்லை ஆனால், இரு மாங்கனிகளே படைக்கப்படுகின்றன. பட்டு துண்டுகளும் சாத்தப்படுகின்றன. மாங்கனிகளும் பட்டும் மலை போல் அன்று குவிகின்றன.


பிக்ஷாடணரும் மாங்கனி மழையும்



மேலும் ஊர்வலத்தின் போது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக மக்கள் கூடை கூடையாக மாங்கனிகளை வீட்டின் கூரைகளிருந்து வீசுகின்றனர். அந்த மாங்கனிகள் இறைவனின் பிரசாதம் என்பதாலும் அக்கனியை உண்பவர்களின் குழந்தை இல்லா குறை நீங்கும் என்பதாலும் அதை பிடிப்பதற்காக அனைவரும் போட்டிப்போட்டுக் கொண்டு முன்னேறுவர், இது ஒரு காணக்கிடைக்காத காட்சி. இது மாதிரி ஒரு காட்சியை வேறு எத்திருக்கோவிலிலும் கண்டதில்லை, உண்மையிலேயே இது ஒரு மாங்கனி மழைதான் காரைக்காலில் ஆனி பௌர்ணமியன்று.





ஊர்வலம் முடிந்து அம்மையாரின் இல்லம் (காரைக்கால் அம்மையார் திருக்கோவில்) வரும் சிவனடியாரை, காரைக்கால் அம்மையார் முன் வந்து வரவேற்று "அமுது படைக்கும் நிகழ்ச்சி" நடை பெறுகிறது. தயிர் சாதமும், மாங்கனியும் மற்றும் அனைத்து இனிப்புகளும், திண்பண்டங்களும் கொண்ட மஹா நைவேத்தியம் படைக்கப்படுகின்றது பிச்சாண்டவருக்கு. இறைவனுக்கு படைக்கப்பட்ட உணவு எல்லாருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.



பின்னர் பரமதத்த செட்டியார் உணவு அருந்த தம் இல்லத்திற்கு வருதலும், மாங்கனியை புசித்த பின் புனிதவதியாரை மற்றொரு கனி கேட்க அக்கனியை வரவழைத்த அற்புத காட்சியைக் கண்டு அதிர்ந்து கப்பலேறி பாண்டி நாடு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இதற்காக காரை பகுதியின் மீனவர்கள் ஒரு படகை அலங்கரித்து கொண்டு வருகின்றன்ர், அவர்களுக்கு கோவில் மரியாதையும் செய்யபடுகின்றது. அந்தப்படகில் ஏறி பாண்டி நாடாம் ஆற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்திற்கு எழுந்தருளுகின்றார் பரமதத்தர்.

பௌர்ணமி அன்று இரவு பாண்டி நாட்டிலே (ஆற்றங்கரை சித்திவினாயகர் ஆலயம்) பரமதத்தரின் "இரண்டாம் திருமண வைபவம்" நடைபெறுகின்றது. பாண்டி நாட்டில் பரமதத்தர் இருப்பதை அறிந்த அம்மையார் நள்ளிரவு அலங்கரிக்கப்பட்ட 'புஷ்ப பல்லக்கிலே' பாண்டி நாடு செல்கின்றார். இந்த புஷ்ப பல்லக்கை பார்ப்பதற்காக மக்கள் அனைவரும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். பாண்டி நாட்டை அடைந்தவுடன் பரம தத்த செட்டியாரும் இரண்டாவது மனைவியும் மகளும் எதிர்வந்து ஸ்ரீ புனிதவதியாரை வலம் வந்து நமஸ்காரம் செய்ததால், புனிதவதியார் ஊனை உதிர்த்து என்புருகொண்டு, அற்புததிருவந்தாதி, திருவிரட்டைமாலை பாடிக்கொண்டு கைலாயத்திற்கு எழுந்தருளுகின்றார். என்புருவுடன் சப்பரத்தில் அம்மையார் பாண்டி நாட்டிலிருந்து எழுந்தருளும் போது பக்தர்கள் அம்மையாரின் பதிகங்களை பாராயணம் செய்து கொண்டு உடன் வருகின்றனர்.


சந்திரசேகரர் அம்மையாருக்கு கைலாய திருக்காட்சியருளல்






முருகர் அம்மையாருக்கு கைலாய திருக்காட்சியருளல்




அதிகாலை ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஆலயத்திற்கு முன் வரும் போது சிவதரிசன பயனை அருளும் பஞ்ச மூர்த்திகளும் அம்மையாருக்கு கயிலாயத் திருக்காட்சி தந்தருளுகின்றனர். கயிலாச வாகனாருடராய் சந்திர சேகரரும், விநாயாகரும், வள்ளி தேவ சேனா சமேத முருகரும், சண்டிகேஸ்வரர்ரும் அம்மையாருக்கு அருட்காட்சி தருகின்றனர். பின் பஞ்ச மூர்த்திகள் நகர்வலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.




நான்காம் நாள் காலை விடையாற்றி உற்சவமும் பஞ்ச மூர்த்திகளின் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றது. மாலை புனிதவதியாரின் திருவீதி உலாவுடன் திருவிழா இனிதே முடிவடைகின்றது.
எம் ஐயனின் எழிற் கோலமும் காணவும், மாங்கனி மழையில் நனைந்த அனுபவமும் எவ்வாறு உள்ளது.





No comments: