Tuesday, November 28, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா 6

அச்சன் கோவில் அரசன் 



இப்பதிவுகளையும்  காணலாமே         4   5    7   8   9   10  11   12   13   14   15   16   17   18   19   20   21



பூர்ணா புஷ்கலா சமேத தர்ம சாஸ்தா

அச்சன்கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா
பச்சை மயில் ஏறும் பன்னிருகையன் சோதரா
இச்சை கொண்டேன் உன்னிடத்தில் ஈஸ்வரன் மைந்தா
பச்சை வண்ணன் பரந்தாமன் மகிழும் பிரபோ ....

என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்பீர்கள் வாருங்கள் இப்பதிவில் அந்த அச்சன் கோவில் அரசனை தரிசிக்கலாம். 


கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் வட்டத்தில் அடர்ந்த காடுகளுக்கிடையில் பள்ளிவாசல்  ஆற்றங்கரையோரத்தில்   அமைந்துள்ள  அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஆலயம்  பரசுராமரால்   தோற்றுவிக்கப்பட்ட  ஐந்து  கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் ஐயனின் ஆதாரத் தலங்களில் சுவாதிஷ்டானத் தலம் ஆகும்.  இங்குள்ள சாஸ்தாவின் சிலை மிகப்பழமை வாய்ந்தது. இங்கே ஐயப்பன்  வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சி அளிக்கிறார். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை எனும் இரு தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இத்தலத்தில் சாஸ்தா மணிகண்ட முத்தையன் என்றும் அழைக்கப்படுகின்றார்.  இரு மனைவியருடன் இல்லறத்தானாக அருள் பாலிப்பதால் இவர் கல்யாண சாஸ்தா என்றும்  அழைக்கப்படுகின்றார். இவரை வழிபட்டால் திருமணத் தடைகள் அகலும். இல்லறம் நல்லறமாகும். சந்ததிகளும், சவுபாக்கியங்களும் என சகலமும் நம்மை வந்தடையும். 

அச்சன்கோவிலில் தனது தேவியருடன் வீற்றிருக்கும் ஐயப்பன்,  சங்கரன்கோவில் சங்கரநாராயணரைப் பார்த்தவண்ணம் உள்ளார். சபரிமலையில் பால்ய பருவத்தில் காட்சி தரும் ஐயப்பன்குளத்துப்புழாவில் குழந்தைப் பருவத்திலும்ஆரியங்காவில் இளைமைப் பருவத்திலும்அச்சன்கோவிலில் முதிர்ச்சிப்பருவத்திலும் காட்சி தருகிறார். அச்சன்கோவிலின் அரசனாக ஐயப்பன் தனித்தோரணையுடன் மிடுக்காக அமர்ந்துள்ளார். 

இத்தலம் "விஷம் தீண்டாப்பதி" என்ற சிறப்பு கொண்டது. பாம்பு கடிபட்டு வருபவர்களுக்கு,  நடு இரவானாலும், கோவில் நடை திறந்து சந்தனமும், தீர்த்தமும் வழங்கும் வழக்கம் இந்த ஆலயத்தில் உள்ளதாம். தீர்த்தம் தெளித்தவுடன் விஷம் நீங்கும் அதிசயம் நடைபெறும் தலம், 

அச்சன் கோவிலில் தனது தேவியருடன் வீற்றிருக்கும் ஐயப்பன் சங்கரன் கோவில் சங்கர நாராயணரைப் பார்த்த வண்ணம் உள்ளார். சபரிமலையில் பால்ய பருவத்தில் காட்சி தரும் ஐயப்பன், குளத்துப்புழாவில் குழந்தை பருவத்திலும், ஆரியங்காவில் இளைமைப் பருவத்திலும், அச்சன்கோவிலில் முதிர்ச்சிப் பருவத்திலும் காட்சி தருகிறார்.  

                                   

அலங்கார நுழைவு வாயில் 


செங்கோட்டையிலிருந்து  30 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.  பொதுவாக மகரஜோதியன்று காலை இத்தலத்தில் இருக்குமாறு குருசாமி அவர்கள் எங்கள் யாத்திரையை  அமைப்பார்.  எருமேலியிலிருந்து பெரிய பாதை வழியாக சபரிமலை சென்று ஐயனை தரிசித்து நெய்யபிஷேகம் செய்து பின் கீழிறங்கி இரு நாட்கள் கேரள மற்றும் தமிழக ஆலயங்களை தரிக்க அழைத்துச்செல்வார், சொரிமுத்து ஐயனார் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வார் ஜோதிக்கு  முதல் நாள் வழியில் உள்ள கருப்பண்ணசாமி ஆலயத்தை  தரிசித்து விட்டு  நள்ளிரவு அச்சன் கோவிலை அடைவோம்.  பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக  மண்டபம் அமைத்துள்ளனர் அதில் உறங்குவோம். அதிகாலை எழுந்து ஐயனின் ஆலயத்தை அங்குலம் அங்குலமாக தரிசிப்போம். அனைத்து பூஜைகளையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டும்.  எதிரே உள்ள கருப்பசாமி  சன்னதிக்கு சென்று காப்புக் கயிறு கட்டிக்கொள்வோம்.  பிறகு காட்டுப்பாதையில் கோணி,  பட்டணந்திட்டா வழியாக குமுளி செல்லும் பாதையில் உள்ள பீர்மேடு என்ற கிராமத்தில் உள்ள பருந்துப்பாறை என்ற மலை உச்சியில் இருந்து ஜோதி தரிசனம் செய்வோம். இப்பாதையில் செல்லும்  போது ஓர் கிராமத்தில் இறங்கி ஆற்றில் ஆனந்தமாக நீராடுவோம். யானைகளின் நடமாட்டமுள்ள பகுதிதான் ஆனால் இதுவரை யானைகளைக் கண்டதில்லை. ஆனால் காட்டுக்கோழிகள், வாலாட்டி குருவிகள், குரங்குகளை கண்டிருக்கிறோம். 

ஆலய முகப்பு  - பதினெட்டாம் படிகள்

அலங்கார வளைவிற்குள் நுழைந்து ஆலயத்தின் முகப்பை அடைந்தால் சபரிமலை போலவே பதினெட்டுப் படிகள் பதினெட்டுப் படிகளின் இரு பக்கமும்  பெரிய கடுத்தசாமி மற்றும் சிறிய கடுத்தசாமி சன்னதிகள் மூன்று கல் விளக்குகள். பதினெட்டாம் படி ஏறி சென்றால்  பிரம்மாண்ட பித்தளை நிலவிளக்கு அதையடுத்து தங்கக்கொடிமரம் நெடிதுயர்ந்து நிற்கின்றது.  நிலவிளக்கின் பீடம்,  கூர்ம பீடமாக  எழிலாக அமைந்துள்ளது எட்டு திசைகளிலும் நாகங்களும் அருமையாக அமைந்துள்ளது.  கொடி மரத்தின் தாமரை பீடத்தின் மேல் அஷ்டதிக்பாலகர்கள் எழிலாக அருள் பாலிக்கின்றனர். 

நிலவிளக்கின் கூர்ம பீடம் 


கொடி மரத்தின்  அஷ்டதிக் பாலகர்கள் 


முகப்பு மண்டபம் 


இவ்வாலயம் கேரள ஆலயம் போல் இல்லாமல் திராவிட பாணியில் அமைந்துள்ளது. ஜன்னல்களுடன் கற்றளியாக அமைந்துள்ளது. முன் மண்டபம்  தூண்களுடன் அமைந்துள்ளது. தூண்களை  யாணைகள் தாங்குகின்றன. தூண்களில் அருமையான கற்சிற்பங்கள் அமைந்துள்ளன.  கருவறை பிரமிட் வடிவத்தில் இல்லாமல் நம் ஆலயங்களின் விமானம் போல் சுதை சிற்பங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்தன்மையாக உள்ளது. 

வெளிப்பிரகாரத்தில் கன்னி மூல கணபதி,  சங்கு சக்கரங்களுடன் சதுர்புஜராக ஸ்ரீகிருஷ்ணர் சன்னதி, சிவன் மற்றும் மாம்பழத்தறா பகவதி சன்னதிகள் அமைந்துள்ளன. இத்தலத்தில் உள்ள அம்மன் சன்னிதியில் வளையல் மற்றும் பட்டுத் துணிகளுடன் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம். மேலும் அச்சன் கோவில் ஐயப்பனை வழிபட்டால் நம்மையும் அரசனைப் போல வாழவைப்பான்.

                                 
                                                       தூண்களைத் தாங்கும் யானைகள் 

                                            
தூணில் உள்ள தர்மசாஸ்தா சிற்பம் 

விமானம் 

 உட்பிரகாரத்தில்  நமஸ்கார மண்டபத்தில் குதிரை வாகனம் அமைத்துள்ளனர். கர்ப்பகிரகத்தின் சுவரில் சாஸ்தாவின் சிற்பங்களை தரிசிக்கலாம்.  கர்ப்பகிரகம் உயரமாக அமைந்துள்ளது. கர்ப்பகிரகத்துடன் அர்த்த மண்டபம் உள்ளது. நீராஞ்சனம் என்னும் தேங்காயில் விளக்கு ஏற்றும் பிரார்த்தனை விளக்குகள் இம்மண்டபத்தில் தான் ஏற்றப்படுகின்றன. நீராஞ்சன கட்டணம் வெறும்  இரண்டு ரூபாய்தான், அலுவலகத்தில் சீட்டு வாங்கிக் கொண்டு தேங்காயும் வாங்கிக்கொடுத்தால் தந்திரி விளக்கேற்றுகிறார். பலர் இத்தலத்தில் இவ்வழிபாட்டை செய்வதைக் கண்டேன்.   

கருவறையில் எழிலாக தேவியருடன் வலதிருக்கரத்தில் அமுத கலசம் தாங்கி ஒரு காலை  மடக்கி ஒரு காலை குத்துக்காலிட்டு எழிலாக அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றார் ஐயன். ஹரியும் அழகு, ஹரனும் அழகு, இரு அழகுக்கும் பிறந்த ஹரிஹரசுதன் அழகனாக இருப்பதில் என்ன ஆச்சரியம்.  தேவியர் இருவரும்  மலர் தூவும் கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.  பொதுவாக மகரஜோதியன்று தரிசனம் செய்வதால் சிறப்பு அலங்காரத்தில் தரிசிக்கும் பாக்கியம் அடியோங்களுக்கு கிட்டியது. உடன் சீவேலி மூர்த்தியையும் தரிசிக்கின்றோம். 


நாக யக்ஷி சன்னதியிலிருந்து விமானத்தின் எழில் தோற்றம் 

கன்னிமூல கணபதி சன்னதி



ஆலயத்தின் பின்புற வாசல் 

ஆலயத்தின் பின் புற வாசல் வழியாக வெளியே சென்றால் யக்ஷிக் காவையும், சர்ப்பக்காவையும் தரிசிக்கலாம்.  ஆலயத்தை விட உயரத்தில் இவ்விரண்டு காவுகளும் அமைந்துள்ளன.. இந்த யக்ஷி சாஸ்தாவின் சன்னதியில் விளையாடி வரும் இராஜமாதங்கியாவாள்,  இவ்வமைக்கு வெறிக்கலி என்றொரு பெயரும் உண்டு.  ஒரு சமயம்  இவள் உக்ரரூபிணியாக மக்களை துன்பப்படுத்திய சமயம் ஐயப்பன் ஸ்வர்ண சங்கிலியால் பந்தனப்படுத்தி அவளது தெய்வாம்சத்தை நினைவு படுத்தி, தன் பரிவாரங்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டார். இவளுக்கு மஞ்சளும் குங்குமமும் தூவி இங்குள்ளவர் சிறப்பாக வழிபடுகின்றனர். சர்ப்பக்காவில்  அரச மரத்தினடியில் எண்ணற்ற நாகர்கள் பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளனர். நாகர்களுக்கும் மஞ்சள் பூசி வழிபடுகின்றனர். 

கொச்சு சாமி 


சர்ப்பக்காவு
ஒருமுறை அச்சன்கோவில் அழகனை காண்பதற்காக தள்ளாத வயதுடைய பக்தர் ஒருவர் தனித்து வந்து கொண்டிருந்தார். அடர்ந்த காடு, நேரமோ இரவாகி விட்டது. வழியும் சரியாக தெரியவில்லை. மனதில் அச்சம் புகுந்தது. அச்சன்கோவில் அரசனுக்கு, அந்த வயதானவரின் அச்சம் புலப்பட்டு விட்டது. இதற்கிடையே அந்த வயதானவரும் ஐயப்பனை நினைத்து பயத்தைப் போக்க வேண்டிக் கொண்டார். அப்போது ஒரு அசரீரி கேட்டது. ‘அன்பனே! இப்போது இவ்விடத்தில் வாள் ஒன்று தோன்றும். அந்த வாள் உனக்கு வழிகாட்டும். அச்சன்கோவில் அடைந்ததும் அந்த வாளை எனது சன்னிதியில் கொடுத்து விடு. அதுவரை யாரிடமும் எதுவும் பேசக்கூடாது’ என்றது அந்த அசரீரி. அதன்படியே அங்கு தோன்றிய வாள் பவுர்ணமியை காட்டிலும் அதிக ஒளி காட்டியது. அந்த ஒளியின் மூலமாக காட்டுப்பாதையில் அந்த நள்ளிரவில் நடந்து வந்து கோவிலை அடைந்தார் முதியவர். மறுநாள் விடிந்ததும், அந்த வாளை கோவிலில் ஒப்படைத்து   விட்டு நடந்தவற்றை விளக்கி கூறினார். அப்போது கருவறையில் இருந்து அசரீரி ஒலித்தது. ‘அன்பர்களே! அந்த வாளை எனது கருவறையில் வைத்து பூஜை செய்யுங்கள். என்றும் உங்களுக்கு அரணாக இருந்து காப்பேன்’ என்றது. அதன்படி அந்த வாள் மூலவர் சன்னிதியில் வைக்கப்பட்டது. தற்போது அச்சன் கோவில் அழகனின் திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள புனலூர் கருவூலத்தில் அந்த வாள் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாள் கருப்பனின் வாள் என்பது ஐதீகம். 

இது காந்தமலையிலிருந்து தேவர்களால் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதற்கு அடையாளமாக அந்த வாளில் காந்தமலைன்ற எழுத்துகள் இருக்காம். இந்த வாளின் சிறப்பம்சம் என்னவெனில் இதன் எடை எவ்வளவு என்று இதுவரை யாரும் கண்டறியமுடியாத விஷயம் என்பதுதான்!! 

அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மட்டுமே தேரோட்டம் நடத்தப்படுகிறது. பிற ஐயப்பன் கோவில்களில் தேரோட்டம் இல்லை. அச்சன்கோவில் ஐயப்பன் ஆலயத்தில், ஆண்களுடன் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.மாய, மந்திரச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இக்கோவிலில் நடைபெறும் ‘கருப்பந்துள்ளல்’ என்னும் விழாவில் கலந்து கொண்டு, கருப்பசாமியை வழிபட்டால், தீய சக்திகள் அனைத்தும் நீங்கி வளம் பெறுவர்.

அச்சன்கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள்  ‘மண்டல மகோத்சவம்’ வெகு சிறப்பாக  நடைபெறுகின்றது. இவ்விழா மார்கழி மாதம் முதல் நாளன்று துவங்குகின்றது.  இவ்விழா தொடங்குவதற்கு முந்தைய நாளன்று திருவாபரணப் பெட்டி ஊர்வலம் நடைபெறுகின்றது.. புனலூர் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஐயப்பனின் திருவாபரணங்கள்   அப்போது எடுத்து வரப்படும். பெட்டிக்குள் நவரத்தின ஆபரணங்கள், தங்க ஆபரணங்கள்,  தங்கத்தால் செய்யப்பட்ட சாற்ற தலை, முகம், மார்பு, கைகள், கால்களுக்கு உண்டான கவசம், வாள் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. 18 அங்குல தங்க வாள் மிகவும் பழமையானது. 

இந்த ஊர்வலம் புனலூர் கிருஷ்ணன் கோவிலில் இருந்து தொடங்கி,  தென்மலை, ஆரியங்காவு வழியாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வழியாக தென்காசி காசிவிசுவநாதர் கோவிலுக்கு வந்து சேரும். அங்கு திருவாபரண பெட்டிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகின்றது.  அங்கிருந்து ஊர்வலம் பண்பொழி முருகன் கோவில் சென்று, மேக்கரை வழியாக மலைப்பாதையில் முன்னேறி அச்சன்கோவில் சென்றடையும். ஐயப்பனுக்கும், பூரணை, புஷ்கலை தேவியர்களுக்கும் திருவாபரணங்கள் பூட்டிய பின்னரே மகோத்சவம் தொடங்குகின்றது.

.மூன்றாம் திருநாள்  உற்சவத்தில், சிறிய தேரில் வர்ண ஆடை ஆபரணங்கள் அணிந்து, வாள்  கையிலேந்தி தர்மசாஸ்தா வலம் வந்தருளுகின்றார். இதை மணிகண்டமுத்தய்ய சுவாமியின் எழுந்தருளல் என்பர். ஒன்பதாம் உற்சவத்தின் போது, சக்கரங்கள் கொண்ட பெரிய ரதத்தில் எழுந்தருளுவார். தை மாதத்தில் ரேவதியன்று  சிறப்பு புஷ்பாபிஷேகம் நடைபெறுகின்றது. 

                                                     கருப்பசாமி ஆலயத்தின் அருகில் குழுவினர் 



இத்தலத்தின்  காவல் தெய்வம் கருப்பசாமி ஆவார். ஆலயத்திற்கு எதிரே தனி சன்னதியில் கருப்பாயி அம்மையுடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இவரை முதலில் வணங்கி விட்டு 

பின்னர் தர்ம சாஸ்தாவை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். ‘கருப்பந்துள்ளல்’ என்னும் விழா இங்கு பிரபலம். ஏவல், பில்லி, சூனியம் மற்றும் மாந்திரீகம் போன்றவற்றாலோ, தீராத கொடு நோயாலோ அவதிப்படுபவர்கள், இந்த விழாவில் பங்கேற்றால் அனைத்து துயரங்களும் நீங்கப்பெறுவார்கள். இந்த விழாவின் போது பலரும் கருப்ப சுவாமி போல் வேடம் அணிந்து  கலந்து கொள்கின்றனர். .


  
                                                                            குருசாமியுடன் குழுவினர்    


கருப்பண்ணசாமிக்கு இத்தலத்தில் இவ்வளவு சிறப்பு ஏன் என்று நினைக்கின்றீர்களா.?  அச்சன்கோவில்  அனைத்தும்  கருப்பனின் கோட்டை என்பது ஐதீகம். இதை உணர்த்தும் வகையில் ஒரு விளையாடல் இத்தலத்தில் நடைபெற்றது. ஒரு வருடம் திருவிழாவின் போது திருவாபரணப்பெட்டி ஆலயத்தில் இருந்தது. சில திருடர்கள் இரவோடிரவாக திருவாபரணப் பெட்டியை திருடிக்கொண்து சென்று விட்டனர். மறு நாள் காலை மேல் சாந்தி  வந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து விட்டார். செய்தி கேட்டு கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தில் ஒருவர்  வேடிக்கையாக அச்சன் கோவில் காடு அனைத்தும் கருப்பனின் காவல் என்பார்களே எவ்வாறு இப்படி நடந்திருக்கமுடியும் என்று ஏளனமாக கூறினார். அப்போது கூட்டத்தினரில் ஒருவர் மேல் கருப்பசாமி எழுந்தருளி, என் ஆதிக்கத்தில் திருட்டு நடைபெறாது என்று முழக்கமிட்டார். காட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக்கூறி  அங்கு சென்று பார்க்குமாறு உத்தரவிட்டார். . அங்கு சென்று பார்த்தபோது  இரவு திருவாபரணப் பெட்டியைத் திருடிய கள்வர்கள் பெட்டியை ஒரு மரத்தடியில் வைத்து விட்டு என்ன செய்கின்றோம் என்று அறியாமல்  மரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தனர். ஐயனின் ஆபரணங்கள் பத்திரமாக மீட்கப்பட்டன. திருடர்களும் மனம் திருந்தி ஐயனுக்கு கைங்கர்யம் செய்து வரலாயினர்.

அச்சங்கோவிலில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கோட்டை கருப்பணசாமி கோயில். இந்தக் கருப்பணசாமி, சிவனின் அம்சத்திலிருந்து வந்தவர். ஐயப்பனின் படைத் தளபதிகளில் முக்கியமானவர். இந்தச் சந்நிதிக்கு வந்து  கருப்பணசாமியிடம் நாம் எந்த வேண்டுதல் வைத்தாலும், அதை ஐயப்பனின் முன் வைத்ததற்குச் சமம்!

தை ரேவதியன்று புஷ்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகின்றது.  டன் கணக்கில் லாரிகளில் மலர்கள் வருகின்றன. கருவறை முழுவதும் பூக்களால் நிறைந்து விடுமாம். வண்ணவண்ண மலர்க்குவியல்களுக்கிடையே பகவானைக் காண்பது கண்கொள்ளாக்காட்சி.

இவ்வளவு சிறப்புப் பெற்ற அச்சன் கோவில் அரசனை சமயம் கிட்டும் போது சென்று தரிசித்து விட்டு வாருங்கள். 

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .





3 comments:

கோமதி அரசு said...

விஷம் தீண்டாப்பதி என்ற சிறப்பு கொண்டது. பாம்பு கடிபட்டு வருபவர்களுக்கு, நடு இரவானாலும், கோவில் நடை திறந்து சந்தனமும், தீர்த்தமும் வழங்கும் வழக்கம் இந்த ஆலயத்தில் உள்ளதாம். தீர்த்தம் தெளித்தவுடன் விஷம் நீங்கும் அதிசயம் நடைபெறும் தலம்,//

இறைவனின் கருணை மெய்சிலிர்க்க வைக்கிறது.

சுவாமியே சரணம் ஐயப்பா!

கோமதி அரசு said...

ஆச்சன் கோவில் அரசனை காண ஆவல்.
இறைவன் அருள்புரியவேண்டும்.

S.Muruganandam said...

அச்சன் கோவில் அரசர் தங்களுக்கு தரிசனம் தர வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.