Wednesday, December 7, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை - 64

பஞ்ச பிரயாகைகள் 

விஷ்ணு பிரயாகை 

விஷ்ணுப்பிரயாகை:  ஜோஷிர்மடத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் 1372 மீ உயரத்தில் இச்சங்கமம்  அமைந்துள்ளது. சதோபந்த ஏரியிலிருந்து  உற்பத்தியாகி சுதரா அருவியாக விழுந்து ஒடி வரும் அலக்நந்தா ஆறு  மானா கிராமத்தில் சரசுவதி நதியுடன்  கேசவப்பிரயாகையில் கூடி பத்ரிநாதரின் பாதங்களை கழுவிக்கொண்டு ஓடி வருவதால் விஷ்ணு கங்கை என்னும் நாமத்துடன், தவுலிகிரியிலிருந்து  பாய்ந்து வரும் தவுலி கங்காவுடன் சங்கமம் ஆகின்றாள். நாரத முனிவர் இக்கூடுதுறையில்  தவம் செய்து திருமாலின் தரிசனம் பெற்றார்தன் கரையில்  எண்கோண விஷ்ணு ஆலயம் உள்ளதுஇதை கட்டியவர் இந்தோர் அரசி அகல்யாபாய் ஆவார். விஷ்ணு குண்டம் மற்றும் காகபுஜண்டர் ஏரி அருகில் உள. விஷ்ணு பிரயாகை நீராடுபவர்கள் வைகுந்தம் அடைவார்கள் என்பது ஐதீகம்.


**************

நந்த பிரயாகை 


நந்தப்பிரயாகை : உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான நந்தாதேவியிலிருந்து ஓடி வரும் நந்தாகினியும், அலக்நந்தாவும் கூடும் சங்கமம் ஆகும். நந்தன் என்னும் மன்னன் யாகம்  செய்ததால் இவ்விடம் இப்பெயர் பெற்றது என்பர்.  மற்றொரு ஐதீகம் யாதவ ரத்தினம் நந்தகோபனும்-யசோதையும், வசுதேவரும்-தேவகியும் திருமால் தங்கள் புத்திரனாக வர வேண்டும் என்று வேண்ட,    ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்த்த என்று கோதை நாச்சியார்   பாடியது போல கிருட்டிணாவதாரத்தில் இவர்களுக்கு அருளினார். நந்தகோபன் தவம் செய்ததால் நந்தப்பிரயாகை ஆனது. கர்ணப்பிரயாகையில் இருந்து 22 கி.மீ தூரத்தில் 914 அடி உயரத்தில் அமைந்துள்ளது நந்தப்பிரயாகை. கோபாலருக்கு ஒரு ஆலயம் இவ்விடத்தில் உள்ளது. உரூப்குண்டம்  நடைப்பயணம் செல்பவர்களை இங்கு அதிகம்  காணலாம்.  


***************

கர்ணப்பிரயாகை 


கர்ணப்பிரயாகை: பிண்டாரி பனியாற்றிலிருந்து ஓடி வரும் பிண்டாரி நதியும் அலக்நந்தாவும் சங்கமம் ஆகும் இடம் கர்ணப்பிரயாகை. மஹாபாரதத்து கர்ணனின் பெயரால் இந்த் கூடுதுறை இப்பெயர் பெற்றது. தங்களது மூத்த சகோதரன் கொடை வள்ளல்  கர்ணனுக்கு பாண்டவர்கள் பிண்டதானம் செய்த தலம். தானத்தினால் பெயர் பெற்ற கர்ணனிடம் பாண்டவர்கள் கடைசி ஆசை என்னவென்று கேட்க, எங்கு இறுதி கர்மம் நடைபெறவில்லையோ அங்கு தனக்கு இறுதி காரியம் நடைபெறவேண்டும் என்று கூற, வ்வாறு ஒரு இடம் கிட்ட அர்ச்சுனன் பாணம் விட பிண்டாரி உற்பத்தியாகி வந்தாள்இதன் கரையில் கர்ணனுக்கு ஒரு சிறு கோயில் உள்ளது அதில் சுதை சிற்பமாக தேர் சக்கரத்தை தூக்கும் கோலத்தில்  கொடை வள்ளல் கர்ணன் அருள் பாலிக்கின்றான்.  போர்களத்தில்  கொடை பெறவந்த கண்ணன் உடன் அருள் பாலிக்கின்றார். மறு கரையில் கிருட்டிணருக்கும், சிவபெருமானுக்கும், உமாதேவிக்கும்  ஆலயங்கள் உள. கன்வ முனிவரின் ஆசிரமம் இங்கு இருந்திருக்கின்றது. துச்யந்தன் சகுந்தலை காதல் நாடகம் அரங்கேறியதும் இங்கே. அக்காதலையே காளிதாசன்  சாகுந்தலம்  என்னும் ஒரு  அற்புத காவியமாக இயற்றினார். விவேகானந்தர் இங்கு சில நாட்கள் தங்கியுள்ளார். இங்கிருந்து நைனிதால் மற்றும் இராணிகேத்திற்கு பாதை செல்கின்றது.

***********************


ருத்ரப்பிரயாகை 


ருத்ரப்பிரயாகை: கேதார் சிகரங்களிலிருந்து பாய்ந்து வரும் மந்தாங்கினியும், அலக்நந்தாவும் கூடும் கூடுதுறை ருத்ரப்பிரயாகையாகும். இசையில் தன்னை வெல்ல வந்த  நாரத முனிவருக்கு சிவபெருமான் ருத்ரராக காட்சி கொடுத்த தலம். ராகங்களையும் ராகினிகளையும் சிவபெருமான் யாத்த தலம். சரசுவதி தேவி நாரதருக்கு மகதி என்னும் வீணை அளித்த தலம்.   சதிதேவி யாக குண்டத்தில் ட்சன் கொடுத்த உடலை தியாகம் செய்தபின் மலையரசன் பொற்பாவையாக, மலைமகளாக, கௌரியாக மீண்டும் பிறப்பெடுத்த தலம். அன்னை பர்வதவர்த்தினி தவமிருந்து சிவபெருமானை தனது கணவனாக அடைந்த தலம். ருத்ரநாதருக்கு இங்கு ஒரு ஆலயம் உள்ளது. இங்கிருந்து ஒரு பாதை மந்தாங்கினியின் கரையோரம் கேதாரநாத்திற்கும், மற்றொரு பாதை அலக்நந்தாவின் கரையோரம் பத்ரிநாதத்திற்கும் செல்கின்றது


*****************


கங்கையன்னை 


தேவப்பிரயாகை: கோமுகத்திலிருந்து ஓடிவரும் பாகீரதியும்,  வசுதாராவில் துவங்கி நரநாராயணர் சிகரம் தாண்டி பத்ரிநாதரின் பாதம்  கழுவி மற்றும் தவுலி கங்கா, நந்தாங்கினி, பிண்டாரி,  மந்தாங்கினி,  ஆகிய  நதிகளுடன் இனைந்து ஓடிவரும் அலக்நந்தாவும்  சங்கமமாகி கங்கையாக ஓடும் புண்ணிய தலம் த்தேவப்பிரயாகை. தசரத சக்ரவர்த்தியும், பின்னர்  இராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் தீர இராமபிரானும் தவம் செய்த தலம் இத்தேவப்பிரயாகை.  எனவே இதன் கரையில் இரகுநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இத்தலம் பெரியாழ்வாரால் மங்கலாசாசனம் செய்யப்பெற்ற கண்டம் என்னும் கடிநகர் எனும் திவ்வியதேசம் ஆகும். இக்கூடுதுறை திருமாலவனின்  நாபிக்கமலம் என்பது ஐதீகம் எனவே திரிவேணி சங்கமத்திற்கு ஈடான இச்சங்கமத்தில் நீராடி  பிண்டப் பிரதானம் அளிப்பது மிகவும் சிறந்தது. தேவ சர்மா என்ற முனிவர் தவம் செய்து பெருமாள் தரிசனம் பெற்ற தலம் என்பதால் இத்தலம் தேவப்பிரயாகை ஆயிற்று.
  

கண்டம் என்னும் கடிநகர் 


பிராம்மி எழுத்துக்கள் 

ப்பிரயாகைகள் நமக்கு ஒரு பாடத்தை உணர்த்துகின்றன. முதல் பிரயாகையில் தவுலியும் அலக்நந்தாவும் சங்கமம்,  ஆனால் அதற்குப்பின் தவுலி இல்லை அலக்நந்தா மட்டுமே , அது போலவே இரண்டாவது சங்கமத்தில் நந்தாங்கினியும் அலக்நந்தாவும் இணைகின்றனர் அதற்குப்பின் நந்தாங்கினி இல்லை, மூன்றாவது பிரயாகைக்குப்பின் பிண்டாரி இல்லை, நான்காவது பிரயாகைக்குப்பின் மந்தாங்கினி இல்லை, ஐந்தாவது சங்கமத்திற்குப் பிறகு பாகீரதியும் இல்லை, அலக்நந்தாவும் இல்லை, கங்கையாக மாறுகின்றனர், திரிவேணி சங்கமத்தில் பச்சையான கங்கையும் கருமையான யமுனையும் கலந்து பழுப்பு வண்ண கங்கையாக பாய்கின்றது. இங்கு யமுனை தன் பெயரை இழக்கிறாள்.  இதுதான் புனிதர்கள் ஒருவருக்கொருவர் தன்னையேக் கொடுத்து தியாகம் செய்யும் பண்பு . இதை வேதம்
நாம ரூப குண தோஷ வர்ஜிதம்………
ப்ரம்ம த்த்வமஸி பாவ  ஆத்மனி எனக்கூறுகிறது.

இறுதியாக கடலில் கலந்த பின் கங்கையே இல்லை. அது போல சீவாத்மாக்களாகிய நாம் எண்ணற்ற பெயர் கொண்டாலும் அவையெல்லாம் இறுதியில் பரமாத்மாவுடன் இணையும் போது மறைந்து போகும், ஆகவே நான் என்னும் ஆங்காரமும் எனது என்னும் மமகாரமும் இல்லாமல் வாழ வேண்டும் அப்போது இச்ஜென்ம மரண சாகரத்திலிருந்து விடுபட்டு முக்தியடைய முடியும்  என்பதை ப்பிரயாகைகள் நமக்கு உணர்த்துகின்றன.

No comments: