Friday, November 25, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை - 61

ஜோஷிர்மட் 


சங்கரமடம்  (தற்போது  நரசிம்மர் சன்னதி)

புராணங்களின்படி ஜோஷிர்மட் கந்தமாதன பர்வதத்திற்கு நுழைவாயில். குளிர்காலத்தில் பத்ரிநாதர் ஆலயம் மூடப்படும் போது உற்சவர் இங்கு  ந்து தங்குகின்றார். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பிருதி திவ்விய  தேசம் இது.  தற்போது பெருமாள் சௌம்ய  ரசிம்ம மூர்த்தியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். பிரகலாதனுக்காக இவ்வாறு சாந் கோலத்தில் சேவை சாதிக்கின்றாராம். யோகேந்திரன்  பிரகலாதன் சதா சர்வ காலம் நம் வினைக்கு நஞ்சான  நாராயண மந்திரம் செபித்துக் கொண்டிருக்கும் தலம் இது. பத்ரிநாத யாத்திரை ஜோஷிர்மட் தரிசனத்தாலே முழுமையடைகின்றது என்பது ஐதீகம்.

இங்குள்ள ற்பகமரம் சுமார் 2400 வருடங்கள் பழமையானது. இதன் அடியிலுள்ள ஒரு குகையில் ஆதிசங்கரர் தவம் செய்து  ஞானம் பெற்றார், தனது முதல்  மடத்தை நிறுவினார் அம்மதம் உத்தராம்னாய மடம் என்றழைக்கப்படுகின்றது.. அதர்வண வேதத்தைப் பரப்ப நிறுவிய மடம் ஆகும்.  எனவே இவ்வூர் ஜோஷிர்மடமானது.

இவ்வூரில் ஆதிசங்கரர் அமர்ந்து தவம் செய்த 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்பகமரத்தையும், அவர் தங்கியிருந்த குகையையும், அகண்ட சோதியையும் அவர் வழிபட்ட லக்ஷ்மி நாராயணரையும், தரிசனம் செய்யலாம்

ஜோஷிர்மட்  இமயமலையின் பல தலங்களுக்கு  நுழைவாயில் ஆகும். மூன்று பக்கங்களிலும் திரிசூலி, பத்ரி, காமெட் ஆகிய  பனிச்சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. மேகம் இல்லாத நாட்களில் இப்பகுதியின் விண்ணளவு உயர்ந்து நிற்கும் நந்தாதேவி பனிச்சிகரத்தைக் காணலாம்.  பத்ரிநாத், ஹேமகுண்ட் சாஹிப் என்னும் சீக்கியர்களின் புனிதத்தலம், மலர் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களுக்கு இங்கிருந்து செல்லலாம்மேலும் திரிசூல், காமெட், நந்தாதேவி மலை சிகரங்களுக்கு மலையேறும் வீரர்களுக்கு ந்நகரம் ஆதார முகாம். அவுலி என்னும் பனி சறுக்கு விளையாட்டுத்தலமும் அருகிலமைந்துள்ளது.

இங்கிருந்து 11 கி.மீ தூரத்தில் தபோவனம் என்னும் பள்ளத்தாக்கில் பஞ்சபத்ரிகளில் ஒன்றான பவிஷ்யபத்ரி உள்ளது.  இக்கலிகாலத்தில் ஜோஷிர்மட் நரசிம்ம மூர்த்தியின் இடது திருக்கர  பருமன் குறைந்து கொண்டே வருகிறதாம் அது இவ்வாறு முழுதுமாக குறைந்து எப்போது உடைந்து விழுகின்றதோ அப்போது ஜய-விஜயர்களாகிய இரு மலைகள் இணைந்து தற்போது பத்ரிவனத்திற்கு  நாம் பயணம் செய்யும் பாதை அடைபடும் அதற்குப்பின் இப்பவிஷ்ய (எதிர்கால) பத்ரியில் நாம் பத்ரிநாதரை தரிசனம் செய்ய முடியும் என்பது ஐதீகம்.

ஆதிசங்கரர் மடத்திற்கு அருகில் முக்தியளிக்கும் நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளதுஇவர் சுயம்பு சாளக்கிராம மூர்த்தி,  ஆதிசங்கரர் ஆராதித்த இவர் இடது காலை மடக்கி, வலது கால் மண்டியிட்டது போல் இருக்க, இடது திருக்கரத்தை கீழே ஊன்றி  வலது காலின் மேல் சக்கரம் தாங்கிய வலத்திருகரத்தை வைத்து எழிலாக  சாந்த  கோலத்தில் சேவை சாதிக்கின்றார். காலை 6:30 மணிக்கு தினமும் திருமஞ்சனம் டைபெறுகின்றது. அப்போது பெருமாளின் முழுயுருவையும் சேவிக்கலாம்.

திருமஞ்சனம் சேவிக்கும் பாக்கியம் அடியோங்களுக்கு கிட்டியது. தேவி மஹாத்மியம், விஷ்ணு சகஸ்ரநாம, ஸ்ரீசூக்தம்,  லக்ஷ்மிரசிம்ம கராவலம்பம் முதலிய  சுலோகங்களை பாராயணம்  செய்து கொண்டே பட்டர் திருமஞ்சனம் செய்கின்றார். முதலில் அலங்காரம் களைத்து பெருமாளை உண்மையான கோலத்தில் அனைவருக்கும் சேவை செய்து வைக்கின்றார். பின்னர் அவருக்கான திருமஞ்சன பீடத்தில் வைத்து பால், குங்குமப்பூ சாறு, சந்தனம் ஆகியவற்றால் மூல மூர்த்தி, திருப்பாதுகைகள்,  உக்ர ரசிம்மர், தவழும் கண்ணன், அனுமன், வேணு கோபாலர், விஷ்ணு ஆகிய உற்சவர் சிலைகளுக்கும் திருமஞ்சனம் செய்து .பின்னர் அலங்காரம் செய்து ஆரத்தி காட்டுகின்றார். இச்சமயத்தில் ஊன்றிய இடக்கை மிகவும் மெலிதாக இருப்பதை சேவிக்க முடியும். மற்ற சமயங்களில் அலங்காரத்துடன் முகச்சேவை மட்டுமே கிட்டுகின்றது.  பெருமாளுடன் குபேரன், கருடன், பத்ரிநாதர், கண்ணன், சீதா லக்ஷ்மணன் சகித இராமர், இராதாகிருஷ்ணர், உத்தவர், கிராம தேவதை சண்டி ஆகியோர் பஞ்சாயதான முறையில்  சேவை சாதிக்கின்றனர். .

மறங்கொளாளரியுருவெனவெருவர ஒருவனது அகல்மார்வம்
திறந்து வானவர் மணிமுடிபணிதர இருந்த நலிமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளைமருப்பிடந்திடக் கிடந்தருகெரிவிசும்
பிறங்கு மாமணியருவியொடிழிதரு பிருதிசென்றடை நெஞ்சே!
என்ற திருமங்கையாழ்வாரின் திருப்பிருதி பாசுரம் சேவித்தோம். பெருமாளுக்கு எதிரில் ஆதி சங்கரரும், வேத வியாசரும் ஆராதித்த பெரிய பிராட்டியார் சேவை சாதிக்கின்றார்.

அருகிலேயே  வாசுதேவர்  ஆலய வளாகம் உள்ளது. இக்கோயில் வளாகம் பஞ்சாயதன முறையில் அமைந்துள்ளது. நடுநாயமாக வாசுதேவராக திருமால் நின்றகோலத்தில் சேவை சாதிக்கின்றார் உடன் அண்ணன் பலராமனும் சேவை சாதிக்கின்றார்,  நான்கு திசைகளில்  அட்டபு கணேசராக விநாயகர், கௌரி சங்கரராக  சிவன் (சோதீசுவர மஹாதேவர்), காளியாக  அம்பாள் மற்றும் சூரியன், பைரவர் சன்னதிகள் அமைந்துள்ளன. இவ்வாறு ஐந்து தெய்வங்களையும் வழிபடுவது பஞ்சாயதன முறை ஆகும்இக்கோயில் வளாகத்தின் தெய்வ மூர்த்தங்கள் அருமையான கலை நயத்துடன் அமைந்துள்ளன. அனைத்து தெய்வ மூர்த்தங்களும் தத்ரூபமாக ஆடை ஆபரணங்களுடன் அமைத்த சிற்பிகளின் கைவண்ணத்தை வியக்காமல் இருக்க முடியாது. மேலும் இக்கோயில் வளாகத்தில் நவதுர்க்கைக்கு தனி சன்னதி உள்ளது. ஷைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்தரகாந்தாகூச்மாண்டா, கந்த மாதாகாத்யாயனிகாலராத்திரி, மஹாகௌரி, சித்திதாத்ரி என்று மலைமகள் அன்னை பார்வதியை வழிபடுவது நவதுர்க்கை வழிபாடு ஆகும். வடநாட்டில்  நவராத்திரியின் போது நவதுர்கா வழிபாடு சிறப்பு.  அருமையான வெண்கலத்தால் ஆன கருடன் சிலை வாசுதேவருக்கு எதிரில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அனுமனுக்கும், சிவபெருமானுக்கும்  தனிச் சன்னதிகள்  உள. இரவு நேரத்தில் மின் விளக்குகளின் ஒளியில் மிளிர்கின்றது இவ்வாலய வளாகம். 

2015ல் சென்றபோது பழைய  ஆலயம் இடிக்கப்பட்டு அவ்விடத்தில் புது ஆலயம் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்தோம். அப்போது பெருமாளையும் தாயாரையும் அருகிலிருந்த ஆதிசங்கரரின் மடத்தில் பாலாலயத்தில் நிறுவி இருந்தனர். மறுவருடம் கற்றளி வேலைகள் முடிந்திருந்தன மேலே உள்ள மரவேலைப்பாடுகள் பாக்கி இருந்தன மறுமுறை செல்லும் போது புது ஆலயத்தில் பெருமாளை சேவிக்க இயலும் என்று எண்ணுகிறேன். 
  புது ஆலயம் 
 ஆதி சங்கரர் சன்னதி யானை மலை( ஹாத்தி பஹாட்)  - ஜெயன்

குதிரை மலை (கோடா பஹாட்) - விஜயன் திருப்பிருதி திவ்யதேசத்தைப் பற்றிய குறிப்பு

திருப்பிருதி திவ்ய தேசம்

பெருமாள்: பரமபுருடன், புஜங்க சயனம், கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம்.
தாயார்: பரிமளவல்லி நாச்சியார்.
தீர்த்தம் : இந்திர, கோவர்த்தன தீர்த்தங்கள். மானசரோவர சரஸ்.
விமானம் : கோவர்த்தன விமானம்
காட்சி நல்கியது: பார்வதி தேவிக்கு.
பாசுரம்: திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் பாடியபடி  அடர்ந்த காடுகள் வனவிலங்குகள் புஜங்கசயனப் பெருமாள் ஆலயம் இப்போது இங்கு இல்லை. எனவே ஒரு சாரார் நல்+இமயத்துள் என்று ஆழ்வார் பாடியுள்ளதால் இத்திவ்விய தேசம் மானசரோவர் தடாகமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். பெருமாள் அருகே உள்ள திருக்கயிலாய மலையில் பார்வதிதேவிக்கு திருக்காட்சி நல்கியதும் இதை உறுதிப்படுத்துகின்றது என்பது அவர்கள் கருத்து. 

ஒரு சிலர் வாசுதேவர் ஆலயமே ஆழ்வார் பாடிய ஆலயம் பிற்காலத்தில் இவ்வாறு கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். ஒரு சிலர் அருகில் உள்ள நந்தப்பிரயாகையை  திருப்பிருதி திவ்விய தேசமாக  கருதுகின்றனர். நரசிம்மரின் நிஜரூபமும், திருமஞ்சனமும் சேவித்த மகிழ்ச்சியில் பத்ரிநாத் புறப்பட்டோம். 

                                                            யாத்திரை தொடரும் . . . . . . .

2 comments:

கோமதி அரசு said...

ஜோஷிர்மட் நாங்களும் போய் இருந்தோம். நான்கு வருடங்களுக்கு முன்.
மீண்டும் உங்கள் பதிவின் மூலம் தரிசனம் செய்தேன். நன்றி.
படங்கள் எல்லாம் அழகு.

Muruganandam Subramanian said...

ஒவ்வொரு தடவை செல்லும் போதும் ஒவ்வொரு புது அனுபவம் கிட்டுகின்றது. அதற்காகவே மறுபடியும் மறுபடியும் செல்ல தூண்டுகின்றது.