Thursday, November 24, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை - 60

தியான  பத்ரிநாதர்  தரிசனம் 

பஞ்ச பத்ரிகள்:  விஷால்பத்ரி, தவிர இன்னும் சில தலங்களில் பெருமாள் பத்ரிநாதராக சேவை சாதிக்கின்றார் என்பது ஐதீகம். வ்விஷால்பத்ரியுடன்  யோகபத்ரி, பவிஷ்யபத்ரி, விருத்தபத்ரி, ஆதிபத்ரி ஆகிய தலங்கள் பஞ்ச பத்ரிகள் என்றழைக்கப்படுகின்றன.

 ஒரு சாரார் ஆதிபத்ரியல்லாமல் ஊர்கம் பள்ளத்தாக்கில் உள்ள தியானபத்ரி  பஞ்சபத்ரி என்று கருதுகின்றனர். வாருங்கள் பஞ்ச பத்ரிகளின் சிறப்பைப் பற்றி முதலில் காணலாம்.

கல்பகங்கா


விஷால்பத்ரி: பத்ரிவிஷால் எனப்படும் நர-நாராயண மலை சிகரங்களுக்கிடையில் அலக்நந்தாவின் கரையில் அமைந்துள்ள இத்தலம் பத்ரிநாதரின் பிரதானத்தலமாகும், பூசை நடைபெறும் போது பக்தர்கள் ஜெய் பத்ரி விஷால் கீ என்று முழக்கம் எழுப்புகின்றனர்.  பஞ்சபத்ரி தலங்களுள் முதன்மையானது இது வரை நாம் விரிவாகப் பார்த்த பத்ரிவிஷால் ஆகும்.

மலை வளம் 

நிலச்சரிவு 


 யோக-தியான் பத்ரி : ஜோஷிர்மட் - பத்ரிநாத்  பேருந்து  மார்க்கத்தில், அலக்நந்தா நதிக்கரையில்  1920  மீ உயரத்தில் பாண்டுகேசுவரம் என்னும்   புண்ய தலத்தில், பாண்டுவினால் நிர்மாணிக்கப்பட்ட யோக தியான லயம் அமைந்துள்ளதுபாண்டு மன்னர் தமது இறுதி காலத்தை இங்கே கழித்தார். பாண்டவர்களும் தமது காலம் முடிந்த பிறகு இத்தலத்தில் இராச்சியத்தை ரீசித்திற்கு ஒப்படைத்து விட்டு சுவர்க்காரோணி எனப்படும் சொர்க்கத்திற்கான பயணத்தை இங்கிருந்து  துவங்கினர்.      கோயில் கருவறையில் யோக தியானத்தில் பகவான் தாமரை புஷ்பத்தில் அமர்ந்த நிலையில், அழகாக தரிசனம் அளிக்கிறார். இத்தலம் பத்ரிநாத்திலிருந்து 24 கி.மீ தூரத்திலும், ஜோஷிர்மடத்திலிருந்து 20  கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

மழலைகள் 

பவிஷ்ய பத்ரி (வருங்கால பத்ரி): ஜோஷிர்மட் - மலாரி பேருந்து தடத்தில் 15கி.மீ. தொலைவில் தபோவன் உள்ளது. இங்கிருந்து 4கி.மீ. கால்நடையாகச் சென்று சுபாயீ கிராமத்தை அடையலாம். இங்கு சமுத்திர மட்டத்திலிருந்து 9,000அடி உயரத்தில் பவிஷ்ய பத்ரி ஆலயம் உள்ளது. அகத்தியமுனிவர் இங்கு தவம் செய்ததாக புராண வரலாறு கூறுகிறது. இவருக்கு இங்கு திருமால் தரிசனம் அளித்தார். அது சமயம் அவரிடம் கலியுகத்தில் தான் இங்கு கோயில் கொள்ளப்போவதாகக் கூறினார் என்று நம்பப்படுகிறதுபவிஷ்ய என்றால் எதிர்காலம் அதாவது வருங்காலம் என்று பொருள் கொள்ளலாம். பத்ரி விஷால் செல்லும் போது நாம்   செய-வியர்கள் என்ற இரு மலைகளுக்கு நடுவில் அலக்நந்தாவை கடந்து செல்கின்றோம்ஜோஷிர்மட் நரசிங்க மூர்த்தியின் கை தேய்ந்து விழும் போது  ஜெய-விஜய மலைகள் (குதிரை மற்றும் யானை மலைகள்,  பார்ப்பதற்கு இவ்வாறு தோற்றம் அளிப்பதால் இப்பெயர்) இரண்டும் இணைந்து பத்ரி செல்லும் பாதை அடைபட்டு விடும் அப்போது ப்பவிஷ்யபத்ரியில் பெருமாளை தரிசனம் செய்ய முடியும். சுபாயீ கிராமத்தில் உள்ள கோயிலில் உள்ள பவிஷ்யபத்ரிநாதரை ஆதிசங்கராச்சாரியார் நிறுவி வழிபாடு செய்தாராம்.

மலர்கள் 


விருத்த பத்ரி:  ஜோஷிர்மட் - பீபல்கோட் பேருந்து சாலையில் ஜோஷிர்மடத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் அணீமடம் என்று கூறப்படும் புராதனமான  தலம் உள்ளது. அலக்நந்தாவின் அழகான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இத்தலம், விருத்த என்றால் வயதான அல்லது பழைய என்று பொருள்  இது நாரத முனிவருக்கு மிகவும் விருப்பமான இடம். இங்கு நாரதர் தவம் செய்தார் என்பதும் அவருக்கு அங்கு மாலவன் முதியவராக  தரிசனம் கொடுத்ததும் புராண வரலாறு. நாரதருக்கு இங்கு அணிமா சக்தி சித்தியாகியதால் இவ்விடம் அணீமட் என்று அழைக்கப்படுகின்றது. நாரதர் இக்கோவிலுக்கு அடிகோலினார் என்றும், ஆதிசங்கராசாரியாரும் இங்கு பூசைகள் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

கல்பேஸ்வரத்திலிருந்து ஊர்கம் திரும்பி வருகின்றோம் 

நெல் அறுவடை 

தியான பத்ரி :  பீபல்கோட் - ஜோஷிர்மட் பேருந்து  மார்க்கத்தில் ஹெலாங் கிராமத்திலிருந்து வாகனம் மூலம்  ஊர்கம்  கிராமத்திற்கு  சிறிது தூரத்திற்கு முன் சென்று பின்னர் மூன்று கி.மீ தூரம் நடைப்பயணம் செய்து இக்கிராமத்தை அடையலாம்.  ஊர்வா ரிஷியின் தபோபூமி து. இங்குள்ள ஆலயத்தில்  சதுர் புங்களுடன் பத்ரிநாராயணன் தியானத்தில் அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.

தியான் பத்ரி விமானம் 

ஆதி பத்ரி:  சிலர் தியான பத்ரி - யோக பத்ரி இரண்டையும் ஒரே தலமாகக் கூறுகிறார்கள். இவர்கள் ஆதிபத்ரி என்ற ஒரு தலத்தை பஞ்சபத்ரிகளில் ஒன்று என்று கருதுகின்றனர். கர்ணப் பிரயாகையிலிருந்து ராணிகேத்து பேருந்து மார்க்கத்தில் இவ்வாலய வளாகம் உள்ளது. மொத்தம் 16 ஆலயங்கள் முதலில் இருந்தனவாம். ஒரு சமயம் ஏற்பட்ட நில நடுக்கத்தில் மூன்று கோயில்கள் சேதமடைந்து    விட்டன. இதன் நடுநாயகமாக ஆதி பத்ரிநாதர் ஆலயம் அமைந்துள்ளது. சதுர்புய நின்ற கோல சாளக்கிரம மூர்த்தியாக அருள் பாலிக்கின்றார் இங்கு  பெருமாள். பத்ரிநாதரை தரிசனம் செய்ய செல்லும் பொது நாரதர்    முதன் முதலாக பிரதிஷ்டை செய்து வழிபட்ட மூர்த்தி இவர்.

தியான் பத்ரி ஆலயம் 

கருட பகவான் 

திருசுற்றிலுள்ள சிவன் சன்னதி 

சிவபெருமான் 

பஞ்சமுக ஆஞ்சநேயர் 
ஊர்கம் கிராமம் திரும்பி வந்து தியானபத்ரிநாதரை சேவித்தோம். கட்யூரி அமைப்பில் ஒரு விமானத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. ஒரு கருவறை மற்றும் ஒரு மண்டபம். இரு வாயில்கள் உள. திருச்சுற்றில் பஞ்சமுக அனுமன் மற்றும் சிவபெருமானுக்கு தனி சன்னதி உள்ளது. கருவறையில் பஞ்சாயத் முறையில் தியான பத்ரிநாதர். சதுர்புஜராக சங்கு சக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.  குபேரன், உத்தவர், நரநாரயணர்கள்,  கிராமதேவதை உடன் உள்ளனர். சாளக்கிராமங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.  எதிரே மண்டபத்தின் உள்ளே  கருடன் சேவை சாதிக்கின்றான்.  கர்ப்பகிரகத்தில் பஞ்சபாண்டவர்கள் கல் முகங்கள் உள. வருடத்தில் ஒரு நாள் பெருவிழாவின்(மேளா) போது இம்முகமூடி அணிந்து நடனம் ஆடுவார்களாம்.

தூரத்தில் இருந்து தியான் பத்ரி 

மின்கலத்தை தூக்கிச் செல்கின்றனர் 

கோமதி அம்மா அவர்கள் தங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். இம்மக்கள் எல்லா பொருட்களையும் தூக்கிக்கொண்டு செல்லவேண்டும் என்று, அது போல ஒரு காட்சியைக் கண்டோம், Generatorஐ மிகவும் சிரமத்துடன் தூக்கிச்செல்கின்றேன். 

ஊர்கம்மிலிருந்து  திரும்பி நடைப்பயணம் 

சென்ற தடவை பஞ்சபத்ரி யாத்திரை சென்ற போது இத்தலத்தை தரிசிக்க இயலவில்லை. தியான பத்ரிநாதரை தரிசித்தால் விடுபட்ட ஒரு   ஞ்சபத்ரிநாதரை சேவிக்கும் பாக்கியம் இந்த யாத்திரையின் போது கிட்டியது. இவ்வாறு பஞ்சபத்ரிநாத யாத்திரை பூர்ணமடைந்தது.   மேலும் பஞ்சகேதாரங்களில் இரண்டாவது தலத்தையும் தரிசித்த மகிழ்ச்சியுடன் ஜோஷிர்மட் வந்து தங்கினோம்.
                                                          
                                                             யாத்திரை தொடரும் . . . . . . .

1 comment:

கோமதி அரசு said...

பஞ்சபத்ரிநாத யாத்திரை நானும் உடன் வந்து தரிசனம் செய்தேன்.’அங்குள்ள மலர்கள், மலர் போன்ற குழந்தைகள், சிறுபெண்கள், அங்கு முதுகில் சுமந்து செல்லும் மூங்கில் கூடையுடன் பயண அன்பர் படமும் அருமை.
என் பெயரையும் பதிவில் குறிப்பிட்டதற்கு நன்றி.
ஒற்றையடி பாதைபோல் நீண்டு செல்லும் பாதையில் இயந்திரத்தை தூக்கி செல்லும் அன்பர்கள் முகம் நீங்கள் படம் எடுப்பதால் மலர்ந்து இருக்கிறது, பொருளின் கனத்தையும் மீறி.

பஞ்சகேதரம் பார்க்க தொடர்கிறேன்.