Sunday, October 9, 2016

நவராத்திரி அம்மன் தரிசனம் -8

சொர்ணாம்பாள் மீனாக்ஷி
அலங்காரம் மஹா அஷ்டமி என்றும் துர்க்காஷ்டமி என்றும் அழைக்கப்படும் எட்டாவது நாளான இன்று அம்மையை நாம் மகிஷனை சம்ஹாரம் செய்த மகிஷாசுரமர்த்தினியாக வழிபடுகின்றோம். இன்று வீட்டில் அன்னையை மகிஷாசுரமர்த்தினியாக அலங்கரித்து வழிபட காரிய வெற்றியும், சகல வியாபார அனுகூலங்களும் உண்டாகும். இன்று விரதம் இருப்பது மிகவும் உத்தமமானது.

ஸர்வ ஸ்வரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமன்விதே!
பயேப்யஸ் -த்ராஹி-நோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே!

சமஸ்த சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும், எல்லாவற்றிக்கும் ஈஸ்வரியும், ஸமஸ்த சக்திகளும் கூடியவளுமான ஏ தேவி! துர்கே! எங்களை பலவித பயங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ! துர்க்கா தேவி உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்

                                                                *****************
அன்னைக்கு மிகவும் உகந்த மஹா அஷ்டமிநாளான நவராத்திரியின் எட்டாம் நாள் அன்னையை ஒன்பது வயது குழந்தையாக பாவித்து துர்க்கா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் பயம் நீங்கும் . இன்றைய ஸ்லோகம்

துர்க்காத்ராபதி பக்தம்யாஸ தா துர்க்கார்த்த நாயினீ
 துர்ஜுஷ்யாஸர்வதேவானாம் தாம் துர்க்காம் பூஜயாம்யஹம் || 


(துர்க்கதியைப் போக்குபவளாய்தேவர்களாலும் அறிய முடியாதவளாய் பக்தர்களைக் 
காப்பவளாய் எந்த சக்தி விளங்குகிறதோ அந்த துர்கா தேவியாகிய சக்தியை வணங்குகிறேன்.) 
*************

மஹா கௌரி துர்க்கா

(எல்லோருக்கும் அருளும் வண்ணம் தலையை சாய்த்து அன்னை ஒயிலாக தரிசனம் தரும் அழகை என்னவென்று சொல்ல)


நவராத்திரியின் எட்டாம் நாள் நவதுர்கைகளில் அன்னையை வெள்ளை ரிஷபத்தில் மேலேறி பவனி வரும் மஹா கௌரியாக வழிபடுகின்றோம்.

தூய உள்ளம், பொன்னிற மேனி , வெண்பட்டு ஆடை, ஜொலி ஜொலிக்கும் தங்க நகைகளோடு காட்சி தருபவள் மகா கௌரி. காளையை வாகனமாகக் கொண்டு உடுக்கை சூலத்தோடு காட்சி கொடுக்கும் மகாகௌரியின் மேனி காட்டில் சிவபெருமானை மணக்க தவமிருந்த போது கருத்தது. சிவபெருமான் கௌரியின் மேனியை கங்கையால் சுத்தம் செய்ததாகவும், மீண்டும் மகாகௌரி பொன்னிற மேனியைப் பெற்றதாகவும் கதைகள் சொல்லுகின்றன.

பக்தர்களின் குறைகள் தீர்த்து வைக்கும் மகாகௌரி என்றென்றும் சந்தோசத்தை அள்ளித் தருகிறாள். மனநலம் பாதிக்கப் பட்டோரும், உடல்நலம் பாதிக்கப் பட்டோரும் வணங்கக் கூடிய தெய்வம் இவள். இவளை வணங்கினால் சந்திரனால் ஏற்படும் மனசஞ்சலங்கள் அகன்று அறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கும். சந்திரனைப் போன்ற வெண்மை நிறத்தவளாக வணங்கப்படுகின்றாள் மஹா கௌரி. 16 வயது கன்னிகையாக சிவபெருமானை மணப்பதற்கு முன்பான பருவம் இது. மஹா கௌரியை தூயவளாக சிவந்த வர்ணத்தவளாக வழிபடுகின்றோம்.


ஸ்வேத வ்ரூக்ஷே ஸமாரூடா ஸ்வேதாம்பரதராஸுசி |
மஹாகௌரி சுபம் த்த்யாத் மஹாதேவ ப்ரமோத்தா ||

(வெள்ளை ரிஷபத்தில் ஏறி தூய வெள்ளை பட்டாடை உடுத்தி தூயவளாகவும், சிவபெருமானுக்கு எப்போதும் ஆனந்தம் அளிப்பவளுமான மஹா கௌரி துர்க்கா அடியேனுக்கு எல்லா மங்களங்களையும் அருளட்டும்.)

****************

சென்னை காளி  கோவில்  துர்கா பூஜை 


மலையன்னை பார்வதி நவராத்திரி சமயத்தில்  திருக்கயிலாயத்தில் இருந்து பூலோகத்திற்கு தாய் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். எனவே திருக்கயிலாயக் காட்சி. 


ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு Themeல் கொலு அமைக்கின்ற்னர். இந்த   வருடம்  கொலுவின் நாயகர் விநாயகர். 
பிள்ளையார்க் கோலம்

***************

ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 

ஏதென்று சொல்லுவேனானாலுமம்மம்மா என் கொடுமை யெங்கு மில்லைஇல்லறம் துறவறம் இரண்டிற்கும் ஆகாமல் யாதினுங்கடைய னாகித்

தீதென்றேசெய்கைகளனைத்தையும் செய்து வெஞ்சினமழுக் காறவாவாம்சிக்கினுட்சிக்கி வறுமைக் குழியில் வீழ்ந்து நற்செயலுக்கயலுமாகிப்

போதென்று மூன்றிலொரு போதேனு முன்னடியர் பொன்னடிக் காட்செய்திடாப் புன்மையே னொருகாலம் நன்மை செய்துய்வனோ பொன்பூத்த வெள்ளி மலையில்

மீதென்று உரைபவனிடத்தில் வளரமுதமே விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க் குழல்வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (8)

பொருள்: இல்லறம் துறவறம் இரண்டிலுமே தோற்றுப் போய் திரியும் கொடுமையை என்னவென்று சொல்லுவேன் அம்மா , நற்செயல்களையெல்லாம் விடுத்து , தீச்செயல்களை செய்து கொண்டு, கடுங்கோபம், பொறாமை, ஆசை என்னும் குணங்களால் கட்டுண்டு வறியனாக் உழலும் நாயேன், மூன்று சந்திகளில் ஒரு சந்தியிலாவது உன் அடியார்களின் திருவடிகளை அண்டாத இழியேன் நன்மை  செய்து உய்வேனோ அம்மா கற்பகவல்லியே! வெள்ளிப் பனி மலையாம் திருக்கயிலாயத்தில் உறைகின்ற சிவபெருமானின் இடப்பாகம்  கொண்ட  அமுதானவளேசோலைகள் நிறைந்த  திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளேதாமரை மலர் பதத்தாளேபரிசுத்தமானவளே! கற்பகவல்லியே!   


முந்தைய பதிவு                                                                                                                                  அடுத்த பதிவு   


                                                                                                                                               அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

No comments: