Saturday, October 8, 2016

நவராத்திரி அம்மன் தரிசனம் -6

இன்று சஷ்டியன்று தான் வங்காளத்திலே மஹா கைலாசத்திலிருந்து, பூலோகத்திற்கு துர்க்கா தேவி இறங்கி வந்து அருள் பாலிக்கும் துர்க்கா பூஜை தொடங்குகின்றது.

***********************


கருமாரி திரிபுரசுந்தரி
சாமுண்டா அலங்காரம்


நவராத்திரியின் ஆறாம் நாள் அன்னையை, அங்காள ஈஸ்வரியை, ஸ்ரீ வித்யா பீஜாக்ஷர ரூபிணியாக சாம்பரி என்ற பெயரில் வழிபடுகின்றோம்.
*************

புலியூர் சொர்ணாம்பிகை 
சுவாசினி கோலம் 


நவராத்திரியின் ஆறாம் நாள் அன்னையை ஏழு வயது குழந்தையாக பாவித்து சண்டிகா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் துன்பம் நீங்கும். இன்றைய ஸ்லோகம்

சண்டிகாம் சண்ட ரூபாஞ்ச சண்டமுண்ட விநாசினீம் தாம்
சண்ட பாபஹரிணீம் சண்டிகாம் பூஜயாம்யஹம் ||

(சண்ட முண்டர்களை அழித்து மகா பாதகங்களை எந்த சக்தி நிவர்த்தி செய்கிறதோ அந்த சண்டிகையாகிய சக்தியை வணங்குகிறேன்.) 

*******************





காத்யாயினி துர்க்கா

நவராத்திரியின் ஆறாம் நாள் அன்னை நவதுர்கைகளில் அன்னையை காத்யாயன முனிவரின் தவத்திற்கு இணங்கி அவரின் மகளாக அவதரித்த காத்யாயினியாக வழிபடுகின்றோம். அன்னை மும்மூர்த்திகள் மற்றும் சகல தேவர்களின் காந்தியால் உருவானாள். கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் மகிழும்படியாக கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள்.

சந்த்ர ஹாஸோஜ்வலகரா சார்துல வர வாஹநா |
காத்யாயநீ சுபம் தத்யாத் தேவீ தாநவ காதிநீ ||

(திருக்கரத்தில் சந்திரஹாச வாளை ஏந்தி சிம்மவாகனத்தில் பவனி வந்து தேவர்களைக் காக்கும் காத்யாயினி அடியேனுக்கு எல்லா சுபங்களையும் வழங்கட்டும்.)

*****************************


பிரஹத் சுந்தர குஜாம்பாள்
கௌமாரி அலங்காரம் 


ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 

கமலனை அழைத்து எனது பழவினைகள் யாவையும் கட்டறுத்தின்று முதலாய், காலணூகாமலொரு பேய்கள் தொடராமல் வெங்கலி வந்தடுத்திடாமல்

நமது கொத்தடியனென்றெழுதித் திருத்தென்றி தாளட்டி பண்ணூவானோ, நமனுமதி கெட்டு வந்தணுகுவானோ, பிணிகள் நாடுமோ, கலி அண்டுமோ,

இமையளவில் அணுவை மலையாக்குவாய் அணுவாக்குவாய் மலைதனை இமைப்பில் அணுவாக்கவல்லாய், என்னை ரக்ஷிப்பதொரு பாரமோ, சும்மா இருப்பது அழகல்லவம்மா,

விமல சற்குருபரனிடத்தினில் வளரமுதமே, விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க் குழல்வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (6)

பொருள்: கமல மலரில் வீற்றிருக்கும் பிரம்மதேவனை அழைத்து என்னுடைய பழைய வினைகள் எல்லாவற்றையும் அழித்து இன்று   முதல் யமபயம் இல்லாமல், ஆசை என்னும் பேய்கள் தொடராமல், கலியின் துன்பம் அணுகாமல் என்னுடைய  அடியவன் இவன்,  எனது கொத்தடிமை என்று   எழுதி முதலில் எழுதிய எழுத்தை மற்றுவானோ? அதற்குப்பின் எமன் என்னை அணுகுவானோ? பிணிகள் என்னை பற்றாது, கலியின் கொடுமையும் குறையும்.  கண் சிமிட்டும்   நேரத்தில் அணுவை மலையாகவும், மலையை அணுவாகவும் மாற்றவல்ல அம்மா கற்பகவல்லியே! என்னை பாதுகாப்பது உனக்கு ஒரு பாராமா? ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பது உனக்கு அழகல்ல அம்மா இன்றே அருள் புரிவாய். தூய சத்குருவான  சிவபெருமானிடத்தில் இடப்பாகம் கொண்ட  அமுதானவளே! சோலைகள் நிறைந்த  திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே! தாமரை மலர் பதத்தாளே!  பரிசுத்தமானவளே!  கற்பகவல்லியே!   


முந்தைய பதிவு                                                                                                                                  அடுத்த பதிவு   




                                                                                                                                                அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

No comments: