Friday, October 7, 2016

நவராத்திரி அம்மன் தரிசனம் -5

வெள்ளீச்சுரம் காமாட்சியம்மன் 
மஹா கௌரியாக காமதேனு வாகன கொலு 


நவராத்திரியின் ஐந்தாம் நாள் நாம் அம்பிகையை மாத்ருகா வர்ண ரூபிணியாக வணங்குகின்றோம். இவ்வாறூ சதாசக்ஷி என்று அன்னை ஆதி பரா சக்தியை ஆராதிக்க பொருளாதார துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம்.

**************************


நவராத்திரியின் ஐந்தாம் நாள் அன்னையை ஆறு வயது குழந்தையாக பாவித்து காளிகா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் துன்பம் நீங்கும். இன்றைய ஸ்லோகம்

காளீகா லயதே ஸர்வம் ப்ரஹ்மாண்டம் ஸ சராசரம்

கல்பார்ந்தே ஸமயே யாதாம் காளீகாம்யஹம் ||

(அசையும் பொருள் அசையாப் பொருள் எல்லாவற்றையும் பிரளய காலத்தில் எந்த சக்தி சம்ஹாரம் செய்கிறதோ அந்தக் காளியாகிய சக்தியை வணங்குகிறேன்.)

*******************





நவராத்திரியின் ஐந்தாம் நாள் அன்னை நவதுர்கைகளில், அழகன் முருகனின் அன்னையாக ஸ்கந்தமாதாவாக வணங்கப்படுகிறாள். முறையற்ற தக்ஷனின் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் அனைவரும் சூரபத்மனால் துன்புற்றனர். அந்த அசுர சக்தியை அழிக்க ஒரு தலைமகன் தோன்ற வேண்டியதால் சிவ பார்வதி திருமணம் நடந்தது. முருகனும் தோன்றினான்.

ஸ்கந்தமாதா அக்னி ஸ்வரூபமாக இருந்து உலகை காக்கின்றாள் . சிம்ம வாகனத்தில் தாமரையில் பத்மாசனமீட்டு அமர்ந்து ஒரு கரத்தில் ஸ்கந்தனை ஏந்திய வண்ணம், இருகரங்களில் தாமரையுடன், நான்காவது அருள் பொழியும் கரத்தோடு காட்சி தரும் ஸ்கந்தமாதாதேவி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் நல்குகிறாள் .

சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட போது தனது தளிரன்ன கரங்களினால் அவரது கண்டத்தை தடவி விடம் அங்கேயே தங்கச் செய்தவள் ஸ்கந்தமாதா துர்கா. அன்னை மஞ்சள் வர்ணத்தவளாக வணங்கப்படுகின்றாள். அம்பாளின் ஸ்லோகம்

ஸிம்ஹாஸநகதா நித்யம் பத்மாஞ்சிதகரத்வயா |
சுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கந்த மாதா யசஸ்விநீ ||

(பொருள்: சிம்மாசனத்தில் அமர்ந்து தனது கரங்களில் தாமரை மலரை ஏந்தியுள்ள ஸ்கந்தனின் அன்னையான ஸ்கந்தமாதா துர்கா அடியேனுக்கு எல்லா சுபங்களையும் வழங்கட்டும்.)


******************

சொர்ணாம்பாள் கன்யாகுமரியாக கொலு



****************

ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 

நடத்தையிலடக்கமும் இணக்கமும் வணக்கமுறு நற்குணமும் நற்செய்கையும் நலந்தரும் கல்வியும் செல்வமும் அதற்கான நல்லோரிடத்திலுறவும்

திடத்து மனமும் பொறுமையும் திறமையும் தருமசிந்தனையும் அதிநுட்பமும், தீனர்களிடத்தில் விச்வாஸமும், என்னும் அவர் தீப்பசி தணிக்க நினைவும்,

கடக்க அரிதான ஜனனக்கடல் கடந்து கதிகாண மெய்ஞானமோனக் கப்பலுந்தந்துதவி செய்து ரக்ஷித்துக் கடைத்தேற அருள் புரிகுவாய்

விடக்கடுமிடற்றினன் இடத்தில் வளரமுதமே, விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (4)

பொருள்: அடக்கமான குணம், மற்றாறொரொடு இணங்கி வாழும் குணம், எல்லாரும் வணங்கத்தக்க நற்குணம், நல்ல செய்கைகள், கல்வி, செல்வம் ஆகியவை பெற நல்லோரிடதினில் உறவுதிடமான மனது, பொறுமை, எதனையும் முடிக்கும் ஆற்றல், தர்ம சிந்தனை, மிகுந்த விவேகம், வறியவர்களிடம் இரக்கம் அவர்களது பெரும்பசியை போக்க நினைப்பும், கடக்க முடியாத இந்த சம்சாரக்கடலைக் கடக்கும் ஞானம் என்னும்  கப்பலும் தந்து  அருள வேண்டும் அம்மா கற்பகவல்லியேஆலால விடம் உண்டு கறுத்த கண்டம் கொண்ட சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட  அமுதானவளே! சோலைகள் நிறைந்த  திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே! தாமரை மலர் பதத்தாளேபரிசுத்தமானவளே! கற்பகவல்லியே!   

முந்தைய பதிவு                                                                                                                                  அடுத்த பதிவு   


                                                                                                                                       அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

No comments: