Tuesday, November 1, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -49

திரியுக நாராயணன் ஆலயம் 


ஆணவத்தால்  தட்சன்  நடத்திய முறையற்ற யாகத்திற்கு சென்று தனது தந்தையால் அவமானப்பட்ட தாட்சாயணி அவன் அளித்த உடலை அந்த யாகத்தீயிலேயே அழித்து கொண்டாள். யாகத்தையும் தட்சனின் ஆணவத்தையும் அழித்தாள். பின்னர்  சிவபெருமான் யோகீசுவரராக திருக்கயிலாயத்தில் சென்று அமர்ந்தார். அம்மை இமயமலையில் இமவானுக்கு மகளாகப் பிறந்து சிவபெருமானை அடைய கௌரிகுண்டத்தில்  தவஞ்செய்யலானார். தர்மம் ஒடுங்கி அதர்மம் சூரபத்மன் ரூபத்தில் தலைவிரித்தாடியது. தேவர்கள் திருமாலை வேண்ட மன்மதனின் செய்கையால் அதர்மத்தை அழிக்க முருகன் என்னும் தலைமகன் தோன்ற சிவசக்தி திருமணம் நடந்தேறிய இடமே இத்திரியுகநாராயண்.


இமவானின் தலைநகரான இமவத்தில்(Himavat) சிவசக்தி திருமணம் நடந்தது. அவரது  குலதெய்வமான நாராயணர் இத்திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். அவரே அம்மைக்கு தமையனாக இருந்து கன்னிகாதனமும் செய்து வைத்தார்.  எனவே இத்தலத்தில் அவரே   மூலமூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலிப்பதாலும் இத்திருமணத்தின் போது ஏற்றிய வேள்வித்தீ மூன்று யுகங்களாக இன்னும் எரிந்து கொண்டிருப்பதால் திரியுகநாராயணன்  என்று இவ்வாலயத்திற்கு திருப்பெயர். அகண்ட தூணி (அணையா சோதி) என்றும் அறியப்படுகின்றது. 

சிவசக்தியின் திருமணம் நடந்தது சத்திய யுகத்தில் (1,728,000 மனித வருடங்கள்), திரேதாயுகம் (1,296,000 ), துவாபரயுகம்(864,000), முடிந்து கலியுகத்தில் இன்றும்  அணையாமல் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது.

மூன்று யுகங்களாக அணையாது எரியும் அகண்டஜோதி 

உத்தரகாசியிலிருந்து திருக்கேதாரம் செல்லும் ஒரு  பாதையில் (உத்தரகாசி தெஹ்ரி - கடோலியா - கன்சாலி குட்டு - பன்வாலி மக்கு திரியுக்நாராயண் சோன்பிரயாகை கௌரி குண்டம் கேதார்நாத்) 1980மீ உயரத்தில் அடர்ந்த காடுகளுக்கிடையில் அமைந்துள்ளது இத்தலம். மலைமங்கை பார்வதி   சிவபெருமானை மணாளனாக அடைய தவஞ்செய்த கௌரிகுண்டம் இத்தலத்திலிருந்து  5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

விஷ்ணு குண்டம் 

அடியோங்கள் சோன்பிரயாகையில் இருந்து சூரியனின் கதிர்கள் நுழைய முடியாத அடர்ந்த காடுகளிடையே 12 கி.மீ பயணம் செய்து  இத்தலத்தை அடைந்தோம்.. வெயில் இல்லாததாலும்,  எப்போதும் மழை பெய்து கொண்டிருப்பதாலும் மரங்களில் எல்லாம் பாசி படிந்திருந்தன, சிறு செடிகள் முளைத்திருந்தன. சிறிய பாதை  அதிக போக்குவரத்து இப்பாதையில் இருக்கவில்லை. கிராமமும் குக்கிராமம்தான். வருத்தில் ஆறு மாதம் பனிக்காலத்தில் இக்கோவிலும் மூடியிருக்கும்.


ருத்ர குண்டம் 

ஆலயம் கிராமத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இமயமலை ஆலயங்களைப் போலவே நகார கோபுரத்துடன் கருவறை, அர்த்தமண்டபமும் உள்ளது. இம்மண்டபத்தில் அகண்ட சோதி ஒளிர்ந்து கொண்டிருப்பதால் புகை வெளியே செல்வதற்காக புகைபோக்கி அமைத்துள்ளனர். ஆதிசங்கரர் இவ்வாலயத்தை அமைத்தாராம். முன் கதவு அடைக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாலயத்தில் ருத்ர குண்டம், பிரம்ம குண்டம், விஷ்ணு குண்டம், சரசுவதி குண்டம் என்று  நான்கு குண்டங்கள்(குளங்கள்) உள. சரசுவதி குண்டத்தில் அந்தர்வாகினியான திருமாலின் நாபிக்கலத்திலிருந்து தோன்றிய  சரசுவதி தாராவும்,  கங்கையும் பாய்கின்றனர்.. பின் அங்கிருந்து மற்ற மூன்று குண்டங்களில் நிறைகின்றனர்.  சிவசக்தி திருமணத்திற்காக கூடிய தேவர்கள், பூதகணங்கள், கின்னர கந்தவர்கள், யட்சர்கள்,  கிம்புருடர்கள் அனைவரும் இக்குளங்களில் நீராடியதாக ஐதீகம்.  இவற்றில் சிவ,  பிரம்ம குண்டத்தின் நீரை நமது   தலையில் தெளித்துக் கொள்ள சொல்கிறார்கள். விஷ்ணு குண்டத்தின் தீர்த்தத்தை உட்கொள்ள சொல்கிறார்கள். சரசுவதி குண்டத்தில் தர்ப்பணம் செய்கின்றனர்.
புதுமணத்தம்பதியினர் 

தர்ம சிலாவில் பூஜை 

திருக்கல்யாணம் நடந்த கல்மேடை தற்போது பிரம்மசிலா/தருமசிலா என்றழைக்கப்படுகின்றது. அதன் அருகில் பூசை செய்ய விரும்புவர்களுக்கு சங்கல்பம் செய்து வைத்து  இத்தலத்தின் வரலாற்றைக்கூறி பூசை செய்து ஆசிர்வாதமும் அளிக்கின்றனர். ஒரு காலத்தில் கோதானம், குப்ததானம் செய்திருக்கின்றனர் ஆனால் தற்போது,  தானமாக தற்போது அரிசி மட்டும் பெறுகின்றனர். ஆலயத்தின் அருகில் உள்ள கடைகளில் ஒரு தட்டு அரிசி ரூ.25க்கு  கிட்டுகிறது. தருமசிலாவின் எதிரே புதுமணத்தம்பதிகளாக சிவபார்வதி அருள் பாலிக்கின்றனர்.  


பூசையை முடித்துக்கொண்டு ஆலயத்தின் பின்புறமாக சென்று வலதுபக்க கதவின் வழியாக அர்த்தமண்டபத்தை அடைகின்றோம். இக்கதவின் அருகில் கணேசர் மற்றும் பள்ளிகொண்ட பெருமாள் அருள் பாலிக்கின்றார்.  கருவறையில் மையத்தில் வெள்ளி மூர்த்தமாக நாராயணர் அவருக்கு வலப்பக்கத்தில் பல்லக்கில் லக்ஷ்மி, இடப்பக்கம் சரசுவதியுடன் சேவை சாதிக்கின்றார். இவர்களுடன் புதுமணத்தம்பதிகளான சிவபார்வதி, பத்ரிநாராயணர், சீதாராமர், பஞ்ச பாண்டவர்கள் மற்றும் சேத்திரபாலரான குபேரன் ஆகியோரும் சேவை சாதிக்கின்றனர். 108 சாலக்கிராமங்கள் இவர்களை அலங்கரிக்கின்றன. 


ஓமக்குண்டத்தில் அகண்ட சோதி எப்போதும் எரிந்து கொண்டிருக்கின்றது. சிவசக்தியின் திருக்கல்யாண சோதியை
தீப மங்கல சோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம என்று வணங்கினோம். அகண்டசோதிக்கு பக்தர்கள் விறகு வாங்கி காணிக்கையாக வழங்குகின்றனர். அவர்களுக்கு அகண்டசோதியின் சாம்பல் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இச்சாம்பல் மிகவும் சக்தி வாய்ந்தது இதை தரித்துக்கொள்ள பயம் நீங்கும், தீய சக்திகள் அகன்று விடும் என்பது ஐதீகம், எனவே பக்தர்கள் அனைவரும் இச்சாம்பலை தங்கள் இல்லம் கொண்டு சென்று பூசையறையில் வைத்துக்கொள்கின்றனர்.  



திருச்சுற்றில் அன்னபூரணி, அர்த்தநாரீசுவரர், ஈசானேசுவரர், பசுரங்கபலி(அனுமன்), சங்கரருக்கு   சிறு சன்னதிகள் உள்ளன.  கோபுரத்தில் உள்ள கோட்டத்தில் கருடன் கூப்பிய கரங்களுடன் சேவை சாதிக்கின்றான். பல வருடங்களாக தரிசிக்க வேண்டும் என்று விரும்பிய ஆலயத்தை தரிசித்த மகிழ்ச்சியில் ஃபடா வந்து தங்கினோம். 


                                                             யாத்திரை தொடரும் . . . . . . .

2 comments:

கோமதி அரசு said...

அகண்ட ஜோதி பற்றி அறிந்து கொண்டேன்.
விவரங்கள் அருமை.
தொடர்கிறேன்.

S.Muruganandam said...

படங்களை எடுத்தவர் திரு.சுந்தர் அவர்கள். அடியேனது கல்லூரித் தோழர். இரண்டு பேருமாக பல ஆலயங்களுக்கு சென்று தரிசித்து படம் எடுத்து பதிவிட்டு வருகின்றோம். மிகச் சிறந்த புகைப்படகலைஞர். தமிழ் ஆர்வம் மிகுந்தவர்.