Saturday, October 22, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 24

நாலம்பலம்
பாயம்மல் சத்ருகனன் ஆலயம்



நாலம்பலம் வரிசையில் நிறைவாக அமைந்த ஆலயம் பாயம்மல் சத்ருகனன் ஆலயம். இத்தலம் பரதனின் ஆலயம் அமைந்துள்ள இரிஞ்ஞாலக்குடாவிலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. லக்ஷ்மணன், சத்ருகனன் இருவரும் இரட்டையர் தசரதரின் மூன்றாவது மனைவி சுமித்ரைக்கு பிறந்தவர்கள். இவர் பெருமாளின் சுதர்சன சக்கரத்தின் அம்சம்.  லக்ஷ்மணன் எவ்வாறு இராமருக்கு தொண்டு செய்தாரோ அது போல பரதனுக்கு தொண்டு செய்த தொண்டனுக்கு தொண்டன் சத்ருகனன். பரதன் நந்தி கிராமத்தில் ஸ்ரீராமர் வருகைக்காக காத்திருந்த போது இராச்சியத்தை பரிபாலனம் செய்தவர்  இவர் . சத்ருகனன் என்றால் சத்ருக்களை வெல்பவன் என்று பொருள். இராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பின் லவணாசுரனை வென்றவர்இவருக்கான கோவில்தான்  பாயம்மலில் உள்ளது.



சிறிய கோவில்தான். மற்ற கோவில்கள் போலில்லாமல்  ஸ்ரீகோவில் செவ்வக வடிவில் உள்ளது. அதற்கு தகுந்தாற்போல பிரமிட் வடிவ  விமானம். நின்ற கோலத்தில் சதுர்புஜ விஷ்ணுவாகவே இவரும் சேவை சாதிக்கின்றார். ஆனால் மூர்த்தி சிறியது ஆனால் கீர்த்தி பெரியது .மேற்திருக்கரங்களில் சக்கரம், சங்கம், கீழ்க்கரங்களில் பத்மம் கதை தாங்கி சேவை சாதிக்கின்றார்.
சத்ருக்னன் ஆலயத்தில், அவர் மட்டுமே இருக்கிறார். தெற்குப் பார்த்து கணபதி சந்நிதியும், முக மண்டபத்தில் அனுமன் சந்நிதியும் உள்ளதுமது என்ற அரக்கன் சிவனைக் குறித்து தவம் செய்து ஒரு சூலம் பெற்றான். உனக்கும், உன் மகன் லவணனுக்கும் எதிரிகளை ஒழிக்க இது உதவும் என்று கொடுத்தார். லவணனின் காலத்துக்குப் பிறகு சூலம் என்னிடம் வந்துவிடும் என்று சிவபெருமான் கூறிவிட்டு, மறைந்து விட்டார் மது நல்லவனாயிருந்தான். மகன் நேர் எதிர். துஷ்டனான லவணனை அழிக்க ராமர் சத்ருக்னனிடம் சொல்கிறார். அண்ணலின் ஆணை கேட்டு அதை நிறைவேற்றத் தயாராக, கோப வடிவத்தில் நிற்கிறார் சத்ருக்னர்



சுதர்சன புஷ்பாஞ்சலி, சக்கர சமர்ப்பணம் இவை இரண்டும் இங்கே முக்கிய வழிபாடுகள்சித்திரை மாதம் மிருகசீரிட  தினம் பிரதிஷ்டை தினம். வாய்ப்புக் கிட்டுபவர்கள் நான்கு தலங்களையும் சென்று சேவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்
மலைநாட்டு தலங்களைச் சேவித்தபின்  நாங்குநேரி வந்து வானமாமலைப்பெருமாளை சேவித்தோம்ப,  திருமலை சுவாமிகளின் ஆச்சாரியர் வானமாமலை ஜீயரின் ஆசி பெற்றோம். பின்னர் மதுரையடைந்து கூடலழகரை சேவித்தோம். யாத்திரையின் நிறைவாக திருமோகூரை சேவித்து சென்னை திரும்பினோம். விரிவுக்கஞ்சி இப்பதிவுடன் மலைநாட்டு திவ்விய தேச யாத்திரை தொடரை நிறைவு செய்கின்றேன். இதுவரை வந்து சேவித்த அனைவருக்கும் பரந்தாமன் அருள் கிட்ட அவரிடம் வேண்டுகின்றேன். விரைவில் இன்னொரு இனிய யாத்திரை விவரங்களுடன் தங்களை சந்திக்கின்றேன் அது வரை நன்றி வணக்கம். 

 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை இனிதாக நிறைவுற்றது

No comments: