Wednesday, October 19, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 21

திருவனந்தபுரம் வராஹசுவாமி ஆலயம்

திருவனந்தபுரத்தில் முதல் நாள் இரவு அனந்தபத்மநாப சுவாமியை தரிசித்த பின் அவ்வூரிலேயே தங்கினோம். அடியோங்களுடன் யாத்திரை மேற்கொண்ட திரு. ஸ்ரீகுமார் அவர்கள் ஆலோசனைப்படி அதிகாலை 4 மணிக்கே எழுந்து அவர் இல்லத்தின் அருகில் உள்ள வராஹ சுவாமி ஆலயம் சென்றோம். ஆலயம் அமைந்துள்ள தெருவில் நுழையும் போதே பிரம்மாண்டமான சுதையால் ஆன கருடபகவான் அடியோங்களை வரவேற்றார். ஆலயத்தில் இருந்து நாராயணீயத்தின் பாடல்கள் செவிகளில் வந்து தேனாக பாய்ந்தன.  இது சமயம் தவறாமல் பூஜை நடைபெறுவதை உணர்த்தியது.

சுமார் 2000 வருடங்கள் பழமையான ஆலயம் என்றார் ஸ்ரீகுமார் அவர்கள். வட்ட வடிவ ஸ்ரீகோவிலில் லக்ஷ்மி வராஹராக பெருமாள் அருள் பாலிக்கின்றார். ஆலயம் சுத்தம் செய்யப்பட்டு விளக்குகள் எல்லாம் ஏற்றப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது,  அருமையாக சேவித்தோம்.  நமஸ்கார மண்டபத்தில் நில விளக்குகள் ஓளிர்ந்து கொண்டிருந்தன. கருடனும் சேவை சாதித்தான். 


யாத்திரை அழைத்து சென்ற சுவாமிகள்


முக்கிய சன்னதி தவிர கணபதி, சிவன் சன்னதிகளும் உள்ளன. ஒரு பிரம்மாண்டமான ஆலமரத்தின் அடியில் நாகப்பிரதிஷ்டை செய்திருக்கின்றனர்.  பெருமாளின் அதிகாலை திருமஞ்சனத்தை சேவித்த ஆனந்தத்தில் திருவாட்டற்றில் அருள் வழங்கும் ஆதி கேசவனை சேவிக்கப்புறப்பட்டோம்.  வழியில்  நெய்யாற்றங்கரை என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரை சேவித்து விட்டு செல்லலாம் என்று ஸ்ரீகுமார் அவர்கள் கூறியதால் பெரும்பாதையையிலிருந்து இடப்புறம் திரும்பி நெய்யாற்றங்கரையை அடைந்தோம். அங்கு அடியோங்களுக்கு எவ்வளவு அருமையான சேவை கிடைத்தது என்பதை காணாலாமா அன்பர்களே.

நெய்யாற்றங்கரை ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம்


திருவனந்தபுரம் மாவட்டத்தின் குருவாயூர் என்று அழைக்கப்படும் இந்த நெய்யாற்றங்கரை ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தில் இரண்டு கரங்களிலும் வெண்ணையை வைத்துக்கொண்டு உண்ணி கிருஷ்ணராக பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவ்வாலயம் திருவனந்தபுரத்திற்கு தெற்கே இருந்து 20 கி.மீ,  நாகர்கோவிலிலிருந்து 46 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி திருவனந்தபுரம் புகைவண்டித்தடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தில் அம்மாச்சிப் பலவு (தாய்வழிப் பாட்டி பலா மரம்) சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மனை எதிர்த்து எட்டு வீட்டில் பிள்ளைமார் சதி செய்த போது ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணரின் அருளால் மார்த்தாண்டவர்மன் இந்த பலா மரத்தின் பொந்தில் ஒளிந்து கொண்டு அவர்களிடமிருந்து தப்பித்தார் என்பது வரலாறு.  எனவே இம்மரத்தை வணங்க ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதீகம்.  மார்த்தாண்டவர்மன்  பின்னர் இக்கோவிலை அந்த பலா மரத்தின் அருகில் கட்டினார் என்கிறார்கள். அனந்த பத்மநாப சுவாமி ஆலயத்தை புனருத்தாரணம் செய்தவரும் இவரே.அடியோங்கள் சென்ற போது வருடாந்திர மீன மாத திருவிழா நடந்து கொண்டிருந்தது என்பதால் வாழை, கமுகு, மாவிலை தோரணங்கள், செவ்விளநீர், பாக்குக் கொத்துகளுடன்  ஆலயம் பொலிவுடன் விளங்கியது. பளபளக்கும் தங்கக் கொடி மரத்தில் இருந்த அஷ்ட திக் பாலகர்களுக்கு நேர்த்தியாக வஸ்திரம் சார்த்தியிருந்தனர். அற்புதமான அலங்காரத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களுடன் இரண்டு கரங்களிலும் வெண்ணையை ஏந்திக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணர் சேவை சாதித்தார். அற்புதமாக திருவடி சேவை கிட்டியது.  இவருக்கு சந்தனக் காப்பு, மாவுபொடி காப்பு சிறப்பாக செய்யப்படுகின்றது. பால் பாயசம் சிறப்பு நெய்வேத்யம் ஆகும், ஸ்ரீகிருஷ்ணரின் கையில் வெண்ணெய் வைத்து வணங்குவது இத்தலத்தின் சிறப்பு வழிபாடாகும். ஆலயத்தில் சாஸ்தா, கணபதி, நாகர், பகவதி சன்னதிகளும் உள்ளன. பகவதி சன்னதி மாதத்தின் முதல் வெள்ளியன்று மட்டுமே திறக்கப்படுகின்றது.வெள்ளி கருட வாகனம் மற்றும் அனுமந்த வாகனம்,   முதல் நாள் இரவு பெருமாள் வலம் வந்த புஷ்பபல்லக்கு  ஆகியவற்றை சேவித்தோம். நுழைவு வாயில் அருமையான கீதோபதேச காட்சி,  அதன் கீழே "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்னும் திருமந்திரம்.  . 


                                                   
அருகிலுள்ள சிவாலயம் 
அருகில் அருமையான பல சிவபெருமானின் வடிவங்களைக் கொண்ட ஒரு சிவாலயம் உள்ளது.   இவ்வாறு அருமையாக ஸ்ரீகிருஷ்ணரை சேவித்தபின் கரியகாவிளை தாண்டி திருவாட்டாற்றை அடைந்தோம். இனி நாலம்பம்பங்கள் என்றழைக்கப்படும் இராம சகோதரர்களின் ஆலயங்களை சேவிக்கலாம் அன்பர்களே.
 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்
மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

No comments: