Thursday, October 13, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 17

திருஅஞ்சைக்களம் மஹாதேவர் ஆலயம்தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் இந்த திருவஞ்சிக்குளம் மஹாதேவ சுவாமி கோவில் ஆகும். சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையான ஆலயம்.

தலைக்கு தலைமாலை அணிந்ததென்னே சடைமேற்கங்கைவெள்ளம் தரித்த தென்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டுஅசைத்ததென்னே  அதன் மேற் கதநாகங் கச்சு ஆர்த்ததென்னே
மலைக்கு நிகர் ஒப்பன வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அலைக்கும் கடல் அங்கரை மேல் மகோதை அணியார்பொழில் அஞ்சைக்களத்தப்பரே.
என்று வன்தொண்டர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தலம். தேவாரப்பாடல் பெற்ற ஒரே மலைநாட்டு சிவாலயம்.  பரசுராமர் தன் தாயைக் கொன்ற  பாவம் தீர சிவனை வழிபட்ட தலம்.

கொடுங்கல்லூரிலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம். ஆலயத்தின் மேற்கு வாயில் தேசிய நெடுஞ்சாலை-17ல் அமைந்துள்ளது.

எம்பிரான் தோழர் சுந்தரரின் தோழரான கழறிற்றறிவார் நாயனார்என்றழைக்கப்படும் சேரமான் பெருமாள் நாயனார் வழிபட்ட தலம் இத்தலம். இனி சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றைப் பற்றிக்காணலாம். மகோதை என்றும் கொடுங்கோளுர் என்றும் அழைக்கப்பட்ட இத்தலத்தில்   சேரர் மரபில் தோன்றிய பெருமாக்கோதையார் என்பார் திருஅஞ்சைக்களத்தில் சிவத்தொண்டு புரிந்துவந்தார்.

அப்போது அங்கு ஆட்சி செய்து வந்த செங்கோற் பொறையன் என்னும் அரசன் நாட்டைத் துறந்து தவம் செய்து சிவபெருமானின் திருவடிகளை அடையும் பொருட்டு காட்டை அடைந்தார். அறிவு மிக்க அமைச்சர் பெருமக்கள் ஆராய்ந்து இனி பெருமாக்கோதையாரே சேரமானாக அரசு செய்ய வேண்டும் எனத் தெளிந்தார்கள். திருஅஞ்சைக்களம் அடைந்து நாயனாரை அவ்வாறே வேண்டினார்கள். நாயனார் இறைவன் திருவுள்ளம் அறிந்து வருவேன் என உரைத்து இறைனிடம் விண்ணப்பித்தார். அஞ்சைகளத்தப்பர் நீ அரசு பதவியேற்று உயிர்கள் வாழும் வண்ணம் நல்லாட்சி செய்வாயாக! எல்லா உயிர்களும் பேசுவனவற்றை அறியும் ஆற்றல் உனக்கு அளித்தோம்என அருளினார். இதனால் அவருக்கு கழறிற்றரிவார்என்ற பெயர் தோன்றியது.

மகுடாபிஷேகம் ஆன சேரமான் பெருமான் யானை மீது நகர் வலம் வந்தார். அப்பொழுது துணி வெளுப்பவன் ஒருவன் மீது உவர் மண் காய்ந்து அவன் உடல் முழுவதும் திருநீறு அணிந்தவர் போல் தோன்றினான். அவனை முழுநீறு பூசிய முனிவராகக் கண்டச் சேரமான் யானையை விட்டு இறங்கி அவனை வணங்கினார். வணங்கியவுடன் அவ்வண்ணான் மனம் கலங்கி, அரசே! என்னை யார் என்று எண்ணினீர்கள். அடியேன் அடி வண்ணான் என்றான். நாயனாரும் அடியேன் அடிச்சேரன் .நீங்கள் வருந்தாமல் செல்லுங்கள் என்றார். சேரமான் பெருமானின் அடியார் பக்தியைக் கண்ட அனைவரும் அதிசயத்தார்கள்.சேரமான் பெருமான் தாம் நாள் தோறும் செய்யும் பூசையின் முடிவில் நடராஜப் பெருமானின் சிலம்பு ஓசையைக் கேட்கும் பேறு பெற்றவர். ஒரு நாள் சிலம்போசை பூசை முடிவில் கேட்கப் பெறவில்லை. நாயனார் மிக வருந்தி உயிர்விடத் துணிந்தார். பெருமான் சிலம்போசை கேட்பித்தார். “ஐயனே! முன்பு நான் கேளாமற் போனதற்கு காரணம் என்னவோஎன நாயனார் இறைவனிடம் முறையிட்டார்.

அப்பலவாணர் அன்பனே வருந்தற்க! கனகசபையில் நம் முன்னே சுந்தரன் வழிபட்டு செந்தமிழால் எம்மைப் பாடினான். அது கேட்டு அதன் சுவையில் ஈடுபட்டதால் உன் பூசையில் சிலம்பிசைக்க தாமதித்தோம்எனக்கூறினார்.
சேரமான் பெருமான்  சுந்தரர் பெருமையை உணர்ந்து பொன்னி நாட்டை நோக்கிப் புறப்பட்டார். சிதம்பரத்தில் வந்து கனகசபையில் அம்பலவாணரை வழிபட்டார். அவரைப் போற்றி பொன் வண்ண திருவந்தாதி பாடினார். பிறகு திருவாரூர் சென்று தம்மை எதிர் கொண்டு வரவேற்கும் சுந்தரரை வணங்கி பின் தியாகராசரையும் வணங்கினார். சேரமான் பெருமானோடு நட்பு கொண்ட சுந்தரரை அடியார்கள் சேரமான் தோழர் என்றும் அழைக்கலானார்கள்.

சேரமான் பெருமான் திருவாரூர் பெருமான் மீது ஒரு மும்மணிக் கோவை பாடினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமான் பொருட்டு இருமுறை திருஅஞ்சைக்களம் வந்துள்ளார்முதல்முறை சேரமானுடன் சுந்தரர் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழ நாடு, கொங்கு நாடுகளில் உள்ளத் தலங்களை வழிபட்டு பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கல்லூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடியும் தமிழகத்தலங்களுக்கு  திரும்பி வந்து பதிகம் பாடினார்.

இரண்டாம் முறை சேரநாடு வந்த சில நாட்களில் சுந்தரர் திருக்கயிலை சென்று இனி இறைவனோடு இருக்க வேண்டும் என விரும்பினார். தலைக்கு தலை மாலை என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப் பதிகம் இதுதான். இறைவனும் ஐராவளம் என்னும் நான்கு தந்தங்களைக் கொண்ட தன்னுடைய வாகனமான வெள்ளை யானையையும், இந்திரன், மஹாவிஷ்ணு, நான்முகன் ஆகியோரையும், மற்ற தேவர்களையும் சுந்தரரை திருக்கயிலாயம் அழைத்து வர  அனுப்பினார். இறைவனின் பட்டத்து யானையில் சுந்தரர் கயிலைக்குப் புறப்பட்டார். அப்போது தன் உயிர்த்தோழன் சேரமானை நினைத்தார் சுந்தரர். 

உடனே  சேரமான் பெருமான் திருவைந்தெழுத்தை தம் குதிரையின் காதில் ஓத, குதிரை யோக சக்தி பெற்று பறக்கத் தொடங்கியது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் செல்லும் யானையை மூன்று முறை  வலம் வந்து  சுந்தரருக்கு முன் திருக்கயிலையை அடைந்தது. சுந்தரர் இறைவனின் மாப்பெரும் கருணையை நினைத்து  வானில் செல்லும் போது தானெனை முன் படைத்தான்” என்னும் நொடித்தான் மலை பதிகத்தைப் பாடினார். இறைவனின் உத்தரவுப்படி வருண பகவான் இப்பதிகத்தை திருவஞ்சிக்குளம் மஹாதேவர் ஆலயத்தில் சேர்பித்தார்.

திருக்கயிலையில் இறைவன் சந்நிதிக்கு சுந்தரர் சென்ற பின் இறைவனிடம் தன் தோழர் சேரமான் பெருமாளையும் திருக்கயிலாயத்தில் அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். இவ்வாறு நட்புக்கு ஒரு இலக்கணமாக திகழ்ந்தார் எம்பிரான் தோழர். இறைவனும் அனுமதி அளித்தார், சேரமான் பெருமான் இறைவன் முன் வந்து வணங்கினார். அங்கு அப்பொழுது ஆசு கவியாக ஓர் உலா ஒன்று இறைவன் மீதுப் பாடினார். தமிழ்க் காப்பியங்களில் உலா ஒன்று முதன் முதலாகப் பாடியவர் சேரமான் பெருமான் நாயனார் ஆவார். இப்பதிகம் திருக்கயிலாய உலா என்று சிறப்புப் பெற்றது.  பின் இருவரையும் தனது தொண்டர் கணங்களில் இணைத்துக் கொண்டார் சிவபெருமான் தனது பூலோக அவதார நோக்கம் நிறைவேறிய பின்  சுந்தரரும், அவரின் தோழர்  சேரமான் பெருமாளும் திருக்கயிலாயம் சென்றது இத்தலத்தில் இருந்துதான். கோயிலுக்கு எதிரே ஒரு மேடை உள்ளது. யானை வந்த மேடை என்று பெயர்.

மேலும் இவர்களுடன் அன்றைய தினம்  திருக்கயிலையில் கமலினி மற்றும் அநிந்தினி என்னும் பார்வதி தேவியின் சேடிகளாக இருந்து பூலோகத்தில் பரவை மற்றும் சங்கிலியாக பிறந்து சுந்தரரை மணந்த பெண்கள்  இருவரும், பெருமிழலைக் குறும்பரும் திருக்கயிலாயம் சென்றனர். விநாயர் பூஜை செய்து கொண்டிருந்த ஔவையாரும் விநாயகர் அகவல் பாடிய பின், விநாயகர் இவர்களுக்கெல்லாம் முன்பாக தன்  தும்பிக்கையினால் தூக்கி ஔவையாரை திருக்கயிலாயத்தில் வைத்தார் என்றொரு கதையும் உண்டு.


சுந்தரர் வெள்ளை யானையில் 
திருக்கயிலாயம் ஏகுதல்

இந்நிகழ்வைக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி அன்று சுந்தரர் திருக்கயிலை செல்லும் விழாவினை கோவை சேக்கிழார் திருக்கூட்டத்தார் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். இவர்கள் ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது. விழாவின் முதல் நாள் இரவன்று கொடுங்கல்லூர் பகவதியம்மன் ஆலயத்திலுள்ள சுந்தரர், சேரமானின் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை செய்து, யானை மற்றும் குதிரை வாகனத்தில் அமர வைத்து மேள தாளங்களுடன் அஞ்சைக்களத்திற்கு ஊர்வலமாக அழைத்து வருவர். மறுநாள் காலை சுந்தர மூர்த்தி நாயனாருக்கு கோலாகலமான குருபூஜை விழா நடைபெறுகின்றது. மேலும் அன்றைய தினம் திருஅஞ்சைக்குளத்திலுள்ள அத்தனை உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெறுகின்றது.

வம்மின் தொண்டர்களே இவ்வளவு சிறப்புகள் பெற்ற ஆலயத்தை தரிசனம் செய்யலாம். மற்ற கேரள ஆலயங்களைவிட பிரம்மாண்டமாக மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது திருஅஞ்சைக்களம் ஆலயம்.

மூலவர்மஹாதேவர், அஞ்சைகளத்தீஸ்வரர்
அம்பாள் : உமையம்மை
தல விருட்சம்: சரக்கொன்றை
தீர்த்தம்:  சிவகங்கை தீர்த்தம்.
பதிகம்: சுந்தரர்.

சிவபெருமான் லிங்க வடிவில் அம்மையுடன் சதாசிவ மூர்த்தமாக  அருள் பாலிக்கின்றார். கேரளாவில் முக்கண்கள் கொண்டு அலங்கரிப்பது போல் தங்கத்தில் ஐயனுக்கு அருமையான அலங்காரம். இவர்  சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர். சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து, 1801ல் பிரதிஷ்டை செய்ததாக ஒரு  கல்வெட்டு கூறுகிறது.  முதல் சுற்றில்  தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள். கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் கணபதி, சுப்பிரமணியர், துர்கா பகவதி, தட்சிணாமூர்த்தி, ஐயப்பன்நந்திகேஸ்வரர், கங்கை, நாக ராஜா, நாக யட்சி, அனுமன்   ஆகிய  தெய்வங்கள் தனித்தனி சன்னனதிகளில் அருள்பாலிக்கிறார்கள். மற்றும் தக்ஷிணாமூர்த்தி, டுவெளி நாதர், வெளிநாதர் என்று பல சிவலிங்க சன்னதிகள் உள்ளன. நடராஜப் பெருமானுக்கு தனி சன்னதியும் உள்ளது. பஞ்சலோக மூர்த்தம்   ஐயனின் திருவடியின் கீழே "திருவஞ்சைக் களத்து சபாபதி" என்று எழுதப்பட்டுள்ளது. நமஸ்கார மண்டபத்தில் நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு ராஜகோபுர நுழைவாயில் அடித்தளத்தில் யானை மீதமர்ந்த சுந்தரர் கோலமும், குதிரை மீதமர்ந்த சேரமான் கோலமும் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. பக்கக்கற்சுவற்றில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வது போலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தின் நமஸ்கார மண்டபம் 16 தூண்களுடன் இரண்டடுக்கு (துவி தள)  கூரைகளுடனும் அருமையான சிற்பங்களுடனும் அமைந்துள்ளது இத்தலத்தின் ஒரு தனி சிறப்பு.
சேரமான் பெருமாள் நாயனாருக்கும் தில்லை சிதம்பரத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதால், இத்தலத்தை மேலைச் சிதம்பரம் என்றும் கூறுவர். வெளிப்பிரகாரத்தில் கொன்றை மரங்கள் அமைந்துள்ளன. மாசி மாதத்தில் மஹா சிவராத்திரி 8 நாள் உற்சவமாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இத்திருவிழாவின் போது யானையோட்டமும் நடைபெறுகின்றது. அமாவாசையன்று ஆறாட்டு வைபவம். இத்தலத்தில் மாலை வேளையில் நடைபெறும் தம்பதி பூஜை சிறப்பானது கேரளாவிலேயே பள்ளியறை பூஜை நடக்கும் ஒரே தலம் இதுவாகும் இப்பூஜையை தரிசனம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும், பிரிந்த தம்பதியினர் ஒன்றாக சேர்வார்கள், கணவன் மனைவி ஒற்றுமை பெருகும் என்பது ஐதீகம். அதுவும் பௌர்ணமியன்று செய்யும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் இப்பூஜைக்கு முன்பதிவு நடைபெறுகின்றது. மற்ற கேரள ஆலயங்கள் போலவே இக்கோவிலிலும் வெடி வழிபாடு நடைபெறுகின்றது. சிவபெருமானை ஆராதித்த ஒரு சேர அரசன் வழிபட்ட ஆலயத்தை தரிசனம் செய்த பின், திருமாலை வழிபட்ட இன்னொரு சேர அரசரான குலசேகராழ்வார்  ஆலயத்திற்கு சென்றோம்.

(இப்பதிவில் உள்ள அனைத்து படங்களுக்கும் நன்றி: Google)
 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்                 குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

No comments: