Thursday, October 13, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 16

                    கொடுங்கல்லூர் பகவதி ஆலயம்

மலைநாட்டு திவ்ய தேசங்களை சேவிக்கச்சென்றபோது வழியில் இருந்த பல்வேறு ஆலயங்களையும் தரிசித்தோம் அவை பற்றி இனி வரும் பதிவுகளில் காணலாம். முதல்நாள் காலை திருநாவாய், திருவித்துவக்கோடு ஆகிய திவ்விய தேசங்களை சேவித்தபின் அடியோங்கள்  குருவாயூரில் உன்னிக் கிருஷ்ணனை சேவித்தோம் அங்கிருந்து  திருவஞ்சிக்களத்தில் உள்ள குலசேகராழ்வார் அவதாரத்தலத்திற்கு புறப்பட்டோம்,  செல்லும் வழியில் கொடுங்கல்லூரை கடந்த  போது அங்கு அப்போது திருவிழா நடந்து கொண்டிருந்தது மரங்களில் எல்லாம் கொடிகள், அவைகள் அசைந்து எங்களை வருக வருக என்று அழைத்தன,    எனவே வண்டியை நிறுத்தி பகவதியை தரிசிக்க சென்றோம். 

சக்தி வழிபாடு என்பது ஆதிகாலம் தொட்டே இருந்து வந்துள்ளது. அம்மன், அம்பாள் என்று சைவர்களும், தாயார், நாச்சியார், பிராட்டி என்று வைணவர்களும் வழிபடும் அன்னையை கேரளத்தில் பகவதி என்று வழிபடுகின்றனர். கேரளத்தில் அமைந்துள்ள சிறப்புப் பெற்ற பகவதி ஆலயங்களுள் ஒன்று இந்த கொடுங்கல்லூர் பகவதி ஆலயம். ஆதி காலத்தில் இந்த துறைமுகநகரம் கொடுங்கோளூர் என்ற பெயரில் சேர மன்னர்களின் தலைநகரமாக திகழ்ந்திருக்கின்றது. யவனர்களுடன் கடல் வணிகமும் நடந்திருக்கின்றது. இந்த நகரத்தில் அமைந்துள்ளது குரும்ப பகவதி காவு  என்றழைக்கப்படும் கொடுங்கல்லூர் பகவதி அம்மன் ஆலயம். காவு என்றால் சோலை. ஆனால் தற்போது கோவிலை சுற்றியுள்ள பெரிய மைதானத்தில் சில பெரிய மரங்கள் மட்டுமே மிஞ்சியுள்ளன.

ஆதி காலத்தில் பரசுராமர் கடலிலிருந்து இந்த பரசுராம க்ஷேத்திரத்தை உருவாக்கியபின் தாருகன் என்ற அசுரனை வதம் செய்ய சிவபெருமானை வேண்டினார். அவரது சக்தியான பார்வதிதேவி பத்ரகாளியாக ஆவிர்பவித்து தாருகனை வதம் செய்தார். பின் பரசுராமர் அந்த தேவியை இங்கு பிரதிஷ்டை செய்தார் என்பது ஒரு  ஐதீகம்.மதுரையில் பாண்டியன் அரண்மணையில் தேரா மன்னா!  என்று வழக்குரைத்து தன் கணவன் கோவலன் சிலம்பைத் திருடிய குற்றவாளி அல்ல என்று நிரூபித்து மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகிக்காக சேரன் செங்குட்டுவன் அமைத்த ஆலயமே இவ்வாலயம் என்பாரும் உண்டு. அதே உக்கிரத்துடன் அம்மன் அமர்ந்திருக்கின்றாள் என்பர்.

அம்மை இங்கே அஷ்டபுஜ பத்ரகாளியாக அசுரனின் சிரம், வாள், சிலம்பு, திரிசூலம், பாசம், நாகம், மணி, அக்ஷய பாத்திரம் தாங்கி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். அம்மன் 7 அடி உயரத்தில்  பலா மரத்தில்  ஆன மூர்த்தம் என்பதால் தங்க கவசம் அணிவித்துள்ளனர். அம்மை வடக்கு நோக்கிய திருமுகத்துடன் அருள் பாலிக்கின்றாள். மேலும் தங்க நகைகளால் அம்மனுக்கு அற்புதமாக அலங்காரம் செய்துள்ளனர். அம்மனின் காலடியில் சிவலிங்கம் உள்ளது. அம்மனுக்கு இடப்புறம் பிராம்ஹி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டா ஆகிய சப்தமாதர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ஆகவே ஆலயம் நீளவாக்கில் அமைந்துள்ளது.. இவ்வகையாக பிரதிஷ்டை செய்வது ருருஜுத்வதானம் என்றழைக்கப்படுகின்றது. ஆதிசங்கர பகவத்பாதாள் அம்மன் முன் சக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளதாக ஐதீகம். மேலும் கணபதி மற்றும் பைரவர் சந்நதிகளும் உள்ளன.
சிவன் சன்னதி கதவு

இவ்வாலயத்தில் சிவபெருமானுக்கும் தனி சன்னதி உள்ளது தனி வாயில் முகப்பு மண்டபம் ஆகியவையும் உள்ளன ஆனால் கதவம் அடைக்கப்பட்டுள்ளது.  சிவபெருமான் விஸ்வநாதராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஆதி காலத்தில் சிவாலயமாக இருந்திருக்கலாம் பின் பகவதி வந்து சேர்ந்தாள் என்பாரும் உண்டு.

மிகப்பெரிய மைதானத்தின் மையத்தில் கோவில் அமைந்துள்ளது. மற்ற ஆலயங்கள் போலல்லாமல் ஒரே ஒரு உள்திருச்சுற்று மட்டுமே உள்ளவாறு கோவில் அமைந்துள்ளது. கொடிமரமும் கிடையாது. உள்ளே நுழையும் போதே "அம்மே சரணம்" என்ற வாசகம் ம்மை வரவேற்கின்றது. ஆலயத்தின் முகப்பில் ஒரு பிரம்மாண்டமான  கூர்ம  தீபம் அமைத்துள்ளனர். அடியோங்கள் சென்ற சமயம் திருவிழா காலம் என்பதால் மைதானம் முழுவதும் கடைகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. பலர் நெல், மஞ்சள், மிளகு, மற்றும்  விவசாய விளை பொருட்கள், தென்னங்குருத்து, மட்டைத் தேங்காய்கள்  மற்றும் சிவப்பு துணிகளை ஏந்தி கூட்டம் கூட்டமாக வந்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திவிட்டு சென்றனர். கோவில் முழுவதும் மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூவியிருந்தனர்.இத்தலத்தில் மலையாள மீன மாதம் (பங்குனி மாதம்) நடைபெறும் திருவிழா சிறப்பு வாய்ந்தது. விழாவின் நிறை மூன்று நாட்கள் காவு தீண்டல்  என்று வித்தியாசமாக கொண்டாடப்படுகின்றது. அந்தக் காலத்தில் கீழ் சாதியினர் கோவிலுக்குள் சென்று வழிபட முடியாத நிலையை மாற்றி முதன்முதலில் அவர்களும் ஆலயத்தினுள் சென்று வழிபட அனுமதித்ததை கொண்டாடும் வகையில் இந்த காவு தீண்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது என்பாரும் உண்டு.

கொடுங்கல்லூர் அரசர் வந்து ஆல மரத்தடியில் நின்று குடையை உயர்த்தியவுடன் "காவு தீண்டல்" நிகழ்ச்சி தொடங்குகின்றது. சிவப்பு ஆடை, கையில் வளைந்த வாள், கையில் சிலம்பு, இடையில் அரை மணி  காலில் சலங்கை அணிந்த வெளிச்சப்பாடுகள்  என்றழைக்கப்படும் குறி சொல்பவர்கள் மருளுடன் கோவிலை சுற்றி வருகின்றனர், அப்போது தெரிப்பாட்டு என்றும் பரணிப்பாட்டு என்றழைக்கப்படும் பாடல்களை பாடுகின்றனர், மஞ்சள் தூள், மிளகு, சேவல்கள் ஆகியவற்றை கோவிலுக்குள் வீசுகின்றனர். சிலர் வாளினால் தங்கள் தலையில் வெட்டிக்கொண்டு இரத்தம் சொட்ட சொட்ட வலம் வருகின்றனர். இவ்வாறு மூன்று முறை கோவிலை சுற்றி வந்த பின் அரசரை விழுந்து வணங்கிவிட்டு திரும்பிச் செல்கின்றனர். ஆதி காலத்தில் பலி கொடுத்திருக்கின்றனர் தற்போது அதற்கு பதிலாக சிவப்பு ஆடையை சமர்ப்பிக்கின்றனர். இதற்குப்பின் ஆலயம் சுத்தம் செய்வதற்காக ஒரு வாரம் அடைக்கப்படுகின்றது.க்ஷேத்ரபாலகர் என்று பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. வெடி வழிபாடு இக்கோவிலின் சிறந்த வழிபாடு ஆகும். மதியம் உச்சப்பூஜைக்குப் பின் அனைவருக்கும் பாயசம் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. கொடுங்கல்லூர் பகவதியை திவ்யமாக தரிசித்த பின் குலசேகராழ்வார் ஆலயம் நோக்கிப் புறப்பட்டோம். நடுவில் திருஅஞ்சைக்களம் (ஸ்ரீவஞ்சிக்குளம்) என்னும் திருக்கோவில் கண்ணில் பட்டது  எம்பிரான் தோழர் சுந்தர மூர்த்தி நாயனாரும், அவரின் தோழர் சேரமான் பெருமாளும் திருக்கயிலாயம் இங்கிருந்துதான் சென்றார்கள் என்ற சிறப்புடைய தலம். வம்மின் தொண்டர்களே திருஅஞ்சைக்களத்தப்பரையும் தரிசிக்கலாம்.
 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்            திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

No comments: