Wednesday, September 28, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 15

திருவண்பரிசாரம் திருவாழ்மார்பன்





மலைநாட்டு திவ்வியதேச யாத்திரையின் நிறைவாக திருப்பதிசாரம் என்று தற்போது அழைக்கப்படும் திருவண்பரிசாரத்தை அடைந்தோம். இத்திவ்வியதேசம் மலைநாட்டு திவ்விய தேசம் ஆனாலும் திருவாட்டாறு போல தமிழகத்தில் தற்போது அமைந்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் நாகர்கோவிலிலிருந்து சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த திவ்ய தேசம். நாகர்கோவிலிலிருந்து இத்தலத்தை சுலபமாக பேருந்து மூலம் சென்றடையலாம்.

வாருங்கள் அன்பர்களே இத்தலத்தின் சில சிறப்புகளைப் பற்றி காணலாம். வண் என்றால் கொடை என்று பொருள். நம்மாழ்வாரை நமக்கு கொடுத்ததனால் இத்தலத்திற்கு இந்த சிறப்பு  அடைமொழி.  மலை நாட்டு திவ்விய தேசங்களில் பெருமாள் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிப்பது இத்தலத்தில் மட்டும்தான். நம்மாழ்வார் என்னும் அமுதத்தை நமக்களித்த அமுதம் உடைய நங்கையாரின் அவதாரத்தலம் இத்தலம். விபீஷணாழ்வாருக்கு பட்டாபிஷேக கோலத்தை காட்டியருளிய தலம். குலசேகராழ்வார் திருப்பணிகள் செய்த தலம், பரமபதித்த தலம்.  நம்மாழ்வார் இத்தலத்தை ஒரு பாசுரத்தால் மட்டுமே மங்களாசாசனம் செய்துள்ளார்.  ஆலயத்திற்கு எதிரிலேயே லக்ஷ்மி தீர்த்தம் அமைந்துள்ளது.

இனி பெருமாளுக்கு திருவாழ்மார்பன் என்னும் திருநாமம் ஏன் வந்தது என்று காணலாமா அன்பர்களே.  பெருமாள் தன் பக்தனான பிரகலாதன் சொன்ன சொல்லை நிரூபிக்க நரசிம்ம அவதாரம் எடுத்த போது அவரது உக்ரத்தைக் கண்டு தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் அனைவரும் நடுங்கினர். தாயார் கூட பெருமாளை நெருங்க அஞ்சினாள். பிரகலாதனால் மட்டுமே பெருமாளை சாந்தப்படுத்த முடிந்தது. எனவே தாயார் இத்தலம் வந்து லக்ஷ்மி தீர்த்தக்கரையில் தவம் செய்தாள். பின்னர் இங்கு  பெருமாள் எழுந்தருள தாயார்   தனது இருப்பிடமான  பெருமாளின் மார்பில் அமர்ந்தாள். எனவே பெருமாள் ”திருவாழ்மார்பன்” என்றழைக்கப்படுகின்றார். அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் என்று ஆழ்வார்களும்  மங்களாசாசனம் செய்து மகிழ்கின்றனர்.

திருவாகிய இலக்குமி தனது பதியாகிய மஹாவிஷ்ணுவை இவ்விடத்தில் சார்ந்ததால் திருப்பதி சாரம் என்பதே இத்தலத்திற்குப் பொருத்தமான பெயர் என்று இவ்வூர்வாழ் பெரியோர் பகர்கின்றனர்.

ராவணனை வென்று, சீதையை மீட்டு இலங்கையைத் தன் வசப்படுத்திய ஸ்ரீராமருக்கு, அயோத்தியில் பட்டாபிஷேகம். அதனைக் காண வந்தவர்களுக்கெல்லாம் பரிசுப் பொருட்களை வாரி வழங்கினார் ராமர். அந்த வகையில், ராவணன் தம்பி விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ஸ்ரீரங்க விமானத்தைத் பரிசாகக் கொடுத்தார் ஸ்ரீராமர். சூரிய குலச் சொத்து அன்புப் பரிசாகக் கை மாறியது. அதனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினான் விபீஷணன். அப்படியே தன் நாடு நோக்கிக் கிளம்பினான். ஆகாய மார்க்கமாகச் சென்ற அவன் சோமலட்சுமி தீர்த்தத்தில் நீராடி இராமபிரானின் முடிசூட்டு விழாவைத் தனக்கு மீண்டும் ஒரு முறை காட்சி தந்தருள வேண்டி திருவாழ்மார்பனை வழிபட்டார். அதற்கிணங்கி பெருமாள் பட்டாபிஷேக கோலத்தை  மீண்டும் காட்டியருளிய  தலம். எப்போதும் இராம காதையை செவி மடுக்க விரும்பும் அனுமனுக்கு,  அகத்திய முனிவர் இராமாயணத்தை கூறிய தலம் என்றும் கூறுவர்.

ஒரு சமயம் குலசேகர  மன்னரின் வெள்ளை நிற குதிரை காணாமல் போயிற்று. மன்னரும் காவலரும் பல இடங்களிலும் தேடினர். அது சோம தீர்த்தக் கரையில் புல் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டு அவ்விடத்திற்குத் "திருவெண்பரிசாரம்' எனப் பெயரிட்டதாகவும் அதுவே மருவி திருவண்பரிசாரம் என்றாகியது என்றொரு வரலாறும் உண்டு.  எனவே   கொல்லி காவலன், கூடல் நாயகன்,  கோழி வேந்தன்,  குலசேகராழ்வார் ங்கு தங்கி  இவ்வாலயத்தை புனருத்தாரணம் செய்து 40 அடி உயரமுள்ள கொடிமரத்தை நிறுவினார். பின்னர் இங்கேயே  பரமபதமும் அடைந்தார்.  தற்போது  ங்கத்தகடு வேயப்பட்டு தங்கமுலாம் பூசிய கருடனின் உருவம் உச்சியில் பொறிக்கப்பட்ட கொடிமரம் எழிலாக மஹாமண்டபத்தில் அமைந்துள்ளது.

இன்றைய சுசீந்திரம் ஒரு காலத்தில் ஞானாரண்யம் என்று அழைக்கப்பட்டிருந்தது. அத்திரி, வசிஷ்டர், காசியபர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர், ஜமதக்னி, கௌதமர்   ஆகிய சப்தரிஷிகள் இங்கு தவமிருந்தனர். இறைவன் அவர்களுக்கு சிவ வடிவில் அங்கு தரிசனம் அளித்து அருளினார். முனிவர்கள் திருமால் வடிவில் பெருமானைக் காண விரும்பினர். அதற்காக சோமதீர்த்தம் என்னும் இத்தலத்தில்  தவம் செய்தனர். அப்போது திருமால் சேவை சாதித்த  கோலமே இன்று நாம் சேவிக்கும் கோலம் ஆகும். இதனால் திருமால் சப்தரிஷிகள் சூழ பிரசன்ன மூர்த்தியாக இருந்து அருள் புரிகின்றார்.  இவருக்கு வலப்புறம் உள்ள சன்னதியில்  இராமர் விபீஷணாழ்வாருக்கு அளித்த பட்டாபிஷேக கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அவருடன் அகத்தியர் அனுமன், விபீஷணாழ்வான், குலசேகராழ்வார் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். 




இத்திவ்ய தேசத்தின்
மூலவர்: திருவாழ்மார்பன், திருகுறளப்பன்
தாயார் : கமலவல்லி நாச்சியார்.
விமானம்: இந்திர கல்யாண விமானம்
தீர்த்தம்: லக்ஷ்மி தீர்த்தம் என்னும் சோம தீர்த்தம்
பிரத்யக்ஷம்: சப்தரிஷிகள். லக்ஷ்மி, கருடன்.
                              
மூலவர் சுமார் ஒன்பது அடி உயரம், கடு சக்கரை யோகம் என்னும் கடுகு வெல்லம் ஆகியவற்றால் ஆனவர் என்பதால் திருமஞ்சனம் கிடையாது. வெள்ளி அங்கி சார்த்தி பஞ்சகவ்யம் தெளிப்பது மட்டுமே உண்டு. கருவறையில் திருவாழ்மார்மன் 9 அடி உயரத்தில் வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்டு நான்கு கரத்துடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அருள்புரிகிறார். பின் கைகள் சங்கு, சக்கரம் ஏந்தியிருக்க, முன் வலத்திருக்கரம் அபயமாகவும் இடத்திருக்கரத்தை தொடையில் வைத்த வண்ணம், கழுத்தில் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட பதக்கத்துடன்  திருவாழ்மார்பனாக   எழிலாக  சேவை சாதிக்கின்றார். நம்மாழ்வார் அவதாரம் செய்தது இத்தலத்தில்தான். நம்மாழ்வாரின் தாயார்  உடையநங்கை இவ்வூரை சேர்ந்தவர், அவருக்கும் ஆழ்வார் திருநகரி பொன்காரிக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வெகு காலம் பிள்ளைப்பேறு இல்லாமல் இருக்க தமது குல தெய்வமான  வண்ணமழகிய நம்பி வடிவழகிய நம்பி  திருக்குறுங்குடி நம்பியிடம் பிரார்த்திக்க, யார் போல பிள்ளை வேண்டும் என்று பெருமாள்  வினவ, உம்மைப் போல பிள்ளை வேண்டும்  என்று வேண்ட,   நாமே வந்து உமக்கு மகவாகப் பிறப்போம் என்று அருளியபடி நம்மாழ்வாராக திருவவதாரம் செய்தார் என்பது ஐதீகம். ஆலயத்தின் பின்புறம் திருத்தாயாருக்கு  தனி சன்னதி உள்ளது. 

ஆலயத்தின் முகப்பில் இராமர்  அமர்ந்த கோலப்பெருமாள், நம்மாழ்வார் சுதை சிற்பங்கள் அருமையாக அமைத்துள்ளனர். கருவறையைச் சுற்றிய கர்ணகூடு ஆரம்பகால சோழர்பாணி என்கின்றனர். இத்திருக்கோவிலின் முன்வாயிலை அடுத்து இருக்கும் கிழக்குப் பிரகாரத்தை மகாமண்டபம் என்பர். கொலு மண்டபம் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கிழக்குப் பிரகாரத் தூண்களில் தசாவதார சிற்பங்கள் அருமை. மேலும் சைவ வைணவ   பேதம் இல்லாமல் அனைத்து தெய்வ   சிற்பங்களும் உள்ளன. கிழக்கு வரிசைத்தூண் ஒன்றில் நம்மாழ்வார் சிற்பம் உள்ளது.   




திருவாழ்மார்பன் ஆலயம் கேரள மன்னர்கள் காலத்திலும் சோம லட்சுமி தீர்த்தத்தின் படிக்கட்டுகள் மதுரை திருமலை நாயக்கர் காலத்திலும் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர். தொழுநோயால் பாதிக்கப்பட்ட களக்காடு மன்னன் நோய்தீர மனமுருகி திருவாழ் மார்பனை வேண்ட, நோய் நீங்கியது என்றும் இதனால் மனமகிழ்ந்து இறைவனுக்குத் தங்க கிரீடத்தைக் காணிக்கையாகச் செலுத்தினாராம்.



கருட சேவை 

இவ்வாலயத்தில் நடைபெறும் சித்திரை மாத ஆறாட்டுத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகின்றது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் விழா ஆரம்பமாகின்றது. ஒன்பதாம் திருநாள் தேரோட்டத்தில் பெருமாள் தேரில் வலம் வருகின்றார்.  இத்தேரை மூலம் திருநாள் இராஜா பெருமாளுக்கு தனக்கு குழந்தை பாக்கியம் அருளியதற்காக பெருமாளுக்கு சமர்பித்தாராம்.   விஜய தசமியில் திருவாழ்மார்பனின் தங்கையான திருப்பதி நங்கை வெள்ளைக் குதிரை வாகனத்தில் அம்பெய்யச் செல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் குலசேகர ஆழ்வார் பரமபதித்த ஆடி ஸ்வாதி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகின்றது. இராஜா மார்த்தாண்டவர்மா எதிரிகளிடமிருந்து தப்பிக்க அலைந்த போது இவரையும் வணங்கியுள்ளார். பின்னர் எதிரிகளை வென்று அரசனான பின் தனது  நட்சத்திரமான அனுஷம் திருநாளை விழாவாக கொண்டாடினார்.

இத்தலத்தில், துலாபார நேர்ச்சை முக்கிய வழிபாடாகும். வழிபாட்டு நைவேத்தியங்களில் அரவணை, பால்பாயசம் இரண்டும் குறிப்பிடத்தக்கவை. திருப்பதிக்கு நேர்ந்தால் திருப்பதிசாரத்தில் செலுத்தலாம். திருப்பதிசாரத்தில் நேர்ந்தால் திருப்பதியில் செலுத்த முடியாது என்பது ஐதீகம்.

வருவார் செல்வார் வண்பரிசாரத்திருந்த என்
திருவாழ்மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்?
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு
ஒரு பாடுழ்வான் ஓரடியானு முளனென்றே (தி.வா 8-3-7) 

என்று நம்மாழ்வார்  ஒரே பாசுரத்தினால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பொருள்: திருவண்பரிசாரத்திற்கும் ஆழ்வார் திருகரிக்குமாக போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருப்பவர்களே  திருவண்பரிசாரத்தில் எழுந்தருளியுள்ள திருவாழ்மார்பன் எம்பெருமானிடம்,   தேவரீருடைய சங்க சக்கரங்களை சுமந்து கொண்டு தங்களின் ஒரு பக்கம் வர மேன்மையுடைய  அடியவன் ஒருவன்  உள்ளான் என்று கூறுங்கள்  என்று பாடுகின்றார்.

என் திருவாழ்மார்பன் – அதாவது ஆழ்வாருடைய பெருமாள், என் திரு+வாழ் மார்பன் – அதாவது ஆழ்வாருடைய தாயாராகிய, அனைவருக்கும் தாயாராகிய  அலர் மேல் மங்கை, அகலகில்லேன்  இறையும் என்று  எப்போதும் உறைகின்ற மார்பன் என்றும்  இரு விதமாகப் பொருள் கொள்ளலாம். ஒருபாடுழல்வான் – அதாவது ஒரு பக்கம் என்று எதற்காக ஆழ்வார் பாடியுள்ளார்  என்பதற்கு பெருமாளை பிரியாமல் லக்ஷ்மணன் வில்லைத் தாங்கி ஒரு பக்கம் வந்து கொண்டிருப்பதால், மற்றொரு பக்கம் தான் பெருமாளின் சங்க சக்கரங்களை தாங்கி வர விழைகின்றார் ஆழ்வார் என்று ஆச்சார்யர்கள் இப்பாசுரத்திற்கு விளக்கம் தருவர். 

அடியோங்கள் சென்ற சமயம் திருக்கோவிலின் திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தன எனவே எப்போதும் காலை 10:30 மணியளவில் அடைக்கப்பட வேண்டிய நடை 9:30 மணிக்கே அடைக்கப்பட்டிருந்தது. முன் மண்டபத்தில் உள்ள கற்தூண்களையும் சிற்பங்களையும் மணலை வீசி (Sand Blasting) சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இம்மணலால் சுத்தம் செய்யும் முறை அதிக சேதத்தை விளைவிக்கும் என்றாலும் பல ஆலயங்களில் இன்னும் இதை கடைப்பிடிக்கின்றனர்  என்று வருத்தமாக இருந்தது.   எனவே பெருமாளை சேவிக்க முடியவில்லை. லக்ஷ்மி தீர்த்தத்தில் நீராடிவிட்டு  நம்மாழ்வாரின் திருத்தாயார் சன்னதிக்கு சென்று வணங்கினோம்.   

பின்னொரு சமயம் இத்திவ்விய தேசத்திற்கு சென்ற போது மிகவும் அழகாக வார்னிஷ் பூச்சுடன் தூண்களும், சிற்பங்களும் விளங்குவதை கண்டு களித்தோம் பெருமாளையும் திவ்யமாக சேவித்தோம். அப்போது சீவேலி சேவிக்கும் பாக்கியமும் கிட்டியது. மஹா மண்டபத்தில் பிரம்மாண்ட தூண்கள். அவற்றில் அற்புத சிற்பங்கள் வரிசையாக கை விளக்கேந்திய பாவைகள் இத்திவ்விய தேசத்திலும் காணப்பெற்றோம்.

நம்மாழ்வாருக்கு இத்தலத்தில் பெருமாள் காட்டிய கல்யாண குணம் சௌகுமார்யம்  என்னும் மென்மை  ஆகும். எப்போதும் பெருமாள் சங்கு சக்கரங்களை சுமந்து கொண்டிருப்பதால் எம்பெருமானின் மென்மையான திருமேனி வாடி விடும்,   அவரது கரங்கள் வலிக்கும்  என்று வருந்தி ஆழ்வார் சங்கு சக்கரங்களை தான் சுமந்து கொண்டு ஒரு பக்கம் வருவதாக பல்லாண்டு பாடுகிறார். இதை அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய் ஹ்ருதயத்தில் “சிரமமனம் சூழும் சௌகுமார்யம் ஆய்ச்சேரியிலே    (தாயாரின் ஊரிலே)” என்று கூறுகிறார்  இத்தலத்தில் எம்பெருமான்  காட்டிய மென்மை திருமேனியின்  மென்மை ஆகும். திருமொழிக்களத்தில் காட்டிய மென்மை அடியாரை விட்டுப் பிரிந்தால் மனம் தாங்காது என்னும் மார்த்வம் என்கின்ற மனத்தின் மென்மையாகும்.

அடியும் குளிர்ந்தாள் அறிவும் குலைந்தாள்
முடிகின்றாள்; மூச்சு அடங்கும் முன்னே கடிது ஓடி
பெண்பரிசு ஆர் அங்குப் பிறப்பித்து மீளுவார்
வண்பரிசா ரம்சிறந்த மாற்கு? ( நூ. தி 60)

பொருள்: தலைவியின் கால்களும் குளிரப்பெற்று, அறிவும் அழியப் பெற்று,  மரணமடையும் தறுவாயில் இருக்கின்றாள்; இவளது சுவாசம் அடங்குவதற்கு முன், திருவண்பரிசாரம் சென்று  திருவாழ்மார்பரிடம் இப்பெண்ணின் தன்மையை விளங்கும்படி தெரிவித்து திரும்பி வல்லவர் யாவர்? என்று பிரிவாற்றாது வருந்தும் தலைவியின் நிலை கண்ட செவிலி இரங்கும் பாசுரமாக திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இத்திவ்விய தேசத்தைப் பற்றிப் பாடியுள்ளார்.



ஸ்ரீபதிசாரக்ஷேத்ரே சோம தீர்த்த தடே இந்த்ர கல்யாண விமானச் சாயாயாம் ஸ்திதாய ஸ்ரீகமலவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீநிவாச(திருக்குறளப்ப) பரப்ரஹ்மணே நம:  என்பது இவரது தியானஸ்லோகம் ஆகும்.

இவ்வாறு மலர்மகளை தன் மார்பில் கொண்ட மாதவன் அருளால் இரண்டரை  நாளில் 13  மலை  நாட்டு திவ்ய தேச யாத்திரை நிறைவு பெற்றது. 11 தலங்களில் தான் பெருமாளின் திவ்ய தரிசனம் கிட்டியது. அதில் ஒன்று ஏகாந்த சேவையாக அமைந்தது. எனவே ஒரு அதிகப்படி நாள் வைத்துக்கொண்டு யாத்திரை செல்வது உத்தமமானது. இப்பதிவுடன் மலைநாட்டு திவ்ய தேச தரிசனம் நிறைவு பெற்றது. அடியோங்கள் தரிசித்த மற்ற தலங்களைப் பற்றி நவராத்திரிக்குப்பின் பகிர்ந்து கொள்கின்றேன் அன்பர்களே. 
 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

No comments: