Sunday, August 28, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 6

திருகாட்கரை  - திருக்காட்கரையப்பன் 


எம்பெருமான் வாமன மூர்த்தியாகவும், திரிவிக்ரமனாகவும் சேவை சாதிப்பதால் வாமன க்ஷேத்திரம் என்றும் திரிவிக்ரம மஹா க்ஷேத்திரம் என்றும்  கபில முனிவர் தவம் செய்ததால் “கபில க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படும் திருக்காட்கரை தற்போது திருகாக்கர(ரை) என்று அறியப்படுகின்றது. இத்தலம் ஷொரனூர்எர்ணாகுளம் இரயில் மார்க்கத்தில் இடைப்பள்ளி என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து சுமார் 3கி.மீ தூரத்திலும்,  ஆலுவா திருச்சூர் மார்க்கத்தில் இரிஞ்ஞாலக்குடாவிலிருந்து சுமார் 12கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. எர்ணாகுளத்திற்கு அருகிலும் கொச்சி பல்கலைக் கழகத்திலிருந்து சுமார் 2கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. எனவே  ஆலூவாவிலிருந்தும் எர்ணாகுளத்திலிருந்தும் பேருந்து மூலம் இத்தலத்தை எளிதாக அடையலாம்.

பொதுவாகவே கேரளா என்றால் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது ஓணம் பண்டிகை மற்றும் நேந்திரம் பழம்  ஆகும். அவை இரண்டுமே இத்தலத்துடன்  தொடர்பு கொண்டவை. கேரளத்தில் மலையாள சிங்க மாதத்தில் (ஆவணி மாதம்) பத்து நாட்கள் மிகவும் சிறப்பாக ஓணம் பண்டிகைக் கொண்டாடப்படுகின்றது. பண்டிகையின் முக்கிய நாள்  திருவோண நாள். எம்பெருமானுக்குரிய நட்சத்திரமும் திருவோணம். எனவே பெரியாழ்வாரும் கண்ணனை திருவோணத்தான் உலகாளும் என்பார்களே” என்றும் இன்று “நீ பிறந்த திருவோணம் நீராட வாராய்” என்றெல்லாம் மங்களாசாசனம் செய்துள்ளார்.  அந்த திருவோணத்தோடு தொடர்புடையது இவ்வாலயம். ஓணம் மட்டும் அல்ல பெருமாளின் தசாவதாரத்தில் ஐந்தாவது அவதாரமான  வாமன அவதாரத்துடன் தொடர்புடையது இந்த திவ்யதேசம்.

காட்கரையப்பன் 

பிரகலாதனின் மகன் பலிச் சக்கரவர்த்தி அவர் நேர்மையாகவும் தர்மத்துடனும் அரசாட்சி செய்து வந்தார். ஆயினும் அவரது அகந்தையை அகற்ற அவர் யாகம் இந்த இடத்திற்கு மாணிக்குறளனாக, வாமன மூர்த்தியாக வந்து மூவடி மண் யாசகம் கேட்டார். வந்திருப்பது யார் என்பதை அறிந்த சுக்கிராச்சாரியார் தானம் தரவேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் மூன்றடி மண்ணை தானம் செய்தான். பிறகு எம்பெருமான் அம்பரம் மூடுறுத்து ஓங்கி உம்பர் கோமானாக  ஓரடியால் வானுலகையும், ஓரடியால் பூவுலகையும் அளந்து மூன்றாவது அடி எங்கே? என்று ஓங்கி உலகளந்த உத்தமனாக, திரிவிக்கிரமனாக  நின்று கேட்க தன் தலையை மூன்றாவது அடிக்காக  அளித்தான் பலிச்சக்கரவர்த்தி. அவன் தலையில் தனது திருவடிகளை பொருத்தி அருள் பாலித்து பாதாளத்திற்குள் அவனை அழுத்தி பாதாளத்திற்கு அரசனாக இருக்கும்படி அனுகிரகத்தார் பெருமாள். அசுரனாயினும் உத்தமன் என்பதால் அவனுக்கும் தனது திருவடி தீட்சையை அளித்தார். அப்போது வந்திருப்பதுப் பெருமாளே என்பதை உணர்ந்த பலிச்சக்கரவர்த்தி வேண்டிக் கொண்டபடி  ஆவணி மாத திருவோண நாளில் தன் நாட்டிற்கு வந்து தன் பிரஜைகளைப் பார்த்து செல்ல அனுமதி அளித்தார். இவ்வாறு பலி சக்கரவர்த்திக்கு அனுக்கிரகம் செய்த நாள், அவர் தன் பிரஜகைகளைக் காண வரும் நாளே ஓணம் பண்டிகை நாள்.

பெருமாள் திரிவிக்ரமனாக சேவை சாதிக்கும் மற்ற திவ்ய தேசங்கள் ஓரடியால் உலகை அளந்த சீகாழி விண்ணகரம் (சோழ நாடு), இரண்டாவது அடியால் ஆகாயத்தை அளந்த  திருக்கோவலூர் (டு நாடு), மூன்றாவது அடியால் பலிக்கு அருள் செய்தது திருஊரகம் (தொண்டை நாடு) ஆகும்.

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிருண்டான்
சீர்மல்கு சோலை தென் காட்கரை யென்னப்பன்
கார்முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன் ( தி.வா 9-6-3)

பொருள்: கரிய மேக நிறம் கொண்ட என் அப்பனான எம்பெருமான் அழகு நிரம்பிய சோலைகளுக்குள்  திருக்காட்கரையில் எழுந்தருளியுள்ளான்.  அவன் என்னுள் புகுந்து வஞ்சித்த விதத்தை  நான் அறியவில்லை.  அவன் தலைவனும்  நான் அடியவனுமாக  முறையிலே காரியங்களைச் செய்ய  வேண்டுமென்று  என் மனத்தை இசைவித்த பிறகு  அவன் என் நெஞ்சிற் புகுந்தான்.  இப்படி வஞ்சனையாகப் புகுந்த பின் தன் குணங்களிலே  என்னை ஈடுபடுத்தி நீராகும்படி செய்து விட்டான். என் தலைவனாக உள்ள அவன் என்னைக் காப்பாற்ற வேண்டியிருக்க , மாறாக என் உயிரையே அழித்தான். அதனை அனுபவித்தான். அது வஞ்சனை இல்லையா? அடிமை கொள்ள என்று புகுந்து தன் படிகளைக் காட்டி எல்லாவற்றையும் கொள்ளை கொண்ட தன்மைகளை நினைக்க முடியாதவனாக இருக்கின்றேன் என்று  செழுமை நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்காட்கரையில் எழுந்தருளியுள்ள எம்பெருமான் தனது நீர்மை குணத்தினால் என் நெஞ்சில் வந்து புகுந்து எனக்கு உயிராய் நின்றான் என் உயிரையும் உண்டான். அந்த வஞ்சக்கள்வனின் மாயங்களை நான் அறிகிலேனே  என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த இந்த திவ்ய தேசத்தின் 

மூலவர் : வாமனர்,  என்றழைப்படுகின்றார். சங்குசக்கரம், கதை, பத்மம் தெற்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் நின்ற கோலம். மாபலிக்கு காட்சி கொடுத்த அதே கோலம். அப்பன் என்றும் மலையாளத்தில் அழைக்கப்படுகின்றார். ம்மாழ்வாரும் காட்கரையப்பன் என்றே மங்களாசாசனம் செய்துள்ளார்.
தாயார்: பெருஞ்செல்வநாயகி. வாத்ஸல்ய வல்லி.
தீர்த்தம்:  கபில தீர்த்தம்.
விமானம் : புஷ்கல விமானம்.
பிரத்யக்ஷம்: கபில முனிவர்.

இத்தலத்தில் ஒணம் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பத்து நாட்கள் உற்சவம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். திருவோணாத்தன்று கேரளாவிற்கே உரித்தான ஓண சதய என்னும் ஓண விருந்தை சாதி மத பேதமில்லாமல் ஆயிரக்கணக்கானோர் பிரசாதமாக உண்டு மகிழ்கின்றனர். அன்றைய தினம் உற்சவ நிறைவான ஆறாட்டு எனப்படும் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றது.


கபிலமுனிவர் தவம் செய்த தலம் திருக்காட்கரை. கபிலர் மஹாவிஷ்ணுவின் ஒரு அவதாரமாகவும் கருதப்படுகின்றார். தனது தாயாகிய தேவஹூதிக்கு  ஞானத்தை போதித்தவர் வர். கங்கை இப்பூவுலகில் பாய காரணமாவார். அந்த வரலாறு இதோ, சாகரன் என்னும் அரசன் அஸ்வமேத யாகம் செய்ய குதிரையை அனுப்பினான் அவனுடைய குமாரர்கள் அறுபதினாயிரம் பேர் குதிரையுடன் சென்றனர். இந்திரன் கபடமாக குதிரையை கவர்ந்து சென்று பாதாளத்தில் கபில முனிவர் தவம் செய்து கொண்டிருந்த இடத்தில் கட்டி விட்டு சென்று விட்டான். குதிரையை காணாமல் தேடிய சாகரர்கள் பாதாளத்தில் கபில முனிவரின் அருகில் குதிரையை கண்டனர். முனிவர்தான் குதிரையை கவர்ந்து விட்டார் என்று எண்ணி சாகரர்கள் முனிவரின் நிஷ்டையை கலைத்தனர். எனவே அவர்  சாகரர்களை எரித்து சாம்பலாக்க, தன் மூதாதையர்கள் முக்தி அடைய பாகீரதன் தவம் செய்து கங்கையை பூலோகத்திற்கு கொண்டு வந்தான். இது கங்கை பூலோகத்திற்கு வந்த வரலாறு.   இவ்வளவு சிறப்புகள் கொண்ட கபிலர் வேண்டிக் கொண்டதற்கிணங்க அன்று பலி சக்கரவர்த்திக்கு சேவைச் சாதித்த வண்ணம்  பெருமாள் இங்கு  கோவில் கொண்டதாக ஐதீகம். இத்தலத்தின் தீர்த்தமும் கபில தீர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. இத்தீர்த்தத்தைத்தான் கெண்டியில் எடுத்து பலிச்சக்கரவர்த்தி வாமன மூர்திக்கு மூன்றடி மண்ணை தாரை வார்த்துத் தந்தாராம். 
இனி நேந்திரம் பழத்துடன் இத்தலத்திற்கு உள்ள தொடர்பு என்ன என்று காணலாமா?. ஒரு செல்வந்ர் தன்னுடைய தோட்டத்தில் நிறைய வாழை மரங்களை பயிர் செய்திருந்தார் ஆயினும் அவை எதுவுமே குலை தள்ளவில்லை. எனவே அவர் வாமன மூர்த்தியிடம் நல்ல விளைச்சல் ஏற்பட்டால் பொன் வாழைத்தார் சமர்ப்பிப்பதாக வேண்டிக்கொண்டார். திருமால் பார்வை பட்டதால் அருமையான விளைச்சல் ஏற்பட்டது. பெருமாளிடம் நேர்ந்து கொண்டு விளைந்ததாலும் பெருமாளின் நேத்திர தரிசனம் பெற்று விளைந்ததாலும்  அந்த கதலிப்பழம் நேந்திரம் பழம் ஆனது. வேண்டிக் கொண்டபடி அவர்  ஒரு தங்க வாழைத்தாரை காட்கரையப்பனுக்கு சமர்பித்தார்.


நன்றி : துளசியம்மா

அந்த பொன் வாழைக்குலை  ஒரு சமயம் காணாமல் போய்விட மன்னர் பலரையும் விசாரித்து வரும் போது இக்கோவிலில் தவம் செய்து வந்த ஒரு யோகியை தீர விசாரிக்காமல் மிகவும் துன்புறுத்தினான்.  அதே சமயம்  அபிஷேக நீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கியதால் என்னவென்று பார்த்த போது இந்த பொன் வாழைக் குலை அடைத்து கொண்டதால் இவ்வாறு ந்தது என்பதை அறிந்து யோகியிடம் மன்னிப்பு கேட்க அரசன் சென்றார், அதற்குள்  அந்த யோகி அவமானம் தாங்காமல் இந்த நகரம் தன் செல்வம் அனைத்தையும் இழக்கட்டும் என்று  சாபம் கொடுத்து விட்டு தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். இந்கரமும் தனது செல்வத்தை எல்லாம் இழந்தது. பின்னர் அவர் பிரம்மராக்ஷசனனாக மாறி நகரில் உள்ளவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினார், அந்த பிரம்மராக்ஷனனை அமைதிப்படுத்த ஒரு சிறு சன்னதி அமைத்துள்ளனர். பெருமாளுக்கு நைவேத்யம் செய்த பிரசாதம் பின்னர் இங்கு நைவேத்யம் செய்யப்படுகின்றது. ஒரு யட்சியின் சன்னதியும்  அருகில் உள்ளது. பின்னர் வெகு காலம் கழித்து இந்நகரம் தற்போது உள்ள நிலையை அடைந்தது. வாருங்கள் அன்பர்களே, கபில முனிவருக்காக இங்கு வந்து கோவில் கொண்ட வாமன முர்த்தியைச் சேவிக்கலாம்.

அடியோங்கள் இங்கு சென்று சேர்ந்த போது இரவு நேரம்,   அத்தாழ சீவேலி டைபெற்றுக் கொண்டிருந்தது,  ஆலயத்திற்குச் சாலையில் இருந்து  சிறிது கீழிறங்கி செல்ல வேண்டும். மிகவும் விலாசமாக அமைந்துள்ளது ஆலயம் முதலில் சிவன் சந்நிதி அமைந்துள்ளது. மஹாபலி வழிபட்ட சிவபெருமானாம். மிகப்பெரிய லிங்கத்திருமேனி, நேரம் இல்லாமையால் வெளியிலிருந்தே சேவித்து விட்டு பெருமாள் சந்நிதியை நோக்கி ஓடினோம். சிவன் சன்னதியுடன் பார்வதி, துர்கை, பகவதி, சுப்பிரமணியர், கணபதி சன்னதிகளும் உள்ளன. சிவபெருமானின் ஸ்ரீகோவிலுக்கு எதிரே பலி சக்கரவர்த்தியின் சிம்மாசனம் உள்ளது.

பெருமாள்   சன்னிதியை அடைந்த நேரமும் பெருமாள் சீவேலிக்காக வெளியே வரும் நேரமும் பொருந்தி வந்தது. போத்திகள் தங்கள் கரங்களில் பெருமாளை சுமந்து கொண்டு மூன்று முறை வலம் வந்தனர். முதல் முறை  உடுக்கையுடனும், இரண்டாவது முறை நாதஸ்வர இசையுடனும். மூன்றாம் முறை செண்டை மேளத்துடனும் பெருமாள் வலம் வந்த போது அடியோங்களும் அவரது திவ்ய சௌந்தர்யத்தை பருகிக் கொண்டே உடன் வலம் வந்தோம். சீவேலியின் போது போத்திகள் மிகவும் வேகமாக நடந்து செல்கின்றனர். சீவேலிக்காக உற்சவர் வெளியே எழுந்தருளும் போது ஸ்ரீகோவில் கதவு அடைக்கப்படுகின்றது மற்றும் யாரையும் நலம்பலத்திற்குள் அனுமதிப்பதில்லை. பெருமளையும் நாம் தூரத்தில் இருந்துதான் சேவிக்க வேண்டும் அருகில் செல்ல அனுமதிப்பதில்லை.

இத்தலத்தில் ஒரு வித்தியாசமான அமைப்பைப் பார்த்தோம். பலி பீடம் கொடிமரத்திற்கும் கோவிலுக்கும் இடையில் இருந்தது,  பலி பீடத்திற்கு தங்கக்கவசம் சார்த்தியிருந்தனர், பலி பீடம் மேற்கூரையுடன் தூண்களுடன் இரு பக்கமும் திண்ணைகளுடன்  கூடிய ஒரு  மண்டபத்தில் அமைந்திருந்தது. மேலும் பூமி மட்டத்திலிருந்து சிறிது கீழே இருந்தது. பெருமாள் சீவேலி முடித்து ஸ்ரீகோவிலின் உள்ளே சென்ற பின்னரே உள்ளே அனுமதித்தனர். ஆரத்திச் சேவையும் தீர்த்தப் பிரசாதமும் கிட்டியது.

மண்டபத்தில் பலிபீடம்
வட்ட வடிவ ஸ்ரீகோவில் தொப்பி போல விமானம்,  துவார பாலகர்கள் காவல் காக்கின்றனர்.  சுற்றம்பலத்தில் தீப வரிசை உள்ளது. தாயார் பெருஞ்செல்வ நாயகியாய் அருள் பாலிப்பதால் செல்வம் நிறைந்த ஆலயமாகவே தற்போது  விளங்குகின்றது.  ஸ்ரீகோவிலின் முகப்பில் இரு பக்கமும் சங்கமும் சக்கரமும் அமைத்துள்ளனர். அவையும் சோபனமும் தங்க கவசம் பூண்டுள்ளன. பெருமாள் நின்ற கோலத்தில் சதுர்புஜராக  சங்கம், சக்கரம், பத்மம், கதை தாங்கி   வாமன திரிவிக்கிரம பெருமாளாக சேவை சாதிக்கின்றார். மிக்கபெரும் புகழ் மாவலி வேள்வியில் தக்கதிதன்றென்று  தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பாற்கிளரிய சக்கரக்கையனை, மன்னு நமுசியை வானிற் சுழற்றிய மின்னுமுடியனை விளக்கொளியில்  திவ்யமாக சேவித்தோம். ஆலய வளாகத்தில் உள்ளே பிரம்மாண்ட அரச மரம் உள்ளது. 

இத்தலத்தில் பெருமாள் ம்மாழ்வாரை வரவழைத்து  தனது சௌசீல்ய குணத்தை காட்டியருளினார். சௌசீல்யம் என்பது உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களுடன்  இரண்டற கலத்தல், தோழமை கொள்ளல்  ஆகும். சக்கரவர்த்தித் திருமகன் இராமபிரான் குகனுடனும், சுக்ரீவனுடனும், விபீஷணனுடனும் சகோதரனாக கொண்ட உறவு சௌசீல்யம் ஆகும். இத்தலத்திற்கு ஆழ்வாரை வரவழைத்தார் பெருமாள்.  ஆழ்வாரும் பெருமாளும் சந்தித்துக்கொண்ட பின் ஆழ்வார் தன்மை பெருமாளுக்கு வந்து விட்டதாம். பெருமாள் ஆழ்வாருக்கு கைங்கரியம் செய்ய துவங்கிவிட்டார் என்பார்கள் பெரியோர்கள். ’போகத்தில் தட்டுமாறும் சீலம் காட்கரையிலே கரையழிக்கும்” என்பது பிள்ளைப்பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய ஹ்ருதயத்தில் குறிப்பிடுகின்றார்.

மாற்கமும் தாம்தாம் வழிபடும் தெய்வமும்
ஏற்க உரைப்பார்சொல் எண்ணாதே, - தோற்குரம்பை
நாள்கரையா முன்னமே நல்நெஞ்சே! நாரணன்ஆம்
காட்கரையாற்கு ஆள் ஆகாய் காண். (நூ தி. 61)

பொருள்: மனமே! அவரவர்கள் கைக்கொள்கின்ற வழிகளும், அவரவர்கள் வழிபடுகின்ற தெய்வமும் பொருந்துமாறு பேசுகின்ற வேற்று மதத்தவர் சொல்லை மதியாமல்,  தோலால் மூடப்பட்ட இந்த உடல் விழுவதன் முன்னம் திருக்காட்கரை என்னும் திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமந்நாராயணனுக்கு  அடிமைப்படுவாயாக என்று  திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இந்த திவ்விய தேசத்தைப் பற்றி பாடியுள்ளார்.ஸ்ரீ காட்கர ஸ்ரீமந் நீராத சேது க்ஷேத்ரே கபில புஷ்கரணி தடே புஷ்கல விமானச்சாயாயாம் ஸ்திதாய தக்ஷிணிணாம் முகாய ஸ்ரீமதே வாத்ஸல்யவல்லி  நாயிகா சமேத ஸ்ரீகாட்கரஸ்வாமி தேவாதி தேவ பரப்ரஹ்மனே நம:” என்பது இவரது த்யான ஸ்லோகம் ஆகும்.


ந்த மலை நாட்டு திவ்ய தேச யாத்திரையின் முதல் நாள் திருநாவாய், திருவித்துவக்கோடு, திருமூழிக்களம், திருக்காட்கரை ஆகிய நான்கு  திவ்யதேசங்களை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.  பெருமாளை திவ்யமாக சேவித்த பின்னர் சோட்டாணிக்கரைக்கு புறப்பட்டு சென்றோம். அங்கேயே இரவு தங்கினோம். மறு நாள் ந்தெந் திவ்ய தேசங்களை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது என்று  அறிய ஆவலாக உள்ளதா? சிறிது பொறுங்கள் அன்பர்களே உறங்கி விழிக்கின்றோம்.”
  
மற்ற திவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள்  :


படத்தை பெரிது செய்து பார்க்கவும்  மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

No comments: