Saturday, August 27, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 5

திருமூழிக்களம் - லக்ஷ்மணபெருமாள் 


 மலைநாட்டு திவ்யதேச தரிசன வரிசையில் அடியோங்கள் தரிசித்த அடுத்த தலம் திருமூழிக்களம் ஆகும். குருவாயூரில் ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் திருவஞ்சிக்களத்தில் குலசேகராழ்வாரை சேவித்த பின் அடுத்த திவ்ய தேசமான திருமூழிக்களத்திற்கு பயணம் செய்தோம். இவ்வாலயம் நெடும்பாதையிலிருந்து சிறிது உள்ளே உள்ளதால் வழி விசாரித்துக் கொண்டே செல்ல வேண்டி இருந்தது. எங்களுடன் வந்த ஸ்ரீகுமார் ஐயா அவர்கள் மலையாளம் பேசுவார் என்பதால் மிகவும் உதவியாக இருந்தது. சாலையில் இருந்து கோவிலுக்கு செல்லும் இடத்தில் எழிலான தோரண வாயில் அமைத்துள்ளனர்.


வழியெங்கும் கேரளத்தின் இயற்கை எழிலை மா, பலா, வாழை மரத்தோப்புகளையும், வானத்தை ஒட்டடை அடிக்கும் கொத்துக் கொத்தாக காய்கள் தொங்கும் கமுகு மரங்களையும், இரப்பர் தோட்டங்களையும், தண்ணீர் நிறைந்த பல குளங்களையும் கண்டு களித்துக் கொண்டே சாயுங்கால நேரத்தில் இத்திவ்ய தேசத்தை அடைந்தோம், அந்த அற்புதத் தரிசனத்தை பகிர்ந்து கொள்ள வம்மின் அன்பர்களே.

பலா

 இத்தலம் எர்ணாகுளத்திற்கு அருகில் உள்ளது. அலுவாயிலிருந்து பேருந்தில் சென்றடையலாம். திருச்சூரிலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஷொரனூர் எர்ணாகுளம் புகைவண்டி மார்க்கத்தில் அங்கமாலியில் இறங்கி பின்னர் இத்தலத்தை அடையலாம்.

இத்தலம் கேரளத்தில் இராமாயண சகோதரர்களுக்கு உண்டான நான்கு ஆலயங்களில் லக்ஷ்மணனுக்குரிய ஆலயமாகும். இந்த நான்கு ஆலயங்களும்நா லம்ப லம் என்று அழைக்கப்படுகின்றது. 

தக்கிலமே கேளீர்கள்! தடம் புனல்வாய் இரை தேரும்
கொக்கு இனங்காள் குருகு இனங்காள் குளிர்மூழிக்களத்து உறையும் 
செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனிவாய்
அக்கமலத்து இலைப் போலும் திருமேனி அடிகளுக்கே ( தி.வா 9-7-3) 

என்று எம்பெருமானது வடிவழகில் ஈடுபட்ட பராங்குச நாயகியாய் நம்மாழ்வார் பெருமானது வடிவழகையே பற்றுக்கோடாகக் கொண்டு தலைவியாக திருமூழிக்களத்திற்கு பறவைகளை தூது விடும் பாவத்தில் 11 பாசுரங்களால் பல்லாண்டு பாடியுள்ளார். 

பொருள்: அகன்ற நீர்நிலைகளிலே இரை தேடும் கொக்குக் கூட்டங்களே! உடன் உள்ள குருகுகளே! குளிர்ந்த திருமுழிக்களத்திலேயுள்ள எம்பெருமானிடம் சென்று அவன் அழகில் ஆட்பட்டு இழந்துள்ள நாங்கள் அவனுக்கு தகுதியற்றவர்களோ? என்பதை உறுதியாகக் கேளுங்கள். அவ்விறைவனின் திருக்கண், திருக்கரங்கள், திருவடிகள் ஆகியவை செந்தாமரை மலர்ப் போல் அழகுள்ளவை; அவருடைய திருவாய் சிவந்து கனிந்தது. அவர் திருமேனியோ, தாமரையின் இலைபோலப் பசுமை உடையது. இப்படிப்பட்ட அழகனைக் காண எங்களுக்குத் தகுதியில்லையா? என்று வினவுகிறார் ஆழ்வார்.

அந்தி நேரத்தில் ஆலயத்தின் அழகு


இவ்வாறு திருமூழிக்களம் என்று ஆழ்வார்கள் பாடிய இத்தலம் ஒரு காலத்தில் திருமொழிக்களம் என்று அறியப்பட்டிருக்கின்றது. ஹரித முனிவர் இங்கு மஹாவிஷ்ணுவை நோக்கித் தவம் செய்ய அவர் தவத்திற்கு மெச்சிப் பெருமாள் தோன்றி, என்ன வரம் வேண்டும்? என்று கேட்க இப்பூவுலகில் உள்ளவர்கள் உய்ய வழி கூற வேண்டும் என்று முனிவர் விண்ணப்பிக்க பெருமாளும் வர்ணாஸ்ரம தர்மம், யோக சாஸ்திரம், திருமந்திரம் ஆகிய ஸ்ரீஸூக்திகளை அதாவது திருமொழிகளை அருளினார், அவற்றை நூலாக எழுதுமாறும் பணித்தார். எனவே இத்தலம் திருமொழிக்களமானது பின்னர் மருவி தற்போது திருமூழிக்களமானது என்கின்றனர். வடமொழியில் பெருமாள் ஸ்ரீஸூக்தி நாதன் என்றழைக்கப்படுகின்றார்.


கருடன்
நன்றி : துளசியம்மா

கொடிய கைகேயி வரம் வேண்ட, குலக்குமாரனும் காடுறைய வந்து சித்ரகூடத்தில் பிராட்டியுடனும், இளவல் இலக்குவனுடனும் தங்கியிருந்தான். அப்போது பரத நம்பி அண்ணனின் பாதம் பணிய வந்தான், பெரும் படை வருவதை கண்டு இலக்குவன், பரதன் அண்ணன் மேல் படை எடுத்து வந்திருக்கின்றானோ? என்று அவன் மேல் கோபம் கொண்டான். ஆனால் பரதனோ ஸ்ரீராமன் பாதம் பணிந்து பாதுகைகளை பெற்று சென்று நந்தி கிராமத்தில் தங்கி அண்ணனின் பிரதிநிதியாக ஆட்சி செய்தான். உண்மையை உணர்ந்தான் இலக்குவன். ஆனாலும் வெளிப்படையாக பரதனிடம் மன்னிப்புக் கேட்காத குறை இலக்குவன் மனதில் இருந்தது,

பலிபீடம் 

கொடிமரம் 

ஒரு சமயம் பரதனும் இலக்குவனும் இத்தலத்திற்கு வந்து வணங்கிய போது ஹரித முனிவர் அவனது அந்தக் குறையை கூறினார். இலக்குவனும் அருகில் இருந்த பரதன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். ஆனால், பரதனோ, ‘இதில் மன்னிப்புக் கேட்க எதுவுமே இல்லை, இலக்குவா, இராமனின் அத்யந்த தம்பி நீ, இராமனுக்கு எந்த குறையுமின்றி, கானகத்திலேயே அவரை கண்ணிமைக்காமல் காத்தவன் நீ. ஆகவே சித்ரகூடத்தில் என் மீது நீ கோபம் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. உண்மை தெரிந்த பிறகும், என் மீதான உன் சந்தேகம் நீங்காததற்கு உன்னுடைய சிறப்பான இராம பக்தியே காரணம். ஆகவே அதற்காக நீ குற்ற உணர்வு கொள்ளாதே என்று மிகுந்த பெருந்தன்மையுடன் கூறினான். ஆனாலும், தன் குற்றத்துக்குப் பிராயச்சித்தம் செய்ய விரும்பிய இலக்குவன், முனிவர் யோசனைப்படி, இந்தத் தலத்தை, திருமொழிக்களத்தான் கோயிலைப் புதுப்பித்து, பெருமாளை வணங்கி, தன் மனக்குறை நீங்கப் பெற்றான். இப்படி இலக்குவன் புதுப்பித்தத் தலத்தில் உறையும் பெருமாளை எனவே ‘லக்ஷ்மணப் பெருமாள்’ என்று அழைக்கிறார்கள். இராமாயண சகோதரர்கள் நால்வருக்கும் கேரளத்தில் தனித்தனி கோயில் இருந்தாலும், பெருமாள் என்ற பெருமை லக்ஷ்மணனுக்கு மட்டுமே உண்டு.

பொன்னானாய் பொழிலேழும் காவல் பூண்ட
      புகழானாய்! இகழ்வாய தொண்டனேன் நான் 
என்னானாய் என்னானாய்! என்னல்லால்
      என்னறிவேனேழையேன்? உலக மேத்தும்
தென்னனாய்! வடவானாய்குட பாலானாய்!
  குணபாலமதயானாய்! இமையோர்க் கென்று  
 முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
 திருமூழிக் களத்தனாய்முதலா னாயே (தி.நெ 10) 

பொருள்: உலகம் முழுவதும் துதிக்கத்தக்க தென் திருமாலிருஞ்சோலை மலையில் நின்ற யானை போன்றவனே! வட திருவேங்கடத்தில் நின்ற யானை போன்றவனே! மேற்றிசையில் திருவேங்கடத்தில் திருக்கண் வளரும் யானை போன்றவனே! கீழ்த்திசையில் திருக்கண்ணபுரத்தில் மதயானை போன்றவனே! எக்காலத்தும் நித்யசூரிகள் கண்டு அனுபவிக்கும்படி முன் நிற்பவனே! அவதாரத்திற்கு பிற்பட்டவர்கள் வணங்கத்தக்க சோதியாய் திருமூழிக்களத்தில் வாழ்பவனே! உலக முதல்வனே! பொன் போன்றவனே! எழுலகங்களையும் காத்தருள்வதால் வந்த புகழுடையவனே! இகழ்வையே வடிவாக உடைய தொண்டனான அடியேன் என்னுடைய யானையே! என்று சொல்லுவதல்லாது வேறு என்னவென்று சொல்ல அறியேன். என்று திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்த பாசுரத்தில் இராமனை அவரது பின்னவர்களான பரதன், லக்ஷ்மணன் வணங்கிய செய்தியை நமக்கு கூறுகின்றார்.  இந்த திவ்ய தேசத்தில்

மூலவர்: லக்ஷ்மணப்பெருமாள், திருமூழிக்களத்தான்.
தாயார்: மதுரவேணி நாச்சியார்
விமானம்: சௌந்தர்ய விமானம்.
தீர்த்தம்: சங்க தீர்த்தம், சிற்றாறு தீர்த்தம்.
மங்களாசாசனம்: நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்.

இவ்வாலயம் சாலக்குடி ஆற்றின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது. ஸ்ரீகோவில் வட்ட வடிவிலும் விமானம் துவிதள அதாவது இரண்டடுக்கு கூம்பு வடிவில், தாமிரத் தகடு போர்த்தப் பட்டு எழிலாக அமைந்துள்ளது. பெருமாள் சதுர்புஜ விஷ்ணுவாகத்தான் சேவை சாதிக்கின்றார். இடது திருக்கரம் சங்கம் ஏந்தியிருக்க, வலது திருகரத்தில் உள்ள சக்கரம் எந்தக் கணமும் பாயத் தயாராக இருக்கும் பிரயோக சக்கரமாக விளங்குகிறது. தன் பக்தர்களுக்கு ஏதேனும் துயரென்றால் அதை உடனே தீர்த்து வைக்கும் சுறுசுறுப்பை அது உணர்த்துகிறது. வல கீழ் கரத்தில் கதை, கீழ் இடதுகரம் அரவணைக்கும் தோரணையில் திவ்யமாக சேவை சாதிக்கின்றார். இரண்டாம் பிரகாரத்தின் உள் சுவர்களில் அருமையான இராமயண ஓவியங்கள் உள. அதில் இராம பட்டாபிஷேக ஓவியம் கண்ணை விட்டு அகல மறுக்கின்றது. இன்றும் பழமை மாறாமல் இயற்கை மூலிகை வர்ணங்களையே பயன்படுத்துன்றனர். பெரிய தூண்கள் நிறைந்த தலம்.

திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில்
னியேய்ப்பரங்குன்றின் பவளத்திரளே!
முனியே! திருமூழிகளத்து விளக்கே!
இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய
கனியே! உன்னைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே! (பெ.தி 7-1-7)

பொருள்: பனி படர்ந்த இமயமலையில் திருப்பிரிதியில் எழுந்தருளியுள்ள பவளங்கள் திரண்டாற்போல அழகியவனே! அடியாருடைய நன்மைகளைச் சிந்திப்பவனே! திருமூழிக்களமென்னும் திருப்பதியில் விளக்குப்போல விளங்குபவனே! இனிமையானவனே! தொண்டவரான அடியோங்கள் பருகுவதற்கு உரிய இனிய அமுதமானவனே! கனி போன்றவனே! உன்னைச் சேவித்து பிழைத்துக் கொண்டேன் என்றும், பெரிய திருமடலில்

என்னை மனங்கவர்ந்த ஈசனை வானவர் தம் முன்னவனை மூழிக்களத்து விளக்கினை....... (பெ.தி.ம 129) 

பொருள்: நித்திய சூரிகளின் தலைவனாய் திருமூழிக்களத்தில் விளக்குப் போல் சுடர் வாய்ந்து நிற்பவன் என்றும் இப்பெருமாளை ஜோதி வடிவினனாக மங்களாசாசனம் செய்துள்ளார்.


இராம பட்டாபிஷேக ஓவியம்



பெருமாள் இத்தலத்தில் அறியாமை என்னும் இருளை அகற்றி ஞானம் வழங்கும் பெருமாளாக சேவை சாதிக்கின்றார். தீபம் எவ்வாறு தன்னையும் சுற்றியுள்ளவற்றையும் பிரகாசிக்கின்றதோ அது போல பெருமாள் தன்னையும் தர்ம சாஸ்திரங்களையும் இந்த திவ்ய தேசத்தில் காட்டிக் கொடுத்தார். இத்திருக்கோவிலில் இரண்டாம் சுற்றில் விளக்கு மாடம் எழிலாக அமைத்துள்ளனர். ஆயிரக்கணக்கான விளக்குகளை வேகு நேர்த்தியாக உள்ளன. மாலை நேரம் சென்றதால் அந்த தீபங்கள் அனைத்து, சுடர்விட்டு எழிலாக பிரகாசிக்க பெருமாளின் ஆரத்தியும் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. நான்கு வாயில்களிலும் கல் சர விளக்குகள் அமைத்துள்ளனர். சுற்றம்பலத்தின் கூரைகளை யாழிகள் தாங்குகின்றன, மரத்தால் ஆன இந்த யாழிகளுக்கு நேர்த்தியாக வெள்ளை வர்ணம் பூசியுள்ளனர். ஒரே நேர் கோட்டில் அனைத்து யாழிகளும் அமைந்துள்ள காட்சி அருமையாக இருந்தது.
திப்பு சுல்தானின் படையெடுப்பின் போது மூலவர் சிலை சேதப்பட்டது இரு கரங்களும் சேதமடைந்தன காலிலும் விரிசல் உண்டாகியது. எனவே வெள்ளியில் ஒரு கவசம் செய்து அணிவித்த அன்றே திருட்டுப் போய்விட்டதாம். பின்னர் தேவ பிரசன்னம் பார்த்தபோது மூலவருக்கு அங்கி தேவையில்லை என்று வந்ததாம். எனவே அவ்வாறே உடைந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.

ஒழிவின்றி திருமூழிக் களத்துறையும் ஒண்சுடரை
 ஒழிவில்லா அணிமழலைக் கிளிமொழியாள் அலற்றியசொல் 
 வழுவில்லா வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அழிவில்லா ஆயிரத்து இப்பத்தும் நோயறுக்குமே (தி.வா 9-7-11)

பொருள்: ஒளிமயமான பெருமாள் திருமூழிக்களத்தே நீங்காமல் எழுந்தருளி இருக்கின்றான். அவனைப்பிரிந்த நிலையில் விரகதாபத்தால் துன்பப்பட்ட தலைவி பேசும் பேச்சாகக் குருகூர்ச் சடகோபர் பாசுரம் அருளியுள்ளார். இனிய மழலை ததும்பும் கிளியின் பேச்சுப் போல மொழியவல்ல நாயகியின் துன்பக்குரலாக உள்ள குற்றம் அற்ற இப்பத்து பாசுரங்களும் அவர் அருளிய அழிவில்லா ஆயிரத்துள் வருவன. இவற்றைக் கற்பார்க்கு இவை பிரிவுக்குக் காரணமான பிறப்பாகிய நோயினை அறுத்துப் பிரிவில்லாத தேசத்திலே புகும்படி செய்யும். என்று திருமூழிக்களத்தப்பனை ஆழ்வார்களின் பாசுரங்களை இனிமையாக பாடிக்கொண்டு சேவித்தால் தீராத பிறவி நோயும் தீரும் என்று உறுதியாக கூறுகிறார் நம்மாழ்வார்.


விளக்கு மாட சுற்று



யாழிகள் கூரையை தாங்கும் நேர்த்தி 




இந்த திருமூழிக்களத்து எம்பெருமான் நம்மாழ்வாருக்கு “அன்பர்களுக்கு அருளும் மிருதுத் தன்மை” என்னும் கல்யாண குணத்தை காட்டி அருளினான் என்பது ஐதீகம். இங்குள்ள சான்றோர்கள் மற்றும் பக்தர்களை விட்டுப் பிரியாமல் எம்பெருமான் இருந்து கொண்டு ஆழ்வாரை மறந்து விட, பிரிவாற்றாமையினால் ஆழ்வார் தன்னை நாயகியாக பாவித்து பறவைகளை தூது விடுகின்றார். அதன் பின் எம்பெருமான் தனது சௌந்தர்யத்தையும் லாவண்யத்தையும் காட்டியபடி ஆழ்வாருக்கு சேவை சாதித்தார் என்பார்கள் பெரியோர்கள்.

காண்கின்ற ஐம்பூதங்கட்கும் இரு சுடர்க்கும்
சேண்கலந்த இந்திரற்கும், தேவர்க்கும், - 
மாண்கரிய பாழிக்களத்தாற்கும், பங்கயத்து
நான்முகற்கும் – மூழிக்களத்தான் முதல். (நூ தி. 62)

பொருள்: கண்ணுக்குப் புலப்படுகின்ற ஐம்பூதங்களுக்கும், சூரிய சந்திரர்களுக்கும், இந்திரனுக்கும் மற்றும் ஏனைய தேவர்களுக்கும்,, விடமுண்டு கருத்த கண்ட ஈசனுக்கும், தாமரை மலரில் வசிக்கின்ற பிரம்மனுக்கும், திருமூழிக்களத்தில் எழுந்தருளியுள்ள திருமாலே மூலகாரணமாவார், என்று திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது 108 திருப்பதி அந்தாதியில் இந்த திவ்ய தேசத்தைப் பற்றிப் பாடியுள்ளார். இந்த திவ்ய தேசத்திலும் தங்கும் வசதிகள் கிடையாது, அருகில் உள்ள பெரிய ஊர்களில் தான் தங்க வேண்டும்.

ஆலய முகப்பில் குடும்பத்தினர்


கோவையில் இருந்து பாலக்காடு வழியாக கேரளாவில் நுழைந்து அதன் அருகில் உள்ள திருநாவாய், திருவித்துவக்கோடு ஆகிய திவ்ய தேசங்களை சேவித்துவிட்டு பின் திருச்சூர் அருகில் உள்ள குருவாயூர் சேவித்து தெற்காக பயணம் செய்து திருச்சூருக்கும் எர்ணாகுளத்திற்கும் இடையில் உள்ள திருமூழிக்களத்தை சேவித்து விட்டு “ஸ்ரீஸூக்தி க்ஷேத்ரே சங்க புஷ்கரணி தடே சௌந்தர்ய விமானச்சாயாயம் ஸ்ரீமதே மதுரவாணி நாயிகா சமேத ஸ்ரீஸூக்திநாத பரப்ரஹ்மனே நம:” என்னும் தியான ஸ்லோகத்தை ஜெபித்துக்கொண்டே முதல்நாளின் இரவு நேரத்தில் எர்ணாகுளம் அருகில் உள்ள திருகாட்கரை என்னும் திவ்ய தேசத்தை அடைந்தோம். அடுத்து பலியின் கர்வம் தீர்த்து ஓணம் பண்டிகை உருவாக காரணமாக இருந்த திருகாட்கரையப்பனை சேவிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.


மற்ற திவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள்  :

திருநாவாய்    திருவித்துவக்கோடு               திருக்காட்கரை           திருக்கடித்தானம்    

 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

2 comments:

DHARUMAN said...

அருள்மிகு . லட்சுமணபெருமாள்
108 திவ்விய தேசங்களில் இதுவும் ஒன்றாகும்
குல தெய்வமாய் கொண்டுள்ள மலையாளி இன மக்களுக்கு நல்ல வழி காட்ட இறைவனை பிரார்த்திக்கிறேன் .

அன்புடன்

எல்.தருமன்
புதூர்செக்கடி.
தண்டராம்பட்டு வட்டம்
திருவண்ணாமலை
மாவட்டம்
9585725060

DHARUMAN said...

கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்திலுள்ள திருமூழிகளத்தில் அமைந்துள்ள அருள்மிகு .லட்சுமணபெருமாள் கோயில்தான் கல்வராயன் மலை மற்றும் சித்தேரிமலை ,
திருவண்ணாமலை மாவட்டம் 18. பட்டி கிராமங்களில் வாழும் பீலன் மற்றும் பாண்டியன் வீட்டு கூட்டங்களுக்கு லட்சுமண பெருமாள் குலதெய்வமாக உள்ளது. இந்த லட்சுமணபெருமாள் காஞ்சிபுரத்தில் வீற்றிருந்த லட்சுமண பெருமாளாகவும் , பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்யாணகிரி எனும் ஊரில் லட்சுமண பெருமாளாகவும் , கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை வட்டம் தும்ராம்பட்டு கிராமத்திலும் கோயில் கொண்டுள்ளார்.
2022 ம் ஆண்டு வைகாசி திங்கள் 26 ம் நாள் ( 09. 06.2022)
அன்று புதூர்செக்கடி கிராம மக்களின் முயற்சியில் கட்டி முடிக்கப்பட்ட அருள்மிகு.லட்சுமண பெருமாளுக்கு கும்பாபிஷேகம்
வெகு விமரிசையாக நடைபெற உள்ளது என்பதை அன்புடன்
தெரிவித்துக்கொள்கறோம் .



கிராம
பொதுமக்கள்
். சார்பாக

எல்.தருமன்
புதூர்செக்கடி
தண்டராம்பட்டு
வட்டம்
திருவண்ணாமலை
மாவட்டம்
9585725060.