Sunday, July 10, 2016

நானேயோ தவம் செய்தேன் -2

ஸ்ரீவாரி சேவா

ஆதி சேடனாம்   கிழக்குத் தொடர்ச்சி மலையின் 
தலைப்பகுதி திருவேங்கடம்  


ஸ்ரீவாரி சேவை ஆரம்பித்ததில் இருந்து பல வருடங்களாக சேவைக்கு செல்ல வேண்டும் என்று ஒரு ஆசை,  ஆனால் நேரம் கூடி வரவில்லை அவர் நினைத்தால்தானே அவன் நிழலில் இருக்க முடியும். எப்படியோ அந்த வாய்ப்பும் வந்தது. ஒரு தடவை எட்டு நாட்கள் விடுமுறை எடுக்கக்கூடிய வாய்ப்பு வந்தது. சென்னையில் இருந்து சேவைக்கு சேவார்த்திகளை அனுப்பும்  சேவாஸ் அமைப்பினர் பல்லாவரம் அவர்களை தொடர்பு கொண்டேன். வரும் வாரத்தில் சேவார்த்திகள் தேவை. தாங்கள் சேவையில் கலந்து கொள்ளலாம் என்று கூறினார்கள். சென்னையில் இருந்து செல்பவர்களுக்கு திங்கள் முதல் ஞாயிறு வரை 7 நாட்கள் சேவை எட்டாம் நாள் காலை இரண்டாம் திங்கள் கிழமை தரிசனம் செய்து வைத்து பிரசாதம் வழங்குவார்கள். அன்று மாலைக்குள் சென்னை திரும்பி விடலாம் என்று கூறினார்கள். ஒவ்வொரு ஊருக்கும் தனித் தனி அட்டவணை உள்ளது எனவே தினமும் புதிய சேவார்த்திகள் வந்து கொண்டும், சேவை முடித்தவர்கள் திரும்பி சென்று கொண்டும் இருப்பர்.


அஹோபிலம் -  மஹா நந்தி  முதுகுப்பகுதி


அவர்கள் எதாவது ஒரு தடவை கர்ப்பகிரக சேவைக்கு வாய்ப்புத்தருவார்கள் அப்போது திருவேங்கடவனை எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் சேவிக்க வாய்ப்புக்கிட்டும் என்றும் கூறினார்கள். சென்னை கோயம்பேட்டிலிருந்து இரவு 11 மணிக்கு ஆந்திர அரசு போக்குவரத்தின் ஒரு விரைவு வண்டி செல்கின்றது. அதில் சென்றால் அதிகாலை 3 மணியளவில் திருமலையை அடைந்து விடலாம். அ‘ங்கு சென்று PAC என்னும் தங்கும் விடுதியில் தங்கிக்கொள்ளவும்.  காலை 7 மணியளவில் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சேவா சதன் சென்றால் அங்கு எங்களுடைய ஒருங்கிணைப்பாளர் வருவார் அவர் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உங்களையும் மற்றும் இந்த வாரம் சேவை செய்யும் மற்றவர்களையும் அங்கு அறிமுகப்படுத்தி விட்டு திரும்பி விடுவார். இரண்டு புகைப்படங்கள்,  ஏதாவது ஒரு  அடையாள அட்டை  எடுத்துச் செல்லவும், குளிருக்கு தகுந்த கம்பளி உடைகளை எடுத்துச் செல்லவும்,  தங்கள் பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு லாக்கர் தருவார்கள் அதற்கான பூட்டையும் சாவியையும் தாங்கள்தான் எடுத்துச்செல்லவேண்டும். அவர்கள் கொடுக்கும் காவி ஸ்கார்ப்பை பத்திரமாக வைத்துக்கொள்ளவும், அது தொலைந்து விட்டால் சிரமம் என்று கூறினார்கள்.ஆதி சேஷன் மேல் அமைந்துள்ள  திருத்தலங்கள் 


அதுபோலவே கோயம்பேடு சென்று இரவு பேருந்திற்கு முன்பதிவு செய்து கொண்டு திருமலை அடைந்தேன். ஒருங்கிணைப்பாளரும் வந்து எல்லா கடமைகளையும் முடித்து விட்டு சென்றார். எங்கள் குழுவில் 5 ஆண்கள் 2 பெண்கள் என்று மொத்தம் 7 சேவார்த்திகள்தான் இருந்தோம்.  முதல்நாள் எல்லாரின் புகைப்படம் மற்றும் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். முதல் நாள் காலை எங்களுக்கு படியேறி வருகின்ற அன்பர்களுக்கு உணவு வழங்குகின்ற சேவை கொடுத்தார்கள். சேவையை முடித்துக்கொண்டு சேவா சதன் திரும்பியவுடன் ஒரு இனிய செய்தி காத்திருந்தது இரவு எட்டு மணியில் இருந்து கர்ப்பகிரக சேவை ஒதுக்கியுள்ளோம் என்று ஆச்சரியப்படுத்தினார்கள். திருவேங்கடவனுக்கு ஆயிரம் நன்றிகள் கூறி குளித்துவிட்டு தயாரானோம்.


நேரத்திற்கு முன்னரே கோபுர வாசலில் சென்று எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். சமயம் வந்தவுடன் எல்லாருடைய புகைப்படத்துடன் கூடிய தற்காலிக அடையாள அட்டை வழங்கினார்கள். ஒவ்வொருவருக்கும் ஆலயத்தின் உள்ளே பல்வேறு இடங்களில் சேவையை ஒதுக்கினார்கள். இருவருக்கு சுவாமி முன்னரே சேவை செய்யும் பாக்கியம் கிட்டியது. அடியேனுக்கு வரதராஜ சுவாமி சன்னதியில் சேவை செய்யும் பாக்கியம் கிட்டியது. இதையில் ஒரு தடவை உள்ளே சென்று ஏழுமலையானை நீண்டநேரம் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. பின்னர் ஏகாந்த சேவை ஆரம்பிக்கும் சமயம் அனைவரையும் உள்ளே இன்னொரு முறை திருமலையப்பனை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. ஏகாந்த சேவையின் போது உட்பிரகாரத்தில் உட்கார வைத்தனர். பெருமாளை நாயனம் வாசித்து உறங்க வைக்கும் நாதத்தை கேட்டோம், ஆரத்தி சேவித்து பெருமாளுக்கு நைவேத்யம் செய்த பழப்பிரசாதம் கொடுத்து கௌரவித்தார்கள். மிகவும் மனமகிழ்ச்சியுடன் திருவேங்கடவனுக்கு ஆயிரம் நன்றிகள் கூறி, சேவா சதன் திரும்பினோம். இரண்டாம் நாள் அனுபவம் எப்படி இருந்தது என்று அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.    


ஸ்ரீ சைலம் வால் பகுதி 


பிருகு முனிவர் மும்மூர்த்திகளை சோதிக்கும் போது மஹாவிஷ்ணுவின் மார்பில் உதைக்க  அதனால் கோபம் கொண்டு மஹாவிஷ்ணுவை விட்டுப்பிரிய,   பெருமாள் வைகுண்டத்தில் இருந்து பூலோகம் வந்து திருமலையில் ஒரு புற்றின் உள்ளே வசித்தார்.  பெருமாள்  பசியோடு இருப்பதால் சிவனும் பிரம்மனும் பசுவாகவும் கன்றாகவும் பூலோகம் வந்து புற்றில் இருந்த பெருமாளுக்கு பால் சுரந்தனர். எனவே இன்றும் ஏகாந்த சேவை முடிந்த பிறகு கதவைப் பூட்டுவதும், அது போலவே அதிகாலை சுப்ரபாத சேவைக்கு கதவை திறப்பதும் யாதவ குலத்தினர்தான். 


இரவு 09:00 மணி வாக்கில், விஜயா வங்கியில், அன்றைய தினத்திற்கான ஐம்பது பேருக்கு சிறிய கட்டணத்தில் ஏகாந்த சேவைக்காக  டிக்கெட் வழங்குவார்கள்! கூட்டம் அதிகம் இருந்தால் அப்போது இந்த சேவை பொது தரிசனம் இன்றித் தனியாகச் செய்யப்பட்டு விடும்இந்தச் சேவைக்குச் சென்றால், ஆர அமர்ந்து, எம்பெருமானைத் தமிழிலும் தெலுங்கிலும் இசையோடு தாலாட்டி, பால் பருக வைத்து, கொசுவலை போட்டு மூடி உறங்கச் செய்து, பாதாதி கேசமாக, ஆழ்ந்து அனுபவிக்க முடியும்! அந்த நாளின் கடைசிச் சேவை! நடை சார்த்தி, திருக்கதவத்தை அடைப்பதை காணலாம். பெருமாளின் முன்னர் சுமார் 30 நிமிடங்கள் அமரும் பாக்கியம் கிட்டும். 


இப்பதிவில் தாங்கள் காணும் படங்கள் தரிகொண்ட வெங்கமாம்பாள் அன்னதான கூடத்தில் அமைத்துள்ள பிரம்மாண்ட ஓவியம் ஆகும். ஒரு பக்கம் பெரிய திருவடியும், மறு பக்கம் சிறிய திருவடியும் கை கூப்பி நிற்க நடுவில் ஒரு மலைத்தொடரும் சில ஆலயங்களும் காட்டப்பட்டுள்ளது.  அதன் விளக்கம் என்னவென்றால்.  கிழக்குத் தொடர்ச்சி மலை ஆதி சேஷன் தலைப்பகுதி திருவேங்கடம், வால் பகுதி ஸ்ரீ சைலம், முதுகு அஹோபிலம் என்பது ஐதீகம். மேலும் மஹா நந்தி மற்றும் தாரகாக்ஷர தலங்களும் காட்டப்பட்டுள்ளன. 

தற்போது இந்த மூன்று மாடி அன்னகூடத்தில் காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை அன்னதானம் நடைபெறுகின்றது. நான்கு பெரிய கூடங்கள் உள்ளன மூன்றில் இலை போட்டு அன்னம் படைக்கின்றனர், ஒன்றில் தட்டில் விரும்பும் உணவை நாம் ஏடுத்துக்கொள்ளும் வகையில் உள்ளது.


இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு சொடுக்குங்கள்

சேவை தொடரும் . . . . . . . 

No comments: