Sunday, April 3, 2016

ஆருத்ரா தரிசனம்(2016) - 1

திருமயிலை கபாலீச்சுரம்


ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய். 

பொருள்: பூம்பாவையே! ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள உயர்ந்த மயிலையில், கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வல்ல மீனவர்களின் சேரிதனில், மழைவளம் தந்ததால் வளர்ந்த சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும் ஆலயத்தில் விளங்கும் பெருமானுடைய திருவாதிரை விழாவைக் காணாது செல்வது முறையோ? 

என்று அன்று அங்கங்பூம்பாவையை  உயிருடன்  எழுப்பிய ஆளுடையப்பிள்ளை பாடிய கபாலீச்சுரத்தில்  தற்போது திருவாதிரை  விழா, பத்து நாள் விழாவாக நடைபெறுகின்றது.  இந்த திருவெம்பாவை  விழாவின் முதல் 7 நாட்கள் -  மாணிக்கவாசக சுவாமிகள் வீதி வலம் வருகின்றார். நிறை மூன்று நாட்கள்  நிறை மூன்று நாட்கள் கபாலீஸ்வரரரும், கற்பகாம்பாளும் பொன்னூசல் ஆடி அருளுகின்றனர். பொன்னூசலின் நிறை நாள்  ஐம்பெரும் திருமேனிகளும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். நர்த்தன கணபதி


பொன்னூசலில் கபாலீஸ்வரர்

மகளிர் விளையாட்டில் ஊசலாடுதலும் ஒன்று. சோலைகளில் கொடிகளாகிய ஊசலிலும், இல்லத்தில் சங்கிலியால் கோர்க்கப்பட்ட பலகைகளிலும் ஏறி ஊசலாடுவர் பெண்டிர். அவ்வாறு ஆடும் போது இனிமையானதொரு பாடலைப் பாடிக்கொண்டே ஊசலாடுவர். ஊசலாட்டில் பாடும் பாடல் "ஊசல்வரி" என்று அழைக்கப்படும். ஊசல் வரியில் தலைவி இறைவன் மேல் பேரின்பம் கொண்டு இறைவனின் அறக்கருணையை பாடி பொன் ஊசல் ஆடுகின்றபடியால் இப்பதிகம் "அருட்சுத்தி" என்றழைக்கப்படுகின்றது. அருட் சுத்தி என்பது அருளால் உண்டாகிய தூய்மை. தற்போது ஊசல் ’உஞ்சல்” என்றும் ஊஞ்சல்” என்றும் வழங்கப்படுகின்றது.

பொன்னூசலில் கற்பகவல்லி

பூரண ஆபரண மற்றும் மலர் அலங்காரத்தில் கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி பூஜை கண்டருளி திருக்கோவில் வலம் வந்து ஊஞ்சல் மண்டபம் வந்தடைகின்றனர். முதலில் கற்பகாம்பாள் பொன் ஊசல் ஆட அம்மையின் ஊடலை தணிக்கும் வண்ணம் கபாலீஸ்வரப் பெருமான் பெருங்கருணையினால் அம்மையின் முன்னர் நடனமாடுகின்றார். மொத்தம் மூன்று சுற்றுகள் ஆடுகின்றார், முதல் சுற்றில் தேவாரப் பாடலுடனும், இரண்டாம் சுற்றில் கொட்டு தாளத்துடனும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இசையுடன் நடனமாடுகிறார் ஐயன் பின் அன்னையின் சினம் தணிந்த பின் இருவரும் எதிரெதிராக பொன் ஊசல் ஆடுகின்றனர். அப்போது ஓதுவார் மூர்த்திகள் அற்புத பொன் ஊசல் பதிகத்தைப் பாட அன்பர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து பொன் ஊசல் பாடுகின்றனர். ஐயனும் அம்மையும் அகங்குழைந்து அன்பர்களுக்கு அருள பொன்னூசல் ஆடி அருளுகின்றனர். பின் தீபாதரனை முடிந்து யதாஸ்தானம் எழுந்தருளுகின்றனர்.

பொன்னூசல் பின்னழகு

 சிங்கார வேலவர் 

திருப்பொன் ஊசல் - அருட் சுத்தி 

(தில்லையில் அருளியது - ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா)

திருச்சிற்றம்பலம்

சீர் ஆர் பவளம்கால் முத்தம் கயிறு ஆக;ஏர் ஆரும் பொன்பலகை ஏறி இனிது அமர்ந்து;நாராயணன் அறியா நாள்மலர்த்தாள் நாய் அடியேற்குஊர் ஆகத் தந்து அருளும் உத்தர கோசமங்கைஆரா அமுதின் அருள்தாள் இணைபாடிபோரார் வேல் கண்மடவீர்! பொன் ஊசல் ஆடாமோ! (1)

போருக்கு அமைந்த கூரிய வேலைப் போன்ற கண்களையுடைய பெண்களே! மேன்மை பொருந்திய பவளத்தையே கால்களாகவும், முத்து வடத்தையே கயிறாகவும் கொண்ட அழகு பொருந்திய பொன்னால் செய்த ஊஞ்சல் பலகையில் மேலேறி இனிதாக எழுந்தருளி நாயினுங்கடையேனாகிய அடியேனுக்கு திருமாலும் காணா தாமரை மலர் போல பிரகாசிக்கின்ற திருவடியினை வாழும் ஊராக கொடுத்து அருளுகின்ற திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளி யாவர்க்கும் தெவிட்டாத அமிர்தம் போன்றவனாகிய சிவபெருமானது அருளைக் கொடுக்கின்ற இரண்டு இணையார் திருவடிகளைப் புகழ்ந்து பாடி, பொன் ஊசல் ஆடுவோமாக!

மூன்று அங்கு இலங்கு நயனத்தன் மூவாதவான்தங்கு தேவர்களும் காணா மலர் அடிகள்தேன்தங்கித் தித்தித் அமுதுஊறித்தான்தெளிந்து அங்குஊன்தங்கி நின்று உருக்கும் உத்தர கோசமங்கைக்கோன்தங்கு இடைமருது பாடி குலமஞ்ஞைபோன்று அங்கு அனநடையீர்! பொன்ஊசல் ஆடாமோ! (2)


மயிலைப்போன்ற சாயலைப்பெற்று, அன்னப்பறவையின் நடையுடைய ஆரணங்குகளே! விளங்குகின்ற சூரியன் சந்திரன், அக்னி ஆகிய மூன்று திருக்கண்களையுடைய சிவபெருமானது (அமுதமுண்டமையால்) மூப்படையாத விண்ணுலகில் தங்கி வாழ்கின்ற தேவர்களும் காணா தாமரை போன்ற திருவடிகளையும், தேனொடு கலந்து , இனிமைபெற்று ஊற்றெடுத்துத் தெளிவடைந்து என் உடற்கண்ணே பொருந்தி உருகுவிக்கும் திருஉத்தரகோசமங்கைக்கு அரசனாயிருக்கும் இறைவன் எழுந்தருளி அருள் பாலிக்கும் திருவிதைமருதூரைப் பாடி, பொன் ஊசல் ஆடுவோமாக!

முன் ஈறும் ஆதியும் இல்லான்; முனிவர்குழாம்பல் நூறு கோடி இமையோர்கள் தாம் நிற்பதன்நீறு எனக்கு அருளித் தன்கருணை வெள்ளத்துமன் ஊற மன்னும் மணி உத்தர கோசமங்கைமின் ஏறும் மாடம் வியல்மா ளிகைபாடிப்பொன் ஏறு பூண்முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ! (3)


மாற்று ஏற்றப்பட்ட பொன் ஆபரணங்களை அணிந்த தனங்களையுடைய மங்கை நல்லீரே! தோன்றிய பொருளுக்கு முற்பட்ட முடிவும் அதன் மேற்பட்ட தோற்றமும் இல்லாத சிவபெருமான் பற்பல நூறுகோடித் தொகையினராகிய முனிவர் கூட்டங்களும், இமையா தேவர்களும் நிற்க, தனது கருணையாகிய பால் வெண்ணீற்றை எனக்கு தந்தருளிய , தன் மகிமை வளர நிலை பெற்ற அழகிய திருஉத்தரகோசமங்கையிலுள்ள மின்னலைப் போல் பிரகாசிக்கின்ற மேல் மாடங்களையுடைய திருக்கோவிலைப்பாடி, பொன் ஊசல் ஆடுவோமாக!நஞ்சு அமர் கண்டத்தன்; அண்டத் தவர்நாதன்;
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அம் சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்று அமுதம் ஊறிக் கருணைசெய்து 
துஞ்சல் பிறப்பு அறுப்பான்; தூய புகழ்பாடி
 
புஞ்சம் ஆர் வெள்வளையீர் பொன் ஊசல் ஆடாமோ! (4)


தொகுதியாக பொருந்திய வெண்மையான சங்கு வளைகளை அணிந்த பெண்காள்! விடம் தங்கிய மணிகண்டத்தையுடையவன், அனைத்து தேவர்களுக்கும் இறைவன், கருத்த மேகங்கள் தவழுகின்ற நெடிதுயர்ந்த மாடங்களையுடைய அழகு பொருந்திய திருஉத்தரகோசமங்கையில் இனிய மொழியாளாகிய மலையரசன் பொற்பாவை உமையம்மையுடன் சேர்ந்து அடியவரது மனத்துள்ளே நிலைத்து நின்று அமிர்தம் சுரந்து அருள் கொடுப்பவனும், பிறப்பு இறப்பு என்னும் தளையை அழிப்பவனும் ஆகிய சிவபெருமானின் பரிசுத்தமாகிய புகழைப்பாடி, பொன் ஊசல் ஆடுவோமாக!

ஆணோ அலியோ அரிவையோ என்று இருவர்

காணாக் கடவுள்; கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்ய ஆட் கொண்டருளி நஞ்சுதனை
 ஊண் ஆக உண்டு அருளும் உத்தர கோசமங்கைக்
கோண் ஆர் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூண் ஆர் வனமுலையீர்! பொன்னூசல் ஆடாமோ! (5) 

ஆபரணங்கள் நிறைந்த மிகு அழகாகிய தனங்களையுடைய நங்கையரே! ஆண் இனமோ, பெண் இனமோ அல்லது அலி இனமோ என்று திருமாலும், நான்முகனும் தேடியும் காணாப்படா பெருங்கடவுளும் தன் மாப்பெரும் கருணையினால் தேவர் கூட்டம் நாணமடையாமல் பிழைக்கும்படி அடிமை கொண்டருளி, பாற்கடலிலிருந்து தோன்றிய ஆலகால விடத்தை உணவாக உட்கொண்டருளின திருஉத்த்ரகோசமங்கையிலுள்ள வளைவுள்ள மூன்றாம் பிறைச் சந்திரனை தன் ஜடாமுடியில் ஆபரணமாக அணிந்த கூத்தனாகிய சிவபெருமானது பெருங்குணத்தைப் பாடித் துதித்து பொன் ஊசல் ஆடுவோமாக!


மாது ஆடு பாகத்தன்; உத்தர கோசமங்கைத்

தாது ஆடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோது ஆட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல்பிறவித்
தீது ஓடா வண்ணம் திகழப் பிறப்பு அறுப்பான்
காது ஆடு குண்டலங்கள் பாடிக் கசிந்து அன்பால்
போது ஆடு பூண்முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ! (6)

தாமரை அரும்புகள் போல அசைகின்ற திருவாபரணங்களை பூண்ட தனங்களையுடையீர்! மலைமகளை தன் ஒரு பாகம் வைத்த உமையொருபங்கன்; திருஉத்தரகோசமங்கையில் உள்ள மகரந்தப் பொடி பொதிந்த பொன் கொன்றைப் பூமாலையை அணிந்த சடையையுடையவன்; தன் திருத்தொண்டர்களுக்குள்ளே நாயினும் கடையேனை ஒருவனாகப் பாராட்டி அடிமை கொண்டு, எனது பழைய பிறவித்துன்பங்கள் பெருகாவண்ணம் நான் ஞானத்தோடு விளங்கும்படி எனது பிறவித்தளையை அறுப்பவனுமாகிய சிவபெருமானின் காதில் அசைந்து ஆடும் அழகிய குண்டலங்களை அன்பினாற் கசிந்துருகிப் பாடி பொன் ஊசல் ஆடுவோமாக!உன்னற்கு அரியதிரு உத்தர கோசமங்கைமன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழேபன்னிப் பணிந்து இறைஞ்சப் பாவங்கள் பற்றுஅறுப்பான்அன்னத்தின் மேல் ஏறி ஆடும் அணி மயில்போல்என் அத்தன் என்னையும் ஆட்கொண்டான்; எழில்பாடி 
பொன் ஒத்த பூண்முலையீர்! 
பொன் ஊசல் ஆடாமோ! (7) 

அணிகளையணிந்த பொன்னொத்த தனங்களையுடைய பாவையரே! நினைத்தற்கரிய திருவினையுடைய திருஉத்தரகோசமங்கையில் நிலைபெற்று பொலிவுடன் விளங்குகின்ற வேதியனும்; தனது புகழினையே பல காலும் சொல்லி தாழ்ந்து வணங்க, பாவங்களின் பிடிப்பை ஒழிப்பவனும், எனக்கு அப்பனாகி என்னை ஆட்கொண்ட வள்ளல் ஆனவனும், என்னையும் ஒரு பொருளாக அடிமை கொண்டவனுமாகிய இறைவனது, பேரழகினைப்பாடி அன்னப்பறவையின் மீது ஏறி ஆடுகின்ற அழகிய மயிலைப் போன்று நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி இருந்து ஆடுவோமாக!

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்

சால அமுது உண்டு தாழ்கடலின் மீது எழுந்து
ஞாலம் மிகப்பரிமேல் கொண்டு நமை ஆண்டான்;
சீலம் திகழும் திருஉத்தர கோசமங்கைமாலுக்கு அரியானை வாயார நாம்பாடிப்
பூலித்து அகங்குழைந்து பொன் ஊசல் ஆடாமோ. (8)

உலகம் உய்யும்படியாக அழகிய திருக்கயிலை மலையின் உச்சியினின்றும் குவலயத்து நிலவுலகில் இறங்கி வந்தருளி, வந்தி தரும் பிட்டினை நிரம்ப உண்டும், மிக ஆழந்த கடலில் வலைஞனாய்க் கட்டு மரத்தின் மீது ஏறி வலை வீசி மீன் பிடித்தும், பரிமேலழகனாய்க் குதிரை மீது வந்தும், நம்மை ஆண்டருளினவனாகிய நல்லொழுக்கம் விளங்குகின்ற, திருஉத்தர கோச மங்கையிலுள்ள, திருமாலுக்கும் காணுதற்கு அருமையான இறைவனை நாம் வாய் நிரம்பப் பாடி உடல் பூரித்து, மனம் நெகிழ்ந்து, பொன் ஊசல் ஆடுவோமாக!


தெங்குஉலவு சோலைத் திருவுத்தர கோச 

மங்கைத்தங்குஉலவு சோதித் தனிஉருவம் வந்து அருளி
எங்கள் பிறப்பு அறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்;
பங்குஉலவு கோதையும் தானும் பணிகொண்ட
கொங்குஉலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குஉலவு பூண்முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ! (9)

விளக்கம் பொருந்திய பிரகாசம் பொருந்திய ஆபரணங்களை அணிந்த தனங்களையுடைய கன்னியரே! தென்னஞ்சோலைகள் சூழ்ந்த திருஉத்தரகோசமங்கையில் தங்கி, பொருந்திய ஒளி மயமான ஒப்பற்ற திருவடிவையுடைய இறைவன் வந்தருளி, எளி வந்த கருணையினால் எங்கள் பிறவித் தொடர்பை அறுத்து எங்கள் இனத்தையும் அடிமை கொள்ளும் பொருட்டு இடது பாகத்தில் சோதிமயமான பரமேஸ்வரியும் தானுமாகி வந்தருளி என் குற்றேவலைக் கொண்டு எனை ஆளாக்கிக் கொண்ட, மணம் நிறைந்த பொன் கொன்றைமலர் மாலையைத் தரித்த சடைமுடியுடையவனாகிய சிவபெருமானது மங்கள குணங்களைப் புகழ்ந்து பொன் ஊசல் ஆடுவோமாக! திருமயிலை வெள்ளீச்சுரம் 

திருமயிலையைப் போலவே வெள்ளீச்சுரத்திலும் விழாக்கள் நடைபெறுகின்றது. காமாட்சி  அம்பாள் உடனுறை வெள்ளீஸ்வரர்  பொன்னூசல் காட்சிகள். 


வெள்ளீஸ்வரர் பொன்னூசல்

காமாட்சி அம்பாள் பொன்னூசல்

முருகப்பெருமான்

தரிசனம் தொடரும் .  .   .  .  .  .


No comments: