Wednesday, December 18, 2013

அம்பல கூத்தனின் ஆனந்த ஆருத்ரா தரிசனம் -1

ககன கந்தர்வ கனக விமான சேவை 

சென்னை கோடம்பாக்கம்  இரயிலடி, அருள்மிகு சவுந்தர வினாயகர் திருக்கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியின் அருட்காட்சிகள்  இப்பதிவில் இடம் பெறுகின்றன.  பஞ்ச மூர்த்திகளும் பவனி வரும் அழகை காண்பவர்கள் அது போன்று எங்கும் கண்டதில்லை என்று ஆச்சிரியப்படும் அளவில் அருமையான  பொன் முலாம் விமானத்தில் வலம் வருகின்றனர். காணக்கண் கோடி வேண்டும் என்பார்களே அது போல  ஒவ்வொரு வருடமும் தவறாது சென்று தரிசிக்க அழைக்கும் அற்புத தரிசனம் அது

இத்திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் மிகவும் சிறப்பாக இவ்வாறு நடைபெறுகின்றது. இரவு 7 மணி அளவில்  மஹாபிஷேகம். இரவு 10:30 மணி அளவில் வெள்ளை சார்த்தி புறப்பாடு. ஆருத்ரா தரிசனத்தன்று அருணோதய காலத்தில்  சிவகாம சுந்தரி உடன் ஸ்ரீ நடராஜ பெருமான் திருக்கல்யாண வைபவம். காலை ஆறு மணிக்கு கோபுர வாசலில் ஆருத்ரா தரிசனம். காலை 9 மணிக்கு பத்ம ஜோதி கலியுகக் கண்ணாடி விமானத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு. பகல் 1 மணிக்கு திருஊடல் உற்சவம்  என்று சகல உற்சவங்களுடன் வெகு சிறப்பாக நடைபெருகின்றது. சிதம்பரம் போல் பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது இத்திருக்கோவிலின் சிறப்பு.



 பொன் முலாம் மூஷிக வாகனத்தில் விநாயகர் 


முன்னழகு

வினாயகப்பெருமானுக்கு தங்க மூஞ்சூறு வாகனம்மூஞ்சூறுவின் மேல் இடப்பட்டுள்ள போர்வையின் அமைப்பு மிகவும் சிறப்பு. இவருக்கும் பீடத்தில் மற்றும் திருவாசியில் பூ  வேலைப்பாடுகள்.

பின்னழகு


ஆனந்த தாண்டவ நடராஜர் 

விமானத்தின்  மேற்பாதி  

பத்மஜோதி கலியுகக் கண்ணாடி என்று அழைக்கப்படும் நடராஜப்பெருமான் தரிசனம் தந்தருளும் ககன கந்தர்வ கனக விமானத்தின் அழகை முதலில் காண்போம். திருத்தேர் போன்ற அமைப்பு, அருணன் சாரதியாக இருந்து இரதத்தை செலுத்த ஆகாயம், காற்று, அக்னி, நீர், நிலம் என்னும்  ஐம்பூதங்களே ஐந்து  குதிரைகளாக ஐந்தொழில் புரியும் ஐயனின்  தேரை இழுக்கின்றன. சூரியனும் சந்திரன் மற்றும் அக்னியை மூன்று கண்களாகக் கொண்ட ஐயனுக்கு சூரிய சந்திரர்களே இறக்கைகள், ஐயனுக்கு நான்கு கோண விமானம். பன்னிரண்டு தூண்கள், தூண்களில் அற்புதமான வேலைப்பாடு. நான்கு திசைகளிலும் துவார பாலகர்கள்நான்கு பக்கமும் விசிறி வீசுபவர்கள் ரம்பா, ஊர்வசிமேனகை , திலோத்தமை என்னும் தேவ கன்னியர்கள்மேல் புரத்தில் கவரி வீசுபவர்கள் மற்றும் மாலை தாங்கி நிற்பவர்கள் தேவதைகள்.

விமானத்தின்கூரையில் மூன்று கலசங்கள் முன் புறம் ஜ்வாலா சக்கரத்தில் ஷட்கோணம்,   நாற்புறமும் தாமரை பீடத்தில் அதிகார நந்தி காவல் காக்க ,  கந்தர்வர்கள் எக்காளம் இசைக்கின்றனர்.விமானத்தில் முற்பக்கத்தில்  ஆதி சங்கரரும், தாயுமானவரும், இடப்பக்கத்தில் அகத்தியர் மற்றும் வசிஷ்டர் பின்புறத்தில் வியாசர் மற்றும்  கௌசிகர் வலப் பக்கத்தில் திருவள்ளுவர் சேக்கிழார்  ஆகியோர் தவகோலத்தில் அருட்காட்சி தருகின்றனர்நான்கு புறங்களிலும் ஆனந்த தாண்டவ, ஊர்த்துவ தாண்டவ, கால் மாறி ஆடிய தாண்டவம் மற்றும் தில்லைக் காளி நடனக் காட்சிகள்.

தில்லைக் காளி , அருணன் ,  அம்பலத்தாடுவான்  


 அருணன் சாரதியாக ஐம்பூதங்களே குதிரைகளாக 
ககன கந்தர்வ விமானத்தில் எழிலாக  பவனிவரும் நடராஜர்


 பத்ம ஜோதி கலியுகக் கண்ணாடி என வழங்கப்படும் 
ககன கந்தர்வ கனக விமானம் 


ஐயனுக்கு பேரியாழ் தேவி, சகோட யாழ் தேவி, மகர யாழ் தேவி, மற்றும்  செங்கோட்டி யாழ் தேவி நால்வரும் இசை கூட்டுகின்றனர். ஆனந்த நடராஜப் பெருமான் பத்ம பீடத்தில் ஆனந்தத் தாண்டவ தரிசனம்  தந்தருளுகின்றார். ஐயனின் திருவாசியில் அன்னப் பறவைகள் அழகு கூட்டுகின்றன. விமானம் முழுவதும் அழகான மர சிற்பங்கள். முன் பக்கத்தில் தில்லைக்காளி, மஹா விஷ்ணு, பிரம்மா எம்பெருமானை வணங்கி நிற்க நாரதரும் தும்புருவும்  ஐயன் புகழ்  பாடுகின்றனர்.




விமானத்தைத் தாங்கி நிற்பது நான்கு பக்கமும் யாழிகள். முன் பக்கத்து. பின் பக்கத்தில் வல, பின், இடபக்கங்களில் மூன்று வரிசையில் சிற்பங்கள். மேல் வரிசையில் சிறிய காமதேனு, அம்மை ஐயன் கண்ணை மூடும் சிற்பம், மற்றும் கம்பா நதிக்கரையில் சிவ பூஜை செய்யும் காட்சி. நடு வரிசையில் நின்ற கோலத்தில் தவ சீலர்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், வள்ளலார் சுவாமிகள் மற்றும் குதிரை வாகனாரூட  குபேரன். கீழ் வரிசையில் பத்ம பீடத்தில் சித்த புருஷர்கள் குதம்பை சித்தர், சட்டை முனி, திருமூலர், காலங்கி, கொங்கணர். ஜடாமுடியும், தாடியும், அணிந்துள்ள ருத்ராக்ஷமாலைகளும் அத்தனையும் அப்படியே தத்ரூபம். சூரிய இறக்கை அப்படியே ஜடாயுவின் இறக்கை எனலாம்,  


வலப்பக்கம் சூரிய  இறக்கை 





பின்புற சித்தர்கள்,  நால்வர்  காரைக்காலம்மையர்

மார்க்கண்டேயர், தத்தாத்ரேயர், மஹிஷாசுர மர்த்தினி

அடுத்து பின் பக்கம் விமானத்தில் வியாசர், வால்மீகீ. முதல் வரிசையில் மார்க்கண்டனுக்காக காலனை சம்ஹாரம் செய்யும் சிற்பம் எருமையின் மேல் எமனும், ரிஷப வாகனத்தில் அமர்ந்த கோலத்தில்   தத்தாத்ரேயர் நான்கு வேதங்களுமே நான்கு நாய்களாக சித்தரித்துள்ளனர், சிம்ம வாகனத்தில்  அஷ்ட புஜங்களுடன் மஹிஷாசுரமர்த்தனி சிற்பங்கள் அம்மையின் ஒரு கரத்தில் மஹிஷ தலை ஒரு புதுமை. ஐயனின் திருவாசியின் அழகே அழகு  அற்புதமான வேலைப்பாடுகள் அன்னப்பறவைகள் மெருகூட்டுகின்றன. இரண்டாவது வரிசையில்  சமயக்குரவர் நால்வர் மற்றும் ஐயனின் தாளடி நீழலில் அமர்ந்து பாடிப் பரவிக்கொண்டிருக்கும் காரைக்கால் அம்மையார்  . கீழ் வரிசையில் சித்தர்கள் மச்சமுனி, கோரக்கர், கருவூரர், பாம்பாட்டி சித்தர்,   புலிப்பாணி சித்தர் மற்றும் போகர்.


விமானத்தின் பின்னழகு 




 திருவாசியில் அன்னங்கள் அழகூட்டுகின்றன




இனி இடப்புறம் மேல் வரிசையில் காமதேனு, கண்ணப்பர் கண்ணை அப்பும் சிற்பம், மாணிக்கவாசகருக்கு குருந்த மரத்தடியில்  குருவாக சிவபெருமான் உபதேசம் செய்யும் சிற்பம். நடு வரிசையில் மூன்று கால்களூடன் பிருங்கி முனிவர் , ஏனாதி நாயனார், நித்யானந்தர், கரும்பு தாங்கிய பட்டினத்தார், வள்ளலார். கீழ் வரிசையில் மற்ற ஆறு சித்தர்கள் அகத்திய முனி. கமல முனி, நந்தி தேவர், தன்வந்திரி முதலியோர் தாடி  மற்றும் ஆடைகள் அப்படியே தத்ரூபம்.. இப்பக்கம் சந்திர இறக்கை. விமானத்தை அஷ்டதிக கஜங்களும், மஹா நாகமும் தாங்குகின்றது. இந்த விமானங்கள் 1939ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றுவரை மெருகு குலையாமல் பராமரித்து வருகின்றனர். 


இடப்பக்கம் சந்திர இறக்கை



இவ்வாறு ஆதிசேஷன், அஷ்ட திக் கஜங்கள், அஷ்ட பாலகர்கள் விமானத்தை தாங்க, யாழ் தேவிகள், நாரதர், தும்புரு இசை கூட்ட, தேவதைகள் சாமரம்,  விசிறி வீச மாலை கொண்டு  காத்திருக்க , கோபுரத்தில் அதிகார நந்திகள் சேவைக்காக காத்திருக்க , நான்கு பக்கமும் துவார பாலகர்கள் காவல் காக்கயோகிகள், முனிவர்கள் ஓங்காரம் ஓத , சித்தர்கள் சிவாய நம சிந்தித்திருக்க, நால்வரும் தேவார திருவாசகம் பாட , காரைகாலம்மையார்  ஐயன் அடிக்கீழ் இருந்து தாளம் போடமணிகள் கல கல என்று ஒலிக்க ஆனந்த தாண்டவமாடி எம்பெருமான் வரும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த விமானத்தை உருவாக்கியது அந்த மயனாகத்தான் இருக்க வேண்டும்.

தங்க நிறத்தில் காலை இளம் வெயிலில் மின்ன வரும் விமானத்தில் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன், சகல அகிலத்திற்கும் ராஜாவாக ,நடராஜாவாக  பவனி வரும் அழகைதரிசனம் செய்வோர் பேறு பெற்றோர் என்பதில் ஐயமில்லை. ஆதி அந்தம் இல்லாத அந்த அருட்பெருஞ்சோதிதான் அகில பிரம்மாண்டத்தையும் ஆக்கியும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் ஐந்தொழில் புரிகின்றார் என்பதை         தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றது இந்த ககன கந்தர்வ கனக விமானம் 70 வருடங்களுக்கும் மேலாக வெகு சிறப்பாக இந்த ஆருத்ரா தரிசன காட்சி அற்புதமாக நடந்து வருகின்றது.

அம்பாளின் மானச கந்தர்வ விமானத்தின் அழகை அடுத்த பதிவில் காணலாமா அன்பர்களே.



4 comments:

கோமதி அரசு said...

தங்க நிறத்தில் காலை இளம் வெயிலில் மின்ன வரும் விமானத்தில் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன், சகல அகிலத்திற்கும் ராஜாவாக ,நடராஜாவாக பவனி வரும் அழகை, தரிசனம் செய்வோர் பேறு பெற்றோர் என்பதில் ஐயமில்லை.//

உண்மை.
நானும் உங்கள் பதிவின் மூலம் தரிசனம் செய்து மகிழ்ந்தேன்.
அழகான பவனி.

S.Muruganandam said...

மிக்க நன்றி, அம்பாளின் மாணீக்க கந்தர்வ விமான சேவையும் கண்டு மகிழுங்கள்.

Test said...

ஆருத்ரா தரிசனம் - 1 மற்றும் 2 பகுதி மிகவும் அருமை, செய்தி பகிர்விற்கும், ஐயனின் தரிசனத்திற்கும் நன்றி ஐயா. சிங்கையிலும் ஆருத்ரா விழா சிறப்பாக நடைபெற்றது ஐயா.

S.Muruganandam said...

மார்கழி நல்வாழ்த்துக்கள் ளோக நாதன் ஐயா, ஆனந்த கூத்தனின் தரிசனம் ஆனந்தமே.

சிங்கையிலும் திருவிழா சிறப்பாக நடைபெற்றதுகுறித்து மிக்க மகிழ்ச்சி ஐயா.