Sunday, December 22, 2013

திருவெம்பாவை # 13

 
திருசிற்றம்பலம்  




பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து நம்
சங்கந் சிலம்ப சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்க
பங்கயப் பூம்புனல் பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். .....(13)


எம்பெருமானுக்கும், எம் பிராட்டிக்கும்( தனித் தனியாக) பொங்கு மடுவிற்கும் சிலேடை

1. பைங்குவளைக் கார்மலரால்:
கருமையான குவளை மலர்கள் நிறைந்திருப்பதால் எம்பிராட்டி போன்று இசைந்த மடு.(குவளைக் கண்ணி கூறன் காண்க)

செங்கமலப் பைம்போதால்:
 செந்தாமரை மலர்கள் நிறைந்திருப்பதால் எம்பெருமான் போன்று இசைந்த மடு.( செய்யான் காண்க)

2.அங்கங் குருகினத்தால்

அங்கம் - அம்பிகையின் திருமேனியில், திருக்கைகளில் அணிந்துள்ள வளையல் கூட்டத்தால் எங்கள் பிராட்டி போன்று போன்று இசைந்தபொங்கு மடு.

அங்கு அம் - அவ்விடத்தில் அழகிய குருகு இனத்தால்- பறவைக் கூட்டத்தினால் பொங்கும் மடு.

அங்கு அங்கு உருகும் இனத்தால்: அன்பின் மிகுதியால் அங்கே அங்கே உருகும் தொண்டரினத்தால் எங்கோனும், எம்பிராட்டியும் போன்று இசைந்த பொங்கு மடு.


3. பின்னும அரவத்தால்: 

எம்பெருமான் திருமேனியில் அணிந்துள்ள பாம்புகள் பின்னுவதால் எம்பெருமான் போன்று இசைந்த பொங்கு மடு.

பின்னும் பின்னும் தொடர்ந்து அலையும் திரையால் பொங்கும் மடு.

4. தங்கண் மலம் கழுவார் வந்து சார்தலினால்:

தங்களுடைய உடம்பு அழுக்கை(மலம்) கழுவ வந்து சேர்பவர்களினால் இசைந்த பொங்கு மடு.

தங்களுடைய ஆணவம் முதலிய மலங்களை நீக்க வந்து சேர்பவர்களினால் எம்கோனும் எம் பிராட்டியும் போன்று இசைந்த பொங்கு மடு.

இத்தகைய எங்கோனும் எங்கள்பிராட்டியும் போன்ற  பொங்கு மடுவில் பாய்ந்து, பாய்ந்து கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்கவும், காற்சிலம்புகள் கலந்து ஆரவாரம் செய்யவும், கொள்ளும் கைகள் பூரிப்படையவும், அந்த கைகளால் குடைகின்ற பொய்கை நீர் மேலோங்கவும், இந்த தாமரைப் பூங்குளத்து நீரில் பாய்ந்து நீராடுவோம் எல்லோரும் பாவை விளையாட்டு.

நம் மன அழுக்கு நீங்க இறைவன் திருவடியே சரணம் என்பதை உணர்த்தும் அற்புதமான சிலேடைப்பாடல். மும்மல கலப்பினால் தூங்குகின்ற ஜீவான்மா விழித்து எழுந்து  மலம் நீங்கி சிவனுடன் இணைவதே  பாவை நோன்பின் தாத்பரியம்.

No comments: