Wednesday, March 20, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -19

வேடுவர் பறி உற்சவம் 

 செங்குந்த கோட்டத்தில் மாசி மகப் பெருவிழாவின் பதினோராம் திருநாள் இரவு பழனி ஆண்டவருக்கு  உபநயன உற்சவம். இவ்வாறு இத்திருக்கோவிலின் அனைத்து முருக திருமேனிகளுக்கும் பெருவிழாவின் போது உற்சவம் நடைபெறுகின்றது. 



 பழனி ஆண்டவரின் அருட்கோலங்கள் 



பன்னிரெண்டாம் திருநாள் காலை வேடுவர் பறி உற்சவம். அன்று காலை ரங்கபாஷ்யம் செட்டி வீதியில் உள்ள வேடுவர் பறி பந்தலுக்கு எழுந்தருளி மகாபிஷேகம் கண்டருளுகிறார். பிறகு இரவு வேடுவர் பறி உற்சவம் சுவாமி வேடுவர் கோலத்தில்  எழுந்தருளும் அழகைக் காணுங்கள்,

   வள்ளி நாயகி 

(மயிலை அனைத்த கோலத்தில்)

 வேடன் கோலத்தில் முருகப்பெருமான்

கோபுர வாசல் தரிசனம்



வள்ளி மலையில் தினைப்புனைத்தில் ஆலோலம் பாடிக்கொண்டு பறவைகளை விரட்டிக்கொண்டிருந்த வள்ளி நாயகியை, வேடனாகவும், விருத்தனாகவும் வந்து ஆண்டு கொண்ட அந்த வள்ளலின் வேடுவர் கோலம் இது. பின்னர் மூத்தவன் விநாயகரின் அருளால்  வள்ளி திருமணம் நடைபெறுகின்றது. 

அறியாமையால் வேடர்கள் தங்கள் குலக்கொடி வள்ளியை கவர வந்த வேடனுடன் சண்டை போடுவதே வேடுவர் பறி உற்சவம்.    




மறுநாள் வள்ளி நாயகி திருக்கல்யாணம், மயில் வாகன சேவை. பதினான்காம் திருநாள் புஷ்ப பல்லக்கு.  பதினைந்தாம் நாள் உத்ஸவருக்கு உத்ஸவ சாந்தி 108  சங்காபிஷேகம், அன்று மாலை மூலவருக்கு விசேஷ புஷ்ப அங்கி அலங்காரம் என்று பெருவிழா நிறைவடைகின்றது. 

இத்தொடரும் இப்பதிவுடன் நிறைவு பெறுகின்றது, சுமார் ஐந்து வருடங்களாக எடுத்த படங்களின் தொகுப்பே இப்பதிவுகள், ஆயினும் அனைத்து உற்சவங்களையும் முழுதுமாக தரிசனம் இதுவரைச் செய்யவில்லை. 

இது வரை வந்து தரிசனம் செய்த அனைவருக்கும் மிக்க நன்றி. இனி இமய மலையின் இந்த வருட தரிசனத் தொடர் துவக்கம் அதையும் வந்து தரிசனம் செய்யுமாறு கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.   

Tuesday, March 19, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -18

பத்தாம் திருநாள் மாலை 

அன்ன வாகன சேவை

எழில் குமரன் 


அன்ன வாகன சேவை 


இந்த வருடம் முருகனுக்கு பிரம்மன் அலங்காரம் செய்திருந்தனர்.  அன்ன வாகனம் பிரம்மனுக்கு உரியதுதானே. இவ்வாறு சிவன்,விஷ்ணு, பிரம்மன் என்று மும்மூர்த்தி ரூபமாகவும் முருகனை நாம் இத்திருக்கோவிலில் தரிசனம் செய்தோம். 

பிரம்ம ரூப சுப்பிரமணியர்


அன்ன வாகன சேவை 


அன்ன வாகன சேவைக்குப்பின்  பெரு விழா கொடியிறக்கம் , பிரம்மோற்சவம் கண்டு களித்த தேவர்கள் எல்லாரும்  தங்கள் தங்கள் யதாஸ்தானம் திரும்பிச் செல்வதாக ஐதீகம்.  

Monday, March 18, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -17

பத்தாம் திருநாள் 

மாசி மக தீர்த்தவாரி

காலை நடராஜர் உற்சவம் 

விநாயகர் 

இந்த பத்தாம் திருநாள் தான் பெருவிழாவின் நிறை நாள் இன்றுதான் சுவாமி தீர்த்தம் வழங்குவார்( அருள் பாலித்தல்). இத்திருக்கோவிலில் மாசி மகம் நட்சத்திரத்தை தீர்த்த நாளாகக் கொண்டு திருவிழா நடைபெறுகின்றது. 

ஆனந்த  நடராஜர்

தீர்த்தவாரியன்று காலை நடராஜர் உற்சவம். அம்மை சிவகாம சுந்தரியுடன் ஆனந்த தாண்டவக்காட்சி தந்தருளுகின்றார்.  இது முருகன் ஆலயம் என்பதால்  அம்மையப்பருடன் சண்முகரும் வலம் வந்தருளுகின்றார். 



அம்மை சிவானந்தவல்லி

மயில் வாகனத்தில் ஆறுமுகபபெருமான்
  எழுந்தருளும் அழகு  


ஆறுமுகப்பெருமானின் பின்னழகு

சண்முகருக்கு முன்னும் பின்னும் அலங்காரம் செய்கின்றனர். 

 பின் வருபவை முந்திய ஆண்டின் காட்சிகள் 
ஆனந்த கூத்தனின் அருட் கோலம் 

பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர்களையும்  ஐயனுடன் காணலாம்.

சிவகாம சுந்தரி அம்பாள் 

ஆறு முகரின் அருட்கோலம் 

பின்னழகு 


சுப்ரஹ்மண்யம்  சுப்ரஹ்மண்யம்
சண்முக நாதா 
சுப்ரஹ்மண்யம்

சுப்ரஹ்மண்யம்  சுப்ரஹ்மண்யம்
சண்முக நாதா 
சுப்ரஹ்மண்யம்


மதியம் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா வந்து தீர்த்தம்  கொடுக்கின்றனர். உச்சிக் காலத்தில் யாக சாலையில் இந்த பத்து நாட்கள் பூசை செய்யப்பட்ட தீர்த்தத்தினால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. மாலை சிவ சுப்பிரமணீய சுவாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அன்ன வாகனத்திற்கு என்ன அலங்காரம் செய்திருந்தனர் என்று யூகியுங்கள் அன்பர்களே. அந்த கந்தரலங்காரத்தை அடுத்த பதிவில் காணலாம்.  

Sunday, March 17, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -16

ஒன்பதாம் திருநாள் காலை
வெள்ளித்தொட்டி உற்ஸவம் 

எழில் கொஞ்சும் முருகன்

வள்ளி நாயகி


ஒன்பதாம் திருநாள் இரவு  சிவ சுப்பிரமணிய சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இந்த வருடம் சுவாமிக்கு  யோக நரசிம்மர் அலங்காரம்  செய்திருந்தனர்.  கால்களை குறுக்காக மடித்து  வைத்துக்கொண்டு கைகளை தொங்கவிட்டுக்கொண்டு யோக பட்டத்துடன் மாமனைப் போல் மருமகன் இங்கே அருட்காட்சி வழங்குகின்றான்.  ஆனால் மேல் திருக்கரங்களில் சங்கு சக்கரம் தாங்காமல் தனது சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கியுள்ளார்.

யோக நரசிம்மர் அலங்காரத்தில்  சிவசுப்பிரமணிய சுவாமி



திருப்பதி திருமலையிலே மலையப்ப சுவாமி  இரண்டாம் திருநாள் காலை சிம்ம வாகன சேவையின் போது யோக நரசிம்மர் அலங்காரத்தில்தான் சேவை சாதிப்பார்.  

 மலர் அலங்காரத்துடன்



முருகப்பெருமானின்  சிம்ம வாகன சேவை 

Saturday, March 16, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -15

எட்டாம் திருநாள் காலை
பால சுப்பிரமணியர் பரிவேட்டை உற்சவம்

பால சுப்பிரமணிய சுவாமி

எட்டாம் திருநாள் காலை பால சுப்பிரமணிய சுவாமிக்கு உற்சவம். குதிரை வாகனத்தில் எழுந்தருளி துஷ்டர்களை அழிக்கும் பரி வேட்டை உற்சவம் கண்டருளுகிறார் பால சுப்பிரமணிய சுவாமி.   இக்கோவிலில் உற்சவராக  சிவசுப்பிரமணிய சுவாமி, சண்முகர், பால சுப்பிரமணிய சுவாமி, பழனி ஆண்டவர் மற்றும் சிறிய நித்யோஸ்தவர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

பால சுப்பிரமணிய சுவாமி பரிவேட்டை உத்ஸவம் 

எட்டாம் திருநாள் மாலை
அருணகிரிநாதருக்கு பொருள் பாலிப்பு உற்சவம் 

மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில்
 தேவியருடன் சிவசுப்பிரமணிய சுவாமி


எட்டாம் திருநாள் இரவு முருகன் அருணகிரி நாதரை காப்பாற்றி திருப்புகழ் பாட வைத்த உற்சவம் , அருணகிரி நாதருக்கு பொருள் பாலிப்பு உற்சவமாக சிறப்பாக நடைபெறுகின்றது. இன்று மட்டும் சிவ சுப்பிரமணிய சுவாமியும் அருணகிரி நாதரும் கிழக்கு வாசல் வழியாக திருக்கோவிலை விட்டு வெளியே வருகின்றனர் என்பது இந்த உற்சவத்தின் சிறப்பு. பின்னர் மின் அலங்கார புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து அருளுகின்றார் முருகர். 

எழில் கொஞ்சும் குமரன்

பால சுப்பிரமணியர் 


அருணகிரிநாதர்

புஷ்ப பல்லக்கு


மின் அலங்கார புஷ்ப பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி 

இன்றும் முழுவதும் ம்லர்களால் ஆன மயில் அலங்காரத்தை கவனியுங்கள் அன்பர்களே.


Friday, March 15, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -14

                                              ஏழாம் திருநாள் திருத்தேரோட்டம் -2 
                                                              
                                                               தவன உத்ஸவம் 



திருத்தேரின் முன்னழகு




சூரனுடன் போருக்கு செல்வதால் முருகனின் வேற்படை வில்லில் உள்ளதை  கவனியுங்கள்.



திருத்தேரின் பின்னழகு




வள்ளி நாயகி திருத்தேர்


தெய்வ நாயகியின் திருத்தேர்

அதிகாலையில் நல்ல முகூர்த்த வேளையில் தேர் வடம் பிடிக்கப்பட்டு திருவீதி வலம் வந்து  மதியம் தேர் நிலைக்கு வந்து விடுகின்றது பின்னர் பக்தர்கள் தேரில் சென்று முருகனை தரிசனம் செய்கின்றனர். இரவு சிறப்பு அலங்காரத்துடன் சூரனை வென்ற வெற்றி வீரராக முருகப்பெருமான்  திருக்கோவிலுக்கு எழுந்தருளுகின்றார்.  இந்த உத்ஸவம்  தவன உத்ஸவம் என்றழைக்கப்படுகின்றது.  



ஆணவம் கன்மம் மாயை என்னும் தாருகன், சிங்கமுகா சூறன், சூரபத்மன் ஆகிய அசுரர்களுக்கு பெரு வாழ்வு அளித்து( சம்ஹாரம் செய்து), சூர பத்மனை மயிலாகவும் சேவலாகவும் மாற்றி மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் தனது கரத்தில் ஏந்தி தேவ சேனாபதி முருகர் வெற்றி வீரராக திருக்கோவிலுக்கு திரும்பும் அழகு.  



இப்போது வெற்றி வீரர் என்பதால் வலக்கரத்தில் வேலை ஞான சக்தியாகவும், இடக்கரத்தில் சேவல் கொடியையும் தாங்கி வருவதைக்காணுங்கள் அன்பர்களே. 


                              முழுவதும் மலர்களாலே உருவாக்கப்பட்ட மயில் வாகனம் 



(இப்பதிவில் உள்ள படங்கள்  முந்தைய  வருடத்தியவை. )

அழகன் முருகனின் அற்புத அலங்காரங்கள் தொடரும்..........