Friday, February 22, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -4

இரண்டாம் திருநாள் உற்சவம் 


வேத ஆகம-திருமுறை மண்டபத்தில் சண்முகர் சன்னதி மட்டுமல்லாது சிவபெருமானுக்கும் ஒரு தனி  சன்னதி உள்ளது. ஐயனின் திருநாமம் விசாலாக்ஷி உடனுறை விஸ்வநாதர், ஐயன் லிங்க ரூபமாகவும்  மிகவும் விசேஷமாக சோமாஸ்கந்தராக மூர்த்த ரூபத்திலும், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தூடன் அருள் பாலிக்கின்றாள்.விசாலாக்ஷி அம்பாள் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் எழிலாக தரிசனம் செய்கின்றார். கோஷ்ட தேவதைகள், சண்டிகேஸ்வரர், நந்தியெம்பெருமான் என்று எல்லா தேவதைகளும்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். 1993ம் ஆண்டு ஸ்ரீ பிரதோஷ மூர்த்தியும் வெள்ளி  ரிஷப வாகனமும் பக்தர்களால் சமர்பிக்கப்பட்டு பிரதோஷம் தோறும் சிறப்பாக நடைபெறுகின்றது. சகல தோஷ நிவாரணத்தை அள்ளித்தரும் பிரதோஷ  விழாக்களில் ஏராளமான பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் கலந்து கொள்கின்றனர்.

பஞ்ச பர்வ உற்சவத்தின் பொதும் இவர் மாட வீதி உலா வந்து அருளுகின்றார்.  ஐயனை பாடிப்பரவிய தொண்டர்களான, அப்பர், திருஞான சம்பந்தர் சுந்தரர், மாணிக்க வாசகர் மற்றும் பெரிய புராணம் பாடிய சேக்கிழார் பெருமானும் ( இவரும் செங்குந்த இனத்தினர் என்பதாலோ?)   மூலவர் ரூபத்தில் ஒரு தனி கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளனர். ஐயனின் மஹா மண்டப முகப்பில் காஞ்சி காமாக்ஷி, காசி விசாலாக்ஷி, மதுரை மீனாக்ஷி எழில் ஒவிய வடிவில் காட்சி தருகின்றனர். மேலும் பஞ்ச பூதத் தலங்களான, காஞ்சிபுரம், திருவாணைக்காவு, திருக்காளத்தி, திருவண்ணாமலை, சிதம்பரம் ஷேத்திரங்களின் ஐதீகம் ஓவிய வடிவில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.  மேலும் இம்மண்டபத்தில் அனுமனுக்கு ஒரு சன்னதியும், முப்பெருந்தேவியரான கலை மகள், அலைமகள், மலை மகள் ஆகியோருக்கும் தனி சன்னதி உள்ளது. இம்மண்டபத்தில் திருமுறை தொடர் சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கின்றது. 

இரண்டாம் திருநாள் காலை சூரிய பிரபையில்
சிவசுப்பிரமணிய சுவாமி

வள்ளி நாயகி, தெய்வ நாயகி உடனுறை சண்முகர் சன்னதி இம்மண்டபத்தின்  கிழக்கில் உள்ளது  அருமையான மூர்த்தம் மயில் மேக் பன்னிரு கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி தேவியருடன் தரிசனம் தருகின்றார் ஆறுமுகப்பெருமான். இவரை
ஆறிரு தடந்தோள் வாழ்க!
     அறுமுகம் வாழ்க!  வெற்பை
கூறு செய் தணிவேல் வாழ்க!
      குக்குடம் வாழ்க! செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க! ஆணை
தன்  அணங்கு வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க
     சீரடியார் எல்லாம்.
என்று வாழ்த்தி வணங்குகிறோம். சண்முகர் சன்னதியிலும் கோஷ்ட தேவதைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவருக்கு வாகனமாக , ஐராவதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அடுத்து நாம் காண இருப்பது தெற்கில் அமைந்துள்ள கல்யாண மண்டபம். இம்மண்டபம் தேவி கருமாரி அம்மன் ஆலயத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டதால்  கருமாரி அம்மன் மற்றும் அவரின் பிள்ளைகளான விநாயகர் மற்றும் முருகர் சுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றனஇம்மண்டபத்தில்தான் உற்சவ காலங்களில் சுவாமி அலங்காரம்  மற்றும் பூசனைகள் நடைபெறுகின்றதுஇம்மண்டபத்தின் பக்தர்கள் ஐயனை தரிசிக்கும் பகுதியில் மேற்பகுதியில் ஆறு படை வீடுகளின் சுதை சிற்பங்கள் அருமையாக அமைக்கப்பட்டுள்ளனதிருப்பரங்குன்றுதிருக்கல்யாண முருகன், திருச்செந்தூர்ருத்ர முருகன்,  , திருவாவினன்குடிஞான முருகன், சுவாமி மலைஉபதேச முருகன், திருத்தணி- சினம் தனிந்த முருகன், பழமுதிர் சோலைஅருள் பாலிக்கும் முருகன் மற்றும் வள்ளி நாயகி  யானையை கண்டு விருத்தரை அனைத்துக் கொள்ளும் வள்ளி மலை தினைப்புனம் காக்கும் சிற்பம்  என்று சுதை சிற்பங்கள் உயிரோட்டமுடன் அழகாக அமைந்துள்ளன.

இரண்டாம் திருநாள் மாலை சந்திர  பிரபையில்
சிவசுப்பிரமணிய சுவாமி



இனி மூலவரை சென்று தரிசனம் செய்வதற்கு முன் இரண்டாம் திருநாள் அலங்காரம் என்ன என்று காணலாமா? காலையில்  அருள் முருகன் சூரியப் பிரபை வாகனத்திலும் இரவி சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி வலன் வந்து சாம்பவி தீக்ஷை அளித்து அருள் பாலிக்கின்றார். இந்த காட்சிகளை இப்பதிவில் காண்கின்றீர்கள் அன்பர்களே.














4 comments:

மாதேவி said...

அழகிய தர்சனம் மனதை நிறைக்கின்றது.

S.Muruganandam said...

அழகம் முருகனின் அற்புத தரிசனம் இன்னும் தொடரும். வந்து தரிசனம் செய்யுங்கள் மாதேவி.

மிக்க நன்றி

Test said...

சூரிய மற்றும் சந்திர வாகன முருக தரிசனத்திற்கு நன்றி ஐயா.

S.Muruganandam said...

மிக்க நன்றி LOGAN ஐயா.