Thursday, February 21, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -3

முதலாம் திருநாள் மாலை வில்வ மர சேவை 

யோக தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் எழில் குமரன்
( மண்டபத்த்தில் அருள் பாலிக்கும் கோலம், இந்த வருடம் மேல் திருக்கரங்களில் அனலும், நாகமும் ஏந்தியுள்ளார்)

சுமார் 450 வருடங்கள் பழமையான கோவில் காலத்திற்கேற்ப பல மாற்றங்களுடன் இன்று  எழிலாக விளங்குகின்றது.  ஒன்றாம் திருநாள் மாலை அலங்காரத்தை காண்பதற்கு முன் இவ்வாலயத்தை வலம் வரலாமா? இவ்வாலயத்தின் அருகிலேயே சிறிய விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த விநாயகரின் திருநாமம் செங்குந்த விநாயகர் ஆகும்.  அநேகமாக விநாயகர் கிழக்கு நோக்கிய திருமண்டலத்துடன்தான் எழுந்தருளி அருள்பாலிப்பார் ஆனால் இவரோ வடக்கு நோக்கி அருள் பாலிக்கின்றார். சிறிய ஒரு பிரகாரத்துடன் அமைந்துள்ளது இந்த சன்னதி.  பிரகாரத்தில் விநாயகரின் 32 வடிவங்களை புகைப்படமாக அமைத்துள்ளனர் மற்றும் திருப்புகழில் உள்ள விநாயகப்பெருமானின் பாடல்கள் கல்வெட்டுகளாக பதியப்பட்டுள்ளன.

வில்வ  மரத்தடியில்  

அருகிலேயே வடக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம். சிவசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் ஆயினும் இராஜ கோபுரம் வடக்கு நோக்கித்தான் உள்ளது. விநாயகர் ஆலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் விநாயகரின் சன்னதியும்   மூன்று நிலை இராஜகோபுரமும் திருப்பணி செய்யப்பட்டுள்ளதாக இருந்தது. பின்னர் விசாரித்ததில் தற்போதுள்ள  ஐந்து நிலை இராஜகோபுரம் 1975 புதிதாகக் கட்டப்பட்டதாக அறிந்தேன்.  கோபுரத்தில் நுழைந்தவுடன் எதிரில்  உற்சவர் அழகாக காட்சி தருகின்றார். உற்சவர் சன்னதிக்கு கவசம் சார்த்தப்பட்டுள்ளது மயிலும், துவார பாலகர்களும் எழிலாக காட்சியளிக்கின்றனர். மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமியை தரிசிக்கும் முன்னர் பிரகார வலம் வந்து விடலாமா? 
வில்வ மர சேவை 

இராஜ கோபுரத்தில் உள்ளே நுழைந்து திரும்பியவுடன்  மேற்கு நோக்கிய உற்சவ யாகசாலை   அதற்கடுத்து கொடி மர மண்டபம் இம்மண்டபம் 1988ம் ஆண்டு புதிதாக கட்டப்பட்டதாம். கொடி மரத்திற்கு பித்தளை தகடு சார்த்தப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் அற்புதமான சுதை சிற்பங்கள் அமைத்துள்ளனர். அலர் மேல் மங்கை உடனுறை திருவேங்கடவன், திருக்கயிலையில் மாங்கனி பெறும் காட்சி, ஆறு படைவீடுகளின் எழில் குமரன் ,  தேவியர் இருவருடன் மூலவர் சிவ சுப்பிரமணிய சுவாமி என்னும் சுதை சிற்பங்கள் மேல் பகுதியில் உள்ளன. இந்த சிற்பங்களையெல்லாம் கண்ணாடி கதவு கொண்டு மூடியிருப்பதால் பொலிவு மாறாமல் அப்படியே புதிதாக உள்ளன.    

இந்த வருடம் மேல் திருக்கரங்களில் மானும் மழுவும் ஏந்தி தரிசனம் 

 கீழ்ப்பகுதியில் சன்னதிகள். சுதை வடிவத்தில்  முருக பக்தர்களான பாம்பன் சுவாமிகள், அருட்பிரகாச வள்ளலார்,  மற்றும் சிதம்பரம் சுவாமிகள் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர். மேற்கு நோக்கி அங்காரகன் (செவ்வாய்), சாஸ்தா, இடும்பன், கடம்பன், மற்றும் சூரியபகவானுக்கான சிறு சன்னதிகள் உள்ளன.  பலிபீடம், கொடி மரம் மற்றும் மயில் வாகன சன்னதி இம்மண்டபத்தில் உள்ளன. கிழக்கு நோக்கி அந்தாதி இல்லா இறைவனுக்கு செந்ததேனும்  புளித்து அறக் கைத்ததுவே என்று அந்தாதி பாடிய அருணகிரி நாதருக்கு ஒரு சன்னதி. மறு பக்கம் பழனியாண்டவருக்கு ஒரு சன்னதி. இம்மண்டபத்தில் வள்ளலார் சுவாமிகள் பாடிய திருப்பள்ளியுழுச்சி கல்வெட்டாக  அமைக்கப்பட்டுள்ளது.
துவஜஸ்தம்ப மண்டபத்தை அடுத்து நாகேந்திரர் சன்னதி, இச்சன்னதியில் இலிங்க நாகேந்திரர், விநாயகர், மற்றும் நாகேந்திரர் அருள் பாலிக்கின்றனர். இதை அடுத்து சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அதற்கு அடுத்து  நவக்கிரக சன்னதி, மடப்பள்ளி மற்றும் நந்தவனம்.  இவ்வாலயத்தில் முருகப்பெருமான் மூலவராக மூன்று கோலங்களில் அருள் பாலிக்கின்றார்.  வள்ளி நாயகி, தெய்வ நாயகி உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். ஆண்டிக்கோலத்தில் கையில் ஞான தண்டாயுதம் தாங்கி பழனி ஆண்டவராகவும் அருள் பாலிக்கின்றார், மற்றும் வள்ளி நாயகி, தேவசேனா நாயகி உடனுறை சண்முகரை  ஆறு முகங்களுடன், அருள் புரியும் பன்னிரு விழிகளுடன் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றார் இச்சன்னதிக்கு எதிரே வேத ஆகம-திருமுறை மண்டபம் அமைத்துள்ளனர்.  திருக்கோவில் வலத்தை இனி அடுத்த பதிவில் தொடரலாம் இப்பதிவில் முதலாம் திருநாள் இரவு வில்வ மர சேவையினைக் காணலாமா அன்பர்களே.

தேவியருடன் எழில் குமரன் 

பாகம் பிரியாமல் தேவியர் உடன் வர , மற்றும் இரு தேவியர் தினமும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி முருகருடன் மாட வீதி வலம் வருகின்றனர். வீரபாகுத்தேவர் முன் செல்ல, சண்டிகேஸ்வரர் நிறைவு செய்ய தினமும் பஞ்ச மூர்த்திகள் வலம் வருகின்றனர்.  



 ஒரு வருடம்  முயசலகன் மட்டும் 


குருவாய் வருவாய் அருள்வாய் குகனே


வள்ளி நாயகியின் ஏழிற்கோலம் 

சான்றோருடைத்த தொண்டை நாட்டில் பெருவிழாவின் முதல் நாள் இரவு சுவாமி தல விருட்சத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பார், அது போலவே இவ்வாலயத்திலும் சிவசுப்பிரமணிய சுவாமி வில்வ விருக்ஷத்தில் யோக தக்ஷிணாமூர்த்தியாக தரிசனம் தருகின்றார், கல்லாலின் கீழ் அமர்ந்து நால்வருக்கும் உண்மைப்பொருளை பேசாமல் உபதேசித்த குருவாய்  முருகன் எழுந்தருளி தரிசனம் அந்த அழகை என்னவென்று சொல்ல.  குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று அன்று அருணகிரி நாதர் பாடிய படி ஞான வேல் கொண்டு நம் அஞ்ஞானம் அகற்றும் அருள் முருகன் அருளுகின்றார் இந்த முதலாம் திருநாள் இரவில்.  ஒவ்வொரு வருடமும் விதமாக அலங்காரம் செய்யும் அம்சம் தான் அடியேனுக்கு இத்திருக்கோவிலில் பிடித்த ஒரு அம்சம்.

2 comments:

Test said...

சிறந்த தகவல் தொகுப்பு மற்றும் புகைப்படத் தொகுப்பு, முருகனை யோக தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் தரிசிக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி ஐயா. சென்னையில் பிறந்திருந்தாலும் இக்கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. இனி வரும் நாட்களில் செல்ல வேண்டும்.

S.Muruganandam said...

இனி சென்னை வரும் போது நிச்சயம் சென்று தரிசனம் செய்யுங்கள் LOGAN ஐயா. சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய திரிமூர்த்தி ரூபத்திலும் இந்த முருகனை அலங்காரம் செய்கின்றனர். வரும் பதிவுகளில் அவைகளையும் காணலாம் ஐயா.