Tuesday, January 22, 2013

காளிகாம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்



விநாயகர் 

தருமமிகு சென்னையில் பாரி முனையில் அருள் பாலிக்கும்,  மராட்டிய  சிவாஜி மன்னன் வழிபட்ட,  மஹாகவி பாரதியார் யாதுமாகி நின்றாய் காளீ  என்று பாடிப்பரவிய   அன்னை கமடேச்வர நாயகியாம் காளிகாம்பாளுக்கு   ஸ்வர்ணபந்தன மஹா கும்பாபிஷேகம் நாளை 23.01,2013 அன்று காலை 9.00 மணி முதல் 9.45 மணிக்குள்  சிறப்பாக நடை பெறவுள்ளது. விரும்பும்  அன்பர்கள் சென்று தரிசனம்  செய்யுமாறு  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  

பரிவார தேவதைகளுக்கான கும்பாபிஷேகம் சென்ற 17.01.2013 அன்றே நடைபெற்று விட்டது. நாளை காளிகாம்பாளுக்கும் இராஜ கோபுரங்களூக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  

இப்பதிவில் யாக  சாலை பூஜைகள் சிறப்பாக நடந்து வருகின்றன. யாக சாலை யில் அமைத்துள்ள தெய்வ மூர்த்தங்களின் ஒரு தொகுப்பே இப்பதிவு.


நடராஜர்,  விநாயகர்,  உண்ணாமுலையாள் சமேத அண்ணாமலையார், 
வள்ளி தெய்வாணை சமேத முருகன்,  அகோர வீரபத்திரர்

 உற்சவர் சின்னம்மன்



  வேத மாதா காயத்ரி 

 விஸ்வ கர்மா

 கமடேஸ்வர நாயகி அன்னை காளிகாம்பாள்

உண்ணாமுலையம்மன்

இனி இக்திருக்கோவிலின் சிறப்புகளைப் பற்றி காணலாமா அன்பர்களே?


கமடேஸ்வர நாயகி அன்னை காளிகாம்பாள்

காளிகாம்பாள் மூலவர்


கற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம். சென்னை என்று இந்த நகருக்கு பெயர் வர காரணமாக இருக்கும் அன்னை குடி கொண்டிருக்கும் தலம். வீர சிவாஜியும், மஹா கவி பாரதியாரும் வழிபட்ட தலம், விஸ்வ கர்மாவிற்கு தனி சன்னதி உள்ள தலம், ஆதி சங்கரர் ஸ்ரீ சக்ரம் ஸ்தாபித்த தலம் என்ற அனைத்து பெருமைகளையும் கொண்ட தலம் தான் சென்னை பூங்கா நகரில் அமைந்துள்ள காளிகாம்பாள் திருக்கோவில்.

காமாக்ஷி,  கமடேஸ்வரி, கோட்டையம்மன், சென்னியம்மன், நெய்தல் நில காமாட்சி என்றும் ஆயிரம் திருநாமம் அம்பாளுக்கு இத்தலத்தில். மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் முதலிய புராணங்களில் இத் திருக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. வாருங்கள் இத்திருகோவிலின் பெருமைகளை பார்ப்போம்.


அகில புவனங்களையும் படைத்தும், காத்தும் கரந்தும் விளையாடும் அந்த ஆதி பராசக்தியானவள் நாம் உய்யக் கொள்ளும் வேடங்கள் அநேகம் அவற்றுள் ஒன்றுதான் காளி. துஷ்டர்களை அழித்து பக்தர்களை காக்க அம்மை கொள்ளும் கோலமே காளி ரூபம். காலம் என்பதன் தெய்வீக ரூபமே காளி. இந்த பூவுலகிலே பிறந்த எந்த உயிரும் வளர்ந்து பின் இறந்து மறுபடியும் பிறக்கும் என்பது நியதி. இவ்வாறு புதிதாய் தோற்றுவிக்க சக்தி வடிவம் கொள்பவள் ஒரே அன்னையே!. கோரமும் இறைவன் செயலே என்பதை எடுத்துக் காட்டவே, சௌந்தர்யமான அன்னை சக்தி, குரூரமான காளி உருவம் கொள்கிறாள். அழிவு இல்லாமல் ஆக்கம் ஏது? இரவை அழித்து பகலையும் பகலை அழித்து இரவையும் உண்டு பண்ணுபவள் அன்னையே.




காளிகாம்பாள் உற்சவர்



தர்மமிகு சென்னை என்று போற்றப்படும் சென்னை மாநகரிலே தம்பு செட்டி தெருவிலே நாம் விரும்பும் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றும் காமாக்ஷியாய், தீயவர்களை அழிக்கும் காளிகாம்பாளாய், உலகையாளும் தேவியாய், தன்னை வணங்குபவர்களின் துன்பம் நீக்கி இன்பம் அளிக்கும் கமடேஸ்வரி அன்னையாய் கொலு வீற்றிருக்கிறாள் அந்த பராசக்தி. அவள் குங்குமம் பெற்றாலே முக்தி.





மிகவும் புராதனமான கோவில், சுமார் 400 வருடங்கள் பழமையானது. சிவாஜி மஹாராஜா வழிபட்ட பவானி ஸ்ரீ காளிகாம்பாள், யாதுமாகி நின்றாய் காளி என்று பாரதியாருக்கு நா வன்மையை கொடுத்த ஸ்ரீ சாரதை காளிகாம்பாள், தன்னை வணங்கும் அன்பர்களின் செல்வ நிலயை உயர்த்தும் ஸ்ரீ மஹா லக்ஷ்மி கல்வியை கலைகளை வழங்கும் ஸ்ரீ மஹா சரஸ்வதி இருவரையும் தன் கண்களாகக் கொண்டவள் காளிகாம்பாள். தனது இச்சா மந்திர சக்தியால் பன்னிரண்டு ஸ்தலங்களில் காட்சி தந்து வரும் காமாட்சி அன்னை, அவற்றுள் ஒன்றான இத்திருக்கோவிலில் மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் வலக்கால் தொங்கவிடப்பட்ட நிலையில், அங்குச பாசம் மேற்கையில் ஏந்தி, தாமரை வரத முத்திரையுடன், மூக்குத்தி மின்ன, மரகத பதக்க பொன் தாலியும், ஒட்டியாணம், கொப்பு, குழை, கங்கணம், பாதச்சிலம்பு மின்ன, காலை மூன்று அரக்கர்களின் மேல் வைத்த நிலையில் எழிற் கோலம் காட்டுகின்றாள். நாம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கினாலே அந்த பரம் பொருளுடன் சேர முடியும் என்பதை குறிப்பாக காட்டுகின்றாள் அன்னை. காளி என்றாலும் சாந்த ரூபத்தில் காமாக்ஷியாக எழிற் கோலம் காட்டுகின்றாள் அன்னை. அவள் சன்னதியில் நின்றாலே ஒரு நிம்மதி அம்மையை தரிசித்தவுடன் நம் பாவமெல்லாம் விலகுகின்றன. ஆதி சங்கர பகவத் பாதாள் ஸ்தாபித்த ஸ்ரீ சக்ர அர்த்த மேருவும் அம்மையின் முன் உள்ளது. அர்ச்சனை அர்த்த மேருவிற்க்குத்தான் நடைபெறுகின்றது.


ஸ்ரீ காளிகாம்பாள் திருப்பல்லாண்டிலிருந்து ஒரு பாடல்


கலைமகளே திருமகளே மலைமகளே
காலை கதிரொளியே!
குலக்கொழுந்தே கொற்றவையே காளிஎனும்
கலைக்கடலே கருணை ஈவாய்
சிறந்தொளிசேர் செம்பூவும் பசுந்தழையும்
சேர்ந்தன போல் சிவமும் தாயும்
அறந்தழைக்க நேர் பாதி கலந்த கோல
அழகினுக்கு ஆயிரம் பல்லாண்டு.

இந்திரன், குபேரன், வருணன், விராட புருஷன் விஸ்வகர்மா, வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கிரேசர், புலஸ்தியர் ஆகியோர் வழிபட்ட தலம். கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வ கர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. பரதபுரி, ஸ்வர்ணபுரி என்றெல்லாம் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இப்புராதன ஆலயம். விஸ்வ கர்மாக்கள் கோட்டையிலே வழிபட்டதால் கோட்டையம்மன். முற்காலத்தில் கடல் ஓரத்தில் இருந்திருக்கலாம் ஆங்கிலேயர் காலத்தில் இப்போது உள்ள இடத்திற்கு மாறியிருக்க வேண்டும். செம்படவர்களும் மற்றவர்களும் செந்தூரம் பூசி வழிபட்டதால் இவ்வன்னைக்கு சென்னியம்மன் என்ற திருநாமமும் உண்டு. சென்னம்மன் குப்பமே, சென்னை ஆயிற்று.

 "ஸமாசர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண சேவிதா" என்ற லலிதா சகஸ்ரநாம நாமாவின் படி ஸ்ரீ மஹா லக்ஷ்மியும், ஸ்ரீ மஹா சரஸ்வதியும் தன் இரு கண்களாய் அமையப் பெற்ற காளிகாம்பாள் இவளாவதால் செல்வமும் கல்வியும் குவிந்துள்ள நகரமாய் சென்னை விளங்குகின்றது.


தெற்கு இராஜ்ஜயங்களை தன்வயப்படுத்தி திக்விஜயம் செய்த மராட்டிய மாமன்னன் வீர சிவாஜி 1667ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் நாள் இவ்வாலயத்திற்கு விஜயம் செய்து அன்னையை வழிபட்ட செய்தியை வரலாற்று ஏடுகளில் நாம் காணலாம். பிராட்வேயில் சுதேச மித்திரனில் பணி செய்து கொண்டிருந்த போது மஹாகவி பாரதியார்


யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மையெல்லாம் - நின்றன்
செயல்களின்றி இல்லை
போதும் இந்த மாந்தர் வாழும்
பொய்மை வாழ்க்கையெல்லாம்
ஆதி சக்தி தாயே - என் மீது
அருள் புரிந்து காப்பாய்


என்று அன்னையின் மேல் பாடல்கள் புனைந்துள்ளார். பாரதியார் பாடிய காளி பாடல்கள் அனைத்தும் அன்னையைப் பற்றியதே. சிவபெருமானின் அம்சமாக காலடியில் தோன்றி நமது சனாதன தர்மமான இந்து மதத்திற்க்கு புத்துயிரூட்டிய ஆதி சங்கர பகவத் பாதாள் இவ்வாலயத்திற்கு எழுந்தருளி அன்னையை வழிபட்டு ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்திருக்கின்றார் இந்த சரித்திர சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகளும் இத்திருகோவிலில் சுதை சிற்பங்களாக விவரிக்கப்பட்டுள்ளன.


அன்னையின் சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது, கோஷ்டத்தில் வித்யேஷ்வரி, பிரம்ம வித்யா, வைஷ்ணவி, தாக்ஷ‘யணி, மற்றும் மஹாலக்ஷ்மி எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். அம்மனுக்கு வலப்புறத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் கமடேஸ்வரர் சன்னதி. ஐயனின் கோஷ்டத்திலும் சிறிதாக துர்க்கை, பிரம்மா, விஷ்ணு, ஆலமர் கடவுள் மற்றும் வினாயகர் அருள் பாலிக்கின்றனர். திருக்கோவிலில் உள்ளேயே கிழக்கு நோக்கி அருணாச்சலேஸ்வரர் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் உள்ளது. சிவசக்தித்தலமான இத்தலத்தில் எம்பெருமான் கமடேஸ்வரராகவும், அருணாச்சலேஸ்வரராகவும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் உள்ளது.. எனவே இத்தலத்தில் வழிபட்டால் காஞ்சி, அருணை ஆகிய இரு தலங்களையும் வழிபட்ட பலன் உண்டு.மேலும் கோவிலின் உள்ளேயே சிவ விஷ்ணு பிரம்மா ஸ்வரூப  வீர பிரம்மேந்திர குரு சனனதியும், பள்ளியறையும் உள்ளன.

நெரிசல் மிகுந்த பாரி முனைப் பகுதி என்பதால் ஒரே ஒரு பிரகாரம்.  ஆர்மேனியன் சாலையயும்  தம்பு செட்டிதெருவையும் இனைக்கும் வண்ணம் கோவில் அமைந்துள்ளது.  மேற்கிலும் கிழக்கிலும் கோபுரங்கள் உள்ளன. தெற்கு பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் கிழக்கு நோக்கிய சித்தி புத்தி வினாயகர் சன்னதி. சுப்பிரமணியர் வட கதிர் காம முருகராகவும், அகோர வீர பத்திரர், மஹா காளி, வேத மாதா காயத்ரி, துர்கா, விஸ்வ கர்மாஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள், வீரபத்திரர் சன்னதியின் விமானத்தில் ஆட்டுத்தலையுடன் கூடிய ஆணவம் நீங்கிய தட்சன் வீர பத்திரரை வணங்கும் சுதை சிற்பம் அற்புதமாக உள்ளது. வீர பத்திரருடன் அன்னை காளியும் அருள் பாலிக்கின்றாள். வடக்கு நோக்கிய துர்க்கை அம்மன் செப்புத் திருமேனி, எழிலாக அருட்காட்சி தருகின்றாள் அன்னை. அருகில் வேத மாதா காயத்ரிக்கும் ஒரு சன்னதி.   பிரகாத்தில் வட கிழக்கு முலையில் ஆடல் வல்லான் சன்னிதி பிரம்மோற்சவ காலங்களில் அம்மனின் அலங்கார மண்டபமாகவும் விளங்குகின்றது. பரிவார தேவதை கடல் கண்ணி, கடல் தீர்த்தம் எனவே அன்னை நெய்தல் நில காமாட்சி என்றும் அழைக்கப்படுகின்றாள் , தல விருட்சம் மா மரம்.




ஸ்ரீசக்ர நாயகிக்கு கிண்ணித் தேர்




வேறு எந்த ஆலயங்களுக்கும் இல்லாத பல சிறப்புகள் இவ்வாலயத்திற்கு உள்ளன. ஸ்ரீ சக்ர நாயகியாம் அன்னைக்கு ஸ்ரீ சக்ரமே இங்கு தேராக அமைந்துள்ளது. இந்த சக்ரராஜ விமானம் எனப்படும் இத்தேர் கிண்ணித்தேர் என்று அழைக்கப்படுகின்றது. வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் போது ஒன்பதாம் நாள் இரவு வெண்கல கிண்ணிகளால் நிறைந்த இத்திருத் தேரிலே மின் விளக்கு ஒளியில் பவனி வருகின்றாள் அன்னை. நடராஜருடன் இத்தலத்திலே எலும்பும் தோலுமாய் , மூன்று கால்களுடன் பிருங்கி முனிவர் எழுந்தருளியுள்ளார். ஐயனை மட்டுமே வலம் வருவேன் அம்மையையும் சேர்த்து வலம் வர மாட்டேன் என்று அறியாமையால் தவறு செய்த பிருங்கி முனிவர் அன்னையின் சாபத்தினால் இவ்வாறு ஆனார். பின் அம்மை கேதார கௌரி விரதம் மேற்கொள்ளவும் இடப்பாகம் பெறவும் காரணமாய் இருந்தவர் பிருங்கி முனிவர். இன்றும் ஆருத்ரா தரிசனம் திருவுலா முடிந்து ஐயனும் அம்மையும் திரும்பி வரும் போது இந்நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது.





பிரம்மோற்சவத்தின் போது அம்மனின் எழிற்கோலம்


உற்சவ மூர்த்திகள் இருவர் பெரிய நாயகி மஹா லக்ஷ்மியும், மஹா சரஸ்வதியும் தோழியராக நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள்  சிறிய நாயகி பிரகாரத்தில் 16 கால் மண்டபத்தில், அருட்காட்சி தருகின்றாள். அகோர வீரபதித்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து 6 மாதம் பௌர்ணமியன்று வழிபட்டால் இஷ்ட சித்தியாகும். விராட புருஷன் விஸ்வ கர்மாவுக்கு தனி சன்னதி உள்ளது.  இவரை

ஓம் சத்யோஜாத முகாய பிரம்மதேவனே நம:
ஓம் வாமதேவ முகாய விஷ்ணு தேவனே நம:
ஓம் அகோர முகாய ஈஸ்வர தேவனே நம:
ஓம் ஈசான்ய முகாய இந்திர தேவனே நம:
ஓம் தத்புருஷ முகாய சூரிய தேவனே நம

:ஓம் தேவ தேவ மஹா தேவ விஸ்வப்பிரம ஜகத் குருவே நம:


என்று அகில ஜகத்திற்கும் குருவாகவே விஸ்வ கர்மா பெருமக்கள் இவரை வணங்குகின்றனர்.



நாளெல்லாம் திருநாளே நமை காக்க வருவாளே என்றபடி திருக்கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாதான். சித்திரையிலே குங்கும லட்ச்சார்சனை. சித்ரா பௌர்ணமியன்று திரு விளக்கு வழிபாடு. வைகாசியிலே வைகாசி விசாகத்தை ஒட்டி 10 நாள் பிரம்மோற்சவம். முதல் நாள் வினாயகர் உற்சவம், துவஜாரோகணம், தினமும் காலையிலும் மாலையிலும் திரு வீதி உலா, காலை 3வது நாள் பூத வாகனம், 7ம் நாள் பூத்தேர் மிகவும் விசேஷம். மாலையிலே 2ம் நாள் காமதேனு வாகனம், 4ம் நாள் ரிஷப வாகனம், 5ம் நாள் சிம்ம வாகனம், 6ம் நாள் தும்பிக்கையும், காதும் ஆடும் யானை வாகனம், 9 நாள் கிண்ணித்தேர் என்று சர்வ அலங்காரத்துடன் அருட்காட்சி தந்து மாட வீதிகளில் உலா வருகின்றாள் அன்னை. ஆனியிலே வசந்த விழா. அன்னைக்கு உகந்த ஆடி பெருவிழா 10 ஞாயிற்றுக் கிழமைகள், வெள்ளிக்கிழமையிலே ஊஞ்சல் உற்சவம். ஆவணியிலே வினாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி 9 நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் கொலுவிருக்கும் அன்னை விஜய தசமியன்று வீதி உலா வருகின்றாள். ஐப்பசியில் ஸ்கந்த சஷ்டி விழா. கார்த்திகை சோம வாரம் மற்றும் கார்த்திகை தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம் 10 நாட்களும் மாணிக்கவாசகர் உலா பத்தாம் நாள் காலையில் நடராஜர் சிவகாமசுந்தரி அபிஷேகம் மற்றும் தீபாரதனை பின் புறப்பாடு, கோவிலுக்கு திரும்பி வரும் போது அம்மை முதலில் உள்ளே வந்து பின் கதவை சாத்துகின்றனர் பின் திருஊடல் உற்சவம், அம்மை சமாதானம் ஆன பின் சபைக்கு எழுந்தருளுகின்றார் எம்பெருமான் . மாலையிலே காளிகாம்பாள் திருவீதி உலா. தை மாதம் பொங்கல், பூச்சொரிதல், மூன்றாம் வெள்ளி பட்டாபிஷேகம், 4வது வெள்ளி 108 திருவிளக்கு வழிபாடு, வெள்ளி ஊஞ்சல். தைப்பூசத்தன்று தெப்பம் கச்சாலீஸ்வரர் கோவிலில். மாசி மகத்தில் கடலாடல் மற்றும் சிவராத்திரி. பங்குனியில் வசந்த நவராத்திரி. அம்மை உலா வர நு‘தன வெள்ளி ரதம் பக்தர்களால் சமர்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அம்மனுக்கு இத்தலத்தில் பூந்தேர், கிண்ணித்தேர், வெள்ளித்தேர் என்று மூன்று தேர்கள.





பிரம்மோற்சவத்தின் போது 7ம் நாள் பூத்தேர் கமடேஸ்வரிக்கு


அம்மையின் அபிஷேக மஞ்சள் பெற்றால் தீராத வினை தீரும், பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அக்குறை விலகும். அன்னையின் குங்குமம் பெற்றாலே முக்தி. அன்னைக்கு உகந்த வெள்ளிக் கிழமைகளிலே ஆயிரம் ஆயிரமாம் பக்தர் கூட்டம் அலை கடல் என பொங்கி வந்து அன்னையை பணிகின்றனர் அதுவும் ஆடி மற்றும் தை வெள்ளிகளில் அன்னையை தரிசிக்கும் அன்பர் பல கோடி . அன்னையின் அருள்பெற முடிந்தவர்கள் நாளை பாரிமுனை செல்லுங்கள். குடமுழுக்கு கண்டு களியுங்கள்.

ஓம் சக்தி

6 comments:

Test said...

பதிவிற்கும், சிறப்பான தகவல் தொகுப்பிற்கும் நன்றி ஐயா.

S.Muruganandam said...

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

மிக்க நன்றி LOGAN ஐயா.

skcark said...

is it possible to have a cd containing the dox of imaiyamalaiyil oor iniya yathrai. it should contain chapter wise in pdf.

skcark@yahoo.com

skcark said...

is it possible to have a cd containing the dox of imaiyamalaiyil oor iniya yathrai. it should contain chapter wise in pdf.

skcark@yahoo.com

S.Muruganandam said...
This comment has been removed by the author.
S.Muruganandam said...

Please mail me back your residential address so that I can send the CD to you.

Or else you can now download the same from the blog itself.