Tuesday, July 17, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -28


  ஜோஷிமட் நரசிம்மர் ஆலய முகப்பு வாயில்
 (நரசிம்மர், வாசுதேவர், நவதுர்கா ஆலயம் மூன்றும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளன)

அதிகாலை 6 மணியளவில் பாதை திறக்கப்படும் என்பதால் சீக்கிரம் எழுந்து தயாரானோம்.  இன்னும் சரியாக விடியவில்லை முதலில் நரசிம்மர் ஆலயம் சென்றோம், நாங்கள் சென்றபோது சன்னதி திறக்கப்படவில்லை ஆயினும் கோயிலை வலம் வந்த போது சன்னதி திறந்திருந்தது நரசிம்மரையும்,நவ துர்க்கைகளையும்  திவ்யமாக சேவித்து விட்டு, இந்தத் தடவைதான் கவனித்தோம் அருமையான ஒரு வெங்கல  கருடன் வாசுதேவருக்கு முன்னர் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர்.  பாதை திறந்தபின்  பத்ரிநாத்திற்கு புறப்பட்டு பத்ரிநாதத்தை இரண்டு மணி நேரத்தில் அடைந்து   தேஷ்பாண்டே அவர்கள் தங்கியிருந்த  அனந்த மடத்திற்கு சென்று பொருட்களை எல்லாம் வைத்து விட்டு,   உடனே தப்த்குண்ட் சென்று தீர்த்தமாடி விட்டு பத்ரிநாதரை தரிசனம் செய்ய புறப்பட்டோம்.



 நவதுர்கா
  
முட்கல் அவர்கள் எவ்வாறு தப்த்குண்டத்தில் தண்ணீர் நாம் குளிப்பதற்கு ஏதுவாக  கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்கின்றனர் என்று கூறினார். தப்த் குண்டத்தில் நீராடி பின் ஆதி கேதாரீஸ்வரரை முதலில் தரிசனம் செய்து விட்டு பின் பத்ரிநாதர் சன்னதிக்கு சென்றோம்.சிம்ம துவாரத்தின் மேற்பகுதியில் இந்த   வருடம் சங்கும் சக்கரம்ம் புதிதாக அமைத்திருக்கின்றார்கள்.   விஜயதசமியும் பெருமாளின் நட்சத்திரமுமான திருவோணமும் கூடி வந்த (திருமலையில் பிரம்மோற்சவ தீர்த்தவாரி நடைபெறும்) மிக புண்ணீய நாளில் பத்ரிநாதரின் திவ்யமாக சேவித்தோம். நாம் எப்போது அவரை தரிசனம் செய்கின்றோம் என்பதை நிர்ணயம் செய்பவர் அவர் அல்லவா. இந்தத் தடவை கேதார்நாத்திலும் சரி பத்ரிநாத்திலும் சரி அருமையான நாட்களில் தரிசனம் கிட்டியது. பரமபதத்தில் பெரிய பிரட்டியார், பூமா தேவி, நீளா தேவியுடன், கருடன், அனந்தன், விஷ்வஷேனர் முதலிய நித்ய சூரிகள் கைங்கர்யம் செய்ய, ஆதித்தர் அநேகர் ஒளி மழுங்க ஜோதிக்கதிர் வீசும் மணி மண்டபத்தில், நவரத்தினம்பதித்த ஆனிப்பொன்னால் செய்த திவ்ய சிம்மாதனத்தில் கருடர், கின்னரர், கந்தருவர், கிம்புருடர், தேவர்கள், முனிவர்கள் சூழ சேவை சாதிக்கும் கார் முகில் போல் மேனி வண்ணன் மஹா விஷ்ணுவை, மயிற்பீலி அழகனை, சகஸ்ர கவசனை வென்று பூலோகத்தை காப்பாற்றிய வள்ளலை, நாரதர் தினமும் சேவிக்கும் நாதரை, சங்கு சக்ர தாரியை பத்மாசானத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் பரமனை அவரது பரிவாரங்களுடன் அற்புதமாக சேவித்தோம் சுற்றி வந்து மீண்டும் மீண்டும் திகட்டாத ஆராவமுதை சேவித்தோம்.    பின்னர் பிரகாரத்தில்  மஹா லக்ஷ்மித்தாயாரையும் திவ்யமாக சேவித்து பிரசாதம் பெற்றோம். நரநாராயணர் சந்ந்தியில் ஊர்வசி நவராத்திரி விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. பெருமாளை திவ்யமாக சேவித்த மனதிருப்தியுடன் இந்தத் தடவையும்  ராவல் அவர்களை தரிசனம் செய்து பெருமாளின் அபிஷேக சந்தனமும் துளசிப்பிரசாதமும் பெறும் பாக்கியம் கிட்டியது.
 பத்ரிநாதர் சுதை சிற்பம்

( கருடன், நாரதர் சேவிக்க நர நாராயணராய் பெருமாள் சேவை சாதிக்கின்றார்)

புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சங்கு சக்கரங்கள் 

 தேவராஜன், அடியேன், இரவி, முட்கல்

வைத்தி தனுஷ்கோடி, முட்கல்

 நாரதர் ஷிலா 
 
 அலக்நந்தா கரையோரம் 
யோகாசனம் செய்யும் தேஷ்பாண்டே அவர்கள்

காலையிலிருந்து மாலை வரை பலவிதமான கட்டண சேவைகள் பத்ரிநாத்தில் உள்ளன, நாங்கள் மாலை விஷ்ணு சகஸ்ரநாம சேவைக்காக சீட்டு வாங்கினோம். இன்னும் தங்க விளக்கு, வெள்ளி விளக்கு, காலை அபிஷேகம் ஆகிய கட்டண சேவைகளும் உள்ளன. எங்களுக்கு அடுத்த நாள் காலை அபிஷேகத்திற்கான சீட்டு கிடைக்கவில்லை. பின்னர் மடத்திற்கு திரும்பி வந்து சிறிது நேரம் ஒய்வெடுத்தோம். திரு தேஷ்பாண்டே குடும்பத்தினர் தங்கள் பித்ரு காரியங்களை பிரம்மகபாலத்தில் முடித்து விட்டு வந்த பின்   மானா கிராமத்திற்கும், பீமன் பாலத்திற்கும் புறப்பட்டோம்.  

பத்ரிநாத்தை சுற்றி இரண்டு கிராமங்கள் உள்ளன  முதலாவது பாம்னி கிராமம் இங்கு ஊர்வசிக்கு ஒரு கோயில் உள்ளது, மற்றும் பத்ரிநாதரின் பாத கமலங்கள் உள்ளன இது சரணபாதுகா என்று அழைக்கப்படுகின்றது.  அடுத்தது மானா கிராமம் இங்கு நர நாராயணர்களின் அன்னையான மாதா மூர்த்தி கோவில், வியாச குகை, கணேச குகை, பீமன் பாலம் ஆகியவை உள்ளன. இந்த மானா கிராமம் வரை டெல்லியிலிருந்து  தேசிய நெடுஞ்சாலை NH-58 போடப்பட்டடுள்ளது. 

 மானா கிராம செழிப்பு

முதலில் நாங்கள் சென்றது மானா கிராமத்திற்கு இங்கிருக்கின்ற கணேசர் குகைக்கு ஒரு சிறப்பு   உண்டு அது என்னவென்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியென்றால் இந்த சிறிய கேள்விக்கு என்ன விடை என்று யோசித்துப் பாருங்கள். மஹா பாரதம் எழுத பயன்படுத்தப்பட்ட எழுது கோல் எது?  அட இது தான் நமக்கு தெரியுமே விநாயகரின் வலது கொம்புதானே என்றால் உங்கள் விடை சரிதான்.  இவ்வாறு விநாயகப் பெருமான்   வியாச பகவான் கூற தனது கொம்பினால் ஐந்தாம் வேதமாகிய மஹாபரதத்தை எழுதிய இடம் இந்த மானா கிராமத்தில் உள்ளது. முதலில் அந்த முழு முதற் கடவுளை


முத்தமிழடைவினை முற்படுகிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே

 மஹாபாரதம் எழுதிய கணேசர் குகை 

என்று மேருமலையில் முத்தமிழையும் இந்த இமய மலையில் மஹாபாரதத்தையும் எழுதிய மூலமுதல்வனை தரிசித்து வணங்கினோம். வேத வியாசர் பாரதம் கூறிய போது அதை எழுதியவர் விநாயகர் , அப்போது விநாயகர் ஒரு நிபந்தனை விதித்தாராம். நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் நிறுத்தினால்  எழுதுவதையும் நிறுத்தி விடுவேன் என்றாராம். ஆகவே வியாச பகவான்  முதலில் ஐந்து ஸ்லோகங்களை சொல்லுவாராம் அதை விநாயகப்பெருமான் தனது கொம்பினால் எழுதி முடிப்பதற்குள் அடுத்த ஐந்து ஸ்லோகங்களை மனதில் உருவாக்கி விடுவாராம்.

அடுத்து வியாச பகவானின் குகைக்குச் சென்றோம்.  வியாச பகவானைப்பற்றி விஷ்ணு சகஸ்ரநாம பூர்வ பாகத்தில் இவ்வாறு இரண்டு ஸ்லோகங்கள் வருகின்றன.

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் சக்தே: பௌத்ர – மகல்மஷம் |
பராசராதமஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம் ||

வ்யாஸ பகவானின்  மூதாதையர்களை கூறும் ஸ்லோகம் இது.  பிரம்ம ரிஷியான வஷிஸ்டரின் கொள்ளுப்பேரன், சக்தி ரிஷியின் பேரன், பராசரர்- சத்தியவதியின் திருக்குமாரர் அது மட்டுமா இவரது புத்திரர் சுகபிரம்ம ரிஷி. உலக நன்மைக்காக பல்வேறு நன்மைகளை செய்து நீதிகளை அருளியவர்கள் அத்தனை பேரும்.

வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே |
நமோ வை ப்ரஹ்மநிதயே வாஸிஷ்ட்டாய நமோ நம: ||  

வியாசர் குகை

வஷிட்டரின் குலத்திலே பிறந்த வ்யாஸரே விஷ்ணு, விஷ்ணுவே வியாசர். மஹா விஷ்ணுவின்  அவதாரங்களில்  "தேவுடைய மீனமாயாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவிலி ராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய்" என்று பெரியாழ்வார் அருளிய  தசாவதாரத்தைப் பற்றி நாம் அனைவரும் நன்றாக அறிவோம். ஆனால்  ஹயக்ரீவர், அன்னம், மச்சம்கூர்மம், தன்வந்திரி, மோகினிவராகம், நரசிம்மர், வாமனர், பரசுராமர், இராமர், பலராமன், கிருஷ்ணர், நர நாரயணர்கபிலர், யக்ஞர், வேத வியாசர், ரிஷபர், தத்தாத்ரேயர், பருதுர், புத்தர், கல்கி  என்று  இருபத்தி இரண்டு அவதாரங்கள்  என்று ஆன்றோர்கள் கூறுவார்கள். இந்த கலியில் நாம் எல்லாஉம் உய்ய பெருமாளே வியாசராக அவதாரம் செய்து வேதங்களை பகுத்து, பாரதமும், பாகவதமும் நமக்கு அருளிச் சென்றார். 

விஷ்ணு ரூப வியாஸ பகவானின் திருநாமம் காரணப்பெயராகும். வியாஸம் என்றால் பகுத்தல் என்று பெயர்.    இவர் துவாபர யுகத்தில் பிறந்தார் அதுவரை வேதங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருந்தன அதை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதம் என்று பகுத்து அளித்தவர் இவர் எனவேதான் இவர் வேத வியாசர் என்று அழைக்கப்படுகின்றார். மேலும் இவர் அனைத்து நீதிக்கதைகளையும் உள்ளடக்கிய இதிகாசம் மஹாபரதத்தையும், கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளைக் கூறும் ஸ்ரீமத் பாகவதத்தையும் நமக்கு அருளினார். இமயமலையின் கிழக்குப் பகுதியில் ஒரு பள்ளத்தாக்கு பியான்ஸ் பள்ளத்தாக்கு என்று இவர் பெயரால் அழைக்கப்படுகின்றது, திருக்கயிலாய யாத்திரை செல்பவர்கள் இந்த பள்ளத்தாக்கில் நடந்து செல்வர் மேலும் இவருக்கு பல இடங்களில் கோவில்களும் உள்ளன.

வியாசர் குகையில் தற்போது வியாசர் கூற விநாயகப்பெருமான் பாரதம் எழுவது போல சுதையில் சிற்பங்கள்  உள்ளன. அங்கு சென்று விஷ்ணு ரூப வியாசரை வணங்கி விட்டு  அடுத்து பீமன் பாலத்தையும் சரஸ்வதி நதியையும் தரிசிக்க சென்றோம். அதற்கு முன்னர் ஒரு கதையை பார்த்து விடலாமா? என்ன கதை என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா அடுத்த பதிவுவரை பொறுங்கள் அன்பர்களே.

Wednesday, July 11, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -27



பொன்னர் மேனியனை, புலித்தோலை அரைக்கசைத்த புண்ணியனை, இமயமலையில் ஜோதிர்லிங்கமாக கோயில் கொண்டு அருள்புரியும் பரமனை, மின்னார் செஞ்சடையில் மிளிர் கொன்றை அணிந்த வள்ளலை தரிசனம் செய்த திருப்தியோடு இரண்டாவது தடவையாக பத்ரிநாதரை தரிசனம் செய்ய புறப்பட்டோம். 

 சோன் ப்ரயாகை 
 
சீதாப்பூரை அடுத்து முதலில் சோன்ப்ரயாகையை கண்டு களித்தோம். சோன் கங்கையும் மந்தாங்கினியும் இங்கு சங்கமம் ஆகின்றது இங்கிருந்து த்ரியுக் நாராயணக்கு பாதை செல்கின்றது. சென்ற போது இரவு என்பதால் இந்த சங்கமத்தை காண முடியவில்லை இப்போது பகலில் நன்றாக தரிசனம் செய்தோம். அடுத்த ஊர் ஃபடா , அடுத்தது நலா இங்கிருந்து காளி மாதா என்னும் ஊருக்கு பாதை செல்கின்றது ,காளி மாதா ஆலயம் பாதாளத்தில் உள்ளது. காளிதாசனுக்கு அருளியவள் இந்த காளிஅம்மன் தான் என்பது இந்தப்பகுதி மக்களின் நம்பிக்கை. பின்னர் குப்தகாசி வந்தடைந்தோம். 
 மலைக்கிராமத்தின் எழில் தோற்றம்


 மரங்களில் வைக்கோற்போர்

 திருக்கேதாரத்திலிருந்து பத்ரிநாதம்  செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று நெடும்பாதை,  திரும்பி ருத்ரப்ரயாகை வரை வந்து பின் அங்கிருந்து பின்னர் டில்லியிலிருந்து மானா கிராமம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்து பத்ரிநாதம் அடைவது. இரண்டாவது பாதை அருமையான காடுகள் மலை உச்சி வழியாக செல்லும் ரம்மியமான குறுக்கு வழிப்பாதை, அகலமான பாதை அல்ல ஆனால் அற்புத இயற்கை எழில் கொஞ்சும் பாதை, நாங்கள் இவ்வழியாக பயணம் செய்தோம். அடியோங்கள் பயணம் செய்த வழி

புறப்படும் இடம்
செல்லும் இடம்
தொலைவு கி.மீ
உயரம் மீ
கௌரி குண்ட்
குப்த் காசி
31
1479
குப்த் காசி
குண்ட் சட்டி
5
976
குண்ட் சட்டி
ஊக்கிமட்
5
1311
ஊக்கிமட்
சோப்டா
30
2680
சோப்டா
கோபேஸ்வர்
39
1300
கோபேஸ்வர்
சமோலி
10
1069

இப்பாதையைப்பற்றி திரு முட்கல் அவர்கள் கூறிய தகவல்களை பார்க்கலாமா? இப்பகுதியில் உள்ள கிராம மக்களின் வேண்டுக்கோளுக்கிண‘ங்க இப்பாதை போடப்பட்டதாம். ஆயினும் அரசு பேருந்துகள் எதுவும் இதன் வழியாக செல்ல முன் வரவில்லையாம். எனவே இங்குள்ள மக்கள் இதன் வழியாக பேருந்துகள் செல்ல வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார்களாம் எனவே இப்பாதை உண்ணாவிரதப் பாதை என்று அழைக்கபடுகின்றது.  இப்போதும் அரசு பேருந்துகள் அதிகம் இவ்வழியாக செல்வதில்லையாம் தனியார் பேருந்துகளும், சுற்றுலாப்பயணிகளுமே இப்பாதையை அதிகமாக பயன் படுத்துகின்றனர். எனவே இப்பாதை உண்ணாவிரதப்பாதை என்று அழைக்கபப்டுகின்றதாம்.

அலக்நந்தா செல்லும் வழியை விட இந்த மந்தாங்கினி பள்ளத்தாக்கு மிகவும் இரம்மியமாக உள்ளது. இப்பள்ளத்தாக்கில் மரங்கள் அதிகமாக வெட்டப்படவில்லை. பூக்கள் நிறைந்து காணப்படுகிறது, வண்டுகளின் ரீங்காரம், மந்தாங்கினி பாயும் நாதம், நீர் வீழ்ச்சிகளின் கல கல என்று விழும் ஓசை  எல்லாம் இணைந்து ஒரு இனிய நாதமாக் ஓம் என்னும் நாதமாக காதில் பாய்வது ஒரு அருமையான அனுபவம்.

சோப்டா வரை மலையேற்றம் பின் இறக்கம். முதலில் வழியில் ஊக்கிமட் வருகின்றது. இந்த  கிராமம் இந்த குப்தகாசிக்கு எதிரே உள்ள மலைகளின் மடியில் உள்ளது.  ஸ்ரீகிருஷ்ணரின் பேரன் அநிருத்தன் மற்றும் உஷா ஆகியோருக்கு  இங்கு கோவில் உள்ளது. அவர்கள் திருமணம் இங்குதான் நடந்ததாம். உஷாவின் பெயராலே இக்கிராமம் ஊக்கிமட் என்னும் பெயர் பெற்றது. மேலும் சிவன், பார்வதி, ஸ்ரீராமரின் பாட்டனார் மந்தாத்தா அவர்களின் ஆலயங்களும் இங்கு உள்ளன.

கோபேஸ்வரில் அருமையான ஒரு சிவாலயம் உள்ளது. ஒரு பசு தினமும் சுயம்பு லிங்கத்திற்கு பால் சொரிந்து செல்வதைக்கண்டு சாகர் என்னும் அரசன் கட்டிய கோவில் இது. தோகால்பட்டா என்னும் இடத்தில் காட்டு இலாகாவின் தங்கும் விடுதி உள்ளது. இவ்விடம் சோதணைச்சாவடியும் உள்ளது. இங்கிருந்து மந்தாங்கினி பள்ளத்தாக்கின் அருமையான கண்டு இரசிக்கலாம். மேகமாக இருந்தால் பனி சிகரங்களை காணக்கிடைக்கவில்லை. மேகமூட்டம் இல்லாத நாட்களில் இமயமலைத்தொடரின் திரிசூல், சௌகம்பா, நந்தாதேவி   ஆகிய மிகவும் இரம்மியமான பாதை மேலே செல்ல செல்ல மரங்களின் உயரமும் கூடிக்கொண்டே சென்றது. குளிரும் அதிகமாகிக் கொண்டே வந்தது பாதையும் குறுகிக்கொண்டே வந்தது, அதிக போக்குவரத்து இருக்கவில்லை மரங்களில் எல்லாம் வைக்கோற்போர்கள் என்று அருமையான பயணம் இவ்வாறு காலையில் இருந்து பயணம் செய்து மதியம் இரண்டு மணியளவில் சோப்டாவை (2700மீ) அடைந்தோம். பஞ்ச கேதாரங்களில் ஒன்றான துங்கநாத்திற்கும் மற்றும் அங்கிருந்து சந்திரசிலாவிற்கும் இங்கிருந்துதான் நடைப்பயணம் ஆரம்பமாகின்றது. துங்கநாதம்(3680 மீ) செல்ல செங்குத்தாக சுமார் 2.5 கி.மீ நடைப்பயணம் அங்கிருந்து 4000 மீ  உயர சந்திர சிலா  1.5 கி.மீ தூரத்தில் உள்ளது. 

துங்கநாத் செல்லும் பாதையின் அலங்கார வளைவு


 சோப்டாவின் எழில் தோற்றம்

ஆதிகாலத்தில் இராவணன் திருக்கயிலாயத்திலிருந்து இலங்கை செல்லும் போது   தனது புஷ்பக விமானத்தை சந்திரசிலாவில் நிறுத்தி பின்னர் இலங்கை சென்றதாக கூறுகின்றனர். ஸ்ரீராமர் தவம் செய்த இடம் என்று கூறுவாரும் உண்டு. நாங்கள் சோப்டாவில் மதிய உணவை முடித்துக் கொண்டு சமோலியை நோக்கிப் புறப்பட்டோம். இங்கிருந்து பாதை கீழிறங்கிச் செல்கின்றது ஆனால் இதற்கு மேல்  பாதை மிகவும் மோசமாக இருந்தது.

இவ்வாறு நாள் முழுவதும் பயணம் செய்தீர்களே இயற்கை காட்சிகளை இரசிப்பதல்லாமல் வேறு என்ன செய்தீர்கள் என்ற ஐயம் மனதில் எழுகின்றதா?  எப்போதும் போல் முட்கல் அவர்களின் அனுபவங்களையும் மற்றும் குட்டிக்கதைகளையும் கேட்டுக்கொண்டே  பயணம் செய்தோம். நாம் எல்லோரும் பெருமாள் தானே நர நாராயணராக அவதரித்து பத்ரி வனத்தில் தவம் செய்தார் என்று பார்த்தோம் ஆனால் அவர் எதற்காக அவ்வாறு தவம் செய்தார் என்பதற்கு முட்கல் அவர்கள் கூறிய குட்டிக்கதை இதோ.

அசுரர்கள் கடுமையான தவம் செய்து வரம் பெறுவது  நாம் அறிந்ததுதானே இந்த அசுரனும் கடுந்தவம்  செய்து  வரம் பெற்றான் அது என்ன வரம் தெரியுமா? தனக்கு ஆயிரம் உடல் கவசம் வளர வேண்டும் அது மட்டுமா? அந்த கவசம் யாராலும் உடைக்க  முடியாததாய் இருக்க வேண்டும் என்று  வரம் கேட்டான். அதன் மூலம் தான் சாகாவரம் பெறலாம் என்று எண்ணினான் அது மாதிரி வரம் முடியாது என்றவுடன் யார் ஆயிரம் வருடங்கள் தவம் செய்கிறாத்களே அவர்களால் மட்டுமே ஒரு கவசத்தை உடைக்க முடியும் என்ற வரம் பெற்றான்.  ஆயிரம் தடவை ஆயிரம் அதாவது பத்து லட்சம் வருடமாவது தான் வாழமுடியும் என்ற ஆணவத்தில் தன் கொடுமைகளை துவங்கினான், தேவர்கள் அனைவரும் ஆபத்பந்துவானவரும், அசுரர்களை அழித்து காப்பவருமான் மஹா விஷ்ணுவை சரணடைந்து  அபயம் வேண்டினர். அவரும் சகஸ்ர(ஆயிரம்)கவசனை அழித்து தேவர்களை காப்பாற்றுவதாக வாக்குக்கொடுத்தார்.

பிறகு பெருமாள் நாரதரை அழைத்து , த்ரிலோக சஞ்சாரியே இப்பூவுலகில் எங்கு ஒரு வருடம் தவம் செய்தால் ஓராயிரம் வருடம் தவம் செய்த பலம் கிடைக்குமோ அந்த இடத்தை கண்டுபிடித்து வா என்று அனுப்பினார். நாரதரும் பூவுலகம் வந்து எல்லா இடமும் சுற்றினார் இமயமலையின் இந்த பத்ரிவனத்தில் அவர் சுற்றிய போது தன்னையே மறந்து அங்கு மூன்று நாழிகை நேரம் தங்க நேர்ந்தது. வெங்கடேச சுப்ரபாத்தில் ஒரு ஸ்லோகம் வரும் “ ஓரிடத்தில் நிலையாக நின்றறியா நாரதரும், நீ இங்கு கோவில் கொண்டததனால், இங்கே நிலை கொண்டார்” என்று வரும். இவ்வாறு ஒரே இடத்தில் தங்காத நாரதர் பத்ரிநாத்தில் மூன்று நாழிகை இருந்ததால் இந்த இடமே பெருமாள் தவம் செய்வதற்காக சிறந்த இடம் என்று பெருமாளிடம் வந்து தெரிவித்தார். எனவே பெருமாள் நர நாராயணராக பத்ரிநாத் வந்து தவம் செய்ய ஆரம்பித்தனர். இருவராக ஏன் வந்தார் ஒருவர் தவம் செய்யும் போது அடுத்தவர் சகஸ்ரகவசனுடன் போர் புரிந்தார். இவ்வாறு வருடம் ஒருவர் போர் புரிந்து அசுரன் கவசத்தை உடைக்க அடுத்தவர் தவம் செய்தார், இவ்வாறு தவம் செய்யும் போது மஹாலக்ஷ்மித்தாயார் பத்ரிமரமாக நிழல் தந்தார், இவர்கள் தவத்தை கலைக்க அழகிய பெண்களை அசுரன் அனுப்ப பெருமாள் தனது தொடையில் இருந்து  பேரழகியான ஊர்வசியை பிறப்பித்தார் (ஊரூ என்றால் வடமொழியில் தொடை, தொடையில் இருந்து தோன்றியதால் அவள் பெயர் ஊர்வசியாயிற்று) அவளின் அழகைக்கண்ட அசுரப்பெண்கள் நாணி திரும்பிச்சென்று விட்டனர். எனவே பத்ரிநாத்தில் ஊர்வசி தாரா என்று ஒரு நீர் வீழ்ச்சிக்கு பெயர். மேலும் பத்ரிநாத்தில் நவராத்திரி கொண்டாட்டமும் ஊர்வசி நவராத்திரி என்று கொண்டாடப்படுகின்றது. இவ்வாறு 999 வருடங்கள் முடிந்தன. இன்னும் ஒரு கவசம் மட்டுமே பாக்கி இருந்தது. யுகம் மாறியது அவர்கள் மூவரும் யாராக பிறந்தார்கள் தெரியுமா?


இரவில் ஜோஷிர்மட் ஆலயம் மின் ஓளியில் மிளிரும் அழகு



நமக்கு தெரிந்த மஹாபாரதக் கதையின் கர்ணன்தான் சகஸ்ரகவசனாக கவச குண்டலங்களுடன் பிறந்தான், நர நாராயணர்கள் அர்ச்சுனன், கிருஷ்ணராக அவதாரம் எடுத்து அசுரனின் இறுதி கவசத்தையும் நீக்கி அவனை தோற்கடித்தனர்.  இவ்வாறு இங்கு செய்கின்ற ஒவ்வோரு புண்ணிய செயலும் ஆயிரம் மடங்கு பலன் தரவல்லது என்று  பத்ரி க்ஷேத்திரத்தின் பெருமையையும்,சகஸ்ரகவசனனின் கதையையும் மற்றும் சில கதைகளையும் முட்கல் கூறிக்கொண்டு வந்தார் நாங்களும் சமோலி அடைந்தோம். பின்னர் தேசிய நெடுஞ்சாலையை அடைந்து பின்னர் பத்ரிநாத் நோக்கி பய்ணத்தை தொடர்ந்தோம். இது தான் ஸ்ரீநகர் இங்கு சென்ற தடவை பணத்தை திரும்பிப்பெற்றோம், இங்குதான் சென்ற தடவை தேநீர் அருந்தினோம் என்று பேசிக்கொண்டே பீப்பல்கொடியை தாண்டி ஜோஷிமட்டை மாலை  சுமார் 6 மணியளவில்  அடைந்தோம். மேலே செல்ல அனுமதித்தால் பத்ரிநாத் செல்லலாம் இல்லாவிட்டால் இங்கேயே தங்கி விடலாம் என்று முடிவு செய்து ஜோஷிமட்டை அடைந்தோம். மாலை ஆகிவிட்டதால் பயணிகளின் நலன் கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. சுங்கச்சாவடி அருகே இரண்டு மூன்று வாகனங்கள் நின்றிருந்தன. நாங்களும் வண்டியை அங்கேயே வரிசையில் நிறுத்தி விட்டு அருகில் ஒரு ஹோட்டலில் இரவு தங்கினோம். திவ்ய தேசத்தில் சென்று பெருமாளை தரிசிக்க நினைத்தோம் ஆனால் திருக்கோயில் மூடிவிட்டிருந்ததால்  காலை முடிந்தால் சேவிப்போம் என்று இரவு அங்கு தங்கினோம். ஆனால் மின்  ஒளியொளியில் திருக்கோவில் அற்புதமாக மிளிர்ந்தது அதை புகைப்பட கருவிகளில் பதிவு செய்து கொண்டோம்.  இனி மறுநாள் விஜய தசமியன்று பெருமாள் எவ்வாறு தரிசனம் அளித்தார் என்று அறிந்து கொள்ள அடுத்த பதிவு வரை பொறுத்திருங்கள் அன்பர்களே.