Tuesday, March 20, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -22



 காளி மாதா மந்திர்

புறப்படுகின்றோம்
 


நாங்கள் ஹரித்வாரில் தங்கிய மடம் பாலிமார் மடம் ஆகும். அந்த மடத்தில் 32 அடி உயர  விஸ்வரூப ஆஞ்சனேயர்  சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இரவில் சென்ற போது கவனிக்கவில்லை. காலையில் எழுந்தவுடன் கண்ணில் பட்டார் சொல்லின் செல்வர் மாருதி.  அருணோதய காலம் என்பதால் வானம் செவ்வாடை போர்த்திக்கொண்டிருக்க அந்த செக்கர் வான பின்ணணியில் கருநிறத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன்  ஆஞ்சநேயர் அற்புத சேவை கொடுத்தார்.  எதிரிலேயே  கங்கை ஆறு, கங்கையில் குளித்து விட்டு அனுமனை வலம் வந்து வணங்கினோம். பின் அருகில் உள்ள காளி கோவிலுக்கு சென்று காளி மாதாவையும் தரிசனம் செய்து விட்டு வந்து, மடத்தின் நித்ய காலை பூஜையில் கலந்து கொண்டு கேதாரீஸ்வரரை தரிசனம் செய்ய  புறப்பட்டோம்.
 
ரிஷிகேசில் கங்கை
(லக்ஷ்மண் ஜூலா, 13 அடுக்கு கோயில், ஆற்றில் செல்லும் படகு ஆகியவற்றை படத்தை பெரிதாக்கிப் பார்க்கலாம்) 


வண்டி அமைப்பாளர் மலையில் பயணம் என்பதால் ரிஷிகேசில் போக்குவரத்து துறையினரிடம் அனுமதி சீட்டு பெற வேண்டும் என்றார். ஆகவே ரிஷிகேசில் R.T.O அலுவலகத்தில் சென்று நின்றோம்.  எல்லா அரசு அலுவகங்களைப் போலதான் இங்கும். மிகவும் தாமதமாகி விட்டது. மதிய உணவை ரிஷிகேசிலேயே முடித்துக் கொண்டு கிளம்பினோம். கௌரிகுண்ட் போய் சேருவது மிகவும் கடினம்  முடிந்தவரை பயணம் செய்து சுமார் 8 மணியளவில் எங்கு போய் சேருகின்றோமோ அங்கு தங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து புறப்பட்டோம். முதலில் நாங்கள் சென்ற பாதையின் விவரத்தை பார்க்கலாமா?

புறப்படும் இடம்
செல்லும் இடம்
தொலைவு கி.மீ
உயரம் மீ
ரிஷிகேசம்
தேவப்ரயாகை
70
472
தேவப்ரயாகை
ஸ்ரீநகர்
35
579
ஸ்ரீநகர்
ருத்ரப்ரயாகை
34
610
ருத்ரப்ரயாகை
தில்வாரா
9
671
தில்வாரா
அகஸ்தியமுனி
10
762
அகஸ்தியமுனி
குண்ட்சட்டி
15
976
குண்ட்சட்டி
குப்தகாசி
5
1479
குப்தகாசி
நாராயண்கோடி
3
1485
நாராயண்கோடி
ஃபடா
11
1601
ஃபடா
ராம்பூர்
9
1646
ராம்பூர்
சோன்ப்ரயாகை
3
1829
சோன்ப்ரயாகை
கௌரிகுண்டம்
5
1982
கௌரிகுண்டம்
ராம்பாரா(நடை)
7
2591
ராம்பாரா
கருட்சட்டி(நடை)
4
3262
கருட்சட்டி
கேதார்நாத்(நடை)
3
3583

அழகாக ஒடி வரும் கங்கை

ரிஷிகேசத்தை விட்டு கிளம்பும் போது கங்கையின் அழகிய கரையில் அமைந்துள்ள 13 அடுக்கு கோயிலையும், லக்ஷ்மண் ஜூலா பாலத்தையும்  பார்த்தோம். தபோவனம் வந்த போது மலைப்பாதை துவங்கியது. அடுத்த கரையில் நீலகண்டர் ஆலயத்திர்கு செல்லும் பாதையை கண்டோம்.  வண்டியின் குளிர்சாதன வசதியையும், சங்கீதத்தையும் நிறுத்தி விட்டனர். மாலியில் ஏறும் போது இஞ்சினின் முழு சக்தியும் வண்டியை மேலே ஏற்றுவதற்கு தேவைப்படும் என்பதால் இந்த ஏற்பாடாம். ரிஷிகேசிற்கு  அருகில் உள்ள சிவபுரியில்  Riverrafting எனப்படும் ஆற்றில் படகு மூலம் செல்லும்  வசதி உள்ளது. முதலில்  தேவப்ரயாகையை அடைந்தோம். சிறிது தூரம் வண்டியை நிறுத்தி சங்கமத்தை படம் பிடித்துக்கொண்டு கிளம்பினோம். இங்குதான் கங்கொத்ரியில் இருந்து ஓடி வரும் பாகீரதியும், பல சங்கமங்கள் கண்டு ஒடி வரும் அலக்நந்தாவும் ஒன்றாகி கங்கை என்று ஒடி நம் பாரத நாட்டை  புனிதப்படுத்துகின்றது. மேலும் இத்தலம் கண்டம் என்னும் கடிநகர் என்னும் திவ்ய தேசமும் ஆகும், வரும் போதாவது பெருமாளே தங்கள் தரிசனம் சித்திக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டோம்.

 

 இங்கு  எங்களில் ஒருவர் தனது செல்பேசியை தேநீர் குடித்த இடத்திலேயே மறந்து விட்டு வந்து விட்டார். பின்னர் அந்த எண்ணில் கூப்பிட்டு பேசிய போது, செல்பேசி இங்குதான் உள்ளது, வரும் போது வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். எங்களின் வண்டி ஓட்டிகள் வருடத்தில் பல முறை பயணிகளை ஏற்றிக்கொண்து செல்லும் வழியில் இதே கடைகளில் நின்று தேநீர் அருந்தி செல்வதால் கடைக்காரர்கள் இவர்களை நன்றாக அறிந்திருப்பதாலும் இருக்கலாம். 

பாகீரதியும் அலக்நந்தாவும் சங்கமமாகும் தேவ ப்ரயாகை


  
 கண்டம் என்னும் கடி நகர் இராமர் ஆலய கோபுரம்
வழியில் முட்கல் அவர்கள் பல ஆன்மீக கதைகளை சொல்லிக்கொண்டு வந்தார். அவற்றுள் ஒரு கதையை சுருக்கமாக இங்கே சொல்கின்றேன். இக்கதை பத்ரிநாத் தலத்தின் மகிமையை கூறும் கதை.  ஒரு பிரசங்ககாரர் இருந்தார் அவர் ஊர் ஊராக சென்று பிரசங்கம் செய்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்தார். ஒரு சமயம் ஒரு பாம்பு வந்து அவரிடம் என்னை பத்ரிநாதம் அழைத்து சென்றால் உங்களுக்கு 2000  சொர்ண முத்திரைகள் தருகின்றேன் என்றது.  பிரசங்ககாரரும் ஒத்துக்கொள்ள முதலிலேயே பாம்பு 1000  சொர்ண முத்திரையை அவருக்கு கொடுத்தது. பிரசங்காரரும் பாம்பை பத்ரிநாத் எடுத்துக்கொண்டு சென்றார். அங்கு சென்றவுடன் பாம்பு  ஒரு தேவதையாக மாறி , கலகல என்று சிரித்துவிட்டு அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு   கலகல என்று சிரித்தது, ஒன்றும் புரியாமல் அவர் ஏ சிரிக்கின்றாய் என்று வினவ அ‘ன்த தேவதை இதை காசி அரசனிடம் சென்று கேள் என்று சொல்லிவிட்டு மறைந்தது. அவரும் காசி அரசனும் இந்தக் கதையை கேட்டுவிட்டு கலகல என்று  சிரித்துவிட்டு நீ திராவிட அரசனிடம் சென்று கேள் என்று அனுப்பி விட்டான். அவரும் மிகவும் அலைந்து திராவிட தேசம் வந்து அரசனிடம் எல்லா கதையையும் கூற அவனும் சிரித்துக்கொண்டே கூறினான், அறிவிலியே பத்ரி க்ஷேத்திரத்தின் மகிமையை அறிந்து கொள்ளவில்லையே நீ. ஒரு சமயம் ஒரு நாய்  பத்ரிநாத்தை அடைந்தது அதன் உடலில் இரண்டு ஈக்கள் ஒட்டியிருந்தன அந்த ஈக்கள் தாம் இப்பிறவியில் காசி ராஜனாகவும், திராவிட ராஜனாகவும் பிறந்துள்ளன. யோனிகளிலேயே மிகவும் மட்டமான பாம்பு கூட தேவதை ஆகியதென்றால் அந்த க்ஷேத்திரத்தின் மகிமையை என்னவென்று சொல்வது, இதை அறியாமல் தாங்கள் அங்கிருந்தே பத்ரிநாதரை வணங்கி முக்தி பெறாமல் இப்படி பணத்திற்காக அலைகின்றீரே என்று பதில் அளித்ததாம். ஆகவே பத்ரிநாதரை தரிசனம் செய்யும் எவரும் முக்தி அடைவர் என்பதில் ஐயம் இல்லை.

இரவி, முட்கல், அடியேன்

 இது போன்று இன்னும் பல கதைகளையும் அவரது பயண அனுபவங்களையும் கூறிக்கொண்டு வந்தார் ஒவ்வொரு பதிவிலும் ஒரு கதையை காணலாம். அடுத்து ஸ்ரீநகரை தாண்டினோம், சென்ற வருடம் இங்குதானே GMVN அலுவலகத்தில் சென்று பணம் பெற்றோம் என்று ஞாபகப்படுத்திக்கொண்டே ருத்ரப்ரயாகையை அடைந்தோம்.  ருத்ரப்ரயாகையிலிருந்துதான் கேதார்நாத்திற்கும், பத்ரிநாத்திற்கும் பாதை பிரிந்து செல்கின்றது. முன்னரே பார்த்தது போல கேதாரீஸ்வரரின் பாதத்தை கழுவிக்கொண்டு ஒடி வரும் மந்தாங்கனியும், பத்ரிநாதரின் பாதங்களை கழுவிக்கொண்ட்டு ஒடி வரும் அலக்நந்தாவும் சங்கமம் ஆகும் இடம்தான் ருத்ரப்ரயாகையாகும். ருத்ரப்ரயாகையை நாங்கள் அடைந்தபோது கிட்டத்தட்ட இருட்டாகி விட்டது மேலும் இங்கு இரு பாதைகள் உள்ளன ஒன்று மேலாக செல்வது, ஒன்று கீழாக செல்வது கீழ்ப் பாதையில் சென்றால்தான் சங்கமத்தை பார்க்கமுடியும் என்பதால் இங்கும் செல்லும் போது சங்கம தரிசனம் கிட்டவில்லை.

இனி நாங்கள் மந்தாங்கினி பள்ளத்தாக்கில் நுழைந்தோம். அடியேனுடன் பணி புரியும் கபூர்வான் என்னும் அன்பர் இந்த கர்வால் பிரதேசத்தை  சார்ந்தவர். இவர் தற்போது டேராடூனில் தங்கி உள்ளார். இவரும் அடியேனும் தற்போது பணி புரியும் இடத்தில் ஒரே அறையில் வசிக்கின்றோம். அவர் பலமுறை கேதார்நாத சென்று வந்துள்ளார். அவர் கூறிய சில சுவையான தகவல்கள்.   உலகில் தர்மம் ஒடுங்கி, அதர்மம் தலைவிரித்து ஆடிய காலத்தில், சக்தியைப் பிரிந்த சிவபெருமான் யோகீஸ்வரராய் யோக நிஷ்டையில் அமர்ந்திருக்க, சக்தியோ மலையரசன் பொற்பாவையாய் பிறந்து சிவபெருமானையே மணாளனாக அடைய தவம் செய்து கொண்டிருக்க, ஆணவ , கன்ம, மாயா மலங்களாம் சூரர் குலம் கருவறுக்க, சிவசக்தி ஐக்கியத்தால் தலைமகனாம் குமரன்  தோன்றியதைக் கூறும் காவியமே  காளிதாசர் இயற்றிய குமாரசம்பவம். இந்த குமார சம்பவத்தில் கூறப்பட்டுள்ள வசந்த கால வர்ணனையும், நில வர்ணனையும் இந்த மந்தாங்கினி  பள்ளத்தாக்கையே குறிக்கின்றது.  இவ்வாறு சிவசக்தியின் பாதம் பட்டு புனிதம் அடைந்த  பூமி இந்த மந்தாங்கினி பாயும் ரம்மியமான பள்ளத்தாக்காகும்.  இதை நிரூபிக்கும் வகையில் கௌரியாகிய பார்வதி  தவம் செய்த இடம் கௌரிகுண்டம், சிவசக்தி திருமணம் ஆன இடம் த்ரியுக் நாராயண் அங்கு அப்போது ஏற்றிய ஹோமகுண்ட அக்னி மூன்று யுகங்களாகியும் இன்னும் அனையாமல் உள்ளது. அந்த ஹோமகுண்ட சாம்பலை தரிப்பவர்கள் பயம் நீங்கி வாழ்வார்கள் என்பது ஐதீகம், முடிந்தால் சோன் ப்ரயாகையில் இருந்து அருகில்தான் த்ரியுக் நாராயண் உள்ளது செல்லுங்கள் என்று கூறினார். மேலும்  காளிதாசர் வழிபட்ட காளி மாதாவின் ஆலயமும்  அருகில்தான் உள்ளது பாதாளத்தில் அமைந்துள்ளது அம்மனின் ஆலயம் முடிந்தால் செல்லுங்கள் என்றார்.

மேலும் கேதாரீஸ்வரருக்கு  இமயமலையில் நிலத்தில் பூக்கும் பிரம்ம கமல் என்னும் தாமரைப்பூ மிகவும் ப்ரீதியானது அங்கு கடைகளில் இந்தப்பூ கிடைக்கும் அதை வாங்கி கேதாரீஸ்வரருக்கு சார்த்தி அதை பின்னர் தங்கள் இல்லம் கொண்டு வந்து வைத்துக்கொள்ளவும்  என்று அறிவுறுத்தினார். நெய் அபிஷேகம் கேதாரீஸ்வருக்கு செய்வது மிகவும் விசேஷம்,  நல்ல பசு நெய் வாங்கி செல்லுங்கள்.  சிவபெருமானுக்கு கடலை நைவேத்யம் செய்தால் கடன் தொல்லையே இருக்காது அதுவும் கேதாரீஸ்வருக்கு வேக வைத்த கடலை படைத்து வழிபடுவது மிகவும் உத்தமமானது என்றெல்லாம் அருமையான  தகவல்களை அளித்தார்.  இரவு கேதார்நாத்தில் தங்குவது மிகவும் உத்தமமானது எனவே அங்கு தங்கி இரவு கேதார்நாத்தின் அழகை கண்டு களியுங்கள், கேதார்நாத்தில் உள்ள பைரவர் ஆலயம், பீமன் பாதம், காந்தி சரோவர் ஆகிய இடங்களுக்கும் செல்லுங்கள்.  சென்றோம் வந்தோம் என்று இருக்காமல் தங்கி இயற்கையை இரசியுங்கள்.  அவருக்கு தெரிந்த பூசாரி ஒருவரின் முகவரியும் தொலைப்பேசி எண்ணும் கொடுத்தார் இவரிடம் கூறினால் பூஜைக்கும், தங்குவதற்கும் வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவார் என்று உதவினார்.

அவர்  இந்த மலை வாழ் மக்களைப் பற்றி கூறிய சில செய்திகள். இங்குள்ள் இளம் பெண்கள் அதிகாலையே எழுந்து அன்றலர்ந்த புத்தம் புது மலர்களைப் பறித்துக்கொண்டு வந்து எல்லார் இல்லத்திலும் வாசற்படிகளில் வைத்து விட்டு செல்வார்களாம். அங்கு வீட்டின் கதவை பூட்டமாட்டார்களாம். நாம்  மார்கழி மாதத்தில் அருமையான கோலம் இட்டு புள்ளார் வைத்து பூ வைப்பது போல இவர்களாம் செய்வார்களாம் என்று கர்வால் பகுதியின் கலாச்சாரத்தையும் பற்றி கூறினார். 

கோவைப்பழம் 
பூக்களால் நிறைந்த மந்தாங்கினி பள்ளத்தாகில் இரவில் பயணம் செய்ததால் இயற்கை அழகை இரசிக்க முடியவில்லை.  வண்டி ஒட்டுநர்கள் மிகவும் லாவகமாக வண்டியை வேகமாக ஒட்டிசென்றனர். பொதுவாக மலைப்பிரதேசங்களில் சூரிய அஸ்தமனத்திற்குப்பின்    வண்டியில் செல்வது ஏற்புடையதல்ல, எப்படி இருந்தாலும் எட்டுமணியளவில் வண்டியை நிறுத்தி விடுவது நல்லது என்பதால், கௌரிகுண்ட் சென்று சேர்வது மிகவும் கடினம், எனவே அதற்கு முந்தைய நகரமான ராம்பூரில் தங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தோம்.  ஆயினும் வண்டி ஒட்டுனர்களின் ஊர் ராம்பூருக்கு முன்னர் உள்ள சீதாபூர் ஆகவே அங்கு தங்கிக்கொள்ளலாம் சென்று கூறினார்கள். தங்கும் வசதிகள் இந்த ஊரிலும் உள்ளன என்று கூறினார்கள். அதன் பிரகாரம் சீதாபூர் சுமார் எட்டரை மணியளவில் அடைந்து அங்கு தங்கினோம்.  இரவே குதிரைக் காரர்கள் வந்து எங்கள் குதிரைகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டனர், காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களை அனுப்பி விட்டு மிகவும் வேண்டிய ஒய்வெடுத்தோம். 

 சீதாப்பூரில் நாங்கள் தங்கிய ஹிமாலயன் டூரிஸ்ட் லாட்ஜ்

இந்த யாத்திரையில் இதற்கப்புறம் எந்தவித கஷ்டமும் வரவில்லை அவனருளால். யாத்திரை எவ்வாறு சுமுகமாக சென்றது. எந்த எந்த இடங்களையெல்லாம் பார்த்தோம், எந்த எந்த பூஜைகளை தரிசிக்கும் அரிய வாய்ப்பு கிட்டியது,  அந்த ஆண்டவனின் கணக்கு என்னவாக இருந்தது போன்ற தகவல்களை அறிய தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.         

10 comments:

ப.கந்தசாமி said...

அருளமுதத்தைப் பருகிக்கொண்டிருக்கிறேன்.

Sankar Gurusamy said...

அற்புதமான விவரிப்புகளுடனும் கதைகளுடனும் யாத்திரைத் தொடர் களைகட்டுகிறது.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

கிரி said...

இமயமலை பற்றிய தொடரா!.. முதல்ல இருந்து படித்து வருகிறேன் மெதுவா :-) இங்கே செல்லவேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.

S.Muruganandam said...

//அருளமுதத்தைப் பருகிக்கொண்டிருக்கிறேன்.//

இன்னும் அமுதம் பெருகும் அதையும் வந்து பருகுங்கள் ஐயா.மிக்க நன்றி

S.Muruganandam said...

//அருளமுதத்தைப் பருகிக்கொண்டிருக்கிறேன்.//

இன்னும் அமுதம் பெருகும் அதையும் வந்து பருகுங்கள் ஐயா.மிக்க நன்றி

S.Muruganandam said...

//அருளமுதத்தைப் பருகிக்கொண்டிருக்கிறேன்.//

இன்னும் அமுதம் பெருகும் அதையும் வந்து பருகுங்கள் ஐயா.மிக்க நன்றி

S.Muruganandam said...

வாருங்கள் சங்கர் ஐயா. தொடருங்கள். மிக்க நன்றி

S.Muruganandam said...

//இமயமலை பற்றிய தொடரா!..//

ஆம் ஐயா.

இமயமலை அனைவரும் ஈர்ப்பதில் ஒன்றும் ஐயமில்லை.

Test said...

கங்கையின் அழகையும், பாகிரதியும் அலக்நந்தாவும் சங்கமிக்கும் அழகை அழகாக படம் பிடித்து உள்ளீர்கள் ஐயா, தலத்தின் பெருமையை கூறும் கதை அருமை //இந்த யாத்திரையில் இதற்கப்புறம் எந்தவித கஷ்டமும் வரவில்லை அவனருளால். யாத்திரை எவ்வாறு சுமுகமாக சென்றது.// வாழ்த்துக்கள் ஐயா

S.Muruganandam said...

மிக்க நன்றி LOGAN ஐயா.