Friday, February 24, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -20கங்கா மாதா விழா

"கோமுகி' இமயத்தின் ஏற்றத்தைப் போற்றுகிற கவின்மிகு இடமாகும். கோமுகியிலிருந்து ஆடிப்பாடி, பிரவாகித்து ஓடி, கங்கோத்ரியின் வழியாக பாய்ந்து வரும் அம்மா பாகீரதி  நதி,  தேவப் பிரயாகை, கேதாரிநாத், பத்ரிநாத் தலங்களின் சமீபமாக உற்பத்தியாகிற மந்தாகினி, அலகநந்தா நதிகளுடன் இணைகிற காட்சி இமயமலையின் இயற்கை காட்சியின் மாட்சியாகும் பின்னர்  ரிஷிகேசமாகப் பிரகாசிக்கிறதைக் கண்டு ரசிக்கவேண்டும். இமயத்தில் பிறந்த கங்கை பூமியைத் தொடுமிடம்தான் ஹரித்வாரம். இப்பயணத்தில் இந்த இடங்களில் சிலவற்றை அவனருளால்  தரிசனம் செய்து விட்டு மிகவும் களைத்துப்போய் ரிஷிகேசம் திருக்கோவிலூர் மடத்தில் 17-09-10 அன்று காலை எழுந்தோம்.

கங்கை மலைப்பிரதேசத்தில் பாயும் கடைசி நகரம் ரிஷிகேசம்,

எண்ணற்ற திருகோவில்கள், மடங்கள், ஆசிரமங்கள், ஸ்நான கட்டங்கள் நிறைந்த நகரம்.

சார்தாம் யாத்திரை அதாவது இமயமலை பயணத்திற்கு இந்நகரம்தான் நுழைவு வாயில்.

 மஹாவிஷ்ணு மது கைடபரை அழித்த இடம் ரிஷிகேசம்.

மூன்றுபக்கமும் மலைகளால் சூழப்பெற்று கங்கையின் கரையில் அமைந்துள்ளது இந்த புண்ணிய நகரம்.

புராதன காலத்தில் இருந்தே மகான்களையும், ரிஷிகளையும் ஈர்த்து வந்த பகுதி. இந்நகரத்தின் ஒரு பகுதி முனி-கா-ரேதி அதாவது முனிவர்கள் பாதம் பட்ட மண் என்று அழைக்கப்படுகின்றது.

இராமர், இலக்ஷ்மணன், பரதன் மட்டுமல்ல இராமானுஜரும், ஆதி சங்கரரும் கூட தவம் செய்த புண்ணீய பூமி பவித்ர பூமி இது. 

முக்திதாயினி கங்கைக்கு பூஜை

அன்றைய தினம் மாலை ஹரித்வாரில் இருந்து சதாப்தி விரைவு வண்டியில் டெல்லிக்கு பதிவு செய்திருந்தோம் எனவே காலை நேரத்தை ரிஷிகேசத்தை சுற்றிப்பார்த்து விட்டு, மதிய உணவிற்குப்பின் ஹரித்வார் சென்று  ஹரி-கா-பௌரியில் புனித கங்கா தீர்த்தம் சேகரித்துக்கொண்டு இரயில் ஏறி விடலாம் என்று முடிவு செய்தோம்.

எங்கள் குழுவில் சரளமாக ஹிந்தி பேச தெரிந்தவர்கள் இருவர். முதலாவது தனுஷ்கோடி அவர்கள், இரண்டாவது அடியேன், எங்கள் அலுவலகம் டேராடூனில் இருப்பதாலும் அடியேன் இவ்விரு இடங்களை முதலிலேயே சுற்றிப் பார்த்திருந்ததாலும், அடியேன் தேவேந்திரனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்வதென்றும், தனுஷ்கோடி  அவர்கள் மற்றவர்களை அழைத்துக்கொண்டு ஹரித்வாரை சுற்றிபார்க்க செல்வதென்றும் முடிவு செய்தோம்.

திராவிட பாணியில் கௌரி கங்கா உடனுறை
 சந்திர மௌலீஸ்வரர் ஆலயம்

அதற்கு முன்னால் வைத்தி அண்ணன் அவர்கள் கேதாரீஸ்வரர்ருக்கு அபிஷேகம் செய்வதற்காக திருநீறு, சந்தனம் முதலியவற்றை சிதம்பரத்திலிருந்து கொண்டு வந்திருந்தார் அவற்றை திருப்பி எடுத்து செல்ல விருப்பமில்லை  எனவே இங்கே எங்காவது சிவன் கோவிலில்  அபிஷேகம் செய்து விடலாம் என்று கூறினார். நாங்கள் தங்கியிருந்த திருக்கோவலூர் மடத்தின் அருகிலேயே திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் திருவேங்கடவன் திருக்கோவிலும்,  கௌரி கங்கா உடனுறை சந்திர மௌலீஸ்வரர் ஆலயமும் உள்ளது அதில் சிவன் கோவிலில் சென்று பார்ப்போம் முடிந்தால் அபிஷேகம் செய்து விடலாம் என்று திராவிட  பாணியில் திருப்பதி தேவஸ்தானத்தாரல் கட்டப்பட்டுள்ள அத்திருக்கோவிலுக்கு சென்றோம்.

 காலையிலேயே அபிஷேகம் முடித்து அலங்காரம் செய்து விட்டிருந்தனர் எனவே ஏமாற்றத்துடன், வேங்கடேஸ்வரர் கோவிலுக்கு சென்றோம் அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது அதை சேவித்தோம்.  இந்த திருக்கோவில்களளின் அருகில்  திருப்பதி தேவஸ்தானத்தின் தங்கும் விடுதி உள்ளது, யாத்திரிகள் இங்கும் தங்கலாம், அருகில் ஒரு தென்னிந்திய உணவு விடுதியும் அருகில் உள்ளது.  காலை சிற்றுண்டியை அங்கு முடித்தோம். அடியேன் டேராடூனில் உள்ள எங்கள் அலுவலக மருத்துவரிடம் பேசி, ரிஷிகேசில் உள்ள நிர்மல் மருத்துவமனை நல்ல மருத்துவமனை என்று தேவேந்திரனை அங்கு அழைத்து சென்றேன். அவர்களும் அவரை பரிசோதித்து  விட்டு, உடனடியாக குளுகோஸ் ஏற்ற வேண்டும் அதனுடன் மருந்துகளும் தருகின்றோம் அவர் பயணத்திற்கு தயாராகி  விடுவார், கவலைப்பட ஒன்றும் இல்லை என்று கூறினார்கள் மதியம் இரண்டு மணியளவில் நாங்கள் ரிஷிகேசை விட்டு கிளம்பவேண்டும் என்று கூறினேன் அவர்களும் அதற்குள் மூன்று பாட்டில் குளுகோஸ் ஏற்றி விடலாம் என்று கூறினார்கள். எனவே அவரை அங்கு சேர்த்து அவருடன் நான் இருந்தேன். 
 லக்ஷ்மண் ஜூலா அருகே எங்கள் குழுவினர்
 

மற்றவர்கள் ரிஷிகேசத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய, லஷ்மண் ஜூலா என்று அழைக்கப்படும் பழைய பாலம்,  கங்கையின் குறுக்கே கட்டப்படுள்ள இந்த பாலம் கட்டப்ட்டுள்ள இந்த இடத்தில் இலக்ஷ்மணன் தவம் செய்ததாக ஐதீகம்.  இப்பாலத்தை இலக்குவன் தனது அம்புகளால் அமைத்தாராம். ஜூலா என்றால் ஊஞ்சல் என்று பொருள், தொங்கும் பாலம் ஆதலால் இதில் நடந்து செல்லும் போது பாலம் ஆடுவதால் இப்பெயர்.    ராம் ஜூலா என்று அழைக்கப்படும் புதிய பாலம் தற்போது கட்டப்பட்டது.
 13 மாடிக்கோயில் 


ஆதி சங்கரால் கட்டப்பட்ட  பாரத் மாதா மந்திர் பரபரப்பான கடைவீதியில் அமைந்துள்ளது. பரதன் இங்கு தவம் செய்ததாக ஐதீகம். இங்குள்ள ஆஸ்ரமங்களில் சுவாமி பரமார்த்த நிகேதன்  ஆசிரமம் மிகவும் புகழ் பெற்றது. தினமும் மாலை கங்கை ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள  யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் அமைத்துள்ள சிவபெருமான் சிலைக்கு எதிரே இந்த ஆசிரமத்தின் சிறார்கள் வேதம் ஓத,  ஹோமம் நடைபெற்று அந்தி சாயும் நேரத்தில் கங்கா ஆரத்தி தினமும் சிறப்பாக நடைபெறுகின்றது. 13 மாடி கோயிலும் பார்க்க வேண்டிய  ஒரு முக்கியமான இடம் ஆகும். எல்லா தெய்வ மூர்த்தங்களையும் நாம் இந்த கோயிலில் காணலாம். 


 ரிஷிகேசத்திலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் நீலகண்டர் ஆலயம் அமைந்துள்ளது. வாகனத்திலும், நடைப்பயணமாகவும் இத்திருக்கோவிலை அடையலாம். சிரவண (ஆடி) மாதத்தில் ஆயிரக்கணக்கானோர் கங்கா தீர்த்தத்தை காவடியாக சுமந்து வந்து சிவபெருமானுக்கு இங்கு அபிஷேகம் செய்கின்றனர்.   

த்ரிவேணி கட்டத்தில் கங்கை பூமியில் இறங்கும் சிற்பம்

 த்ரிவேணி படித்துறையில் கீதாபோதேச  சிற்பம்
ரிஷிகேசில் அமைந்துள்ள படித்துறைகளில் திரிவேணி காட் என்னும் ஸ்நான கட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, இங்குதான் லோக கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கலப்பதாக ஐதீகம். ஹரித்துவாரில் ஹரி-கா-பௌரிக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அத்தனை முக்கியத்துவம் இதற்கும் உண்டு. இதன் அருகில் இரகுநாத் மந்திர் முதலிய பல ஆலயங்கள் உள்ளன, கரையில் பல அற்புத சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன. மாலை இங்கு நடக்கும் ஆர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் லக்ஷ்மண் ஜுலா செல்லும் வழியில் உள்ள குருத்வாராவும் பார்க்கவேண்டிய இடம்.   இந்த ஊரில் யாரும் மாமிசம் சாப்பிடுவதில்லை ஒரு சிறப்பு. கீதா பவனில் எல்லா சமய நூல்களும் கிட்டும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நகரில் முடிந்த இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு திரும்பி வந்த பின், வைத்தி அண்ணன் மற்றும் தனுஷ்கோடி ஆகியோர் மருத்துவமனை வந்தனர் அவர்களை அழைத்துக்கொண்டு சந்திரேஸ்வரர் ஆல்யத்திற்கு சென்றோம்.

சிவபெருமான் உறையும் இடம் மயானம் அல்லவா?   இந்த ரிஷிகேசில் சந்திரேசர் மயானத்தின் அருகிலேயே கோயில் கொண்டுள்ளார்.  அங்கு சென்ற போது ஒரு தடவை நாகம் வந்து இவரை வழிபட்டு சென்றிருக்கிறது என்பதை அறிந்தோம். அங்கிருந்த சிவாச்சாரியார் பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், பன்னீர் எல்லாம் வாங்கி வந்து பழங்கள் அர்ப்பணித்து விதிப்பிரகாரம் ஒரு ருத்ராபிஷேகத்தை செய்து கொடுத்தார். சந்திரேஸ்வரரிடம் அடுத்த தடவையாவது தங்கள் ஜோதிர்லிங்க தரிசனம் சித்திக்கவேண்டும் என்று  மனமார வேண்டிக்கொண்டோம். ருத்ராபிஷேகம் செய்ததில் வைத்தி அண்ணனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. பின்னர் மருத்துவமனை வந்தோம். ரிஷிகேசில் ஆட்டோக்கள் கிடைக்கின்றன நம் ஊர் போல பணம் பிடுங்குவதில்லை, நியாயமான கட்டணமே வசூலிக்கின்றனர், எந்த இடமானாலும் வருகின்றனர். குளுகோஸ் ஏற்றிய பின் தேவேந்திரன் தெளிவாகி விட்டார். அவரை  மருத்துவமனையிலிருந்து விடுவித்து  பின்னர் திருக்கோவலூர் மடம் வந்து அனைவரும் ரிஷிகேசிலிருந்து ஹரித்வாருக்கு ஆட்டோவில் புறப்பட்டு வந்தோம்.

 முதலில் எங்களுடைய உடமைகளை புகைவண்டி நிலையத்தில்  வைத்து விட்டு  இரண்டு பேர் அதற்கு காவலாக இருக்க மற்றவர்கள்  ஹரி-கா-பௌரி சென்று  அமிர்தம் விழுந்த இடத்தில் நீராடி கங்கா தீர்த்தம்  எடுத்துக்கொண்டு வந்தோம். வைத்தி அண்ணன் அடுத்து சிதம்பரம் நடராசர் மஹா அபிஷேகத்திற்காக கங்கா தீர்த்தம் எடுத்துக்கொண்டார், கீழிருந்தே மானஸா தேவியை வணங்கி விட்டு புகைவண்டி நிலையத்திற்கு கிளம்பினோம். 

 மலை மேல் மானசா தேவி ஆலயம்

அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது எனவே அனைவரும் நனைந்து கொண்டே புகைவண்டி நிலையம் வந்து சேர்ந்தோம். சிறிது நேரத்தில் சதாப்தி  எக்ஸ்பிரஸ் வண்டியும் வந்தது, குறிப்பிட்ட நேரத்திற்கு எங்களை கொண்டு வந்து சேர்த்ததற்கு அந்த இறைவனுக்கு நன்றி தெரிவித்து, வண்டி ஏறி புதுடெல்லி வந்து சேர்ந்தோம் அங்கு ரயில் நிலையத்தின் அருகிலேயே உள்ள ஒரு ஹோட்டலில் தனுஷ்கோடி அவர்கள் அறைகள் முன் பதிவு செய்திருந்தார் அதில் தங்கினோம்.


 
  டெல்லியில் ஒரு நாள்


யாத்திரையின்  கடைநாள் 18-09-2010 அன்று டெல்லியில் சாந்தினி சௌக்கிற்கு மெட்ரோ இரயில் மூலம் சென்று சாப்பிங் செய்து கொண்டு  திரும்பி வந்து இரவு 7:10 Spicejet விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தோம். 13 நாட்கள் ஒரு குடும்பமாக புண்ணிய தேவபூமியில் பல் வேறு தெய்வங்களை தரிசித்த மக்கிழ்ச்சியில் அவரவர்கள் இல்லம் வந்தடைந்தோம்.   பின்னர் தெரிய வந்தது நாங்கள் ஹரித்வாரிலிருந்து வந்ததற்கு அடுத்த நாள் கங்கையில் வெள்ளம் வந்து ஹரி-கா-பௌரி எல்லாம் வெள்ளக்காடாகி விட்டதாம். அப்போது பெய்த மழையால் யாத்திரிகள் மூன்று நாட்கள் வரை பல்வேறு இடங்களில் மாட்டிக்கொண்டார்களாம்.

பாம்பு போல வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் பஸ் பயணம், கொண்டை ஊசி வளைவுகள், பச்சை போர்வை போர்த்திய மலைகள்,  மேகக் கூட்டங்கள், பனி மூடிய சிகரங்கள்,       உசியிலைக் காடுகள், மாசடையாத தூய காற்று, சுடு நீர் ஊற்றுகள் கடுமையாக உழைக்கும் மக்கள், அற்புதமாக மலர்ந்திருக்கும் மலர்கள் என்று பல்வேறு அருமையான அனுபவம் பெற்றோம் இந்த 13 நாட்களில். பருவம் தவறிய மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்  யாத்திரை இன்னும் அருமையாக, இனிமையானதாக இருந்திருக்கும். ஒருவர் உடல் நலம் சரியைல்லாமல் போனதால் சிறிது பின்னடைவு ஏற்பட்டது உண்மை. இல்லாவிட்டால் கேதாரீஸ்வரரை முதல் முறையிலேயே தரிசனம் செய்திருக்கலாமோ?  

என்னடா இவ்வளவு இன்னல்களை அனுபவித்திருக்கின்றீர்கள் ஆனால் தலைப்பில் இமயமலையில் ஒரு இனிய யாத்திரை என்று தலைப்புக்கொடுத்துள்ளிர்களே என்று யாருக்காவது தோன்றியிருக்கலாம். மஹாகவி பாரதி தனது நந்தலாலா பாடலில் 

“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா

நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா”

என்று பாடியபடி எல்லா நிகழ்வுகளையும் அவன்  செயல் என்று எடுத்துக்கொண்டால் எதுவுமே ஒரு துன்பம் கிடையாது. அவன் தரிசனம் கிடைத்ததே அது தான் இன்பம் அது எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. மேலும் ஒரு சுற்றுலாவாக சென்றிருந்தால் துன்பமாக இருந்திருக்கும் யாத்திரையாக சென்றதால் நம்முடைய பக்தியில் எதோ குறை இருந்ததால் கேதாரீஸ்வரர் தரிசனம் கிட்டவில்லை என்பதுதான் உண்மை. திரு இரவி அவர்கள் நாம் சரியாக சிவபெருமானிடம் வேண்டிக்கொள்ளமல் விளையாட்டாக கிளம்பி வந்து விட்டோம் அடுத்த தடவை சரியாக பூஜை செய்து, சங்கலபம் செய்து கொண்டு வரிவோம் என்று கூறினார்.  இவ்வாறு முதல் வருட யாத்திரை நிறைவு பெற்றது.   

இனி எப்போது  கேதாரீஸ்வரரை தரிசனம் செய்து வைக்கப்போகின்றீர்கள்  என்று கேட்கின்றீர்களா? அதிகம் காத்திருக்க வேண்டாம் அடுத்த பதிவு வரை காத்திருங்கள். இது வரை உடன் வந்த அனைவருக்கும் மிக்க நன்றி.

2 comments:

Sankar Gurusamy said...

அற்புதமான அனுபவங்கள். எங்களையும் தங்களுடன் அழைத்து சென்றதுபோல் இருந்தது...

//எல்லா நிகழ்வுகளையும் அவன் செயல் என்று எடுத்துக்கொண்டால் எதுவுமே ஒரு துன்பம் கிடையாது.//

சத்தியமான வார்த்தைகள்.. ஆனால் இது எல்லாருக்கு கைகூடுவதில்லை. இந்த பக்குவம் வர இன்னும் எத்தனை ஆண்டுகள் நாங்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

Kailashi said...

மிக்க நன்றி சங்கர் ஐயா! யாத்திரை இன்னும் தொடரும் அப்போதும் வாருங்கள்.