Friday, January 27, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -18

பத்ரிநாதர் தரிசனம்

பத்ரிநாதர் -இராவல் அவர்களின் பூஜா மூர்த்தி

நீலகண்ட சிகர வடிவத்தில் மிக்கார் அமுதுண்ண ஆலமுண்ட நீலகண்டனை திவ்யமாக தரிசித்து விட்டு  பத்ரிநாதரை தரிசனம் செய்ய கிளம்பினோம். முதலில் நாரத குண்டத்தில் தீர்த்தமாடி விட்டு பின் பத்ரிநாதரை சேவிக்க செல்வதற்கு முன்,  பத்ரிநாத் தலத்தின் பெருமைகளை முதலில் பார்க்கலாமா அன்பர்களே?

சிம்ம துவாரம் பத்ரிநாத்


வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி பத்ரிநாத் தலத்தின் பெருமைகளை கூறுமாறு கேட்க வசிஷ்டர் கூறுகின்றார். " பத்ரிநாத்தை தரிசிப்பவன், அவன் எப்படிப்பட்ட பாவியாயினும், பக்தியினால் புனிதமடைந்து  மோக்ஷமும் அடைகின்றான். பத்ரிநாதரின் தரிசனம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. எவனொருவன் வாழ்நாள் முழுவதும் இறைவனை பிரார்த்தனை செய்கின்றானோ, அவனுக்குத்தான் பத்ரிநாதரின் தரிசனம் கிட்டுகின்றது. அவனுடைய பாவங்கள் நீங்கும். உள்ளம் தூய்மை பெறும். எந்த குற்றத்தை செய்தவனும், வேறெந்த க்ஷேத்திரத்திலும் அவனுடைய பாவங்களிலிருந்து விடுபட வழியின்றிப் போனவனும் கூட பத்ரிநாதரின் கருணையினால் சுவர்க்க லோகத்தை  அடைகின்றான்எவன் கங்கையில் நீராடி, உடைகளையும், ஆபரணங்களையும் பத்ரிநாதருக்கு சமர்பிக்கின்றானோ அவனுக்கு மோட்ச லோகத்தில் நிச்சயம் இடம் கிட்டும். எவன் அகண்ட தீபம் ஏற்றுகின்றானோ அவன் சிரேஷ்டராகின்றான். எவன் பத்ரிநாதரின் கோயிலை வலம் வருகின்றானோ, அவரது பாதாரவிந்தங்களை பற்றிக் கொண்டு பிரார்த்தணை செய்கின்றானோ அவன் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறுகின்றான்இவ்வாறு  சிறப்பு பெற்ற  பத்ரிநாத் தலத்தின் மற்ற சிறப்புகளைக் காணலாமா?   

நாராயண பர்வதத்தின் மடியில்
அலக்நந்தாவின் கரையில்
பூலோக வைகுண்டம் பத்ரிநாதம்


நமது பாரத தேசமெங்கும் உள்ள அனைத்து தலங்களிலும், நான்கு திசைகளிலும் உள்ள பரம பவித்ரமான ஸ்தலங்கள் சார் தாம் என்று அழைக்கப்படுகின்றன. ஆதிசங்கரர் இந்த நான்கு தலங்களிலும் தமது பீடத்தை ஸ்தாபிதம் செய்தார்.  மேலும் உத்தராகண்ட் மாநிலத்தின் சோட்டா சார்தாம் தலத்திலும் ஒன்று பத்ரிநாத். இந்த சிறப்பு இந்த தலத்திற்கு மட்டுமே உண்டு.

மஹாலக்ஷ்மித் தாயாருக்கு மிகவும் உகந்த தலம். பத்ரி எனப்படும் இலந்தை மரத்தினடியில் மஹாலக்ஷ்மித் தாயார் தவம் செய்ய அதற்கு பிரசன்னமாகி பெருமாள் அதே இலந்தை மரத்தடியில் சேவை சாதித்து நமக்கு முக்தி வழங்கும் முக்தி தாம்.

அஷ்டாத்திர மந்திரத்தை உபதேசம் செய்த தலம். பெருமாள் நர நாராயணகர்களாக அவதாரம் செய்து தவம் செய்து நாம் எல்லோரும் உய்ய நலம் தரும் தானே குருவாகவும், சீடனாகவும் ஒம் நமோ நாராயணா” என்னும் திருமந்திரத்தை அருளிய தலம்.

அலக்நந்தா நதியின் மேற்குக் கரையில் நர நாரயண சிகரங்களுக்கிடையில் அமைந்துள்ள தலம். சங்கராச்சாரியருக்கு பெருமாள் நரசிங்கமூர்த்தியாக சேவை சாதித்த தலம்.

பத்ரிநாதரை தரிசிக்க செல்லும்
சொக்கலிங்கம், வைத்தி, மனோகரன், இரவி

வியாச முனிவர் கூற தந்தத்தை உடைத்து முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் மஹா பாரதம் எழுதிய தலம்.

 இந்த பூவுலகில் பெருமாள் பிரத்யக்ஷமாக ஆச்சாரியனாக சேவை சாதிக்கும் தலம்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களுள் ஒன்று இந்த பத்ரிகாச்ரமம். .
வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரையயோத்தி

இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோத்தமனிருக்கை
என்று பெரியாழ்வாரும்,

சீராரும்மாலிருஞ்சோலை திருமோகூர்

பாரோர் புகழும் வதரி வடமதுரை
என்று திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.  இவ்வதரி திவ்ய தேசத்தை 22 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கையாழ்வார்.  

இத்தலம் பெருமாள் தானாகவே எழுந்தருளிய ஸ்வயம்வக்த ஸ்தலங்களுள் ஒன்று. மற்ற தலங்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, வானமாமலை, புஷ்கரம், நைமிசாரண்யம், சாளக்கிராமம்  ஆகியவை ஆகும்.

நாரதர் குண்டம் 


பத்ரிநாதர் ஆலயம் எப்போது நிறுவப்பட்டது என்பதற்கு வரலற்றுப்பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லை.  புத்தர் காலத்தில் நாரத குண்டத்தில் வீசிய இந்த சாலக்கிராம மூர்த்தியை ஆதி சங்கரர் கண்டெடுத்து அதை தப்த குண்டத்திற்கும் கருட சிலாவிற்கும் இடையில் பைரவி சக்கரத்தின் மேல்  பிரதிஷ்டை செய்தார். 5ம்  நூற்றாண்டில் குஷ்ட நோயால் அவதிப்பட்ட கர்வால் மஹாராஜா, வரதராஜ ஆச்சாரியார் என்ற குருவின்  யோசனைப்படி இந்த மூர்த்தியை  தற்போது உள்ள இடத்தில் நிறுவினாராம்.  இதனால் அவரது அந்த நோய் நீங்கியது. 

நந்த பிரயாகையிலிருந்து சதோபந்த வரையிலான ஷேத்ரம் பத்ரி விஷால் என்று அழைக்கப்படுகின்றது. சகஸ்ர கவசன் என்ற அரக்கனை வதம் செய்ய  பெருமாள் நர நாராயணர்களாய் பத்ரி ஆசிரமம் வந்து  தவம் செய்த போது மஹாலக்ஷ்மி தாயார் இலந்தை(பத்ரி) மரமாக இருந்து நிழல் கொடுத்தாள், தவம் செய்யும் போது ஸ்திரீகளை தொடுவதில்லை என்ற விரதம் கொண்டதால்,  பெருமாள் வளர வளர மரமும் வளர்ந்தது எனவே விசாலமான என்ற பொருளில் இத்ஷேத்ரம் பத்ரி விஷால் என்றும் அழைக்கப்படுகின்றது. 

  
தப்த் குண்டம்

தவம் செய்யும் பத்ரிநாதரை தரிசனம் செய்யாமல் முக்தி அடைய முடியாது என்று நம்புகிறார்கள். பனிக் காலத்தில் ஆறு மாதங்கள் திருக்கோவில் மூடியிருக்கும், அப்போது உற்சவ மூர்த்தி ஜோஷிமட் நரசிம்மர் ஆலயத்தில் இருப்பார். அப்போது பத்ரி நாதரை நாரதர் பூஜை செய்வதாக ஐதீகம். மஹா லக்ஷ்மித்தாயார் சன்னதியின் உள்ளே இருப்பார்.   திருக்கோவில் மூடும் போது ஏற்றப்பட்ட  அகண்ட தீபம்  ஆறு மாதம் கழித்து மீண்டும் திறக்கும் போது அப்படியே அனையாமல் இருக்கும் அற்புதம் நடக்கும் தலம்.


நீராடிவிட்டு பத்ரிநாதரை தரிசிக்க செல்கின்றோம்

இமயமலைச்சாரலில் அமைந்துள்ள பத்ரிஷேத்ரம் காலம் காலமாகவே ரிஷிகளையும் யோகிகளையும் ஈர்த்து வந்துள்ளது. வசிஷ்டர், காஷ்யபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், விசுவாமித்திரர், அகஸ்தியர் ஆகிய சப்த ரிஷிகள் தவம் செய்த புண்ணிய பூமி இந்த பத்ரிகாஸ்ரமம்.

கடல் மட்டத்திலிருந்து  3100 மீ உயரத்தில் நர நாராயண சிகரங்களுக்கிடையில்  சுற்று சூழல் பாதிக்கப்படாத இயற்கைச் சூழலில், 400 அடி உயர வஸுதரா என்ற அருவியிலிருந்து இறங்கி வரும் அலக்நந்தா ஆற்றின் வலக்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.

கருட ஷிலா

ஒரு காலத்தில் பத்ரி யாத்திரை வாழ்வின் கடைசி யாத்திரையாக கருதப்பட்டது. எனவே பலர் தங்களது நான்காவது ஆசிரமத்தில்  இங்கு வந்து தவம் செய்ததால் இப்பூமி தபோ பூமி , தபோவன் என்று அழைக்கப்பட்டது. 
 பத்ரிநாதரை சேவித்த பின் மகிழ்ச்சியில் மனோகரன்

பத்ரிநாதர் வைஷ்ணவர்களுக்கு வைகுண்டநாதன், சைவர்களுக்கு பஞ்சமுகி சிவன், சாக்தர்களுக்கு காளி, பௌத்தர்களுக்கு  சாக்கிய முனி, ஜைனர்களுக்கு தீர்த்தங்கரர்.
தமருகந்ததுஎவ்வுருவம் அவ்வுருவம்தானே

தமருகந்தது எப்பேர் மற்றபேர்   என்றபடி எந்த வடிவில் பக்தர்கள் வழிபடுகின்றார்களோ அந்த வடிவில் அவர்களுக்கு காட்சி அளிக்கின்றார் பத்ரிநாதர். 
   

 
 ஆதி சங்கர பகவத் பாதாள்
தமது எட்டாவது வயதில் காலடியிலிருந்து புறப்பட்ட ஆதிசங்கரர் பாரத தேசமெங்கும் நடந்து இமயமலையின் உயரத்தில் அமைந்துள்ள பத்ரிகாசிரமத்தை தனது 14வது வயதில்   அடைந்து நாரத குண்டத்திலிருந்து  பத்ரிநாதரை எடுத்து  புனர் பிரதிஷ்டை செய்தார். இக்கோவிலின் பூஜா முறையையும் இவரே வகுத்துக் கொடுத்தார். பத்ரிநாதருக்கு பூஜை செய்யும் உரிமையை கேரள பிராமணர்களுக்கு அளித்தார் இவர்கள் ராவல் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த முறை இன்றும் பின்பற்றப்படுகின்றது.   ஆதி சங்கரர் இங்கிருந்த போது வேத வியாசரின்  பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதினார். ஆதி சங்கராச்சாரியருக்கு  தனி சன்னதி உள்ளது. 

 
 அலக்நந்தா படித்துறை

 
 அலக்நந்தா பாலமும்
கோடையில் பக்தர்கள் வரிசையில் நிற்பதற்கான கொட்டகையும் 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த பத்ரிநாதரை தரிசிக்க புறப்பட்டோம். தப்த் குண்டத்தில் குளிக்க வேண்டும் என்பதால் அதற்கான மாற்று உடைகளையும் , மற்றும் பூஜை பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றோம். அக்னி தேவன்  தவம் செய்து பத்ரி நாதரை தரிசனம் செய்த போது உண்டாக்கிய குளமே தப்த் குண்டம் ஆகும். இது ஒரு வெந்நீர் குளம், கருட ஷிலாவிலிருந்து உற்பத்தி ஆகி ஓடி வருகின்றது. இது ஒரு குளத்தை அடைகின்றது. அடுத்து நாரத குண்டம், இது நாரத ஷிலாவில் இருந்து உற்பத்தியாகி வரும் வெந்நீர் ஊற்று. இந்த நாரத குளத்தில் இருந்துதான் பத்ரிநாதரை மீட்டு ஆதி சங்கரர் புனர் பிரதிஷ்டை செய்தார். இந்த குளங்களில் முதலில்  நீராடினோம். தப்தகுண்டத்தை சுற்றிலும் ஐந்து பாறைகள் அமைந்துள்ளன அவையாவன நாரத ஷிலா, கருட ஷிலா, மார்க்கண்ட ஷிலா, நரசிங்க ஷிலா, மற்றும் வராஹ சிலாக்கள் உள்ளன. நாரத ஷிலா நாரதர் தவம் செய்த பாறை ஆதியில் கலி கால ஆரம்பத்தில் நாரதர் பத்ரிநாதரை இவர்  பிரதிஷ்டை செய்தார். இப்போதும் பனிக்காலத்தில் கோயில் மூடப்பட்டிருக்கும் போது நாரதர் பத்ரிநாதருக்கு நித்ய பூஜை செய்வதாக ஐதீகம்.   கருடன் தவமிருந்த பாறை கருடஷிலா.   தவத்தின் பயனாக பெரும் பலசாலியாகும் வரமும், மேலும் இத்தலத்தில்  எப்போதும் பெருமாளுடன் சேவை சாதிக்கும் பாக்கியமும் பெற்றான். மேலும்  பிரஹலாதா தாரா, கூர்ம தாரா, ஊர்வசி தாரா, பிருகு தாரா,  மற்றும் இந்திர தாரா என்னும் ஐந்து  நீர் வீழ்ச்சிகளும் உள்ளன. 
  
ஆதி கேதாரீஸ்வரர் சன்னதி

தப்த் குண்டத்தில் நீராடிய பின்னர்  முதலில் ஆதி கேதாரீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு பத்ரிநாதருக்கு  படைக்க பிரசாதம் வாங்கிக்கொண்டு படிகள் ஏறி சென்றோம். முதலில் நமக்கு காட்சி தருவது அற்புதமான சிம்ம துவாரம் இது போன்ற ஒரு அற்புதமான அமைப்பை வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாது. கிழக்கு நோக்கிய கோவில்  பத்து தூண்கள் உள்ளன அவை விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிக்கின்றன, சிம்மங்கள் , கஜங்கள் தாங்க பல வித மரவேலைப்படுகளுடன்  பல வர்ணத்தில் மூன்று சுவர்ண கலசங்களுடன் எழிலாக விளங்குகின்றது சிம்ம துவாரம். இதன் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளாத அன்பர்களே இல்லை என்று சொல்லலாம். சிம்ம துவாரத்தின் நுழையும் போது கருடாழ்வாரை தரிசனம் செய்கின்றோம். ஒரு பிரகாரம் பிரகாரத்தில், செந்தூரம் பூசப்பெற்ற  விநாயகர், பிரம்மா, விஷ்ணு,  கருடன், சூரிய நாராயணர், ஹனுமன் சிற்பங்கள் அற்புதமாக உட்புற சுவரில் அமைந்துள்ளன. பிரகாரத்தில் வடக்கு நோக்கி  மஹாலக்ஷ்மி தாயாருக்கு தனி சன்னதி, தாயாரின் பெயர் அரவிந்தவல்லி. அம்மன் சன்னதி கோபுரமும் பொன் வேய்ந்த கோபுரம். தீபாவளி பெரிய பிராட்டிக்கு விசேஷம். அம்பாளுக்கு சேலை சார்த்துவது மிகவும் நல்ல பிரார்த்தனை. இங்குள்ள அன்பர்கள் மங்கல பொருட்களான, குங்குமம், மஞ்சள், கண்மை, வளையல் படைத்து தாயாரை வழிபடுகின்றனர்.

 

அடுத்த சன்னதி பத்ரிநாதர் உற்சவர் சன்னதி. இவர் வெள்ளி மூர்த்தம்,  நின்ற கோலத்தில் சதுர்புஜனாய் , சங்கு சக்ரதாரியாய் சேவை சாதிக்கின்றார்.  பனி  காலத்தில் ஜோஷிர்மட் செல்பவர் இவர்தான். அப்போது தாயார் உள் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். எதிரே பெருமாளின்   தங்க கோபுர கலசத்தைக் காணலாம். கர்ப்பகிரக சுவரில் தர்மசீலா, காமதேனு உள்ளன, இவற்றை வணங்கிச் செல்கின்றனர் அன்பர்கள், சன்னதிக்கு பின்புறம் நரநாராயணர் சன்னதி, கையில் சக்கரத்துடன் நாராயணரும், வில்லேந்திய கோலத்தில் நரனும்( கிருஷ்ண – அர்ச்சுனரராக ) சேவை சாதிக்கின்றனர். தெற்கு நோக்கி ஷேத்ரபாலரான கண்டாகர்ணன் மற்றும் ஹனுமன் சன்னதி உள்ளது. கண்டாகர்ணன் இங்குள்ள கிராமமான மானாவின் கிராம தேவதை, இவரை வணங்கிய பிறகே பத்ரிநாத் யாத்திரை நிறைவடைகின்றது என்பது ஐதீகம். 

குபேரன், கருடன், பத்ரிநாதர், உத்தவர், நாரதர், நரநாராயணர்
மாலை சிருங்கார தரிசனம் 

 பின்னர் பத்ரி நாதர் சன்னதிக்கு சென்றோம். மூன்று பகுதிகளாக உள்ளது சன்னதி. மூலஸ்தானம் பொன் வேயப்பட்ட  கோபுரத்தின் கீழே சேவை சாதிக்கின்றார் பத்ரிநாதர்.  வெள்ளி மஞ்சத்தில் உடன்  குபேரன், அஞ்சலி ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் பெருமாளின் வாகனமும் கொடியுமான கருடன், உத்தவர், நாரதர், நரநாரயணர்களுடன் பஞ்சாயாதன் முறையில் சேவை சாதிக்கின்றார் பத்ரிநாதர், அகண்ட தீபம் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கின்றது .  அடுத்த பகுதி தரிசன மண்டபம் இங்குதான் பூஜைகளும் மற்ற சடங்குகளும் நடைபெறுகின்றன. அடுத்து சபா மண்டபம்,  கருங்கல்லால் ஆன தூண்கள், தூண்களில் அற்புதமான சிற்பங்கள் , மேலே தசாவதாரக் கோலங்கள், கர்ப்ப கிரகத்தின் முகப்பில் கஜலக்ஷ்மி,  வெள்ளி கவசம் சார்த்தப்பட்டுள்ளது .  உள் துவாரபாலகர்கள் தென்னக அமைப்பில் உள்ளனர்.  மேலே “ஓம் நமோ  பகவதே வாசுதேவாய:”  என்னும் மந்திரம் . பக்தர்கள் இங்கிருந்து தான் பத்ரிநாதரை தரிசனம் செய்கின்றனர்.


சாலக்கிராம மூர்த்தமான பத்ரி நாராயணர், ஜடா முடியோடு சதுர்புஜனாய், சங்கு சக்கரம் ஏந்தி மடியில் மற்ற இரு கரங்களை யோக முத்திரையுடன் வைத்து பத்மாசன கோலத்தில்- தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் சேவை சாதிக்கின்றார். நிஜ ரூபத்தை காலை அபிஷேகத்தின் போது  மட்டுமே சேவிக்கலாம்.  பின்னர் அலங்காரம் ஆகிவிட்டால் முக தரிசனம் மட்டுமே கிட்டுகின்றது. ஆராவமுது பத்ரி நாதரின் அலங்காரம், தலைக்கு மேலே தங்க குடை  தலையிலே தங்க கிரீடம், கிரீடத்தில் வைர மணிகள் மின்னுகின்றன, இரு புறமும் மயில்பீலி, திருமுகத்தில் சந்தன திலகத்தில் வைர திருமண், வெள்ளிக்கவசம்,  திருமார்பில் இரத்தின பதக்கங்கள்,  கௌஸ்துபம், வனமாலை மின்ன சங்கு சக்ரதாரியாய் எழிலாக அழகிய மலர் மாலைகள். துளசி மாலைகள், வாடாத இந்த பத்ரி ஷேத்திரத்தின் மலர் மாலைகளுடன்  சேவை சாதிக்கின்றார் முக்தியளிக்கும் பத்ரிநாதர், பெருமாளை  ஆழ்வார்களின்  பாசுரம் பாடி சேவித்தோம்.

எய்த்தசொல்லோடுஈளையேங்கி இருமியிளைத்துஉடலம்
பித்தர்போலசித்தம்வேறாய்ப் பேசிஅயராமுன்
அத்தன்எந்தைஆதிமூர்த்தி ஆழ்கடலைக்கடைந்த
மைத்தசோதிஎம்பெருமான் வதரிவணங்குதுமே. 
(வயதானபின் சென்று  தரிசித்துக் கொள்ளலாம் என்று நினைக்காமல் இளமையிலேயே, உடல் நலம் நன்றாக உள்ள நிலையில் பெருமாளை தரிசனம் செய்து விடுங்கள் என்று கூறுகின்றார் திருமங்கைமன்னன்)

முதல் தடவை சென்ற போது கூட்டம் அதிகமாக இருந்தது, தரிசனம் முடித்துவிட்டு இன்னொரு முறை சன்னதி வலம் வந்த போது கூட்டம் குறைந்திருந்தது இரண்டாவது முறை உள்ளே சென்று தெவிட்டாத தெள்ளமுதை  இன்னும் அதிகநேரம் சேவித்தோம். அப்போதும் திகட்டவில்லை இன்னொரு முறை வாய்ப்பு கிட்டுமோ தெரியவில்லை இன்னொரு முறையும் சேவித்து விடுவோம் என்று  மூன்றாவது முறையாகவும்  சேவித்து விட்டு மிகுந்த மனமகிழ்ச்சியுடன், வெளியே வந்தோம். மே  ஜூன் மாதங்களில் சென்றால் கூட்டம் அதிகமாக  இருக்கும், வரிசை இரண்டு மூன்று கி.மீ தூரத்திற்கு நிற்கும் அப்போது இவ்வாறு ஆர அமர தரிசனம் செய்ய முடியாது ஆனால் நிலசரிவுகள் இருக்காது.
  இராவல் அவர்களின் பூஜா மூர்த்திகள்

பத்ரிநாதரை திவ்யமாக சேவித்த  பின்னர் ராவல் அவர்களை சென்று தரிசனம் செய்தோம், அவர் பத்ரிநாதருக்கு சாற்றிய சந்தனமும், துணியும், துளசியும் பிரசாதமாக அளித்தார்.  திரு. தனுஷ்கோடி அவர்களுக்கு பரிச்சயமான  திரு.தேஷ்பாண்டே அவர்கள் இங்கு பத்ரிநாத்தில் தங்கி இருக்கின்றார் அவர் ஒரு வழி காட்டியை அனுப்பியிருந்தார் அவர் எல்லா இடங்களையும் சுற்றிக்காண்பித்தார்.   பின்னர் பிரம்ம கபாலம் சென்று ஒரு மிகவும் முக்கியமான கடமையை செய்தோம். 


பிரம்ம கபாலத்தில் பித்ரு தர்ப்பணம் 


வழிகாட்டி, தேஷ்பாண்டே, தனுஷ்கோடி

நாம் எப்போதும் நமது பித்ருக்களுக்கு கடமைப்பட்டவர்கள், வருடம் தவறாமல் அவர்களுக்கு  சிரார்த்தம் கொடுப்பது நமது கடமைகளுள் ஒன்று. இங்குள்ள பிரம்ம கபாலம் என்னும் இடம் மறைந்த நம் முன்னோர்களுக்கு பிண்ட தர்ப்பணம் செய்ய சிறந்த இடம். இந்த பிரம்ம கபாலத்தின் மகிமை என்னவென்று முதலில் காணலாமா? ஆதிகாலத்தில் பிரமனுக்கும் சிவனைப் போல ஐந்து முகங்கள், ஒரு முகம் மிகவும் ஆணவத்துடன் இருந்ததால் சிவபெருமான் அந்த ஐந்தாவது தலையை தனது நகத்தால் கீறி  எடுத்தார். இதனால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது அந்த பிரம்ம கபாலமும் அவர் கையில் ஒட்டிக்கொண்டது. அவர் பல் வேறு தலங்களுக்கு சென்றும் விமோசனம் கிட்டவில்லை. இந்த பத்ரி ஷேத்திரத்தில் அலக்நந்தாவின் கரையில் வந்து பிண்ட தர்ப்பணம் செய்ய பிரம்ம  கபாலம் அவர் கையை விட்டு விலகி அங்கேயே  தங்கி விட்டது . ஆகவே  பித்ருகளுக்கு பிண்டப் பிரதானம் அளிப்பது மிகவும் சிறந்தது. முறையாக வருடாவருடம் சிரார்த்தம் செய்ய முடியாதவர்கள், காசி , கயா முதலிய தலங்களில் செய்யாதவர்கள் இங்கு பிண்டதானம் செய்வது நல்லது.  இங்கு செய்யும் பித்ரு காரியம் கயாவில் ஒரு கோடி முறை செய்வதற்கு ஒப்பானது. இங்கு ஒரு தடவை பிண்டதானம் செய்ய முன்னோர்கள் முக்தியடைகின்றர் எனவே மறுபடியும் அவர்களுக்கு பிதுர் காரியம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சிலர் கூறுகின்றனர்.  குடும்பத்தில் மூத்தவர்களாக இருக்கும்  எங்கள் குழுவின் 8 பேர் இங்கு பிண்டப்பிரதானம் அளித்தோம், மற்றவர்கள் செய்யவில்லை. திரு. தேஷ்பாண்டே அவர்கள் இந்த பிண்டதானத்தை பிரம்ம கபாலத்திற்கருகில் செய்து வைத்தார், அந்த நடுங்கும் குளிரில் தந்தையின் வம்சத்தினர், தாயின் வம்சத்தினர், மாமன்மார் வம்சத்தினர், மனைவி வம்சத்தினர், சகோதரர்கள், சகோதரிகள்,  அவர்களுடன் தொடர்புடையவர்கள், நண்பர்கள், மற்றும் யாரை எல்லாம் நாம் மதித்து போற்றுகின்றோமோ அவர்களுக்கு என்று 32 வகையினருக்கு  மந்திரம் சொல்லி எள் சாதம் தண்ணீர் அளித்து பின்னர் அந்த சாதத்தை பிரம்ம கபாலத்தில் வைத்து அனைவருக்கும் முக்தியளிக்க வேண்டி, அலக்நந்தாவில் அன்னத்தை இட்டு முக்கிய கடமையை முடித்தோம்.
 ஜோஷிர்மட் லக்ஷ்மி நாராயணர் ஆலயம் 


இதற்குள் சீதோஷ்ண நிலை மாறி மேக மூட்டம் அதிகமாகி மழைச்சாரல் துவங்கி விட்டது. அனைவரும் அவசர அவசரமாக இராகவேந்திரர் மடத்திற்கு ஒடினோம். தேஷ்பாண்டே அவர்கள் எங்கள் குழுவினருக்கு மதிய உணவிற்கு அங்கு ஏற்பாடு செய்திருந்தார்.  திரு. தனுஷ்கோடி அவர்கள் பிண்டதானம் செய்யவில்லை என்பதால் அவர் இன்னும் பல முறை பத்ரிநாதரை தரிசனம் செய்து அவருக்கு படைக்கப்பட்ட மஹாபோக் பிரசாதத்தை பெற்றுக்கொண்டு வந்து எங்கள் அனைவருக்கும் வழங்கினார். இவ்வாறு பத்ரிநாதர் தரிசனம் மிகவும் அற்புதமாக முடிந்தது, மழையும் கொட்டத் துவங்கியது. அவசரமாக பேருந்துக்கு ஓடினோம், நடுங்கும் குளிரில் சட்டை இல்லாமல் அமர்ந்து பிண்டதானம் செய்ததால் முதலிலேயே உடல் நிலை சரியில்லாத  திரு. தேவேந்திரரின் உடல் நிலை மிகவும் மோசமாகியது, வழிகாட்டி ஒரு மருத்துவரை அழைத்துக் கொண்டு வந்தார் அவர் வந்து சோதித்துவிட்டு  ஒரு ஊசி போட்டு மருந்து கொடுத்து கீழே இறங்கியவுடன் முடிந்தால் மருத்துவமணையில் சேர்த்துவிடுங்கள் என்று அறிவுரை கூறினார். மதியம் 1:30 மணி வாயில் திறந்திருந்ததால் உடனே கீழே இறங்கினோம்.

ஆதி சங்கரர் தவம் செய்த 2500  வருடங்கள்
பழமையான கற்பக விருக்ஷம் 
 
சிறிது நேரத்தில் மழை நின்று விட்டது.  பின்னர் ஜோஷிர்மட் வந்து ஆதி சங்கரர் அமர்ந்து தவம் செய்த 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்பக விருஷத்தையும், அவர் தங்கியிருந்த குகையையும், அகண்ட ஜோதியையும் அவர் வழிபட்ட லக்ஷ்மி நாராயணரையும், தரிசனம் செய்து பின்னர் பீபல்கோட் வந்து முதல் நாள் தங்கிய அதே இடத்தில் தங்கினோம்.

ஆதி சங்கரர் சன்னதி நந்திகள் 

 பீபல்கோடி சுற்றுலா மாளிகை

இவ்வாறு நான்கு தலங்களுள் மூன்று தலங்களைதான் இந்த வருடம் தரிசிக்க முடிந்தது, திரும்பிவரும் நாள் நாங்கள் பட்டபாட்டையும், பஞ்ச ப்ரயாகை, பஞ்ச பத்ரி பற்றிய தகவல்களையும் அடுத்த பதிவில் காணலாமா அன்பர்களே.                

8 comments:

ப.கந்தசாமி said...

நல்ல விவரங்கள் கொடுத்துள்ளீர்கள். நன்றி. புதிதாகச் செல்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

S.Muruganandam said...

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

மிக்க நன்றி கந்தசாமி ஐயா.

Sankar Gurusamy said...

பத்ரிநாதர் தரிசனம் அற்புதம்... பகிர்வுக்கு மிக்க நன்றி.. ஓம் நமோ நாராயணா..

http://anubhudhi.blogspot.com/

Test said...

பத்ரிநாத் பயணத்தை தங்களுடனே பயணித்த பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த பதிவு, சிம்ம துவாரம், நாரதர் குண்டம், தபத் குண்டம், கற்பக விருக்ஷம் என்று ஓவ்வொரு இடத்திற்கும் புகைப்படமும் அதற்கு உண்டான விளக்கமும், வரலாறும் என மிக அழகா கூறியுள்ளீர்கள் ஐயா.
நண்பர் தேவேந்திரரின் உடல் நிலை பற்றி அடுத்த பதிவிலேயே முழுவதுமாக கூறி விடுங்கள் :)
//(வயதானபின் சென்று தரிசித்துக் கொள்ளலாம் என்று நினைக்காமல் இளமையிலேயே, உடல் நலம் நன்றாக உள்ள நிலையில் பெருமாளை தரிசனம் செய்து விடுங்கள் என்று கூறுகின்றார் திருமங்கைமன்னன்)//
மிக முக்கியமான வரிகள்

S.Muruganandam said...

மிக்க நன்றி குருசாமி ஐயா.

S.Muruganandam said...

//நண்பர் தேவேந்திரரின் உடல் நிலை பற்றி அடுத்த பதிவிலேயே முழுவதுமாக கூறி விடுங்கள்//

அடுத்த பதிவிற்கு சிறிது சமயம் ஆகும் என்பதால் அவரை ரிஷிகேஷத்தில் ஒரு மருத்துவமணையில் சேர்த்து , சிகிச்சை செய்து பின் சென்னை வந்தோம் என்பதை மட்டும் இப்போது தெரிவித்துக்கொள்கின்றேன். முழு விவரம் பின்வரும் பதிவில் எழுதுகின்றேன்.

Spark Arts Kovai said...

மிக்க நன்றி, தாங்கள் சொல்லிய தகவல் அனைத்தும் மிக பயனுள்ளதாக இருந்தது, கேதார்நாத்தை தரிசிக்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளது

S.Muruganandam said...

//கேதார்நாத்தை தரிசிக்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளது//

அடுத்த வருடம் வரச்சொல்லி அருமையான தரிசனம் கொடுத்தார், அவர் லீலைகளை யார் அறிவார்.