Friday, December 30, 2011

பொன்னு பதினெட்டாம் படி பூஜை

நம்மை உயரத்திற்கு ஏற்றுபவை படிகள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நால்வரும் அவரவர்களுக்கு உரிய முறையில் நம்மை உயர்த்தும் ஏணிப்படிகள் அல்லவா?  ஆண்டவன் ஆலயத்தில் அமைந்துள்ள படிகள் புனிதத் தன்மையுடையவை. விஷ்ணுவாலயங்களில்  பெருமாளின் கர்ப்பகிரகங்களில் உள்ள படிகள்  “படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே” என்று திருவேங்கடவனின் தரிசனம் எப்போதும் விரும்பிய குலசேகராழ்வாரின் பெயரால் “குலசேகரன்படி”  என்றே அழைக்கப்படுகின்றது. 

அது போலவே கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் சத்திய சொரூபனாய், தர்மசாஸ்தாவாய்  ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்பன் எழுந்தருளி அருள் பாலிக்கும் சபரிமலையின் “சத்தியம் காக்கும் பொன்னு பதினெட்டாம் படிகள்”  மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்தவை. உலகில் எந்த கோவிலிலும் இல்லாத தேவதாவிச்வாஸம் இந்த படிகளுக்கு உண்டு.

சென்ற வருடம்  ஐயப்ப சுவாமியின் விரத காலத்தில் சென்னை இராஜ அண்ணாமலைபுரத்தில் சபரி மலையைப்போலவே அமைக்கப்பட்டுள்ள ஐயப்பன் ஆலயத்தில் பதினெட்டாம்படி பூஜையை காணும் பாக்கியம் கிட்டியது அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. இப்பதிவில் பதினெட்டாம்படி பூஜையின் மகத்துவத்தை காணலாம் வருங்கள் அன்பர்களே. 
 
நலம் தரும் சபரிமலை  யாத்திரைக்கு அன்னதானப் பிரபுவை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் நாற்பது நாட்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, பெருங்காட்டு வழியில்  கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக, குண்டும் குழியும் கண்ணுக்கு வெளிச்சமாக,  சரண கோஷத்துடன்  இரவு பகல் பாராமல் மலை மலையாக ஏறி இறங்கி, கங்கை நதி போல் புண்ணிய நதியாம்  பம்பையில் நீராடி, புனிதர்களாகி,  நீலி மலை ஏறி சபரியை தரிசனம் செய்தபின்  அய்யப்பனை  தரிசனம் செய்யும் முன் பக்தர்கள் சபரிமலைக்கோவிலின் முன்னால் காணப்படும்  தெய்வாம்சம் நிரம்பிய பதினெட்டுப் படிகளின் மீது கால் வைத்துத் தாண்டியே அய்யனின் சனன்தியை அடைய வேண்டும். இந்த சபரிமலைப் பயணத்தின் தத்துவமனைத்தும் இந்தப் பதினெட்டுப் படிகளில்  அடங்கியுள்ளதென ஆன்றோர் கூறுவர். 

ஈசனுக்கு கயிலாயம். மாலவனுக்கு வைகுண்டம், பிரம்மனுக்கு சத்ய லோகம் போல பூத நாதனுக்கு பொன்னம்பலம். புராணங்களின் படி ஸ்ரீதர்ம சாஸ்தாவின் திருஅவதாரம் தான் ஐயப்பன். உலகில் தர்மத்தை  நிலை நாட்ட ஹரிஹரர்களுக்கு புத்திரனாய் அவதரித்த  தர்ம சாஸ்தா, மஹிஷி மர்த்தனத்திற்காக, பந்தளராஜன் இராஜசேகரனுக்கு பம்பையாற்றங்கரையில்   பாலகனாய் கிடைக்கப்பெற்று  பன்னிரண்டு ஆண்டுகள்  ராஜ சேவகம் செய்து, துர்மந்திரியின் சூழ்ச்சியினால் பல இன்னல் அனுபவித்து, தாயான மஹாராணியின் பொய் தலைவலிக்காக  புலிப்பால் கொண்டு வர கானகம் வந்தார். 

அங்கு நாரத முனிவர் மூலம் தன் அவதார ரகசியம் உணரப்பெற்று, மஹிஷியை வதைத்து  தேவர்கள் துன்பம் துடைத்தார். அதனால் அகமகிழ்ந்த இந்திரன் சபரிமலைக்கு எதிரில் உள்ள காந்த மலையில்  பொன் மயமான அம்பலம் ஒன்றைக்கட்டி அதன் மையத்தில் ஞான பீடம் என்ற சிம்மாசனத்தை ஏற்படுத்தி ஐயனை அதில் அமர கோரினான்.  யக்ஷ, கின்னர, கிம்புராதிகள் வாத்தியங்களை முழங்க, தேவ கன்னியர் நடனமாட, முனிவர்கள் வேதம் ஒத  தேவர்கள் ஜெய கோஷம் எழுப்ப மணிகண்டன் ஞான பீடத்தில் அமர எழுந்தருளினார், பன்னிரண்டு வயது பாலகன் உருவில் நடந்து வரும் ஐயன் உயரமாக அமைந்திருக்கும்  சிம்மாசனத்தில் உட்கார சிரமப்படக்கூடாதென்று  அங்கிருந்த பதினெட்டு தேவதைகள் கீழிருந்து பீடம் வரை படிக்கட்டுகள் போல வரிசையாகப் படுத்துக்கொள்ள தர்மசாஸ்தா அந்த பதினெட்டு தேவதைகளின் மேல் தனது மலர்ப்பாதம் பதித்து ஏறி ஞான பீடத்தில் அமர்ந்து தேவர்களின் பூஜையை ஏற்றுக்கொண்டார்.  இவ்வாறு தேவர்கள் காந்தமலையின் மேல் உள்ள ஐயனுக்கு செய்யும் பூஜையின் மாலை கற்பூர ஆரத்தியே மகர ஜோதி என்பது ஐதீகம்.  பின்னர் ஐயன் தன் கடமையை முடிக்க தேவர்கள் புலிகளாக மாறி, தாய்க்கு புலிப்பால் கொண்டு வந்து பந்தள இராஜனுக்கு உண்மையை உணர்த்தி பம்பா நதிக்கரையிலுள்ள சபரிமலையில் தனக்கு ஒரு கோவில் கட்டப்பணித்து  ஒரு அம்பால் அவ்விடத்தை காட்டி மறைந்தார். 

 
பின்னர் ஒரு சமயம் வேட்டையாட வந்த மன்னனுக்கு ஐயன் பட்டபந்த வடிவம் பூண்டு, சின்முத்திரை, ஆனந்த முத்திரை இவைகளுடன் சேவை சாதித்து பதினெட்டு தேவதைகள் இங்குள்ளது போலவே சபரி மலையில் என்னை  பதினெட்டு படிகளுடன் பிரதிஷ்டை  செய்யவும். இப்படிகளுக்கு ஜீவப்ரதானம் செய்யவும், விக்ரஹபிரதிஷ்டைக்கு ஸ்ரீபரசுராமர் வந்து சேருவார், தேவ சிற்பி விஸ்வகர்மா கட்டிட வேலைகளை கவனித்துக்கொள்ளுவார். யோகபட்டாஞ்சிதமான தவநிலையில் உள்ள என்னை போற்றி வணங்குபவர்கள் நற்கதி பெறுவர் என்று அருளினார்.

சத்ய தர்மங்களை காவல் தெய்வங்களாக கொண்டு நான் வசிக்கும் சபரி மலையில் என்னை தரிசனம் செய்ய வரும்  பக்தர்களுக்கு  அவரவர்களின் விரதநியமங்களுக்கு ஏற்ப பலாபலன்களை இந்த தேவதைகள் அருளுவார்கள். ஆகவே மனமார மண்டலகால நியமநிஷ்டையுடன் பிரம்மச்சரியம் காத்து, புலன் ஐந்து, பொறி ஐந்து, கோசங்கள் ஐந்து இவற்றுடன் மும்மலங்களையும் கூட்டி பதினெட்டு கரணங்களை அடக்கி  எவனொருவன்  முறையாக அந்தப்படிகளை  கடந்து வந்து என்னை சரணடைகின்றானோ அவன் முக்தி என்னும்  வீடுபேற்றை அடைவான்.

பதினெட்டாம் படி மிகவும் புனிதமானதாவும், முக்கியமானதாகவும் இக்கோவிலில் கருதப்படுகின்றது. சத்ய தர்மங்களின் வடிவில் கடுத்தஸ்வாமி, கருப்பஸ்வாமி, கருப்பாயி அம்மா காவல் தெய்வங்களாய் வாள் ஏந்தி காவல் காக்கின்றனர். மனதில் பக்தியின்றி, நியமநிஷ்டை குறைவாக வரும் பக்தர்களை இந்த பதினெட்டு தேவதைகளின் மேல் கால் வைக்க இவர்கள் அனுமதிப்பதில்லை என்பது ஆன்றோர் கருத்து.

தமது யாத்திரையில்  ஏறும் போது ஒரு முறையும், தரிசனம். நெய்யபிஷேகம் செய்தபின்  விடைபெறும் போது ஒரு முறை மட்டுமே  இப்படிகளை பயன்படுத்த வேண்டும்.  சிலர் இருமுடி இல்லாமாலும், மண்டலகால அளவு விரதம் இல்லாமலும்,  இப்படிகளின் மகிமை தெரியாமல் ஏறி விடும் போது இப்படிகளின் புனிதம்  கெடாமல் இருப்பதற்கும், நெறியாக  முறையாக ஏறுபவர்களுக்கு   நற்பலன்களை தர, இந்த படிகளுக்கு சக்தி கூடவும் இக்கோயில் திறக்கும் ஒவ்வொரு மாத நாளும் “படி பூஜை”  செய்து, தந்திர முறையில் இப்படிகளுக்கு புனிதத்தன்மையையும், மகிமைகளையும் புனருத்தாரணம் செய்கின்றனர்.

சபரி மலையின் முக்கிய தந்த்ரிகள் இந்த படிபூஜை செய்யும் உரிமையை பெற்றிருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு படி தேவனையும் தனித் தனியாக  விளித்து தியானம், ஆவாஹனம் என்று சோடசோபசார பூஜைகள் செய்து, விஸர்ஜனம் செய்து அதன் புனிதத்தன்மையை இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர்.

 
பின்னாளில் இவ்வாலயம் பல தடவை தீக்கிரையாகியது, பல தடவை கொள்ளையர்களின் தாக்குதலுக்கும்  இலக்காயிருக்கின்றது, அப்போதெல்லாம் இப்படிகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.  பிறகு ஸ்ரீதர்மசாஸ்தாவே அய்யப்பனாக அவதரித்து, ஆலயத்திருப்பணி நடத்தி இந்த திருப்படிகளில் தனது  மலர்ப்பாதங்களை வைத்து கடந்து விக்கிரஹ பிரதிஷ்டை செய்து ஜோதி வடிவில் அவ்விக்கிரகத்தில் கலந்தார் என்பர். இவ்வாறு மஹாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமரால் பூஜிக்கப்பட்டு தெய்வாம்சம் பெற்ற இந்த பதினெட்டுப்படிகள் மீண்டும் ஐயனின் தாமரைப் பாதங்கள் பட்டு புனிதம் மிகுந்து  “சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி”  என்ற அடைமொழியுடன் இன்றும் காட்சி தருகின்றன. 

இந்திரியங்கள் ஐந்து : கண், காது, மூக்கு, நாக்கு, உடல்
புலன்கள் ஐந்து : பார்வை, கேட்டல், சுவாசம், ருசி, ஸ்பரிசம்
கோசங்கள் ஐந்து : அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்
குணங்கள் மூன்று: ஸத்வ குணம், ரஜோகுணம், தமோகுணம்.
இந்த பதினெட்டையும்    ஜெயித்து, அல்லது கட்டுப்படுத்தி, இந்த பதினெட்டுப்படிகளை கடப்பவர்களுக்கு  “எல்லாம் ஒன்றே, அந்த ஒன்றின்றி வேறில்லை: என்ற உண்மை புலப்படும்.  ஸத் அல்லது ஆன்மா அல்லது பரப்ரமம் என்ற தெய்வ ஸாக்ஷாத்காரம். இதுதான் ஸ்ரீஐயப்பன்   கோவில் முன்வசமுள்ள பதினெட்டுப்படிகள் போதிக்கும் தத்துவம். இவற்றை கடந்தால் “தத்வமஸி” நீ எதை நாடி வந்தாயோ அதே நீயாக உள்ளாய் என்னும் உபநிஷத்  வாக்கியத்தை விளக்கும் வண்ணம் நித்தியனாய். சத்தியனாய், சாசுவதனாய், ஸச்ச்சிதானந்த ரூபனாய் ஒளி விட்டு பிரகாசிக்கின்றான் சுவாமி ஐயப்பன்.
 
முன்ஜென்ம பாவ புண்ணியங்களுக்கேற்ப, பிறவி முதலே, காம குரோதங்கள் எனப்படும் பதினெட்டு துர்குணங்களுடன் பிறக்கும் மனிதர்கள், இப்பிறவியிலும் தொடர்ந்து பாவச்செயல்களைப் புரிந்து தாங்கொணா பாவச் சுமையை தாங்கி நிற்கின்றனர். இவர்கள் வருடம் தோறும்  முறையாக மாலை அணிந்து, விரதம் இருந்து  சபரிமலை வந்து  இந்த புண்ணிய பதினெட்டாம் படியைக் கடக்கும் போது ஒவ்வொரு துர்க்குணங்களாக  நீங்கி ஒவ்வொரு சித்தியாக மிகுந்து  தொடர்ந்து பதினெட்டு முறை பயணம் செய்யும் அவர்கள் சித்த புருஷர்களாய் மேல்நிலைக்கு உந்தப்பட்டு  தெய்வத்திற்கு நிகராக  போற்றப்படுகின்றனர்.

லோக நாயகனாய் சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயன் ஐயப்பசுவாமியை தரிசனம் செய்யும் அதிகாரம் அனைவருக்கும் (சில குறிப்பிட்ட நியதிகளின் படி) உள்ளது. யார் வேண்டுமானாலும் சபரி மலை கோவில் திறந்திருக்கும் நாட்களில் பம்பையில் சென்று நீராடி, சபரிமலை ஏறி, சன்னிதானத்தின் வடக்குப்பகுதியில் உள்ள  படிக்கட்டுகளின் மூலம் சென்று பூத நாதனை, ஹரிஹரசுதனை, பந்தளத்து இராஜனை, பம்பா நதி தீரனை, வாபரின் தோழனை தரிசனம் செய்யலாம்.  ஆனால் புனிதமான இந்த பொன்னு பதினெட்டாம் படி வழியாக சன்னிதானம் அடைந்து ஐயனை தரிசிக்க   விரதம், இருமுடி அவசியம்.

இந்த பதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம் உண்டு அவையாவன

முதல் படி – விஷாத யோகம்
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி

இரண்டாம் படி – சாக்கிய யோகம்
பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம். 

மூன்றாம் படி – கர்ம யோகம்
கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம், 

நான்காம் படி – ஞானகர்ம சன்னியாச யோகம்
பாவ- புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும். 

ஐந்தாம் படி – சன்னியாச யோகம்
நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி – தியான யோகம்
கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது இதுவே ஆறாவது படி. 

ஏழாம் படி – பிரம்ம ஞானம்
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான். எல்லாமே இறைவன்தான் என உணர்வது பிரம்ம ஞானம்.

எட்டாம் படி – அட்சர பிரம்ம யோகம்
எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.

ஒன்பதாம் படி – ஆன்மிக யோகம்
கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.

பத்தாம் படி – விபூதி யோகம்
அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி

பதினொன்றாம் படி – விஸ்வரூப தரிசன யோகம்
பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.

பன்னிரெண்டாம் படி – பக்தி யோகம்
இன்பம்-துன்பம், விருப்பு-வெறுப்பு ஏழை–பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதிமூன்றாம் படி – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே  அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி
.
பதினான்காம் படி – குணத்ர விபாக யோகம்
யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம்படி

பதினைந்தாம் படி – தெய்வாசுர விபாக யோகம்
தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி – சம்பத் விபாக யோகம்
இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி – சிரித்தாத்ரய விபாக யோகம்
’சர்வம் பிரம்மம்’ என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.

பதினெட்டாம் படி – மோட்ச சன்னியாச யோகம்
யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல்,  உன்னையே சரணாகதி என்று அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில்  அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி . 

சத்தியம் நிறைந்த இந்து பத்தினெட்டுபடிகளை பக்தியோடு கடந்து வந்தால் நம் கண் எதிரே அருள் ஒளியாய் தரிசனம் தந்து அருள் புரிய காத்திருப்பான் ஐயன் ஐயப்பன் என்பதே இந்த பதினெட்டாம் படி  தத்துவம். 


சத்தியம் காக்கும் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிகளே சரணம்!
சரணம்! சரணம்! சரணம் பொன் ஐயப்பா!

2 comments:

Sankar Gurusamy said...

சுவாமி ஐயப்பன் பற்றிய மிக சிறப்பான பதிவு..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

Kailashi said...

மிக்க நன்றி சங்கர் ஐயா.

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா