Saturday, November 19, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -5


ஓம் நமசிவாய


கோவிலின் முன்னே உள்ள மலைப்பிரதேசம்
(ஓம் நமசிவாய என்று இங்கு வைத்திருப்பது போல் பல இடங்களில் பார்த்தோம்)


இதுதான் மர்க்கட நியாயம்






குரங்குக்குட்டி தன் தாயை பற்றிக்கொள்வது போல நாமும் பெருமாளை விடாது பற்றிக்கொள்ள வேண்டும்.

வண்டி நின்ற இடம் சிவபுரி, இங்கு ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தனி சிறப்புக்கள் இரண்டு. முதலாவது இங்கு உள்ள பிராகாஷேஸ்வர் மஹாதேவ் சிவலிங்கம் வடக்குப் பார்த்த லிங்கம். லிங்க மூர்த்தியின் தாரை வணங்கும் நம்மை நோக்கி உள்ளது போல அமைந்துள்லது ஒரு சிறப்பு. பொதுவாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் போது கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோதான் பிரதிஷ்டை செய்வார்கள் ஆனால் இங்கு வடக்கு நோக்கி பிரதிஷ்தை செய்யப்பட்டுள்ளது. கோசை என்று வழங்கப்படும் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் வடக்குப் பார்த்த லிங்கம் ஆவார். வடக்குப்பார்த்த லிங்க மூர்த்தியை வணங்க முக்தி கிட்டும் என்பார்கள். மேலும் இக்கோவிலின் இனியொரு தனித்தன்மை இது தனியார்களால் முற்றும் நிர்வகிக்கப்படுகின்றது (private trust). சன்னதியில் மேலும் அம்மனும் , விநாயகரும் இருந்து அருள் பாலிக்கின்றனர். ஒரு தனி சன்னதியில் மிகப்பெரிய ஸ்படிக லிங்கம் ஒன்றும் உள்ளது. உண்டியல் வசூல் கிடையாது. ஆனால் இக்கோவில் வளாகத்தின் உள்ளேயே பல கடைகள் உள்ளன அதில் பூஜா சாமான்கள், ருத்திராக்ஷம், மணி மாலைகள் கிடைக்கின்றன , விரும்பியவர்கள் வேண்டியவற்றை வாங்கிக்கொள்ளலாம். இதில் வரும் வருமானத்தில் திருக்கோவிலை பராமரிக்கின்றனர். நாங்கள் சென்ற சமயம் அபிஷேகம் நடந்து கொண்டிருந்து முக்கண் முதல்வருக்கு. பின்னர் திருக்கதவம் திறக்கப்பட்டது உள்ளே சென்று அலங்காரத்தில் இருந்த நீலகண்டனை, மங்கை சிவகாமி நேசனை, மலைக்கு மருகனை, காமனை கண்ணால் எரித்த மகேஸ்வரனை, தியாகராஜனை மனதார வணங்கினோம். பின்னர் அவர்கள் கொடுத்த ஆப்பிள் பிரசாதம் சுவீகரித்துக் கொண்டு வெளியே பச்சைப் போர்வை போர்த்தியது போல இருந்த மலையை ரசித்து படம் எடுத்துக்கொண்டு அருகில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த குரங்குகளை சிறிது நேரம் பார்த்துவிட்டு யமுனோத்த்ரிக்கான பயணத்தை தொடர்ந்தோம். பின்னர் இக்கோவிலைப் பற்றி ஒரு செய்தி தெரிய வந்தது உத்தராகண்ட் மாநிலம் முழுவதும் “ஓம் நமசிவாய” என்னும் பெரிய பெரிய விளம்பரங்களைப் பார்த்தோம்.





கெம்ஃடி நீர்வீழ்ச்சி
(முசோரி செல்லும் போது கட்டாயம் இங்கு செல்லுங்கள், ஒரு அருமையான picnic spot)

பின்னர் கூர்ந்து கவனித்தபோதுதான் தெரிந்தது அது சிவபுரிக்கு வாருங்கள் என்று அனைவரையும் அழைக்கும் வண்ணம் அமைந்த விளம்பரம் என்று. சிவபுரியிலிருந்து மலைகளின் அரசியான முசோரி வழியாக சென்றோம் ஆனால் சுற்றி பார்க்க நேரமில்லாததால் அப்படியே முசோரியை பேருந்திலிருந்தே பார்த்துவிட்டு கெம்ப்டி நீர்வீழ்ச்சியையும், வண்டியை நிறுத்தச்சொல்லி ஒரு பார்வை புகைப்பட கருவியால் பார்த்துக்கொண்டு கிளம்பினோம். வழியில் அருமையான பல பாதை விளம்பரங்களைப் பார்த்தோம், அவற்றில் சில Why Forest: F-menas white. F-menas soil. F- means life so save forests. பிளாஸ்டிக் பயன் படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். மரங்களை காப்போம் மழை பெறுவோம் என்னும் பல அருமையான வாசகங்கள் கண்ணில் பட்டன.

ஒரு மலை மழலை



மலைப்பாம்பைப் போல வளைந்து வளைந்து சென்ற மலைப்பாதையில் பயணம் தொடர்ந்தது முசோரி ஒரு மலை உச்சியில் அமைந்திருந்தது பின்னர் கீழிறங்கி சென்றோம். மலையின் மறுபக்கம் சென்றவுடன் யமுனையின் முதல் தரிசனம் கிட்டியது. வழியில் கண்ட காட்சி அப்படியே மனதை கவரும் வண்ணம் இருந்தது மலை உச்சியிலே மேகக்கூட்டங்கள், நெடிதுயர்ந்து நிற்கும் மரக்கூட்டங்கள், கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, பறவைகள் மற்றூம் வண்டுகளின் ரீங்காரம் என்று அப்படியே ஒரு ரம்மியமான சூழல் அதை இரசித்துக்கொண்டே பயணத்தை தொடர்ந்தோம். நடுவில் ஒரு கிராமத்தில் நிறுத்தி காலை உணவை ( ஆலு பரோட்டா, சப்ஜி ) முடித்துக்கொண்டோம். கடையில் இருந்தவர்கள் பரவாயில்லை நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் 20 நாட்களாக மழை பெய்து கொண்டிருந்தது இன்று மழை இல்லை நல்ல துவக்கம்தான் என்று கூறினார்கள், அது போலவே வெயிலும் காய்ந்தது. நாங்கள் அவ்வாறே நம்பினோம் ஆனால் போகப் போக என்ன நடந்தது தெரியுமா? தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள் தெரியும்.

யமுனையாற்றின் நடுவில் ஒரு இழுவை தொட்டில்

அநேகமாக ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் மழை நின்று விடும் ஆனால் இந்த வருடம்(2010) சற்று அதிகமாகவே மழை பெய்து ஏராளமான சேதம் ஏற்பட்டது. ஆனால் எங்களின் முதல் நாள் பயணத்தில் நல்ல வெயிலாக இருந்தது. அந்த மலையின் கீழ் இறங்கி யமுனை நதியை (யமுனோத்திரியிலிருந்து 80 கி.மீ கீழே உள்ள இடம்) யமுனை பாலத்தின் மூலம் கடந்து யமுனோத்ரியை நோக்கிய பயணத்தை தொடர்ந்தோம். இதற்கப்புறம் யமுனை நதியின் கரையோரமாகவே பயணம் செய்கின்றோம்.

யமுனை பாலம்

இமயமலை மடிப்பு மலை வகையாகும் அதுவும் இது ஒரு தொடர்மலை என்பதால் நம் பயணம் முதலில் ஒரு மலையில் முதலில் மேலேறி செல்வதாக இருக்கும் அப்போது மலை முகட்டில் உள்ள நெடிதுயர்ந்த மரங்களையும் உச்சியில் தவழும் மேகங்களையும் வழியில் இருக்கும் கிராமங்களையும் காணலாம். பின் உச்சியை அடைந்து கீழே இறங்கும் போது பாதாளத்ததில் ஓடும் ஆற்றையும் இப்பக்கம் அதிகமாக வயல்களையும் கிராமங்களையும் பார்க்கலாம். இவ்வாறு முழுவதுமாக கீழே இறங்கி ஆற்றை அடைந்து அதன் குறுக்கில் உள்ள பாலத்தின் மூலம் அடுத்த மலையின்மேல் ஏறி இம்மலையின் மேல் ஏறத்தொடங்குகின்றோம் என்று யாத்திரை செய்த நாட்களில் எல்லாம் இப்படித்தான் பயணம் தொடர்ந்தது. யமுனையாற்றின் இப்பக்கம் இருந்த போது எதிரே உள்ள மலையின் உச்சியில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்ததை கவனித்தேன், எப்படி இவ்வளவு உயரத்தில் பயம் இல்லாமல் செல்கின்றனர், கரணம் தப்பினால் மரணம்தான் என்று நினைத்தேன், இன்னும் சிறிது நேரத்தில் நாங்களும் அந்த இடத்தை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறோம் என்பதை உணராமல்.





யமுனையாற்றின் குறுக்காக ஒரு பாலம்


இந்தப்பாலங்கள்தான் மக்கள் ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு செல்ல உதவுகின்றன.

எங்கள் வழிகாட்டியிடம் சிறிது உரையாடியதால் கிடைத்த சில தகவல்கள் நாம் தற்போது செல்கின்ற பாதை NH-123, சுமார் 114 கி.மீ யமுனையின் கரையோரமாகவே செல்கின்றது. தற்போது ஒரு பேருந்து செல்லும் பாதையாகத்தான் உள்ளது. ஆகவே முதலில் மேலிருந்து வரும் வண்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வழி கொடுக்கின்றனர். இரவு ஆறு மணிக்கு மேல் வண்டிகளில் அதிகம் யாரும் பயணம் செய்வதில்லை. இந்தப் பாதி சுமார் 75 வருடங்களுக்கு முன்பே போடப்பட்டது. அதர்கு முன்னும் யாத்த்ரிகள் கால்நடையாக யமுனோத்திரிக்கு சென்று கொண்டுதான் இருந்தனராம். ஆம் ஆதி காலம் தொட்டே இந்த புண்ணிய பூமிக்கு காந்தத்தால் கவரப்பட்ட இரும்பு போல பக்தர்கள் சென்று கொண்டும் வந்து கொண்டும்தான் இருந்தனர். அப்போதெல்லாம் இந்த யாத்திரைகள் வாழ்வின் கடைசி யாத்திரையாக இருந்தது.
புதுப்புனலுடன் ஒடி வரும் யமுனை நதி

யமுனை பாலத்தை கடந்து யமுனையின் இடக்கரையில் பயணம் செய்து கொண்டிருந்த நாங்கள் லாக்ஷா க்ரஹம் என்ற இடத்தை அடைந்தோம். அந்த சிறப்பு என்னவென்றால், லலிதா த்ரிசதியில் அம்பாளுக்குரிய ஒரு நாமம் “லாக்ஷாரஸ – ஸ்வர்ணபாயை நம:” அதாவது செவ்வரக்கு குழம்பு போன்ற சரீர காந்தியுடையவள். இதையே அபிராமி பட்டர் தமது அபிராமி அந்தாதியின் ஆரம்பத்தில் அன்னையை துதிக்கும் போது உதிக்கின்ற செங்கதிர், குங்குமக்குழம்பு. மாதுளம்பூ போன்று செந்நிறமானவள் அன்னை என்று பாடுகின்றார். எதற்காக இதை இங்கே குறிப்பிட்டேன் என்றால் இந்தப்பேரைக் கேட்டவுடன் அம்பாளின் அந்த ஞாபகம்தான் மன்தில் வந்தது. லாக்ஷா என்றால் அரக்கு என்று பொருள். எதாவது பொறி தட்டுகின்றதா? பரவாயில்லை அடியேனே சொல்லிவிடுகின்றேன். மஹாபாரதத்தில் துரியோதனன் கள்ளத்தனமாக ஒரு அரக்கு மாளிகை கட்டி அதில் பாண்டவர்களையும் குந்தி தேவியையும் அதில் அனுப்பி தங்க வைத்து சூழ்ச்சியால் கொல்லப் பார்த்தான் அல்லவா? கண்ணபிரான் சூட்சுமமாக தீப்பிடித்துக் கொள்ளும் போது எலி தன் வளையில் இருந்து ஓடிவிடும் என்றபடி அரக்கு மாளிகை பற்றி எரிந்த போது சுரங்கப்பாதை வழியாக தப்பித்துக் கொண்டனரல்லவா? அந்த அரக்கு மாளிகை இங்குதான் இருந்ததாம் தற்பொதும் அந்த சுரங்கம் உள்ளது என்றனர். எனவே தற்பொது இப்பகுதி லாக்கா மண்டல் (அரக்கு மண்டலம்) என்று அழைக்கப்படுகின்றதாம். இங்குள்ள மக்கள் தங்களை பாண்டவர்களின் வழி வந்தவர்கள் என்றும் நம்புகின்றனர். இவ்வாறு மஹாபரதத்தின் ஊடும் பாவும் இந்த மலைகளில்தான் நெய்யப்பெற்றன என்றால் அது மிகையாகாது. இன்னும் பாண்டவர்களுடன் சம்பந்தப்பட்ட பல செய்திகளை நாம் காண்போம். சிறிது நேரம் அங்கே நின்று எதிரே அரக்கு மாளிகை இருந்த மலைப்பகுதியை புகைப்படம் எடுத்துக்கொண்டு, அருகில் கொட்டிக்கொண்டிருந்த அருவிகளை இரசித்தோம். இந்த பத்து நாள் யாத்திரையில் பல ஆயிரக்கணக்கான நீர் வீழ்ச்சிகளைப் பார்த்திருப்போம்.




லாக்ஷாக்ரஹம் மலை



அரக்கு மாளிகையிலிருந்து மேலே செல்லும் போது யமுனை நதியின் குறுக்கே பல பழைய பாலங்களைப் பார்த்தோம். ஒரு இடத்தில் கம்பியின் மூலம் இப்பக்கத்தில் இருந்து அப்பக்கத்திற்கு சாமான்களை கொண்டு செல்லும் இழுவை யந்திரத்தை பார்த்தோம். யமுனையானவள் பொங்கும் நுரையுடன் அப்போதுதான் பெய்த மழைத் தண்ணீருடன் ஆர்ப்பாட்டமாக புதுப்புனலாக ஓடிக்கொண்டிருந்தாள். வழியெங்கும் பல கிராமங்கள், கிராமத்தில் ஆலோலம் பாடும் கிளிகள். வாழை, நெல், மக்காச்சோளம் பயிரிடப்பட்ட வயல்கள் அவற்றின் நடுவிலே சிலேட்டுப்போல அங்கே கிடைக்கும் பாறைகளையே கூரைகளாக ( ஒடு அல்ல, கான்க்ரீட்டும் அல்ல) வீடுகள், யமுனை நதியின் வேகத்தைக் கொண்டே மாவரைக்கும் யந்திரங்கள் என்று பல்வேறு காட்சிகளை கண்டு களித்தோம்.

இங்கு வாழ்கின்ற மக்களை பார்த்து ஆச்சரிய படாமலிருக்க முடியவில்லை, வருடத்தில் ஆறு மாதங்களுக்கு கடும் குளிர், இரண்டு மாதங்கள் மழை, நிலசரிவு, அதனால் எங்கும் செல்ல முடியாத நிலை, பல இடங்களுக்கு வாகன வசதி கிடையாது ஒற்றையடிப் பாதைதான் என்றாலும் என்று பல அசௌகரியங்கள் இருந்தாலும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக தங்கள் பணிகளை செய்து கொண்டிருக்கும் உழைப்பாளிகள் இவர்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் பிட்டு என்னும் கூடையை முதுகில் கட்டிக்கொண்டு அதில் எல்லா சாமான்களையும் தூக்கிக்கொண்டு மலையேறி தங்கள் குடும்பங்களை ஓட்டும் பாங்கினை என்னவென்று சொல்ல. இவ்வாறே நைகாவ், டாடம்,
நௌகாவ் என்ற ஊர்களை கடந்து மதிய உணவு வேளைக்கு பார்க்கோட்டை சரியான சமயத்திற்கு சென்று அடைந்தோம். இதற்கப்புறம் யாத்திரை எப்படி நடந்தது என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? சற்றுப்பொறுங்களேன் உள்ளே உணவு தயாராக உள்ளது சாப்பிட்டுவிட்டு வந்து தொடர்கிறேன்.


ழியில் உள்ள ஒரு கிராம வயல்

கிராமத்துக்கோயில்


ஒரு சிறு மலர் கொத்து



நாளை (21-11-11) கார்த்திகை சோமவாரம், பரம கருணாமூர்த்தி, ஆலாலமுண்ட நீலகண்டர் வெண்மதி சூடிய பரமனுக்கு மிகவும் உகந்த நாள். இந்த கார்த்திகை சோமவாரத்தின் சிறப்புகளை இங்கே சென்று படியுங்கள் அன்பர்களே.





யாத்திரை இன்னும் தொடரும்.......

4 comments:

Test said...

ஆன்மீக யாத்திரையுடன், யமுனையின் அழகான பவனியை அப்படியே கண் முன் நிறுத்தியுல்லீர்கள் தங்களின் புகைப்படங்களின் வாயிலாக.

Sankar Gurusamy said...

மிக சுவாராசியமான தகவல்கள்..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

S.Muruganandam said...

இன்னும் யாத்திரை தொடரும் அவசியம் வந்து காணுங்கள் லோகநாதன் ஐயா.

S.Muruganandam said...

மிக்க நன்றி குருசாமி ஐயா.