Wednesday, August 10, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -3

இத்தொடரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கண்டு இன்புற இருகரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள். இந்தப்பதிவில் இரண்டாம் திருநாள் மாலை சந்திர பிரபையில் ஐயன் எழுந்தருளி அருள் பாலிக்கும் அற்புத காட்சிகளை காணலாம் அன்பர்களே.விநாயகர்


ஒரே பிரகாரத்துடன் கூடிய சிறிய கோவில்தான் எனவே சீக்கிரம் வலம் வந்து விடலாமா அன்பர்களே? அகத்தியர் தம்பதிகளை வணங்கி வலம் சென்றால் "அதிகார நந்தி" தேவருக்கு தனி சந்நிதி, மேல் திருக்கரங்களில் ஐயனைப் போல மான் மழு தாங்கி கீழ்க்கரங்களால் அஞ்சலி செய்த வண்ணம், மனைவி சுரசையுடன் நின்ற கோலத்தில் தம்பதி சமேதராக அருட்காட்சி தருகின்றார். கயிலையில் யார் உள்ளே வரலாம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவர் அதிகார நந்தி, இதனால் இவர் கையில் பொற்பிரம்பு இருக்கும். திருக்கயிலை மலையை பெயர்த்தெடுத்த அடாத செயல் செய்த இராவணனின் குலம் அழியும் என்று சாபம் தந்தவர் இவரே. பூத கணங்களில் முதன்மையானவர், ஐயனின் முதல் தொண்டர். இவரை வணங்கி அனுமதி பெற்றுக் கொண்டு எதிரே நோக்கினால் அம்மன் சன்னதி முகப்பு. அன்ன வாகனத்தில் ஒயிலாக அமர்ந்திருக்கும் அகிலாண்ட நாயகி அருள் வழங்குகின்றாள். அம்மன் சன்னதிக்கெதிரே தெற்கு வாயில் அதன் வலப்புரம், வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன் என்று பாடிய "வள்ளலார்" சன்னதி. பூசம் நட்சத்திரத்தன்று இவர் சன்னதியில் திருவருட்பா பாராயணம் நடைபெறுகின்றது.


சந்திர பிரபையில் அகத்தீஸ்வரர்


நிருதி மூலையில் வரசித்தி விநாயகர் சன்னதி. நான்கு தூண்களுடன் கூடிய முன் மண்டபம். தூண்களில் சுதை சிற்பங்களாக துவிமுக விநாயகர், த்ரிமுக விநாயகர், நர்த்தன விநாயகர் அத்தனையும் அருமை. வன்னி மர விநாயகருக்கு ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியன்று மாலை மஹா கணபதி ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகின்றது. சன்னதியின் சுவற்றில் ஸ்லோகங்கள், விநாயகர் அகவல் முதலியன பளிங்கு கற்களில் அவற்றை ஒதிக்கொண்டே தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் இட்டு ஞான முதல்வனை வணங்கி எதிரே நோக்கினால் வேப்ப மரம். வேப்ப மரத்தினடியில் ரேணுகா பரமேஸ்வரி மற்றும் நாகர் சிலைகள் மஞ்சள் குங்குமத்தில் ஒளிர்கின்றனர். அன்னையையும் வணங்கி விட்டு கணபதி சன்னதியை சுறி வலம் வந்தால் கலா மண்டபம், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடைபெறும் மண்டபம் முகப்பில் ஆடல் வல்லான்,கலா மண்டபம் முகப்பு
கணபதி முருகர் சுதை சிற்பங்கள். அதையடுத்து சுப்பிரமணியர் சன்னதி. ஓராறு முகமும், ஈராறு கரங்களுடன் தேவியர் இருவரும் இருபுறமும் நின்று அருள் பாலிக்க மயில் மேல் அமர்ந்த கோலத்தில் எழிலாக காட்சி அளிக்கின்றார் முருகப்பெருமான்.சுக்லபக்ஷ சஷ்டியன்று மாலை இவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. இவர் சன்னதி சுவற்றிலும் சண்முக்க் கவசம், கந்தர் சஷ்டிக்கவசம் முதலியனப் பொறிக்கப்பட்டுள்ளன. முருகர் சன்னதியில் இருந்து பார்த்தால் ஐயனின் விமானத்தின் பின்பக்கம் தரிசனம் தருகின்றது. முருகர் சன்னதியை அடுத்து வாகன மண்டபம். இன்னும் என்ன என்ன சன்னதிகள் உள்ளன என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? இரண்டாம் திருநாள் காட்சிகளைக் கண்டு களித்து பின்னர் வலத்தை தொடரலாமா அன்பர்களே?

இத்திருக்கோவிலில் காலையில் சந்திரசேகரரும் மாலையில் பஞ்சமூர்த்திகளும் திருவீதி வலம் வந்து சாம்பவி தீக்ஷை அருளுகின்றனர். இரண்டாம் நாள் காலை சூரியப் பிரபையில் அருட்காட்சி தருகின்றார் சந்திரசேகரர். மற்ற ஆலயங்களில் இல்லாத ஒரு புதுமையை இங்கு கவனித்தேன். சூரிய பிரபையில் ஏழு குதிரைகளுடன் அமைந்துள்ளது. இரவு சந்திரப்பிரபையில் சோமாஸ்கந்த மூர்த்தி அருள் பாலிக்கின்றார்.அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் எழிற்கோலம்

அழகன் முருகன் தேவியருடன்
சண்டிகேஸ்வரர்
அருமையான இயற்கை வர்ணங்களில் வரையப்பட்டுள்ள
விக்கின பிரசாத மூர்த்தி ஓவியம்அன்னை மலைமகள் பார்வதி அமர்ந்திருக்கும் அந்த அழகைத்தன் பாருங்களேன். காலை மடித்துள்ள விதம் யோகா போல் உள்ளது.

பிடியதன் உருஉமை கொளமிகு கரியதுவடிகொடுதனதடி வழிபடும் அவர் இடர்கடிகண பதிவர அருளினன் மிகுகொடைவடிவினர் பயில்வலி வலமுறை இறையே.

தன்னை வழிபடும் அன்பர்களின் இடையூறுகள் நீங்கும் வண்ணம் சிவ சக்தி செய்த திருவிளையாடல் இது. கணபதியை நமக்கு பிரசாதமாக வழங்கினர் ஆதி தம்பதிகள்.

அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..

5 comments:

Sankar Gurusamy said...

அற்புத தரிசனம்.. செய்துவைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி...

http://anubhudhi.blogspot.com/

Kailashi said...

இன்னும் வரும் பதிவுகளையும் வந்து தரிசனம் செய்யுங்கள் குருசாமி ஐயா.

குமரன் (Kumaran) said...

சோமாஸ்கந்தர் படங்களைப் பார்த்திருக்கிறேன். சோமவிக்கினர் படத்தை இப்போது தான் பார்க்கிறேன். நன்றி ஐயா.

Kailashi said...

அடியேனும் இவ்வாறு பார்ப்பது முதல் தடவை.

Kailashi said...

ஓவியத்தின் தலைப்பை பாருங்கள் ஐயா. விக்கின பிரசாத மூர்த்தி. இதை மறிபடியும்பார்த்தவுடன் இந்த சம்பந்தரின் பதிகம்தான் நினைவுக்கு வந்தது.

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.

தன்னை வழிபடும் அன்பர்களின் இடையூறுகள் நீங்கும் வண்ணம் சிவ சக்தி செய்த திருவிளையாடல் இது. கணபதியை நமக்கு பிரசாதமாக வழங்கினர் ஆதி தம்பதிகள்.