Friday, August 12, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -5

திருச்சிற்றம்பலம்


சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கண்டு இன்புற இருகரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள். இந்தப்பதிவிலும் மூன்றாம் திருநாள் காலை அதிகார நந்தி சேவையின் அற்புத காட்சிகளை காணலாம் அன்பர்களே.





அதிகார நந்தியில் எம் கோனும்
அன்ன வாகனத்தில் எங்கள் பிராட்டியும்
சேவை சாதிக்கும் எழிற்கோலம்






என்ன நிறைய நேரம் நிற்க வேண்டியதாகிவிட்டதா? அன்பர்களே இந்நேரம் இம்மண்டபத்தின் அற்புத ஒவியங்களை கண்டு களித்தீர்களா?. ஐயன் சன்னதிக்கு உள்ளே செல்லும் முன் முதலில் சன்னதி முகப்பில் உள்ள கஜலக்ஷ்மியை வணங்கி விட்டு உள்ளே செல்வோமா? கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் லிங்க ரூபத்தில் கர்ப்பகிரகத்தில் அருள் பாலிக்கின்றார் அகத்தீஸ்வரர், அப்பருக்கு சூலை நோயை கொடுத்து ஆட்கொண்டதைப் போல, பொம்மராஜனின் சூலை நோயைத் தீர்த்து ஆட்கொண்ட வள்ளலை வணங்கி நிற்கும் போது மனதில் ஒரு அற்புதமான நிம்மதி. ஐயனின் அருட்கருணை நம்மை அப்படியே ஆட்கொள்கின்றது. ஐயனுக்கு வலப்புறம் கணேசர். அர்த்த மண்டபத்தின் முன்னை கல்லால் ஆன துவாரபாலாகர்கள். ஆலம் உண்ட நீலகண்டனை, மாதொரு பாகனை, கங்கை தங்கிய சடையனை, தியாகராஜனை வணங்கி அவர் சன்னதியை வலம் வரும் போது கோஷ்டத்தில் விநாயகர், தக்ஷிணாமுர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகிய தெய்வ மூர்த்தங்களை கண்டு வணங்கலாம்.






உள் பிரகாரத்தில் பின்புறம் , இருந்தாடும் அழகர் சோமாஸ்கந்தர் மற்றும் பஞ்சமூர்த்திகளின் சன்னதி, நால்வர் சன்னதி, மற்றும் பிக்ஷாடணர் சன்னதி அமைந்துள்ளது. சுந்தர பிச்சாண்டவரின் மூர்த்தம் மிகவும் அழகாக அமைந்துள்ளது. நாள் முழுவதும் அப்படியே அவரைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அவருடைய திருவாசியும், ஜடாமுடியும், தோளில் தாங்கிய சூலமும், மானுக்கு புல் உறுத்தும் அழகும், கையில் உள்ள பிச்சை பாத்திரமும், திருப்பாதங்களில் உள்ள பாதுகைகளும், அருகில் மோகினியாக ஒய்யாரமாக சாய்ந்து, கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சும் கிளி தண்டத்தில் இடக்கரத்தை ஊன்றிய வண்ணம் அம்மன் எழிலாக நிற்கும் அந்த அற்புத அழகு கண்ணை விட்டு அகல மறுக்கின்றது.






அன்னவாகனமேறி அழகாக ஒடி வரும்
அன்னை அகிலாண்டேஸ்வரி




உட்பிரகாரத்தின் வடப்புரம், சண்டேசுரர் சன்னதி, மற்றும் நடராஜர் சன்னதி, ஆடல் வல்லானுடன் நால்வர் பெருமக்களும் , சிறிய ஆடல்வல்லான் மற்றும் கணேசர் மூர்த்தங்கள் அருமையாக உள்ளன , அம்பலவாணருக்கு எதிரே சந்தான குரவர்கள் உமாபதி சிவம், மறை ஞான சிவம், அருணந்தி சிவம், மெய்கண்ட சிவம் ஆகியோர்களின் மூர்த்தங்கள் உள்ளன. அடுத்து அம்மன் சன்னதி அம்மை அகிலாண்ட நாயகியின் கோஷ்டத்தில் இச்சாசக்தி மேலூர் திருவுடையம்மன், கிரியா சக்தி திருமுல்லைவாயில் கொடியிடையம்மன் மற்றும் ஞான சக்தி திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்னும் முப்பெரும் தேவியர் அருள் பாலிக்கின்றனர். தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ தனயை, அகிலாண்ட ஈஸ்வரி அருள்பாலிக்கின்றார். அன்னையை ஐயனையும் ஒருமித்து வணங்கி வெளியே வந்து அமர்ந்து அப்படியே பிரகாரத்தில் அமர்ந்தால் ஒரு அற்புத நிம்மதி. மீண்டும் மீண்டும் வரத்தூண்டும் ஒரு அருமையான கோயில் இது.


பொதுவாக பிரம்மோற்சவத்தின் மூன்றாம் திருநாள் அதிகாலை அதிகார நந்தி சேவை, ஐந்தாம் திருநாள் நள்ளிரவு வெள்ளை ரிஷப சேவை, ஏழாம் திருநாள் பகல் தேரோட்டம், மற்றும் பத்தாம் திருநாள் காலை தீர்த்தவாரி மற்றும் இரவு திருக்கல்யாணம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

இத்திருக்கோவிலிலும் மூன்றாம் திருநாள் அதிகார நந்தி சேவை மிகவும் சிறப்பாக கொண்டாடபப்டுகின்றது. பஞ்ச முர்த்திகளுக்கும் அற்புதமான அலங்காரம் மற்றும் யானை முன் செல்ல நந்தி போலவும், கோமாளி போலவும் வேடமிட்ட அன்பர்கள் பக்தர்களை மகிழ்விக்கவும், சிறப்பு மேள தாளங்களுடன் அம்மையப்பர் திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு சாம்பவி தீஷை அருளுகின்றனர்.


யானை பூஜை செய்யும் காட்சி




நந்தி போலவும், கோமாளி போலவும் வேடமிட்ட அன்பர்கள்





இவ்வாறு அதிகார நந்தி சேவை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது இத்திருக்கோவிலில். பக்தர்களுக்கு அருளும் பொருட்டி சிவசக்தி அங்கங்கே நின்று நாதஸ்வர இசை கேட்டு அருள் பாலிக்கு காட்சியை காண கண் கோடி வேண்டும்.



அம்மையப்பர் அருட்கோலம்




அன்னவாகனமேறி இன்னல் துடைக்க வரும் அன்னை









எழிற் குமரன் தேவியருடன்



சண்டிகேஸ்வரர்






அலங்கார மண்டபத்தில் பிரம்மோற்சவத்தின் போதைய அலங்காரம்


ஜாலந்தர முர்த்தி ஓவியம்

ஓவிய வடிவில் நால்வர்






இன்றைய தினம் அதிகாரநந்தி சேவை சமயக்குரவர்கள் நால்வர்களாகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியவர்களுக்கு அம்மையப்பர் சேவை சாதிக்கும் விதமாக இக்கோவிலில் கொண்டாடப்படுவதால் இவ்வாலய முன் மண்டபத்தில் வரையப்பட்டுள்ள அற்புதமான இயற்கைவண்ண ஒவியங்களில் உள்ள நால்வரின் ஓவியமும் இப்பதிவில் இடம்பெறுகின்றது.




அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -4



இத்தொடரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கண்டு இன்புற இருகரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள். இந்தப்பதிவில் மூன்றாம் திருநாள் காலை அதிகார நந்தி சேவையின் அற்புத காட்சிகளை காணலாம் அன்பர்களே. அதற்கு முன்னர் திருக்கோவில் வெளிப்பிரகார வலத்தை முடித்து விடலாமா?






முழு முதற் கடவுளுக்கு முதல் வணக்கம்






முருகர் சன்னதியை அடுத்து வாகன மண்டபம் அதையடுத்து வடக்குப்புறம் முப்பெருந்தேவியர் சன்னதி கிழக்கு நோக்கி, துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்று நவராத்திரி நாயகியர் மூவரும் ஒரே சன்னதியில் அருள் பாலிக்கின்றனர். துர்கா பரமேஸ்வரி ஆணவமாம் மகிடன் தலையில் நின்ற கோலத்தில் நடுவிலும், வலப்புறம் தாமரை மலரில் அமர்ந்த கோலத்தில் மஹாலக்ஷ்மியும், இடப்புறம் வீணையுடன் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் அருட்காட்சி தருகின்றனர். வேப்ப மரத்தடியில் அன்னையரின் சன்னதி அமைந்துள்ளது. அதற்கடுத்து காசியை நம் கண் முன் கொண்டுவரும் சன்னதிகள். கிழக்கு நோக்கி சிவலிங்க ரூபத்தில் விஸ்வநாதர் பின்புற சுவரில் சுதை ரூபத்தில் சிவசக்தி ரூபம் அன்னை வலக்காலை மடக்கி அமர்ந்திருக்கும் கோலம் அருமை. அருகில் தெற்கு நோக்கி விசாலாக்ஷி மற்றும் அன்னபூரணி அம்பாள் இருவரும் தெற்கு நோக்கி அருள் பாலிக்கின்றனர்.







முப்பெருந்தேவியர் சன்னதி விமானம்








விஸ்வநாதர் சன்னதியில் மாத சிவராத்திரியன்று சமய குரவர் நால்வர் இறைபணி மன்றத்தினர் மூலமாக அபிஷேகம் நடைபெறுகின்றது. இங்கு யாக சாலையும் உள்ளது. இங்கு நின்று அம்மன் மற்றும் ஐயன் விமானம் இரண்டையும் நன்றாக தரிசனம் செய்யலாம்.











அம்மன் மற்றும் ஐயன் விமானங்கள்





(கோவில் சுவர் முழுவதும் இது போல பல்வேறு ஸ்தோத்திரங்களால் நிறைந்துள்ளன. இப்பக்கம் அபிராமி அந்தாதி எதிர்பக்கம் லலிதா சகஸ்ரநாமம், முருகர் சன்னதியில் கந்தர் சஷ்தி கவசம், மற்றும் சண்முக கவசம் )


அருகில் ஒரு சன்னதி உள்ளது. அது பைரவர் சன்னதி. தெற்கு நோக்கி அருள் பாலிக்கின்றார் பைரவர். இவருக்கு தேய்பிறை அஷ்டமியில் அபிஷேகம் நடைபெறுகின்றது. இவருக்கு வடைமாலை சார்த்தி வணங்குவது மிகச் சிறந்த வழிபாடாகும். மாமர நிழலில் அருள் பாலிக்கின்றார் பைரவர். வடகிழக்கு மூலையில் நவக்கிரக சன்னதி உள்ளது. இச்சன்னதிக்கெதிரே சிறு நந்தவனம் இதில் தலமரமாம் வன்னி மரம் உள்ளது. மேலும் இராஜ கோபுரத்தின் உள்பக்கம் சூரியன் மற்றும் சந்திரன் சன்னதிகளும் உள்ளன. கொடிமரத்தை அடுத்து பலி பீடம், அதற்கடுத்து நந்திகேஸ்வரர் சன்னதி, நந்திகேஸ்வரர் சன்னதியில் “நந்தி நாமம் நமச்சிவாயவே” என்னும் வாசகம். இதையடுத்து அலங்கார மண்டபம் மற்றும் மஹா மண்டபம் இந்த மண்டபத்தில்தான் அற்புதமான ஓவியங்கள் கூரையில் வரையப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் முகப்பில் ரிஷபாரூடராய் சிவசக்தி தரிசனம் தருகின்றனர். இம்மண்டபத்திலிருந்து உள்பிரகாரம் செல்லும் நுழைவாயிலில் பிரம்மாண்டமான சுதை துவார பாலகர்கள். இவர்களிடம் அனுமதி பெற்று அம்பாளையும் ஐயனையும் தரிசிக்க உள்ளே செல்ல்லாமா? சற்று பொறுங்கள் ஐயனின் அதிகாரநந்தி சேவையை தரிசித்து விட்டு உள்ளே செல்லலாம்
.










விநாயகர்





சமயக்குரவர்கள் நால்வர்








தேவார திருவாசகம் பாடி முத்தமிழால் சைவம் வளர்த்த அப்பு, சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் நால்வருக்கும் பஞ்ச மூர்த்திகள் அதிகாரநந்தி சேவை தந்தருளுகின்றனர்.






அகத்தீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில்








சிவபெருமானைப் காதலாகி கசிந்து கண்ணிர் மல்கி போற்றி வணங்கி, அந்த காருண்ய மூர்த்தியைப் போலவே சாரூப நிலை பெற்றவர்கள் அனேகராவர். இவர்கள் முக்கண் சுடர் விருந்தினைப் போலவே தலையில் ஜடாமகுடமும் அதில் தாரமர் கொன்றையும், ஊமத்தையும், சந்திரப்பிறையும் தாங்கும் பேறு பெற்றவர்கள். நான்கு கரங்கள் கொண்டு மேற்கரங்களில் மான், மழு ஏந்துபவர்கள். இவர்களில் முதன்மையானவர், எம்பெருமானின் முழு முதல் தொண்டரான நந்தியம்பெருமான் ஆவார். அப்போது அவர் அதிகார நந்தி என்று வழங்கப்படுகிறார். இவர் சந்திரனைப் போன்ற குளிர்ச்சியும், வெண்மை நிறமும் கொண்டவர். இறைவனின் ஞான வாளையும், பொற்பிரம்பையும் தாங்கி நிற்பவர். இவருடைய தேவியின் பெயர் சுயம்பிரபா என்பது ஆகும். நந்தி முகமும், மனித உடலும் கொண்டு , வலது காலை மடக்கி, இடது காலை ஊன்றி மண்டியிட்ட நிலையில் கீழ் திருக் கரங்கள் இரண்டிலும் ஐயனின் பாதங்களைத் தாங்கி, நான்கு தோள்களிலும் எம்பெருமானை சோமாஸ்கந்தராக தாங்கி வீதி வலம் வருவது " அதிகார நந்தி சேவை " எனப்படுகின்றது. அதிகார நந்தி ஞானத்தின் திருவுருவம். நந்தீ என்பதற்கு வளர்வது என்று பொருள். நமது அறிவையும் செல்வத்தையும் வளர்ப்பவராக இருப்பதால் தான் சிவபெருமானுக்கும் நந்தி என்ற பெயர் வழங்கப்படுகின்றது. நந்தி நாமம் நமச்சிவாயவே என்னும் தொடரும் இதனையே உணர்த்துகின்றது. அவர் தன் சார்பாக அறிவு செல்வம், இன்பம் ஆகியவற்றை தடையின்றி வழங்கும் அதிகாரத்தை நந்தியம்பெருமானுக்கு அளித்துள்ளார். அதிகாரம் பெற்ற வல்லமை மிக்க நந்தி தேவர் அதிகார நந்தி எனப்படுகின்றார்.









முன் மண்டபத்தில் உள்ள எழில்மிகு ஓவியங்களில்




நடராஜர் காளி நடனப் போட்டி ஓவியம்












அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..



Thursday, August 11, 2011

ஆடி வெள்ளி அம்மன் தரிசனம்


ஆடி வெள்ளிக் கிழமையன்று அம்மனுக்கு மஞ்சள் காப்பு
ஆதி கருமாரியம்மனுக்கு அழகிய மஞ்சள் காப்பு அழகிய மஞ்சள் காப்பு





ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் ஏன், இது அயன மாதம் அதாவது சூரியன் தெற்கு நோக்கிய பயணத்தை துவக்கும் காலம். தேவர்களுக்கு மாலைக் காலம் ஆரம்பம் அவர்கள் தூங்கச் செல்லும் காலம். பித்ருக்கள் பூமிக்கு வரும் காலம் பித்ருக்களுக்கு பூஜை செய்ய உகந்த காலம்.

இந்த ஆடி மாதத்தில் மழை நன்றாகப்பெய்து பூமித்தாய் சூல் கொள்ளும் காலம். நதியிலே புதுப்புனல் நுரையுடன் பொங்கி ஓடும் காலம். ஜகன்மாதா, ஜகத்ஜனனி அம்பிகையே சூல் கொண்டதாக கருதி பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தும் காலம்.

ஆடி வெள்ளியும் செவ்வாயும் அம்மனுக்கு விசேஷமானவை. தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெள்ளி தொடங்கி ஞாயிறுவரை ஒவ்வொரு அம்மன் ஆலயத்திலும் கூழ் வார்க்கும் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

அடியேனின் கோவை மாவட்டத்தில் இந்த கூழ் வார்க்கும் உற்சவம் கிடையாது. ஆனால் வெள்ளி அன்று மாரியம்மன் கோவிலுக்கு சென்று வருவோம். பின்னர் சென்னை வந்த பின் இங்கிருக்கும் கோவில்களில் சென்று அம்மனை தரிசனம் செய்து விட்டு வருவோம்.








இதற்கு முன் உற்சவத்தின் பொது இது போல மின் விளக்குகளால் அமைக்கப்பட்ட தெய்வ உருவங்கள் பல இடங்களில் பார்த்திருக்கின்றேன். வீதி முழுவது மின் விளக்குகளால் ஒளிர்வதையும் பார்த்திருக்கின்றேன்.

இந்த வருடம் புதிதாக பிரம்மாண்டமான தெய்வ சிலைகளையே வைத்து அலங்காரம் செய்திருப்பதை பார்க்க நேர்ந்தது. அதுவும் ஒரு கோவிலில் அல்ல , மூன்று கோவில்களில் . கையில் கேமரா இருந்ததால் அவற்றை புகைப்படம் பிடித்தேன். இந்த நிறை ஆடி வெள்ளி, வரலக்ஷ்மி விரத நாளில் அந்த அரிய காட்சிகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.










மேற்கு சைதாப்பேட்டையில் கண்ட காட்சி உடன் சூலமேந்திய கருமாரி நின்ற கோலத்தில் மற்றும் திருக்கையிலாய மலையில் சிவபெருமான் , சிவலிங்கம் என்று மிக பிரம்மாண்டமாய் அமைத்திருந்தார்கள்.




அம்மனுக்கு இரு புறமும் தங்க அன்னங்கள்





திரிசூலி கருமாரி நின்ற கோலத்தில்







திருக்கயிலைக்காட்சி






இரண்டாவது ஆலயம், வெங்கடநாராயண சாலையில். கருமாரி அம்மன் தர்பார், கணேசன் துவாரபாலகிகள் மற்றும் காவற்காரர்களுடன்.



கருமாரி அம்மன் தர்பார்









மூன்றாவது கோயில் மேற்கு மாம்பலம் கார்ப்பரேஷன்காலனி முத்து மாரியம்மன் ஆலயம், கணேசன், முருகன் . விளக்கேந்திய மங்கையர் என்று அம்மன் தர்பார்.



முத்து மாரியம்மன் தர்பார்







சினிமாவின் தாக்கமா? அரசியல்வாதிகள் போல் அம்மனுக்கும் கட் அவுட்டா? வங்காளத்தில் துர்கா பூஜையின் போது இது போலத்தான் அம்மன் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்வார்கள் அதன் பாதிப்பா? என்ன ஆனாலும் அருமையான காட்சிகள் தாங்களும் கண்டு மகிழுங்கள்.

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி!





Wednesday, August 10, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -3

இத்தொடரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கண்டு இன்புற இருகரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள். இந்தப்பதிவில் இரண்டாம் திருநாள் மாலை சந்திர பிரபையில் ஐயன் எழுந்தருளி அருள் பாலிக்கும் அற்புத காட்சிகளை காணலாம் அன்பர்களே.







விநாயகர்










ஒரே பிரகாரத்துடன் கூடிய சிறிய கோவில்தான் எனவே சீக்கிரம் வலம் வந்து விடலாமா அன்பர்களே? அகத்தியர் தம்பதிகளை வணங்கி வலம் சென்றால் "அதிகார நந்தி" தேவருக்கு தனி சந்நிதி, மேல் திருக்கரங்களில் ஐயனைப் போல மான் மழு தாங்கி கீழ்க்கரங்களால் அஞ்சலி செய்த வண்ணம், மனைவி சுரசையுடன் நின்ற கோலத்தில் தம்பதி சமேதராக அருட்காட்சி தருகின்றார். கயிலையில் யார் உள்ளே வரலாம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவர் அதிகார நந்தி, இதனால் இவர் கையில் பொற்பிரம்பு இருக்கும். திருக்கயிலை மலையை பெயர்த்தெடுத்த அடாத செயல் செய்த இராவணனின் குலம் அழியும் என்று சாபம் தந்தவர் இவரே. பூத கணங்களில் முதன்மையானவர், ஐயனின் முதல் தொண்டர். இவரை வணங்கி அனுமதி பெற்றுக் கொண்டு எதிரே நோக்கினால் அம்மன் சன்னதி முகப்பு. அன்ன வாகனத்தில் ஒயிலாக அமர்ந்திருக்கும் அகிலாண்ட நாயகி அருள் வழங்குகின்றாள். அம்மன் சன்னதிக்கெதிரே தெற்கு வாயில் அதன் வலப்புரம், வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன் என்று பாடிய "வள்ளலார்" சன்னதி. பூசம் நட்சத்திரத்தன்று இவர் சன்னதியில் திருவருட்பா பாராயணம் நடைபெறுகின்றது.






சந்திர பிரபையில் அகத்தீஸ்வரர்










நிருதி மூலையில் வரசித்தி விநாயகர் சன்னதி. நான்கு தூண்களுடன் கூடிய முன் மண்டபம். தூண்களில் சுதை சிற்பங்களாக துவிமுக விநாயகர், த்ரிமுக விநாயகர், நர்த்தன விநாயகர் அத்தனையும் அருமை. வன்னி மர விநாயகருக்கு ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியன்று மாலை மஹா கணபதி ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகின்றது. சன்னதியின் சுவற்றில் ஸ்லோகங்கள், விநாயகர் அகவல் முதலியன பளிங்கு கற்களில் அவற்றை ஒதிக்கொண்டே தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் இட்டு ஞான முதல்வனை வணங்கி எதிரே நோக்கினால் வேப்ப மரம். வேப்ப மரத்தினடியில் ரேணுகா பரமேஸ்வரி மற்றும் நாகர் சிலைகள் மஞ்சள் குங்குமத்தில் ஒளிர்கின்றனர். அன்னையையும் வணங்கி விட்டு கணபதி சன்னதியை சுறி வலம் வந்தால் கலா மண்டபம், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடைபெறும் மண்டபம் முகப்பில் ஆடல் வல்லான்,







கலா மண்டபம் முகப்பு








கணபதி முருகர் சுதை சிற்பங்கள். அதையடுத்து சுப்பிரமணியர் சன்னதி. ஓராறு முகமும், ஈராறு கரங்களுடன் தேவியர் இருவரும் இருபுறமும் நின்று அருள் பாலிக்க மயில் மேல் அமர்ந்த கோலத்தில் எழிலாக காட்சி அளிக்கின்றார் முருகப்பெருமான்.சுக்லபக்ஷ சஷ்டியன்று மாலை இவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. இவர் சன்னதி சுவற்றிலும் சண்முக்க் கவசம், கந்தர் சஷ்டிக்கவசம் முதலியனப் பொறிக்கப்பட்டுள்ளன. முருகர் சன்னதியில் இருந்து பார்த்தால் ஐயனின் விமானத்தின் பின்பக்கம் தரிசனம் தருகின்றது. முருகர் சன்னதியை அடுத்து வாகன மண்டபம். இன்னும் என்ன என்ன சன்னதிகள் உள்ளன என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? இரண்டாம் திருநாள் காட்சிகளைக் கண்டு களித்து பின்னர் வலத்தை தொடரலாமா அன்பர்களே?













இத்திருக்கோவிலில் காலையில் சந்திரசேகரரும் மாலையில் பஞ்சமூர்த்திகளும் திருவீதி வலம் வந்து சாம்பவி தீக்ஷை அருளுகின்றனர். இரண்டாம் நாள் காலை சூரியப் பிரபையில் அருட்காட்சி தருகின்றார் சந்திரசேகரர். மற்ற ஆலயங்களில் இல்லாத ஒரு புதுமையை இங்கு கவனித்தேன். சூரிய பிரபையில் ஏழு குதிரைகளுடன் அமைந்துள்ளது. இரவு சந்திரப்பிரபையில் சோமாஸ்கந்த மூர்த்தி அருள் பாலிக்கின்றார்.











அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் எழிற்கோலம்





அழகன் முருகன் தேவியருடன்












சண்டிகேஸ்வரர்












அருமையான இயற்கை வர்ணங்களில் வரையப்பட்டுள்ள




விக்கின பிரசாத மூர்த்தி ஓவியம்



அன்னை மலைமகள் பார்வதி அமர்ந்திருக்கும் அந்த அழகைத்தன் பாருங்களேன். காலை மடித்துள்ள விதம் யோகா போல் உள்ளது.









பிடியதன் உருஉமை கொளமிகு கரியதுவடிகொடு



தனதடி வழிபடும் அவர் இடர்



கடிகண பதிவர அருளினன் மிகு



கொடைவடிவினர் பயில்வலி வலமுறை இறையே.





தன்னை வழிபடும் அன்பர்களின் இடையூறுகள் நீங்கும் வண்ணம் சிவ சக்தி செய்த திருவிளையாடல் இது. கணபதியை நமக்கு பிரசாதமாக வழங்கினர் ஆதி தம்பதிகள்.





அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..

Monday, August 8, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -2

இத்தொடரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கண்டு இன்புற இருகரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள்










மூஷிக வாகனத்தில் விநாயகர்








ஆதி காலத்தில் துளசி செடிகள் நிறைந்திருந்ததால் பிருந்தாரண்யபுரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய நுங்கம்பாக்கம், பிறகு பொம்மராஜன் என்ற மன்னன் ஆண்ட போது பொம்மராஜபுரம் என்றழைக்கப்பட்டது. ஒரு சமயம் அந்த மன்னனுக்கு தீராத சூலை நோய் ஏற்பட்டது. அந்த நோயின் தாக்கத்தை தன் அகத்தில் அடக்கிக்கொண்ட வைணவனான பொம்மராஜன் பாற்கடல் அலை மேலே பாம்பணையில் பள்ளி கொண்ட பரமனை மனமுருகி வழிபட்டு தன் உடற்பிணி நீங்கிட வேண்டி நின்றான். அவனின் பக்திக்கு இரங்கி பெருமாள் அவன் கனவில் பிரசன்னமாகி அவனது நோயில் இருந்து விடுபட வழி கூறினார். அவ்வூரின் கண் உள்ள திருக்குளத்தில் மூழ்கி நீராடி அதன் கரையில் அமைந்துள்ள சிவபெருமானையும் அன்னை அகிலாண்டேஸ்வரியையும் உள்ளன்போடு வழிபட உன் சூலை நோய் நீங்கும் என்று வரமளித்தார். மன்ன்னும் அக மகிழ்ந்து திருமால் சொன்ன வண்ணம் திருக்குளத்தில் நீராடி சிவசக்தியை அகத்தில் இருத்தி வழிபட அவன் நோய் நீங்கியது. அவன் வாழ்வும் மலர்ந்தது. இவ்வாறு மன்னன் அகத்தில் இருத்தி வழிபட்டதால் இறைவன் அகத்து ஈஸ்வரர் என்றழைக்கப்படலானார் அதுவே பின்னர் மருவி அகத்தீஸ்வரர் என்றானது. அன்னையின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. மன்னன் பின்னர் சிவபெருமானுக்கும் அகிலாண்டேஸ்வரிக்கும், தன் கனவில் வந்து பிரசன்னமாகிய பெருமாளுக்கும் தனித் தனி ஆலயம் அமைத்தான். பெருமாள் பத்மாவதித் தாயார் உடனுறை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்.

இந்த இரண்டு ஆலயங்களுக்கும் நடுவில் இன்று வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை செல்கின்றது. ஆயினும் இரு ஆலயங்களுக்கும் திருக்குளம் ஒன்றுதான். திருக்குளத்தின் முகப்பில் சிவபெருமான் மற்றும் விஷ்ணு முர்த்தியின் சுதை சிற்பம் உள்ளது. நீராழி மண்டபத்தின் சிவன் கோவிலை நோக்கிய பகுதியில் “ஓம் நமசிவாய” என்னும் பஞ்க்ஷார மந்திரமும், பெருமாள் கோவிலை நோக்கிய பகுதியில் “ஓம் நமோ நாராயணா” என்னும் அஷ்டாத்திர மந்திரமும் நியான் ஒளியில் மிளிர்கின்றன. திருக்குளம் அகத்தீஸ்வர்ர் ஆலயத்தின் இராஜகோபுரத்தின் எதிரிலேயே அமைந்துள்ளது.




திருக்குள முகப்பு வாயில்






தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி 18ம் நூற்றாண்டு முதல் சுப்பு தெய்வநாயக முதலியார்களின் முன்னோர்கள் தங்கள் நில புலன்களை எல்லாம் இத்திருக்கோவில்களுக்கு அர்ப்பணம் செய்து பரிபாலனம் செய்து கொண்டு வந்திருக்கின்றனர். இக்கோவிலுடன் இனைந்த கிராமத்து தேவதை கோவில் அசலாத்தம்மன் கோவில் ஆகும். இந்த அன்னையும் சுயம்புவாக திருக்குளத்தின் வடக்குப் பகுதியில் தோன்றிய அம்மன் ஆவார். இக்கோயிலைப் பற்றிய குறிப்புகள் கனகப்ப முதலியார் வம்சாவழி வரலாறு என்னும் நூல் மூலமும் அறியக்கிடைத்துள்ளன. தற்போது அசலாத்தம்மனுக்கு புது திருக்கோயில் கட்டப்பட்டு வருகின்றது.








அசலாத்தம்மன் சிவ பூஜை செய்யும் அலங்காரம்





இட நெருக்கடி மிகுந்த தர்மமிகு சென்னையின் பல திருக்கோவில்களைப் போலவே இக்கோவிலும் இன்று சுற்றிலும் வீடுகள் நிறைந்து காணப்படுகின்றது. கிழக்கில் மூன்று நிலை இராஜகோபுரம் ஆனால் நாம் நேரடியாக இராஜ கோபுரத்தில் நுழைய முடியாது. வடக்கு மாட வீதியிலிருந்து திருக்கோவிலுக்கும் திருக்குளத்திற்கும் இடையில் ஒரு சிறு பாதை உள்ளது இதன் வழியாக வந்துதான் கோபுரத்தை அடைய முடியும். பிரம்மோற்சவ காலங்களில் சுவாமி புறப்பாடு இராஜ கோபுர வாசல் வழியாக நடைபெறுவதில்லை ஆனால் தெற்கு வாசல் வழியாக நடைபெறுகின்றது, அப்பக்கம் கோபுரம் இல்லை. நீராழி மண்டபத்தையும் இறைவனின் ஸ்தூல வடிவமான இராஜ கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு திருக்கோவிலின் உள்ளே நுழைந்தால் முதலில் கண்ணில் படுவது கொடிமரத்தடி விநாயகர்தான். அவரை வணங்கி நிமிர்ந்து நோக்கினால் கவசம் போர்த்தப்பட்ட நெடிதுயர்ந்த கொடிமரம், நான்கு பக்கங்களில் நர்த்தன விநாயகர், ரிஷபாரூட சிவசக்தி, வள்ளி தெய்வாணை சமேத மயில் முருகன், மற்றும் சூலாயுதம் எழிலாக விளங்க கொடிமரம் காட்சி தருகின்றது.






கொடி மரம்







கொடி மரத்திற்கு எதிரே அகத்தியர் மற்றும் அவர் மனைவி சக்தி உபாசகி லோபமுத்ரா இறைவனை வணங்கிய நிலையில் தரிசனம் தருகின்றனர். அகத்தியர் வழிபடுவதால் இறைவனுக்கு அகத்தீஸ்வரர் என்ற திருநாமமோ? அடுத்த பதிவில் இத்திருக்கோவிலை வலம் வந்து மற்ற சன்னதிகளைக் காணலாம் அன்பர்களே.







இப்பதிவில் முதல் நாள் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை காணலாம். பிரம்மோற்சவத்தின் பூர்வமாக காலை கிராம தேவதை பூஜை. சுயம்புவாக தோன்றி அருள் பாலிக்கும் அசலாத்தம்மன் சிறப்பு அலங்லாரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். முற்காலத்தில் கிராமங்களாக இருந்த போது கிராம காவல் தெய்வத்திடம் அனுமதி பெறவும் சாந்தி செய்யவும் இவ்விழா நடத்தப்பட்டது இன்றும் தொடர்கின்றது. அன்று இரவு விக்னங்களை எல்லாம் விலக்கும் முதல்வன் விநாயகர் உற்சவம். பிரம்மோற்சவத்திற்கு எந்த தடங்கலும் வராமல் இருக்க சிறப்பு அலங்காரத்தில் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து அருளுகின்றார் விநாயகப்பெருமான். அச்சமயம் வாஸ்து சாந்தி என்னும் இடத்திற்கு தேவதையான வாஸ்து புருஷனையும் அவரது அதி தேவதையான பிரம்ம தேவரையும், சக்திகளையும் பூஜித்து திருப்தி செய்து கோவிலை சுத்தம் செய்யும் சடங்கு மற்றும் மிருத்சங்கிரகணம் என்னும் புற்றுமண் ஆற்று மண், நந்தவன மண், மலையடிவாரம் முதலிய பரிசுத்தமான இடத்திலிருந்து பாலிகையிட மண் சேகரிக்கும் நிகழ்ச்சி மற்றும் அங்குரார்ப்பணம் என்னும் முளைப் பாலிகை இடும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.. சிவாச்சாரியார் மஹோற்சவத்திற்காக பாலிகைகளில் நன் முளையிட்டு காலை-மாலை பஞ்சகவ்ய நீர் வார்த்து அவற்றின் முளைகளை நன்கு கவனித்து பயன்களை அறிந்து கொண்டு அவற்றின் சூசகத்தை எஜமானருக்கு உணர்த்துகின்றார். ரக்ஷாபந்தனம் என்னும் காப்புக்கட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. விழாவின் தொடக்கம் முதல் நிறைவு வரை வெளி உலக உபாதைகள் ஒன்றும் தீண்டக்கூடாது என்று சிவாச்சாரியார்களுக்கும், மூல மூர்த்திக்கும் மற்ற பரிவார மூர்த்திகளுக்கும் அவரவருக்குரிய ஸ்தானத்தில் ரக்ஷா பந்தனம் செய்யப்படுகின்றது.












பிரம்மோற்சவத்தின் முதல் நாள் முகூர்த்த நேரத்தில் பஞ்ச மூர்த்திகள் கொடி மரத்திற்கு அருகில் எழுந்தருளி விழா கொடியேற்றம். பின்னர் பஞ்ச மூர்த்திகள் திரு வீதி உலா. இரவு சிம்ம வாகனத்தில் சிவபெருமானும் அம்பாளும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். இக்காட்சிகளை இப்பதிவில் கண்ணுருகின்றீர்கள் அன்பர்களே.







முதல்வன் கணேசன் முன்னே செல்ல...


ஐயன் சிம்ம வாகனத்தில் செங்கோல் தாங்கி பின் தொடர்கிறார்








சிம்ம வாகனத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி








வள்ளி தெய்வானை சமேத முருகர்







சண்டிகேஸ்வரர்








இத்திருக்கோவிலில் அடியேனுக்கு மிகவும் பிடித்த அம்சம் இக்கோவிலில் நுழைந்தவுடன் கிடைக்கும் ஒரு மன அமைதி சுற்றிலும் வீடுகள் நெருக்கமான பகுதி என்றாலும், அருமையாக அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய ஏற்ற அற்புதமான கோவில் சிவசக்தியின் அருளலை தங்களை அப்படியே ஆட்கொள்ளும். மறுமறுபடியும் இந்த ஆலயத்திற்கு தங்களை இழுக்கும். மற்றொரு அம்சம் மஹா மண்டபத்தில் வரையப்பட்டுள்ள அற்புத ஓவியங்கள் பழங்கால ஓவியங்களை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் அந்த ஓவியங்களையும் ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் கண்டு இன்புறலாம் அன்பர்களே.








ரிஷபாரூடர் ஓவியம்







அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..