Sunday, July 17, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -1

ஓம் நமசிவாய


இந்த தக்ஷிணாயண புண்ணிய காலமான ஆடி மாதம் முதல் நாளில் இன்னொரு தொடர்பதிவுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன் அன்பர்களே. இத்தொடரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கண்டு இன்புற இருகரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள் அடியேனுடன்.



அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர்



உற்சவம் என்பது உலக மக்கள் அனைவருக்கும் பலன் தரக்கூடிய, பலம் தரக்கூடிய முக்கியமான வைபவம் ஆகும். உத் + சவம். இதில் ஸவம் என்பது தோற்றத்தைக் குறிக்கும். தாயின் கருவறையிலிருந்து குழந்தை வெளிவருவதை பிரசவம் என்கிறோமல்லாவா? அது போலவே எல்லாம் வல்ல பரம்பொருளின் சக்தி, ஆலயத்தின் கருவறையில் மூலமுர்த்தியாக எழுந்தருளியுள்ளது. அப்படி மூல மூர்த்தமாக உள்ள இறைவனை, இறைச் சக்தியை உற்சவரின் திருமேனிக்கு எழுந்தருள செய்து உலக நன்மைக்காக கோவிலின் உள்ளே சென்று வழிபாடு செய்ய முடியாதவர்களுக்கும் அருளும் பொருட்டு கோயிலில் இருந்து ஸ்வாமி வீதி உலா வருகின்ற வைபவமே உற்சவம்.




தீமைகள் அழிந்து, உலகில் அமைதியும் சந்தோஷமும் குடிகொள்வதற்காகவே உற்ஸவங்கள் அமைக்கப்பட்டதாக கூறுகின்றன ஆகமங்கள். காரணாமாகமம் என்னும் சிவாகமம் திருவீதியுலா வருகின்ற இறைவனை, பக்தியுடனும் பரிபூரண நம்பிக்கையுடனும் சரணமடைந்தால் பாவம் விலகும், மங்கலங்கள் பெருகும், "சாம்பவி தீக்ஷை" என்னும் சிவஞானத்தை எளிதில் பெறலாம் என்று கூறுகின்றது. அதாவது எந்த ஸ்பரிசமும் இல்லாமல் தனது பார்வையினாலேயே, அவ்யாஜ கருணா முர்த்தியான எம்பெருமான் தனது மாப்பெரும் கருணையினால் நமக்கு இந்த தீக்ஷையை அருளுகின்றார். எனவே எம்பெருமான் திருவீதி வலம்வரும் போது தெருக்களை சுத்தம் செய்து, நீர் தெளித்து, வண்ணக் கோலங்களால் அலங்கரித்து இறைவனை வரவேற்று நைவேத்யம் சமர்பித்து வழிபட அவர் நமது கர்மவினைகள் யாவையும் போக்கி நம் வாழ்வை வண்ணமயமாக்குவான் என்பது திண்ணம்.



திருக்குளம்










ஆலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப்படுத்தப்பட்டுள்ளன அவையாவன: 1.நித்திய கிரியைகள் 2.நைமித்திக கிரியைகள் 3.காமியக் கிரியைகள். தினம்தோறும் (குறைந்து ஒரு காலம், அதிகபக்ஷம் 12 காலம்) நிகழும் பூஜைகள் நித்திய கிரியைகள். ஏதாவது காரணங் கொண்டு நிகழ்வன நைமித்திக கிரியைகள் (நிமித்தம் என்றால் காரணம்) அதாவது சதுர்த்தி, ஷஷ்டி, சிவராத்திரி, ப்ரதோஷம், பௌர்ணமி, ஆனி உத்திரம், ஆவணி மூலம், ஆடிப்பூரம், மாசி மகம், மஹோதயம் அன்னாபிஷேகம், ப்ரமோற்ஸவம் முதலியன. ஒரு குறிப்பிட்ட பேறு பெற ஒருவரோ அல்லது பலர் ஒரு குழுவாகவோ சேர்ந்து செய்யப்படும் கிரியைகள் காமியக் கிரியைகள் ஆகும். உற்சவங்கள் ஒரேயொரு நாளிலும் முடியலாம் அதிக பட்சமாக 27 நாட்கள் வரையும் நீண்டிருக்கலாம். அவ்வாறு 1,3,5 நாட்கள் நடைபெறும் உற்சவங்களுக்கு கொடியேற்றம் தேவையில்லை. அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு செய்யப்படும் உற்சவங்களுக்கு கொடியேற்றம் தேவை என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. இவை மகோற்சவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எனினும் சிவாலயங்களில் 10 நாட்களும், விஷ்ணுவாலயங்களில் 9 நாட்களும் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றன.









கிழக்கு வாயில் இராஜ கோபுரம்















பிரம்மோற்சவத்தை மஹோற்சவம் என்றும் அழைப்பர். அதாவது ’ மஹ இதி பிரம்ஹ..’ என வெதம் கூறுகின்றது. அதில் பிரம்மம் என்பது நான்முகக் கடவுள் அல்ல. இந்த பிரபஞ்சம் அனைத்துக்கும் காரணமான பரம்பொருளையே பிரம்மம் என்கின்றது வேதம். ஈசான, தத்புருஷ, அகோர, வாமதேவ, ஸத்யோஜாத பஞ்ச பிரம்மங்களைக் குறிக்கின்றது. இவற்றால்தான், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து காரியங்களும் நடைபெறுவதாக சொல்வர் பெரியோர்.






பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வு தீர்த்தவாரி. அந்த நாளில், ஆச்சார்யர் புண்ணிய நதிகள் அனைத்தையும் தீர்த்தங்களாக ஆவாஹணம் செய்து அனைத்து ஜீவராசுகளையும் அஸ்த்ர தேவரில் எழுந்தருள செய்கின்றார். அப்போது நாம் தீர்த்த நிலையில் நீராடி கரைக்கு வரும் போது, மிக சிலிர்ப்பான இறையனுபவம் கிடைக்கும். உற்சவம் மாதத்தின் நட்சத்திரத்தில் ( அதாவது சித்திரை-சித்திரை, வைகாசி-விசாகம்) நடைபெறலாம் அல்லது குறிப்பிட்ட நாட்களில் நடைபெறலாம் என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன.







கிழக்கு முகப்பு வாயில்













நமது அனைத்து கர்மாக்களுக்கும் சாட்சியாக விளங்குபவர் சூரிய பகவான் அவர் தனது செல்லும் திசை மாறும் நாள் அயன நாள் ஆகும். தெற்கு நோக்கி பயணித்த சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்கும் தைமாத முதல் நாள் உத்தராயண புண்ணிய காலம் ஆகும். ஆறு மாதங்கள் கழித்து ஆடி மாதம் முதல் நாள் தெற்கு நோக்கிய பயணத்தை துவங்கும் நாள் தக்ஷிணாயண புண்ணிய காலம் ஆகும்.







2 கண்ணிமை - 1 நொடி






2கை நொடி - 1 மாத்திரை






2மாத்திரை - 1 குரு






2 குரு - 1 உயிர்






2 உயிர் - 1 சணிகம்






12 சணிகம் - 1 விநாடி






60 விநாடி - 1 நாழிகை






2 1/2 நாழிகை - 1 ஓரை






3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்






2 முகூர்த்தம் - 1 சாமம்






4 சாமம் - 1 பொழுது






2 பொழுது - 1 நாள்






15 நாள் - 1 பக்கம்






2 பக்கம் (30 நாள்) - 1 மாதம்






6 மாதம் - 1 அயனம்






2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு






60 ஆண்டுகள் - 1 வட்டம்






இது தான் நமது கால அளவுகள் ஆகும்,








கல்வெட்டில் கோவில் தல வரலாறு



முன்னாள் அறங்காவலர்கள்








ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் தொடங்குகிறது. கடக ராசியில் பிரவேசிக்கும் போது தக்ஷிணாயனம் தொடங்குகிறது. தைமாதம் தொடங்கி ஆனி முடிய 6 மாதங்கள் உத்தராயன காலமாகும். இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம். கும்பாபிஷேகம், க்ரஹப்பிரவேசம், உபநயனம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழ்வது உத்தமம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி ஈறாக 6 மாதங்கள் தக்ஷிணாயனம் ஆகும். இக்காலகட்டத்தில் நல்ல காரியங்களைத் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால் தவிர்ப்பது நல்லது. ஆனால் இந்த மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. மேலும் நமது பித்ருக்கள் என்னும் முன்னோர்கள் பூமிக்கு வரும் காலம். தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப் படுகிறது. குறிப்பாக ஆடி மாதம் தீர்த்தங்களைப் போற்றும் ஆடிப்பெருக்கு வருகின்றது. அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மாதம் ஆடி மாதம், தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி முதல் நாளன்று பாண்டிக்கொடுமுடியிலும், பவானி கூடு துறையில் ( காவிரி, பவானி, அமுத நதி கூடும் முக்கூடலில்) புதுமணத் தம்பதிகள் காவிரியில் நீராடி சிவபெருமானை சகல சௌபாக்கியங்களும் அடைவர் என்பது ஐதீகம்.








பிரம்மோற்சவத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் பஞ்ச மூர்த்திகள்




அசலாத்தம்மன்




இந்த தக்ஷிணாயண புண்ணிய நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் நடைபெறும் சென்னை நுங்கம்பாக்கம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவ அருட் காட்சிகளை வரும் பதிவுகளில் கண்டு களியுங்கள் அன்பர்களே.