Thursday, November 4, 2010

கேதார கௌரி விரதம்




சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐப்பசி அமாவாசை நாள்தான் கேதார கௌரி விரத நாள். ஆயினும் எல்லோரும் இவ்விரதத்தை அனுஷ்டிப்பது இல்லை என்பதற்கு காரணம், 21 நாட்கள் நியமத்துடன் கடைப் பிடிக்க வேண்டும் என்பதாலோ, தாயாரோ அல்லது மாமியாரோ இந்த விரதத்தை பெண்களுக்கு எடுத்து கொடுத்த பிறகே இந்த பூஜையை செய்ய வேண்டும் என்பதாலோ?

கேதார கௌரி விரதம் அம்மை கௌரியே அனுஷ்டித்த விரதம். அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று அர்த்தநாரீசுவராக ஆனது இந்த விரத மகிமையினால். இந்த கேதார கௌரி விரதத்தை எப்போது கடைப்பிடிக்க வேண்டும் என்பதை முதலில் காண்போம். புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி நாள் தொடங்கி ஐப்பசி மாத அமாவசை முடிய மொத்தம் 21 நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது. கேதார கௌரி விரத்தின் பிரசாதம் அதிரசம் ஆகும். வெல்லப்பாகு, பச்சரிசி மாவு கலந்து செய்யப்படும் பக்ஷணம் இது . பெண்கள் திருமணம் ஆகி செல்லும் போது இந்த அதிரசத்தை கேதாரீஸ்வரர் பிரசாதமாக கொடுத்து அனுப்பும் வழக்கும் இன்றும் உள்ளது.

கேதாரம் என்பது இமயமலைசாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்நாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரிவிரதம் எனவும் ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது. மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டியும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர் . மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

மாங்கல்ய பாக்கியமும், கணவன், மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் விரதம் இந்த கேதார கௌரி விரதம்.  தம்பதியர் இருவரும் ஓருயிர் ஈருடலாக  வாழும் வரம் பெற இவ்விரதத்தினை விரும்பி அனுஷ்டிக்க  வேண்டும். ஆயுள் முழுவதும் ஆதர்ச தம்பதிகளாய் வாழ உதவும் விரதம் இது. குடும்பப் பிர்ச்சினை உள்ளவர்கள் இவ்விரதத்தை  அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமையும் சுபிட்சமான வாழக்கையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடது கையிலும் அணிந்து கொள்வர். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்தநாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றாகிய விரதமே கேதார கெளரி விரதமாகும். இவ்விரதத்தை லட்சுமி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு , நோன்பு என்று பல பெயர்களில் தங்கள் தங்கள் குடும்ப வழக்கப்படி அழைப்பர்.


திருச்செங்கோடு
அர்த்த்நாரீஸ்வரர் (மூலவர்)

கேதார கௌரி விரதம் தோன்றிய வரலாறு:
ஆதி காலத்தில் ஸ்ரீ கைலாயத்தில் நவரத்தினங்கள் இழைத்த பொன் சிங்காதனத்தில் பால் வெண்ணிறணிந்த பவள மேனியராம் சிவ பெருமானும், பச்சைக் கொடியாம் பார்வதி தேவியும் கமனீயமாய் திருவோலக்கம் கொண்டு எழுந்தருளியிருக்கும் சமயம் , பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தொண்ணாயிரம் ரிஷ’கள், அஷ்ட வசுக்கள், கின்னரர், கிம்புருடர், கருடகந்தர்வர், சித்த வித்யாதரர், ஜனகஜனனாதரி, ஸனத்குமாரர், தும்புரு நாரதர், மற்றுமுண்டான தேவரிஷிகளும் பிரதி தினம் வந்து தியாகராஜனாம் பரமசிவனையும் கௌரியையும் பிரதக்ஷிணமாக வந்து நமஸ்காரஞ் செய்து கொண்டு போவார்கள். இப்படியிருக்க ஒரு நாள் ஸமஸ்த தேவர்களும் ரிஷ’களும் வந்து ஈஸ்வரரையும் ஈஸ்வரியையும் பிரதிக்ஷணம் செய்து நமஸ்காரம் செய்து விட்டு செல்லும் போது பிருங்கி என்கிற ரிஷி ஒருவர் மட்டும் கௌரி அம்மனை புரம் தள்ளி ஈஸ்வரரை மட்டும் பிரதக்ஷிணம் செய்து வணங்கி விட்டு ஆனந்தக் கூத்தாடினார். அதனால் கோபம் கொண்ட உமையம்மை அடுத்த நாள் ஐயனுடன் இடைவெளி இல்லாமல் அமர்ந்தார். அப்போது பிருங்கி முனிவர் வண்டு ரூபம் எடுத்து பரம சிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார். அதனால் மஹா கோபம் கொண்ட பார்வதியம்மன் ஈஸ்வரரை வினவுகின்றாள் பிரபுவே! பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷ’களும், அஷ்ட வசுக்கள், கின்னரர், கிம்புருடர், கருடகாந்தர்வர், சித்த வித்யாதரர், ஜனகஜனனாதரி, ஸனத்குமாரர், தும்புரு நாரதர் கௌதமர் அகஸ்தியர் என சகலரும் நம் இருவரையும் வலம் வந்து வணங்கிக் கொண்டு செல்கின்றனர். ஆனால் இந்த பிருங்கி முனிவர் மட்டும் நம்மை புறம்பாகத் தள்ளி உம்மை மட்டும் நமஸ்கரித்து நிற்கின்றானே ஏன்? என்று கேட்கிறார். அதற்கு பரமசிவன் பர்வதராஜ குமாரியே! பிருங்கிரிஷி பாக்கியத்தை கோரியவனல்ல மோக்ஷத்தைக் கோரியவனான படியால் எம்மை மாத்திரம் பிரதக்ஷிண நமஸ்காரம் செய்தான் என்று சொல்ல பரமேஸ்வரி சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜ தனயை, மலை மகள், பிருங்கி ரிஷியைப் பார்த்து ஒ! பிருங்கி ரிஷியே , உன் தேகத்திலிருக்கின்ற இரத்தம் மாமிசம் நம்முடைய கூறாச்சுதே! அவைகளை நீ கொடுத்து விடு என்று சொல்ல அப்பொழுது பிருங்கி ரிஷி தன் சரீரத்திலிருந்த இரத்த மாமிசத்தை உதறி எலும்பும் தோலுமாய் நிற்க முடியாமல் அசக்தனாய் நின்றார். அவ்வாறு நின்ற பிருங்கி ரிஷியை பரமேஸ்வரன் பார்த்து " ஏ பிருங்கி ரிஷியே! ஏன் அசக்தனானாய் " என்று வினவ பிருங்கி பரமனை வணங்கி தேவ தேவா, மஹா தேவா, மஹேஸ்வரா, பரமேஸ்வரா! அம்பிகையை நீக்கி தங்களை மட்டும் நாம் வணங்கியதால் அம்பிகை கோபம் கொண்டு அடியேனுக்களித்த் தண்டனை இது என்று கூற பரமேஸ்வரர் மனம் இரங்கி பிருங்கிக்கு மூன்றாவது ஒரு காலை கொடுத்தார். அந்தக்காலுடன் பிருங்கி ரிஷி மெல்ல நடந்து தன் ஆசிரமத்திற்கு எழுந்தருளினார். நாம் பல் வேறு திருக்கோவில்களில் எலும்பும் தோலுமாய் மூன்று கால்களுடன் பார்க்கும் சிற்பம் இந்த பிருங்கி முனிவர்தான். சென்னை காளிகாம்பாள் திருக்கோவிலில் நடராஜப்பெருமான் சன்னதியில் பிருங்கி முனிவர் சிலை உள்ளது. ஆருத்ரா தரிசனத்தின் போது பிருங்கியைக் கொண்டு ஊடல் உற்சவமும் நடைபெறுகின்றது. ஐயன் அர்த்தநாரீஸ்வரராக சேவை சாதிக்கும் திருச்செங்கோட்டுத்தலத்திலும் பிருங்கி முனிவரைக் காணலாம். சிவசக்தி என்பது ஒன்றே என்பதை வேதம் உணர்ந்த பிருங்கி மஹரிஷி உணர மறந்து விட்டார். ஆகவே இவர் இவ்வாறு அன்னையால் தண்டிக்கப்பட்டார்.

கேதாரீஸ்வரர் ஆவாஹனம்

ஐயனின் செய்கையால் கோபம் கொண்ட மலை மங்கை பரமேஸ்வரி பரமேஸ்வரரைப் பார்த்து நீர் என்னை உபேக்ஷை செய்யலாமா? இனி எனக்கு காரியமென்னவென்று கைலாயத்தை விடுத்து பூலோகம் வந்தார். அங்கு கௌதம மஹரிஷி சஞ்சரிக்கும் பூங்காவனத்தில் ஒரு விருக்ஷத்தின் அடியில் எழுந்தருளினாள் அம்பிகை. அத்திசையில் பன்னிரண்டு ஆண்டு மழையின்றி விருக்ஷங்கள், செடிகள் உலர்ந்து வாடியிருக்க அம்மை வந்தவுடன் அவையெல்லாம் துளிர்த்துத் தழைத்து புஷ்பித்து காய்த்து பழுத்து இன்னும் அனேக பூச்செடிகளெல்லாம் மல்லிகை, முல்லை, கொங்கு, இருவாக்ஷ’, மந்தாரை, பாரிஜாதம், சண்பகம், சிறு முல்லை, புன்னை, பாதிரி, வில்வம், பத்திரி, துளசி மற்றுமுண்டான சகல ஜாதி புஷ்பங்களும் விஸ்தாரமாய் மலர்ந்து அந்த நறுமணம் நாலு யோஜனை தூரம் பரவிற்று. அந்த சமயத்தில் கௌதம ரிஷி தம் பூங்காவனத்தைப் பார்த்து அதிசயப்பட்டு பன்னிரண்டு வருடமாய் மழை இல்லாமல் உலர்ந்திருந்த விருக்ஷங்களெல்லாம் எவ்வாறு இவ்வாறு மாறின என்று அறிய ஆவல் கொண்டு பூங்காவனம் வந்தார்.

வனத்தை சுற்றி வந்த முனிவர் கோடி சூரிய பிரகாசத்துடன் அம்பிகை ஒரு விருக்ஷத்தனடியில் எழுந்தருளியிருப்பதைக் கண்ணுற்று , அம்பாளை தண்டனிட்டு வணங்கி, மூவருக்கும் முதன்மையான தாயே! முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் நாற்பத்தெண்ணாயிரம் முனிவர்களுக்கும் அருள் வழங்கும் பராசக்தியே! நான் எத்தனை கோடி தவஞ் செய்தேனோ இந்த பூங்காவனத்திலே ஈஸ்வரி எனக்கு காக்ஷ’ கொடுக்க திருக்கைலாயத்தை விடுத்து பூலோகத்திற்கு எழுந்தருளிய காரணம் என்னவோ தாயே? என்று வினவினார். மஹா திரிபுர சுந்தரி அம்பிகையும் மலையரசன் பொற்பாவையுமான கௌரி " கௌதம முனிவரே ஸ்ரீ கைலாயத்தில் பரமேஸ்வரரும் நாமும் ஒரு நவரத்தின சிம்மானத்தில் எழுந்தருளியிருக்கையில் மற்ற அனைவரும் எங்கள் இருவரையும் வலம் வந்து வணங்கி விட்டு செல்ல வேதம் கற்ற பிருங்கி மட்டும் ஞானம் இல்லாமல் வண்டு உருவம் எடுத்து சுவாமியை மட்டும் வலம்வந்து வணங்கி விட்டுச் சென்றான். அதற்கு தண்டணையாக யாம் நம்முடைய கூறான இரத்த மாமிசங்களை வாங்கிக் கொண்டேன். அப்பொழுது பரமேஸ்வரர் அவனுக்கு மூன்றாவது காலை கொடுத்தார். இவ்வாறு செய்யலாமோ என்று கேட்டதற்கு அவர் மறு மொழி சொல்லவில்லை. ஆகையால் நமக்கு கோபம் பிறந்து பூலோகத்திற்கு வரும் வழியில் இந்த பூங்காவனத்தில் தங்கினோம் என்று இமவான் புத்ரி, மலைமங்கை கௌதமருக்கு உரைக்க, அவரும் அம்பிகையை தனது ஆசிரமத்திற்கு எழுந்தருளும்படி வேண்ட, அம்பாளும் அவ்வாறே அவரிஷ்டப்படி எழுந்தருள முனிவரும் அம்மனிருக்க ஒரு நவரத்தின சிம்மாசனமும் உண்டு பண்ணி அதில் ஆதி பராசக்தியை எழுந்தருளப் பண்ணிணினார்.


மலையன்னை மஹா கௌரி

கோபம் குறைந்த அன்னை கௌதம முனியைப் பார்த்து, ஓ! தபசியே இந்த பூலோகத்தில் நான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். நூதனமும் மேலான விரதம் ஒன்றிருக்குமாயின் அதை எனக்கு பகர வேண்டும் என்று கேட்க. கௌதம முனிவர் அம்பிகையை தொழுது, தாயே! லோக மாதாவே! அபிராமியே! திரிபுர சுந்தரியே! சிவானந்தவல்லி! கௌரி! கைலாச வாசினி! மலை மகளே! விபூதி ருத்ராக்ஷி! கிருபாசமுத்ரி! உம்முடைய ஸன்னிதானத்தில் அடியேன் ஒரு விண்ணப்பம் செய்கின்றேன். அம்மையே அதைக் கேட்டு திருவுள்ளம் பற்ற வேண்டும் என்று சொல்ல அதென்னவென்று அம்பிகை கேட்க, ஜெகத்ரக்ஷியே! இந்த பூலோகத்தில் ஒருவருக்குந் தெரியாத ஒரு விரதமுண்டு அந்த விரதத்திற்கு கேதார விரதமென்று பெயர் அதை இதுவரையில் யாரும் அனுஷ்டிக்கவில்லை அனைத்து உலகத்திற்க்கும் அன்னையே தாங்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் இஷ்ட சித்தியாகும் என்று உரைத்தார்.

அதை பரமேஸ்வரி கேட்டு அந்த விரதம் எக்காலத்தில் எவ்விதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று விவரமாய் சொல்ல வேண்டும் என்று கேட்க கௌதமர் சொல்லுகின்றார். புரட்டாசி மாதம் சுக்கில பக்ஷ அஷ்டமி தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ணபக்ஷம் தீபாவளி அமாவாசை வரை இருபத்து ஒரு நாள் பிரதி தினம் ஸ்நானம் செய்து சுத்த வஸ்திரமணிந்து ஆல விருக்ஷத்தினடியில் கேதாரீஸ்வரரை (சிவலிங்க ரூபத்தில்) பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்து, விபூதி, சந்தனம் சார்த்தி, மலர் கொண்டு அலங்கரித்து, வெல்ல உருண்டை, சந்தன உருண்டை, மஞ்சள் உருண்டை, அதிரசம், வாழைப்பழம், தேங்காய் , தாம்பூலம், இவைகளை வகைக்கு ஒன்றாக வைத்து வில்வார்ச்சனை செய்து தூப தீபம் காட்டி நமஸ்கரித்து இருபத்தோரிழையிலே ஒரு கயிறு முறுக்கி அதைத் தினம் ஒரு முடியாக முடிந்து தினமும் உபவாசமிருந்து நைவேத்தியஞ் செய்த அதிரசத்தை மட்டும் உண்டு இருபத்தொரு நாளும் கிரமமாக இவ்விரதத்தை அனுஷ்டித்தால் இருபத்தோராம் நாள் தீபாவளி அமாவாசையன்று பரமன் ரிஷப வாகனராய் எழுந்தருளி கேட்ட வரம் கொடுப்பார் என்று கௌதமர் சொல்லக் கேட்டு அம்பிகை மகிழ்ந்து அதே பிரகாரம் புரட்டாசி மாதம் அஷ்டமி முதல் ஐப்பசி மாதம் அமாவாசை வரை இருபத்தொரு நாளும் கௌதமர் தெரிவித்த படி நியம நிஷ்டையுடன் உபவாசமிருந்து விரதம் இருக்க பரமேஸ்வரியின் விரதித்திற்க்கு மகிழந்து பரமேஸ்வரன் தேவ கணங்கள் புடை சூழ காட்சியளித்து இடப்பாகத்தை அம்மைக்கு அருளி அர்த்தனாரீஸ்வரராய் திருக்கையிலாயத்திற்கு எழுந்தருளி வீற்றிருந்தார். அம்மை அனுஷ்டித்ததால் இவ்விரதம் கேதார கௌரி விரதம் என்று வழங்கப்படுகின்றது.

திருச்செங்கோடு
அர்த்தநாரீஸ்வரர் (உற்சவர்)


முறையாக விரதம் இருப்பவர்கள் 21 நாட்கள் விரதம் இருக்க வேண்டும், முடியாதவர்கள் 14 நாட்கள் விரதம் இருப்பது உத்தம பட்சம் என்று அறியப்படுகின்றது. ஒருநாள் விரதம் இருப்போரும் உண்டு. கேதார கௌரி விரத திருக்கோவில் வழிபாடு: திருக்கோவில்களில் கேதார கௌரி விரதத்தன்று கேதாரீஸ்வரரையும், கௌரியையும் இரு கலசங்களில் ஆவாஹணம் செய்து அலங்கரித்து வைக்கின்றனர். விரதம் இருப்பவர்கள் தங்கள் வீட்டிலிருந்து அதிரசம் பழ வகைகள், இனிப்புகள், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, நோன்புக்கயிறு, கருகு மணி, காதோலை முதலியன பிரசாதமாக எடுத்து வந்து அம்மையப்பருக்கு நைவேத்யம் செய்து அர்ச்சனை செய்து விட்டுச் செல்கின்றனர். சென்னையில் பல்வேறு ஆலயங்களில் இவ்வாறு கேதார பூஜை நடைபெறுகின்றது. உத்திர மேரூரில் எம்பெருமான் கேதாரீஸ்வரராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். தீபாவளியன்று அவரை தரிசிக்க கூட்டம் அலை மோதும். சென்னை திருவான்மியூர் வான்மீக நாதர் ஆலயத்தில் பிரகாரத்திலும் கேதாரீஸ்வரர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். மற்ற விரதங்களைப் போல திருவிழாக்களாக இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுவதில்லை.



திருமயிலை கற்பகாம்பாள் கௌரி அலங்காரம்



கேதார கௌரி விரதத்தின் மகிமை:


உமையம்மை இந்த விரதத்தை முதலில் அனுஷ்டித்து ஐயனின் உடலில் இடப்பாகம் பெற்றார். மஹா விஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்தே வைகுண்டபதியானார். பிரம்ம அன்னத்தை வாகனமாக பெற்றார், அஷ்ட திக் பாலகர்கள் பிரம்மனிடமிருந்து பெற்ற சாபத்திலிருந்து விமோசனம் அடைந்ததும் இவ்விரத மகிமையினால்தான். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது.  இவ்விரதத்தினை அனுஷ்திப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும்  என்பது அனுபவ உண்மை. அந்நாளில் அம்பிகை மலையரசன் பொற்பாவை சிவபெருமானை நோக்கி "எம்பெருமானே இவ்விரதத்தை உலகில் யார் அனுஷ்டித்தாலும் அவர்கள் விரும்பியவற்றை அருள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள்.  சிவபெருமானும் அம்பிகையின் வேண்டுகோளை ஏற்று அவ்வண்ணமே அருள் புரிந்தார். எனவே நாமும் இவ்வரிய நோன்பினை நோற்று  சிவபரம்பொருளின் பூரண கடாக்ஷத்தினை பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர். தேவியின் வேண்டுதலால் இவ்விரதத்தை முறையாக கடைப்பிடிக்கும் தம்பதிகள் இடையில் ஒற்றுமை விளங்கும், பிணி நீங்கும், வறுமை நீங்கி செல்வம் பெருகும். கன்னியர்களுக்கு நல்ல கணவன் அமைவான்.சிவபெருமானின் பரிபூரண அருள் கிட்டும்.

சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்தர்வராஜனுக்கு கூறியருளினார். விரதத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தாகள். இவ்விரதத்தை அனுஷ்டித்த இந்த இராஜ குமாரிகளின் கதை. புண்ணியவதி, பாக்கியவதி என்னும் இரு இராஜ குமாரிகள் தேவ கன்னியர் கங்கைக் கரையில் இவ்விரதத்தை அனுஷ்டித்து வருவதைக் கண்டனர். தன் தகப்பன் நாடு நகரிழந்ததன் காரணமாக விவாகமாகாத இக்கன்னியர் தேவ கன்னியரிடம் இவ்விரதம் பற்றிய விவரமறிந்து தேவ கன்னியர் கொடுத்த நோன்புக் கயிற்றையும் பெற்று வீட்டிற்கு போக வீடு அடையாளந் தெரியாமல் குச்சு வீடு மாட மாளிகையாக மாறி அஷ்ட ஐஸ்வரியம் பெருகியிருக்கும் புதுமையைக் கண்டு ஆச்சரியமடைந்து நிற்கையில் தகப்பன் தனது குமாரத்திகளை அழைத்துச் சென்று சுகமாக வாழந்து வரும் நாளில் இராஜ கிரி அரசன் புண்ணியவதியையும், அளகாபுரியரசன் பாக்கியவதியையும் மணந்து தத்தம் ஊர்களுக்கு சென்று புத்திர பாக்கியத்துடன் வாழந்து வந்தனர்.

இங்ஙனம் வாழந்து வரும் நாளில் பாக்கியவதி நோன்புக் கயிற்றை அவரைப் பந்தலின் மேல் போட்டு மறந்து போனதின் விளைவாக பாக்கியவதியின் நாட்டை வேற்றரசன் கைப்பற்றிக் கொண்டு இவர்களை ஊரைவிட்டு துரத்தி விட்டான். பாக்கியவதியும் அவள் புருஷனும் நித்திய தரித்திரர்களாகி உண்ண உணவும் உடுக்க உடையுமின்றி இருக்கையில் நோன்புக் கயிறு அவரைப் பந்தலிலிருந்ததால் அவரைக்காய் மிகுதியாகக் காய்க்க பாக்கியவதி அந்த அவரைக் காய்களை சமைத்து புசித்து ஜ“வித்து வந்தனர்.


வெள்ளீச்சுரம் காமாக்ஷியம்மன் 
கௌரி அலங்காரம்


இப்படியிருக்கையில் ஒரு நாள் பாக்கியவதி தன் குமாரனையழைத்து அப்பா நாம் நாடு நகரமிழந்து உண்ண உணவுக்கும் உடுக்க ஆடைக்கும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆகையால் நீ இராஜகிரிக்கு போய் உன் பெரிய தாயாரிடம் நமது நிலையைக் கூறி கொஞ்சம் திரவியம் வாங்கிக் கொண்டு வா என்று சொல்லி கட்டமுது கட்டி கொடுத்து வழியனுப்பினாள். மகனும் இராஜகிரி வந்து பெரிய தாயாரிடம் தங்கள் வர்த்தமானங்களைச் சொல்ல , அவளும் பிள்ளையை நாலு நாள் வைத்திருந்து சில வஸ்திரமும் ஆபரணமும் திரவிய முடிப்பும் கட்டமுதும் கட்டிக் கொடுத்து அனுப்பினாள். அதை வாங்கிக் கொண்டு சில தூரம் சென்ற பின் ஒருக் குளக்கரையில் மூட்டையை வைத்து விட்டு கட்டமுது சாப்பிடும் போது மூட்டையை கருடன் எடுத்துக் கொண்டு போய் விட்டது. அதுகண்ட சிறுவன் மனஸ்தாபப்பட்டு மீண்டும் பெரிய தாயாரிடம் சென்று நடந்ததை சொல்லி மேலும் சிறிது திரவியம் கட்டிக் கொண்டு வரும் வழியிலே அதை திருடர்கள் பறித்துக் கொண்டு சென்று விட்டனர். சிறுவன் துக்கப்பட்டக் கொண்டு பெரிய தாயாரிடம் சென்று அம்மா! நாங்கள் செய்த பாவமென்னவோ? தெரியவில்லை இரண்டாவதாகக் கொடுத்த திரவியங்களையும் திருடன் பறித்துக் கொண்டு போய் விட்டான் என்று சொல்லி அழும் சிறுவனை தேற்றி குழந்தாய் உன் தாயார் கேதார கௌரி விரதத்தை அனுஷ்டித்து வருகிறாளா இல்லையா என்று கேட்டாள்.

சிறுவனும் இப்போது அனுஷ்டிப்பதில்லை, நோன்புக் கயிற்றையும் அவரைப் பந்தலின் மேல் போட்டு விட்டாள். அன்று முதல் இவ்வித கஷ்டங்களெல்லாம் வந்தது என்று தெரிகிறது என்று கூறினான். இதைக் கேட்ட புண்ணியவதி மிகவும் மனம் வருந்தி ஐப்பசி மாதம் வரை சகோதரி மகனை தன்னிடமே நிறுத்திக் கொண்டு ஐப்பசி நோன்பு நோற்கின்ற போது பாக்கியவதிக்கும் ஒரு பங்கு நோன்பு வைத்து நோற்று அந்த நோன்புக் கயிறும் பலகாரமும், பாக்கு, வெற்றிலை, மஞ்சளும் இன்னும் சில ஆடை ஆபரணங்களுந் திரவியமும் கொடுத்துக் காவலாக சில சேவகரையுங் கூட்டி இனி மேலாவது இந்த நோன்பை விடாமல் நோற்கச் சொல்லி புத்திமதி கூறி அனுப்பினாள்.

பெரிய தாயாரிடம் விடைபெற்று வரும் போது முன்னே வழியில் பறித்துப் போன திருடன் திரவியத்தை கொடுத்துச் சென்றான். கருடனும் மூட்டையைக் கொண்டு வந்து போட்டுவிட்டு உன் தாய் கேதேரேச்வரர் நோன்பு விரதத்தை விட்டு விட்டதனாலேயே இவ்விதம் வந்தது இனி மேல் பயபக்தியுடனே நோன்பு நோற்கச் சொல் என்று சத்தமுண்டாக்கிக் கூற சிறுவன் ஆச்சிரியப்பட்டு பயபக்தியோடும் சந்தோஷத்தோடும் தன் வீட்டிற்க்கு திரும்பி தன் தாயாரிடம் நடந்ததைக் கூறி தாயின் கையில் பெரிய தாயாரால் கொடுக்கப் பட்ட நோன்பு கயிற்றையும் பலகாரத்தையும் கொடுத்தான். பாக்கியவதியும் , ஆங்காரத்தினால் கெட்டேன் என்று சொல்லி ஸ்நானஞ் செய்து கேதாரீஸ்வரரை நமஸ்காரம் செய்து நோன்புக் கயிற்றை வாங்கிக் கட்டில் கொண்டாள். உடனே தங்கள் பட்டணத்தைப் பிடுங்கிக் கொண்ட அரசன் பட்டணத்தையும் யானை, சேனை, பரிவாரங்களையும் கொடுத்து விட்டுப் போனான். பிறகு முன் போலவே பாக்யவதிக்கு அஷ்ட ஐஸ்வர்யமும் உண்டாகவே தான் முன் நோன்பு நோற்கத் தவறினதாலேயே கேதாரீஸ்வரர் வறுமையைத் தந்தாரென்று அறிந்து அன்று முதல் தவறாமல் நோன்பைக் கடைப்பிடித்து சகல சம்பத்தும் பெருகி சுகபோகத்தோடு வாழ்ந்தாள். எனவே இந்த பூலோகத்தில் கேதார கௌரி விரதத்தை மனப்பூர்வமாய் விரும்பி அனுஷ்டிப்பவர்களுக்கு அந்த பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் அனுகிரஹிப்பார் என்பது திண்ணம்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை:
அவரவர்கள் சௌகரியப்படி 21 நாட்களோ, 9 நாட்களோ, 5 நாட்களோ, 3 நாட்களோ அல்லது ஐப்பசி அமாவாசையான தீபாவளியன்று கேதாரகௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபடவேண்டும். ஆண்களும் இவ்விரத்தை அனுஷ்டிக்கலாம். முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர் ததசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் “பாரணம்’ பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.

தீபாவளி அன்று நோன்பிருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமிருந்து ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும். பூஜைக்காக முதலில் மஞ்சள் பிள்ளையாரை செய்வித்து சந்தனம், குங்குமம், புஷ்பம், அருகு சார்த்தி விநாயகரை பதினாறு நாமம் சொல்லி அர்ச்சனை செய்து, பின்னர் தூப தீபம் காட்டி தாம்பூலம் நைவேத்தியம் செய்து தீபாரதணையான பிறகு, ஶ்ரீ கேதாரீஸ்வரரை ஆவாகனஞ் செய்ய வேண்டும். அதாவது அம்மியையுங் குழவியையும் அலங்கரித்து அம்மியின் மேல் குழவியை நிறுத்தி குங்கும சந்தனம் முதலிய பரிமள திரவியங்கள் அணிவித்து பருத்திமாலையிட்டு புஷ்பஞ்சார்த்தி அதனெதிரில் கலசம் நிறுத்தி அதற்கும் பருத்திமாலை புஷ்பஞ்சார்த்தி பூஜை செய்பவர் கேதாரீஸ்வரரை மனதில் தியானம் செய்து , காசி, கங்கா தீர்த்தமாட்டியது போலும், பட்டுப் பீதாம்பரம் ஆபரணங்களினால் அலங்கரித்தது போலும் மனதில் சங்கல்பம் செய்து கொண்டு, வில்வம், தும்பை, கொன்றை மலர்களினால் கேதாரீஸ்வர்ரை அர்ச்சனை செய்து, முனை முறியாத விரலி மஞ்சள், வெற்றிலை, கொட்டைப்பாக்கு, அரளிப்பூ, அரளி மொட்டு, இலை, பழுப்பு, வாழைப்பழம், அதிரசம், வகைக்கு நாளைக்கு ஒன்றாக 21 சமர்ப்பணம் செய்து , எலுமிச்சம் பழம் இரண்டு, நோன்புக்கயிறு ( 21 இழை, 21 முடிச்சுடன்) சார்த்தி, தேங்காய் இரண்டு (ஒன்று குல தெய்வத்திற்க்கு), கருகுமணி, காதோலை, சீப்பு, கண்ணாடி சமர்ப்பித்து, பிரசாதமாக 21 அதிரசம், சர்க்கரைப் பொங்கல், பாயசம், புளியோதரை முதலியன நைவேத்தியமாக சமர்பித்து, தேங்காய் உடைத்து புஷ்ப அக்ஷதை கையில் கொண்டு மூன்று முறை ஶ்ரீ கேதாரீஸ்வர்ரை வலம் வந்து வணங்கி புஷ்ப அக்ஷதையை சுவாமியின் பாதங்களில் சமர்ப்பித்து, தூப தீபம் காட்டி நைவேத்தியம் தாம்பூலம் சமர்ப்பித்து கற்பூர தீபாரதனை காண்பித்து நோன்புக்கயிறை கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பூஜையின் போது அந்தணரைக் கொண்டு கேதார கௌரி விரதக்கதை பாராயணம் செய்யக் கேட்பது நல்லது.


விரதபலன்: இவ்வாறு சிரத்தையுடன் தம்பதிகள் சேமமாக இருத்தலும் பிணிநீங்கலும் வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் பெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும் உகந்தது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை.


அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். உமையம்மை, கேதார கௌரி, மலைமகள், மலையரசன் பொற்பாவை, கிரிஜா, கிரி கன்யா, கிரி சுதா, சகல செல்வங்களும் தரும் இமயகிரி ராஜ தனயை, இமவான் உலவு புத்ரி, வரை மகள், பர்வதவர்த்தினி, பர்வதராஜ குமாரி, பார்வதி சகல ஸௌபாக்கியங்களையும் வழங்கி ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.