Wednesday, October 13, 2010

விஜய தசமி

விஜய தசமி


கற்பகாம்பாள் நாகாசனத்தில்
பத்மாசனியாக கொலு தர்பார் காட்சி



நவராத்திரி ஒன்பது நாள் அன்னை மஹிஷாசுரனுடன் போரிட்டு அவனை வென்ற நாள்தான் விஜய தசமி, என்னதான் தீமை ஆட்டம் போட்டாலும் முடிவில் நன்மையே வெல்லும் என்றும் அனைவருக்கும் உணர்த்தும் நாள்.

வட நாட்டிலே இந்நாள் இராமபிரான் இராவணனை வென்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகின்றது. இன்று இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்படும் ராம் லீலா சிறப்பாக கொண்டாடப்படும் நாள். மைசூரிலே தசரா விழா கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகின்றது.

வங்காளத்திலே தங்கள் அன்னையர் இல்லத்திற்கு தன் குழந்தைகளான, சரஸ்வதி. லக்ஷ்மி, கணேசன், முருகன், மருமகள் அப்ராஜிதாவுடன் திருக்கயிலாயத்திலிருந்து தன் அன்னையின் (மேனை) இல்லத்திற்கு வந்த அன்னை துர்கா மீண்டும் திருக்க்யிலாயத்திற்கு செல்லும் நாள்.

மஹாபாரதக் கதையிலே பஞ்ச பாண்டவர்கள் தங்கள் அஞ்ஞாதவாசம் முடிந்து தாங்கள் வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களையெல்லாம் எடுத்து அந்த ஆயுதங்களுக்கு பூஜை செய்த நாள். ஆயுதபூஜை செய்யும் பழக்கம் இதிலிருந்துதான் தொடங்கியது. வைணவத்தலங்களில் அதனால்தான் விஜயதசமியன்று பெருமாள் குதிரை வாகனத்தில் சேவை சாதித்து வன்னி மரத்தில் அம்பு எய்யும் விழா சிறப்பாக நடைபெறுகின்றது.

இன்றைய தினம் எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் அன்னையின் அருளால் அது நிச்சயம் வெற்றி அடையும். குறிப்பாக சரஸ்வதி பூஜையன்று புத்தகங்களுக்கு பூஜை செய்து இன்று படிப்பை ஆரம்பிக்க மிகவும் உகந்தது. கேரள மாநிலத்தில் அக்ஷராப்பியம் குழந்தைகளுக்கு இன்றுதான் செய்யப்படுகின்றது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்நாளில் மதுகைடபர், சும்ப நிசும்பன், சண்ட முண்டன், இரக்த பீஜன், மஹிஷாசுரன் ஆகியோரை சம்ஹாரம் செய்து தேவர்களையும் மனிதர்களையும் சர்வ லோகங்களையும் காத்து இரக்ஷித்தருளிய ஜெய துர்க்கையை, விஜய மஹிஷாசுரமர்த்தினியை, ஜெய ஜெய சாமுண்டியை மனமார துதித்து நோயின்மை, கல்வி, தனம், தானியம், அழகு, புகழ், பெருமை, வலிமை, இளமை, அறிவு, சந்தானம், வலிமை, துணிவு, வாழ்நாள், நல் ஊழ், நுகர்ச்சி என்னும் பதினாறு செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ இமய கிரி ராஜ தனயையிடம் வேண்டிக்கொள்வோம்.

வழக்கம் போல் துர்க்கா சப்த ஸ்லோகி மற்றும் துர்க்கா ஸுக்தம் ஸ்லோகங்கள் அன்னையை வழிபட பொருளுடன் தந்துள்ளேன். இவ்வருட நவராத்திரி பதிவை திருமயிலையில் கற்பகாம்பாள் தரிசனத்துடன் தொடங்கினோம். நிறைவாக கற்பகாம்பாளின் பத்மாசன அலங்காரத்துடன் இவ்வருட பதிவுகளைக் காண்போம்.

அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தனுதே
கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாசினி ஜிஸ்துனுதே
பகவதி ஹே ஸிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரி க்ருதே
ஜய ஜயஹே மஹிஷாசுரமர்த்தினி
ரம்ய கபர்த்தினி ஷைலஸுதே!



இமவான் புத்ரியும், ஜடா முடியுடன் திகழும் சிவ பெருமானின் துணைவியும், மஹிஷாசுரனை சம்ஹரித்தவளுமான அன்னையே!
மகிஷாசுரமர்த்தினியே! உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி!
தாயே! உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
எங்களை காப்பாற்றுவாயாக.
*******


விஜய தசமியான இன்று ஸ்ரீ துர்க்கையை துதிக்க துர்க்கா சப்த ஸ்லோகி மற்றும் துர்க்கா ஸுக்தம் உரையுடன்.


ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகீ


ஸ்ரீ சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதும், 700 மந்திரங்களாக கருதப்படுவதும் ஸப்தசதீ அழைக்கப்படுவதுமான தேவீ மஹாத்மியம் மார்க்கண்டேய புராணத்தில் உள்ளது. இது உலக நன்மையை வேண்டி பாராயணத்திற்கும் சண்டீ ஹோமத்திற்கும் கையாளப்படுகின்றது. அவரவர்களுக்கு ஏற்ற முறைப்படி ஸ்ரீ துர்கா ஸப்த சதீயை பாராயணம் செய்தும் அதனால் ஹோமத்தை செய்வதும் அனைத்து செல்வங்களையும், இக பர நன்மைகளையும், அந்த தேவியின் அருளையும் அடைவர் என்று அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு செய்துள்ளனர். தேவி மஹாத்மியத்தின் சாரமாகக் கருதபப்டும் ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ எனப்படும் ஏழு ஸ்லோகங்களை ஜபிப்பது ஸ்ரீதேவி மஹாத்மிய பாராயணத்திற்கு இணையாக கருதப்படுகின்றது. அதுவும் அன்னைக்கு உகந்த நவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். தன்னை ஜபம் செய்வோர்க்கு ஸ்ரீ துர்க்கா ஸப்த ச்லோகீ விரும்பத்தக்கவற்றைப் பெறுவதற்கும், விலக்க வேண்டுவனவற்றைத் தள்ளுவதற்கும் அன்னையின் அருளைப் பெற்றுத் தரும்.

இந்த ஸப்தச்லோகீ பாராயணத்தாலேயே ஸப்த சதீ பாராயண பலத்தை உறுதியாகப் பெறக்கூடும். கலியில் "கீதை", "விஷ்ணு சகஸ்ரநாமம்", "தேவி மஹாத்மியம்", "லலிதா ஸகஸ்ரநாமம்" இந்நான்கும் பலன் தரும் ஸ்தோத்திரங்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. தேவி மஹாத்மிய பலச்ருதியில் இதைப் படித்தாலும் கேட்பதாலும் கன்னிகை கணவனை அடைவாள் இந்த மஹாத்மியத்தை கேட்டு ஸ்திரீ ஸ”மங்கலித் தன்மையைப் பெறுவாள். மனிதன் இஹத்தில் எல்லாவற்றையும் அடைவான் என்று கூறப்பட்டுள்ளது. தேவியின் மஹ’மையை அறிந்து அவளிடம் பக்தி செய்து இஹபர லாபங்களான புக்தி முக்தியை பெறட்டும் என்று எல்லாம் வல்ல பராசக்தி மஹா மாய அருள் புரியட்டும்.



ஜ்ஞாநிநாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா

பலா-தாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி (1)

ஐச்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்ற மஹாமாயா ஸ்வரூபிணியான அந்த தேவி ஆத்ம ஞானம் பெற்ற ஜ“வன் முக்தர்களுடைய மனோ விருத்திகளைக் கூட பலாத்காரமாக இழுத்து மோஹ’க்கும்படி செய்கின்றாள்.

இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் சர்வ ஜன மோஹம் ஏற்படுவது அநுபவ சித்தம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:

ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி

தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதந்யா

ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா (2)


ஏ துர்கே! ஆபத்திற்குள்ளான ஒருவன் உன்னை ஸ்மரித்தால் அவனுக்கு ஏற்படும் பயத்தை நீ அழித்து விடுகின்றாய்.

சௌக்யமாய் இருப்பவர்கள் உன்னை நினைந்து அன்போடு துதித்தால் அவர்களுக்கு நல்ல அறிவை அளித்து மேன் மேலும் நற்காரியங்களிலே ஈடுபடும்படி செய்கின்றாய். வறுமை, துக்கம், பயம் இவற்றையெல்லாம் அபகரிக்கும் ஏ தேவி! உன்னைத் தவிர வேறு யார் தான் எல்லாவித காரியங்களையும் செய்வதற்காக தயாரஸம் ததும்பும் மனத்துடன் கூடியவனாக இருக்கின்றார்? ( வேறு ஒருவருமில்லை)

இந்த ஸ்லோக பராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி வறுமைப்பிணியும் நீங்கி விடும்.



ஸர்வ மங்கல-மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே

சரண்யே த்ர்யம்பகே கௌரி(தேவி) நாராயணி நமோஸ்து தே (3)

எல்லா மங்களகரமான வஸ்துக்களுக்கும் மங்கள ஸ்வரூபத்தை அளித்தவளும், ஸ்வயம் மங்கள ஸ்வரூபிணியும் எல்லாவற்றையும் ஸாதிக்கக் கூடியவளும், அனைவராலும் ஆச்ரயிக்க தகுந்தவளும் மூன்று கண்களை உடையவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

சரணாகத-தீநார்த்த-பரித்ராண-பராயணே

ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோஸ்து தே (4)

தன்னை சரணமாக அடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களைக் காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டவளும், அனைவருடைய துன்பங்களையும் அபஹரிப்பவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

மேலே கண்ட இரண்டு ஸ்லோகங்களின் பாராயணத்தினால் சகல காரியசித்தியும் பரிபூரணமாகஉண்டாகும்.

ஸர்வஸ்ரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமந்விதே

பயேப்யஸ்-த்ராஹி-நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே (5)

அனைத்து சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும் எல்லாவற்றுக்கும் ஈசுவரியாயும் ஸமஸ்த சக்திகளுடன் கூடியவளுமான ஏ தேவி துர்கே! எங்களை பலவித பாவங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ தேவி! உனக்கு நமஸ்காரம்.




ரோகாந்-அசேஷாந்-அபஹம்ஹி துஷ்டா

ருஷ்டா து காமாந் ஸகலாந்- அபீஷ்டாந்

த்வாம்-ஆஸ்ரிதாநாம் ந விபந்-நராணாம்

த்வாம்-ஆஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம் ப்ரயாந்தி (6)

உனது பிரீதி பிரவாகத்தினால் சமஸ்த ரோகங்களையும் அழித்து விடுகின்றாய்! கோபமுண்டானாலோ அவரவர்களுக்கு பிரியமான எல்லாப் பொருள்களையும் அழித்து விடுகின்றாய்! உன்னை அண்டிய மனிதர்களுக்கு ஆபத்து என்பதே உண்டாவதில்லை. உன்னை அண்டியவர்கள் மற்றவர்களால் விரும்பதக்கவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.

இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா வித்யாப்ராப்திகளும் உண்டாகும்.



ஸர்வா-பாதா-ப்ரஸமநம் த்ரைலோக்யஸ்ய- அகிலேஸ்வரி

ஏவ மேவ த்வயா கார்யம்-அஸ்மத்வைரி-விநாசனம்

எல்லாவற்றுக்கும் ஈச்வரியான ஏ தேவி இவ்விதமே முவுலகங்களுடைய எல்லா விதமான துன்பங்களையும் நிவர்த்தி செய்தல், எங்கள் விரோதிகளை அழித்தல் இவை எப்போழுதும் உன்னால் செய்யப்பட வேண்டும்.


இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி விடும்.


இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் மேலே கூறிய பயன்கள் எல்லாம் அவசியமானதால் ஸர்வேஸ்வரியின் திருவருளால் அவற்றைப் பெற இந்த "ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகியின்" பாராயணம் அனைவருக்கும் மிக அவசியம்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

* * * * * *


துர்கா ஸுக்தம்


ஜாதவேதஸே ஸுநவாம ஸோமமராதீயதோ நிதஹாதி வேத:

ஸ ந: பர்ஷ ததி துர்காணி விஸ்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்நி
: (1)

அக்னி வடிவமாக விளங்கும் சக்திக்கு ஸோம ரசத்தை பிழிந்து தருவோம், அனைத்தையும் அறியும் அந்த சக்தி எனது பகைமைகளை பொசுக்கட்டும். அது எனது எல்லா ஆபத்துக்களையும் போக்கட்டும், கப்பலால் கடலைக் கடப்பது போல பாவக் கடலில் இருந்து அந்த அக்னி சக்தி நம்மை அக்கரை சேர்க்கட்டும்.

தாமக்நிவர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் வைரோசநிம் கர்மபலேச்ஷு ஜுஷ்டாம்

துர்காம் தேவீகும் சரண-மஹம் ப்ரபத்யே ஸுதரஸி தரஸே நம: (2)

செந்தீ வண்ணத்தினளும், தனது ஒளியால் எரிப்பவளும், ஞானக்கண்ணால் காணப்பட்டவளும், கர்ம பலனை கூட்டி வைப்பவளுமான துர்கா தேவியை நான் சரணமடைகின்றேன். பிறவிக்கடலை எளிதில் கடத்துவிப்பவளே! கடத்துவிக்கும் உனக்கு நமஸ்காரம்.

அக்நே த்வம் பாரயா நவ்யோ அஸ்மாந் ஸ்வஸ்திபிரதி துர்காணி விஸ்வா.

பூஸ்ச ப்ருத்வீ பஹுலா ந உர்வீ பவா தோகாய தநயாய ஸம்யோ: (3)

அக்னி சக்தியே போற்றத்தக்க நீ எங்களை நல்ல உபாயங்களால் எல்லா ஆபத்துகளின்றும் கரையேற்றுவிக்க வேண்டும். எங்களுக்கு வாசஸ்தலமும், விளை பூமியும் நிறைய அருள வேண்டும். புத்திரர்களும், பௌத்திரர்களும் அளிக்க வேண்டும்.

விஸ்வாநி நோ துர்கஹா ஜாதவேதஸ்-ஸிந்தும் ந நாவா துரிதா-திபர்ஷி

அக்நே அத்ரிவந் மநஸா க்ருணோ ஸ்மாகம் போத்யவிதா தநூநாம் (4)

ஆபத்தை போக்கும் அக்னி சக்தியே கப்பல் கடலைக் கடப்பது போல எங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் எம்மை கடத்துவிப்பாய். அக்னி சக்தியே அத்ரி மஹரிஷ’யைப்போல் அனைவரும் இன்புறுமாறு மனதார அனுகிரகித்துக் கொண்டும் எங்களுடைய உடலை இரக்ஷ’த்துக்கொண்டும் இருக்க வேண்டும்.


ப்ருதநா ஜிதகும் ஸஹமாந-முக்ர-மக்னிகும் ஹுவேம பரமாத்-ஸதஸ்தாத்

ஸ ந: பர்ஷததி துர்காணி விஸ்வா-க்ஷாமத் தேவோ அதி துரிதா-யக்நி: (5)

எதிரிகளின் சேனைகளை வெல்வதும், அடக்குவதும், உக்கிரமானவளுமான அக்னி சக்தியை பரமபதத்திலிருந்து அழைக்கின்றேன். இச்சக்தி எல்லா ஆபத்துக்களையும் போக்குவதாக. அக்னி தேவன் நமது பாவங்களை போக்கி குற்றங்களை மன்னிக்கட்டும்.



ப்ரத்நோஷிக மீட்யோ அத்வரேஷு ஸநாச்ச ஹோதா நவ்யஸ்ச ஸத்ஸி

ஸ்வாஞ்சாக்நே தநுவம் பிப்ரயஸ்மபயம் ச சௌபகமாயஜஸ்வ (6)

அக்னியே யாகங்களில் போற்றப்பெறும் நீ இன்பத்தை வளர்க்கின்றாய். கர்ம பலனை அளிப்பதும் ஹோமத்தை செய்வதும் ஸ்தோத்திரம் செய்யப்படும் நீயே ஆகின்றாய். அக்னி சக்தியே உனது உடலையும் ஹவிஷ’னால் இன்புற செய்து எங்களுக்கும் எல்லா சௌபாக்கியங்களையும் அருள்வாயாக.

கோபிர்ஜுஷ்ட-மயுஜோ நிஷிக்தம் தவேந்த்ர விஷ்ணோ-ரநுஸஞ்சரேம

நாகஸ்ய ப்ருஷ்ட மபிஸம்வஸாநோ வைஷ்ணவீம் லோக இஹ மாதயந்தாம் (7)

இந்திரனிடம் விளங்கும் சக்தியே! பாவத்தொடர்பின்றி பாவமான பொருட்களைக்கூட அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு எங்கும் பரவி நிற்கும் உன்னை சேவிக்கின்றேன். சுவர்கத்தின் உச்சியில் வசிக்கும் தேவர்கள் விஷ்ணு பக்தனான என்னை இவ்வுலகில் இருக்கும் போது பேரின்பத்திற்குரியவனாக்குதல் வேண்டும்.



ஓம் காத்யாயநாய வித்மஹே கந்யகுமாரி தீமஹி

தந்நோ துர்கி: ப்ரசோதயாத் (காயத்ரீ)

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:


கன்னியாகவும், குமரியாகவும் உள்ள தேவியை தியானிக்கின்றோம். பரமேஸ்வரனுக்காகவே தோன்றி பரமேஸ்வரனை மணந்த அவளை வழி படுகின்றோம். அந்த துர்கா தேவி எங்களை நல்வழியில் செலுத்தி ஆட்கொள்ள வேண்டும்.

* * * * * * *
கற்பகாம்பாள் பத்மாசனி அலங்காரம்


கற்பகாம்பாள் பின்னழகு
(இன்றைய தினம் அம்மனின் சடையில் அற்புத தாமரை மலர்களைக் காணுங்கள்)

மஹா மண்டபத்தில் இன்றைய தினம்
கருங்குருவிக்கு உபதேசித்த லீலை

( மதுரையில் சோமசுந்தரப்பெருமான் ஆடிய 64 திருவிளையாடல்களுள் ஒன்று)

இன்றைய தினம் மயிலை நாதருக்கு கனிகளால் கோலம்


பொம்மைக்கொலுவில் கிராமம்

அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்தித்துக் கொள்கிறேன்.

ஓம் சக்தி

நவராத்திரி அலங்காரங்கள் - 9

நவராத்திரி ஒன்பதாம் நாள்

அன்னைக்கு மிகவும் உகந்த மஹா நவமி நாளும் நாம் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை கொண்டாடும் நாளும் நவராத்திரியின் நிறை நாளும் ஆன இந்த ஒன்பதாம் நாள் அன்னையை பத்து வயது குழந்தையாக பாவித்து சுபத்ரா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் சர்வ மங்களம் உண்டாகும் . இன்றைய ஸ்லோகம்


ஸுபத்ரபணிச பக்தானாம் குருதே பூஜிதா ஸதா அபத்ர

நாசினீம் தேவீம் ஸுபத்ராம் பூஜயாம்யஹம் ||

(தன்னை பூஜை செய்பவர்களுக்கு மங்களைச் செய்து அமங்கலங்களை எந்த சக்தி நீக்குகிறதோ அந்த சுபத்திரையை வணங்குகிறேன்.)


ஸித்திதாத்ரி துர்க்கா

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று நவதுர்க்கைகளில் சித்திதார்த்தியாக வழிபடுகின்றோம். தியானம், யோகம், ஞானம் அனைத்துக்கும் உரியவளான சித்திதாத்ரி தேவி நவதுர்க்கையின் ஒன்பதாவது வடிவமாகக் காட்சி கொடுக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான், தேவர்கள் போற்றிப் பூஜிக்கும் சித்திதாத்ரி தேவி மனிதனுக்கு பரமாத்மாவை அறிய வைக்கிறாள். சகல சௌபாக்கியங்களும் அள்ளிக் கொடுக்கும் சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு மோட்சத்தைக் கொடுக்கிறாள்.

கைலாயத்தில் சிவபெருமான் மஹா சக்தியை வழிபட்டு எல்ல ஸித்திகளையும் பெற்றார். அதற்கு நன்றிக் கடனாகத் தன்னுடய உடலில் பாதி பாகத்தை தேவிக்குக் கொடுத்தார். இதனால் சிவ பெருமனும், "அர்த்த நாரீஸ்வரர்" என்று புகழைடைந்தார். இந்த அவதார ரூபத்தை எல்லாக் கடவுளரும், ரிக்ஷிமுனிகளும், சித்தர்களும், யோகிகளும், பக்தர்களும் வழிபடுகிறார்கள்.

சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம்.

ஸித்த கந்தர்வ யக்ஷாத்யை: அஸிரைரபி |

ஸேவ்யமாநா ஸதாபூயாத் ஸித்திதா ஸித்திதாயிநீ ||

(சித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், தேவர் கூட்டங்கள் எப்போதும் வழிபடும் சித்திதாயினி துர்க்கா அடியேனது எல்லா செயல்களிலும் வெற்றியை வழங்கட்டும்.)

நிர்குணா யா ஸதா நித்யா வ்யாபிகா அவிக்ருதா சிவா |

யோக கம்யா அகிலாதாரா துரீயா யா ச ஸம்ஸ்த்துதா ||


தஸ்யாஸ்து ஸாத்விகீ சக்தீ ராஜஸீ தாமஸீ ததா |

மஹாலக்ஷ்மி: ஸரஸ்வதீ மஹாகாளீதி ச ஸ்திரிய: ||

தாஸாம் திஸ்ருணாம் சக்தீதாம் தேஹாங்கீகார லக்ஷணாத் ||

படைக்கும் பிரம்மா, காக்கும் மஹா விஷ்ணு, சம்ஹாரிக்கும் சிவன் ஆகியோரின் சக்தியான மஹா சரஸ்வதி, மஹா லக்ஷ்மி, மஹா காளி ஆகிய மூன்று சக்திகள் மேலும் மூன்று தேவிகளாக பிரிந்து நவதுர்க்கைகள் ஆயினர்.

சொர்ணாம்பாள்
இராஜராஜேஸ்வரி அலங்காரம்


திருமயிலை காமாக்ஷி அம்பாள்

நாகவாகனத்தில் பத்மாசனியாக தரிசனம்


காமாக்ஷி அம்பாளுடன் கொலுவிருக்கும்

மஹா சரஸ்வதி


குகையில் சிவலிங்கங்கள்



ரோக நிவாரணி அஷ்டகம்

ஜெயஜெய சைலா புத்திரி பிரஹ்ம

சாரிணி சந்தர கண்டினியே

ஜெயஜெய கூஷ் மாண்டினி ஸ்கந்த

மாதினி காத்யா யன்ய யளே

ஜெயஜெய கால ராத்ரி கௌரி

ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே || (8)

( நவ துர்க்கைகளின் நாமம் அவர்களது வர்ணத்தினாலேயே கூறப்பட்டுள்ளது )


அம்மன் அருள் வளரும்

Tuesday, October 12, 2010

நவராத்திரி அலங்காரங்கள் - 8

நவராத்திரி எட்டாம் நாள்

கோலாப்பூர் மஹாலக்ஷ்மித் தாயார்

அன்னைக்கு மிகவும் உகந்த மஹா அஷ்டமிநாளான நவராத்திரியின் எட்டாம் நாள் அன்னையை ஒன்பது வயது குழந்தையாக பாவித்து துர்க்கா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் பயம் நீங்கும் . இன்றைய ஸ்லோகம்

துர்க்காத்ராபதி பக்தம்யாஸ தா துர்க்கார்த்த நாயினீ துர்ஜுஷ்யா

ஸர்வதேவானாம் தாம் துர்க்காம் பூஜயாம்யஹம் ||

(துர்க்கதியைப் போக்குபவளாய், தேவர்களாலும் அறிய முடியாதவளாய் பக்தர்களைக் காப்பவளாய் எந்த சக்தி விளங்குகிறதோ அந்த துர்கா தேவியாகிய சக்தியை வணங்குகிறேன்.)
மஹா அஷ்டமி நாளன்று அன்னையை நினைத்து விரதமிருக்க அனைத்து நன்மைகளும் அவள் அருளால் சித்தியாகும்.
மஹா கௌரி துர்க்கா

(எல்லோருக்கும் அருளும் வண்ணம் தலையை சாய்த்து அன்னை ஒயிலாக தரிசனம் தரும் அழகை என்னவென்று சொல்ல)

நவராத்திரியின் எட்டாம் நாள் நவதுர்கைகளில் அன்னையை வெள்ளை ரிஷபத்தில் மேலேறி பவனி வரும் மஹா கௌரியாக வழிபடுகின்றோம்.

தூய உள்ளம், பொன்னிற மேனி , வெண்பட்டு ஆடை, ஜொலி ஜொலிக்கும் தங்க நகைகளோடு காட்சி தருபவள் மகா கௌரி. காளையை வாகனமாகக் கொண்டு உடுக்கை சூலத்தோடு காட்சி கொடுக்கும் மகாகௌரியின் மேனி காட்டில் சிவபெருமானை மணக்க தவமிருந்த போது கருத்தது. சிவபெருமான் கௌரியின் மேனியை கங்கையால் சுத்தம் செய்ததாகவும், மீண்டும் மகாகௌரி பொன்னிற மேனியைப் பெற்றதாகவும் கதைகள் சொல்லுகின்றன.

பக்தர்களின் குறைகள் தீர்த்து வைக்கும் மகாகௌரி என்றென்றும் சந்தோசத்தை அள்ளித் தருகிறாள். மனநலம் பாதிக்கப் பட்டோரும், உடல்நலம் பாதிக்கப் பட்டோரும் வணங்கக் கூடிய தெய்வம் இவள். இவளை வணங்கினால் சந்திரனால் ஏற்படும் மனசஞ்சலங்கள் அகன்று அறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கும். சந்திரனைப் போன்ற வெண்மை நிறத்தவளாக வணங்கப்படுகின்றாள் மஹா கௌரி. 16 வயது கன்னிகையாக சிவபெருமானை மணப்பதற்கு முன்பான பருவம் இது. மஹா கௌரியை தூயவளாக சிவந்த வர்ணத்தவளாக வழிபடுகின்றோம்.


ஸ்வேத வ்ரூக்ஷே ஸமாரூடா ஸ்வேதாம்பரதராஸுசி |

மஹாகௌரி சுபம் த்த்யாத் மஹாதேவ ப்ரமோத்தா ||


(வெள்ளை ரிஷபத்தில் ஏறி தூய வெள்ளை பட்டாடை உடுத்தி தூயவளாகவும், சிவபெருமானுக்கு எப்போதும் ஆனந்தம் அளிப்பவளுமான மஹா கௌரி துர்க்கா அடியேனுக்கு எல்லா மங்களங்களையும் அருளட்டும்.)


நுங்கம்பாக்கம் அலர்மேல் மங்கை கொலு


பிரகத் சுந்தர குஜாம்பாள் துர்கா அலங்காரம்


சொர்ணாம்பாள் இராஜராஜேஸ்வரி அலங்காரம்






பிரகத் சுந்தர குஜாம்பாள்

லலிதா அலங்காரம்





ரோக நிவாரணி அஷ்டகம்

ஜெயஜெய சைலா புத்திரி பிரஹ்ம

சாரிணி சந்தர கண்டினியே

ஜெயஜெய கூஷ் மாண்டினி ஸ்கந்த

மாதினி காத்யா யன்ய யளே

ஜெயஜெய கால ராத்ரி கௌரி

ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே || (8)

( நவ துர்க்கைகளின் நாமம் அவர்களது வர்ணத்தினாலேயே கூறப்பட்டுள்ளது )

அம்மன் அருள் வளரும்