Tuesday, August 17, 2010

பொன் விமானங்கள்

திருசிற்றம்பலம்

சகல புவனங்களையும் ஆக்கியும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும், ஐந்தொழில் புரியும் ஆனந்த கூத்தனின், அம்பலவாணரின் புகழ் பாடும் 150வது பதிவு இது. இது வரை வந்த பதிவுகளை வந்து தரிசனம் செய்த அனைவருக்கும் சிவசக்தியின் அருள் சித்திக்க பிரார்த்தித்து கொள்கிறேன். இன்னும் வரும் பதிவுகளையும் கண்டு அருள் பெறுமாறு வேண்டிக்கொள்கிறேன். அவன் அருளாலேதான் அவன்தாள் வணங்கமுடியும் அவர் அளித்த பொன் விமானங்களின் அற்புத காட்சிகளே இப்பதிவு.


பொன் விமானங்கள்
" நீ எதை கொண்டு வந்தாய் இவ்வுலகிற்கு வந்த போது?
எதை எடுத்து செல்வாய் இங்கிருந்து செல்லும் போது?
ஒன்றுமில்லை, நீ சம்பாதித்த செல்வம் எல்லாம் இங்கிருந்து
எடுத்தது எல்லாவற்றையும் , இங்கேயே விட்டுச் செல்வாய்"
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத் கீதையிலே கூறியது இது.
இதே கருத்தை பட்டினத்தார் சுவாமிகளும் இவ்வாறு கூறுகின்றார்.
பிறக்கும் பொழுது கொடு வந்த(து) இல்லை பிறந்து மண் மேல்
இறக்கும் பொழுது கொடு போவ(து) இல்லை இடை நடுவில்
குறிக்குஞ் இச்செல்வஞ் சிவன்தந்த தென்று கொடுக்கறியா(து)
இறக்கும் குலாமருக்(கு) என் சொல்லுவேன் கச்சி ஏகம்பனே.
என்று எல்லா செல்வமுமே அந்த இறைவனின் கொடை என்ற உண்மையை உணர்ந்த ஆன்மீகப் பெருமக்கள் தாங்கள் சம்பாதித்த செல்வத்தின் ஒரு பகுதியை திருக்கோவில்களுக்கு அளித்தனர்.
அந்த காலத்து அரசர்களூம் கடவுளுக்கு அழியாத பெரிய கோவில்களைக் கட்டினர். கற்றளியாக கட்டியதால் இயற்கையின் சீற்றத்தால் இந்த கோவில்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதால் கல்லாலே பிரம்மாண்டமான ஆலயங்களை உருவாக்கினார். இதனால் தானே சோழ மன்னர்களும் காவிரி தீரமெங்கும் 108 சிவாலயங்களை கட்டினார்கள். அவர்களுக்கு பின் வந்த வந்த அரசர்களும் திருக்கோவில்களை பெரிது படுத்தினர்.
இவ்வாறு கட்டப்பட்ட கோவில்களுக்கு கிடைத்த நன்கொடைகளைக் கொண்டு ஆண்டவனுக்கு திருவிழா காலத்தில் அணிவிப்பதற்கான பலதரப்பட்ட உயர்ந்த ரத்னங்களை கொண்ட தங்க நகைகளை உருவாக்கினர். இந்த ரத்னங்களிலிருந்து ஓளிக் கதிர்கள் நமது நோய்களை தீர்ப்பவையாகவும் விளங்கின. இறைவனுடைய சிலைகளையே சந்திர காந்தக் கல் முதலியவற்றாலும் அமைத்தனர் . பின்னும் இறைவனுக்கு வெள்ளியாலும், தங்கத்தாலும் கவசங்களும் செய்து அணிவித்தனர். இறைவனுக்கு மட்டுமா அவருடைய வாகனங்களுக்கும் வெள்ளி மற்றும் தங்க தகடுகளால் போர்த்தப்பட்டன.
உலகிலேயே தங்கத்தை மிகவும் நேசிப்பவர்கள் நமது இந்தியர்கள் தான். உலோகங்களிலே மிகவும் சிறந்தது அதிக மதிப்பு உடையது தங்கம்தான், எனவே உயர்ந்த எல்லாவற்றிலும் தங்கம் உபயோகப் படுத்தப்பட்டது. "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" , எனவே சில ஆலயங்களில், " ஸ்தூல லிங்கமாக" கருதப்படுகின்ற விமானங்களும் தங்க கவசம் பூண்டன. அதனால்தான் இறைவனை பொன்னார் மேனியயே அவரது திருவடிகளை பொன்னடி என்றும் பாடிப்பரவினர் அன்பர்கள். இதற்கு பொன், கனகம், சுவர்ணம் என்று பல பெயர்கள் உள்ளன.
தங்கம் தங்குமிடத்தில் சௌபாக்யம் நிலவுகிறது. தங்கத்துக்கு ஆரோக்யம் தரும் ஆற்றலும் இருப்பதால்தான் தங்க பஸ்பம் தயாரிக்கப்படுகின்றது. ஆஸெளசத்தை (தீட்டு, துடக்குகளை) நீக்கி ஸாந்நித்யம் நீங்காமல் மந்திர சக்தியை பேணிக் கொடுப்பதில் பொன்னுக்கு விசேஷ ஆற்றல் உண்டு. பொன்னை எவ்வளவு காய்ச்சினாலும் அதற்கு எதுவும் ஆகாது புடம் போட்ட பொன் அதிகமாக ஒளிரும் இது நமக்கு ஒரு பாடத்தை உணர்த்துகின்றது. ஆண்டவன் நமக்கு தருகின்ற சோதனைகள் எல்லாம் நம்மை பக்குவப்படுத்தத்தான்.
பொன்னாற் பிரயோசனம் பொன் படைத் தாற்குண்டு பொன் படைத்தோன்
தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங்கு ஏதுண்டு அத்தன்மையைப்போல்
உன்னாற் பிரயோசனம் வேனதெல்லாம் உண்டு உனைப்பணியும்
என்னாற் பிரயோசனம் ஏதுண்டு காளத்தி ஈச்சுரனே.
என்று பட்டினத்தார் பாடியபடி பொன்னாகிய இறைவனுக்கு நம்மால் ஒன்றும் பயனில்லை. அந்த இறைவனை நாம் சரணடைய நமக்குத்தான் முக்திப்பேறு கிட்டும்.
இவ்வளவு சிறப்புகள் பெற்ற தங்கத்தால் தில்லை, திருவரங்கம், திருமலை, பழனி காஞ்சி மற்றும் பல திருக்கோவில் விமானங்கள் தங்க கவசம் பூண்டன. அத்தகைய விமானங்களுள் சிலவற்றை தேர்ந்தெடுத்து இங்கே அளிக்கின்றேன் . A thing of beauty is a joy forever" என்ற மொழிக்கேற்ப அடியேன் பார்த்து ரசித்த அந்த பொன் விமானங்களை நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.

தில்லை பொன்னம்பலம்:
சைவர்களுக்கு கோவில் என்றளவிலே அறியப்படுவது தில்லை. இங்கே இந்த அகிலமெல்லாவற்றையும் ஆட்டுவிக்கும் எம்பெருமான் குனித்த புருவுத்துடனும், கொவ்வை செவ்வாயில் குமின் சிரிப்புடன், பனித்த சடையுடன் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீராடி ஆனந்த தாண்டவம் ஆடுகின்றார். எம்பெருமானின் பஞ்ச சபைகளில் முதன்மையானது இந்த பொன்னம்பலம். பூமியாகிய விராட புருஷனனின் இதயமாக விளங்குகின்றது இத்தலம்.
ஆனந்த தாண்டவர் அம்மை சிவகாமியுடன்
தில்லைப் பொன்னம்பலம்
இந்த அம்பலம் மரத்தாலானது. கல் கட்டடங்களுக்கு முன்பிருந்த கட்டடக் கலை. பொன்னம்பலத்தின் ஒன்பது கலசங்களும் நவ சக்திகளை குறிக்கின்றன. அம்பலத்தின் 18 தூண்கள் 18 புராணங்களை குறிக்கின்றது. 64 சந்தன கை மரங்கள் 64 ஆய கலைகளை குறிக்கின்றன. 2600 பொன் ஓடுகள் ஒரு நாளில் மனிதன் விடும் சுவாசம் ஆகும், இவ்வோடுகளில் திருவைந்தெழுத்து முத்திரையிடப்பட்டுள்ளன. இவ்வோடுகளை பிணைக்கும் 72000 ஆணிகள் நமது சுவாசத்திற்க்கு உதவும் நாடிகளை குறிக்கின்றன, 224 அடைப்புப் பலகைகளும் 224 உலகங்களை குறிக்கின்றன. அதாவது எவ்வாறு சுவாசம், நாடி, நரம்புகள் என்ற உடம்பு உறுப்புகள் எவ்வாறு மனித இதயத்தோடு சம்பந்தப் பட்டுள்ளதோ அது போல இப்பொன்னம்பலத்தின் இறைவன் நம் இதயத்தில் உறைகின்றான் என்பது ஐதீகம்
எம்பெருமான் எண்டோள் வீசி நின்றாடும் சிற்சபைக்கு பொன் வேய்ந்தவர் பராந்தக சோழ மன்னன். நாம் பார்க்கின்ற மூன்று அம்பலங்கள் ஒன்று எம்பெருமான் நடமாடும் சித் சபை , நாம் எம்பெருமானை நின்று வணங்கும் பொற் சபை மற்றும் திவ்ய தேசங்களுள் ஒன்றான தில்லை கோவிந்தராஜரின் திருசித்ர கூடத்தின் பொற் கூரையாகும்.
காஞ்சி காமாட்சி
உலகத்தின் பாதுகாப்பு அரணாக பாரத தேசமெங்கும் எம் அம்மை நல்லாட்சி புரியும் 51 சக்தி பீடங்களுள் ஒன்று. அம்மை காமாட்சி இங்கே கா- கலை மகள், மா- அலை மகள் , லஷ்மி மற்றும் சரஸ்வதி தேவிகளை ஆக்ஷி -கண்களாகக் கொண்டு நமது விருப்பங்களை (காமங்களை) பூர்த்தி செய்பவளாக அம்மை காஞ்சியிலே காமாக்ஷியாக அருள் பாலிக்கின்றாள். அவளின் பார்வை பட்டாலே நம் அனைத்து துன்பங்களூம் ஒழிந்து நல்லருள் பெற்று இன்பம் காண்போம் என்பது அனுபவப்பூர்வமான உண்மை. "நகரேக்ஷ காஞ்சி" சிறப்புப் பெற்ற காஞ்சி நகரம் ஸ்ரீ சக்ர வடிவமாக காமாக்ஷி அம்மனின் கோவிலை மத்திய பிந்து ஸ்தானமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கம்பா நதிக்கரையிலே மணலாலே லிங்கம் அமைத்து என் அம்மை வழிபட்டு வரும் போது வெள்ளத்தை பெருக்கி வெருட்டி முலைச்சுவடும் வளைச்சுவடும் பெற்ற எம்பெருமானின் கருணையால் முப்பத்திரண்டு அறங்களையும் எம் அன்னை இங்கிருந்து நடத்தி வருகின்றாள். எம் அம்மை இத்தலத்திலே ஐந்து வடிவங்களிலே அருட்காட்சி தருகின்றாள் முதலதாவது பிலத்துவார ஆதி காமாட்சி, இரண்டாவது மூலஸ்தானத்து காமாட்சி மூன்றாவது சங்கரர் அமைத்த சக்ர காமாட்சி, நான்காவது தபசு காமாட்சி, ஐந்தாவது பங்காரு காமாட்சி. அந்த பங்காரு(தங்கம்) காமாட்சியின் "காம கோடி விமானத்தின் "அழகைத்தான் பாருங்களேன்.
காஞ்சி காமாக்ஷியம்மன் பங்காரு விமானம்


திருவரங்கம்
தண் செய் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் உள்ள அரங்கத்தில் பாம்பணையில் புஜங்க சயனத்தில் பள்ளி கொண்ட பிரானாக எம்பெருமான் சேவை சாதிக்கும் தலம் தான் திருவரங்கம். வைணவர்களுக்கு கோவில் என்றவுடன் அறியப்படுவது மற்றும் பூலோக வைகுண்டம் என்றும் அறியப்படுவது இத்தலம். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் 108 திவ்ய தேசங்களுள் அதிகமான பாடல் பெற்ற தலம். தமது ஆச்சாரியரான நம்மாழ்வாரை மட்டுமே பாடிய மதுர கவி ஆழ்வாரைத் தவிர மற்ற 11 ஆழ்வார்களும் மங்களா சாசனம் செய்ததும் இந்த திவ்ய தேசத்தை மட்டும்தான். "ஸ்ரீ ரங்க விமானம் என்றழைக்கப்படும் இந்த பிரணவாகர விமானம் "பிரம்மாவால் பாற்கடலிருந்து பெறப்பட்டது அவர் பூசை செய்தபின் சூரியனால் பூசை செய்யப்பட்டு சூரிய குல தோன்றலான இஷ்வாகு மன்னனின் தவத்தினால் மண்ணுலகம் வந்தது, தசரதனுக்கு பிறகு இராமரால் பூசிக்கப்பட்டது, இராம பிரானால் வணங்கப்பட்ட இந்த ரங்க விமானம், விபீஷணால் இலங்கைக்கு எடுத்து செல்லப் படும் போது இறைவன் இச்சையால் காவிரிக்கு கொடுத்த வரத்தின் படி பிள்ளையாரால் இவ்விடத்திலே நிலை கொண்டது.
பிரணவாகார விமானம்
எனவே தான் எம்பெருமான் இங்கே குட திசை சிரசு வைத்து(மேற்கு),குண திசை (கிழக்கு) பாதம் நீட்டி தென் திசை இலங்கை நோக்கி பள்ளி கொண்டிருக்கிறார். இன்றும் நள்ளிரவில் விபீஷணன் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். எல்லாமே பெரியதுதான் திருவரங்கத்தில் ஸ்ரீரங்கத்தை பற்றிக் கூறும் போது இங்கு எல்லாமே பெரியதுதான், பெருமாள் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தி வழிபட்ட - பெரிய பெருமாள், தாயார் - பெரிய பிராட்டி, ஆழ்வார் - பெரியாழ்வார், மண்டபம் - பெரிய மண்டபம், ஜீயர் - பெரிய ஜீயர், மேளம்-பெரிய மேளம், அதனால் இக்கோவிலை பெரிய கோவில் என்று கூறுவர்.
பெருமாள் தாயார் பங்கு்னி உத்திர சேர்த்தி
இவ்விமானத்தை காண்பவர்களின் பாவங்களை எல்லாம் அழித்து நன்மைகளை தரவல்லது. ஏழு மதில்களுடன் கூடிய உத்தமாஉத்தம ஷேத்திரமான திருவரங்கத்தில் கனக விமானத்தில் நம் பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். விசலாமான தாமரை போன்ற திருக்கண்களுடன் பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் கருவறையின் மேலே பொன் விமானம் , தாமரையின் இதழ்களிலிருந்து வெளி வரும் நிலையிலுள்ள நான்கு பொற்கலசங்கள் கூட்டப்பட்டுள்ளன. இந்த நான்கு விமானங்கள் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. விமானத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மகரவடிவில் பலகணியில் தெற்கே பரவசுதேவர், மேற்கில் அச்சுதர், வடக்கில் அனந்தர், கிழக்கில் வேணு கோபால கிருஷ்ணர் ஆகிய திருமாலின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ள ஓம் என்ற பிரணவத்தின் வடிவமான இந்த பிரணவாகார கனக விமானத்தை கண்டு களியுங்கள் .
திருவேங்கடம்:
கலியுக வரதனாய், கண்கண்ட தெய்வமாய் எம்பெருமாள் கோவில் கொண்டிருக்கும் தலம் தான் திருவேங்கடம். பத்மாவதி தாயாரை மண முடிக்க குபேரனிடம் பெற்ற கடனை இந்த கலியுகத்திலும் அடைத்து கொண்டிருப்பதால், பக்தர்களின் காணிக்கையால் செல்வம் நிரம்பி வழியும் திவ்ய தேசம் இது. இந்தியாவிலேயே அதிகமான வருவாய் உள்ள கோவில் இத்திருக்கோவில் தான். இன்றும் உண்டியல் நிறையாவிட்டால் எம்பெருமாளுக்கு விலங்கு பூட்டும் வழக்கம் உள்ள தலம் இது. திருவரங்கத்திற்க்கு அடுத்தபடியாக பாடல் பெற்ற தலம் இது.
ஆனந்த நிலைய விமானம்
திரு வேங்கடம் என்பதன் ஒரு பொருள் திருவாகிய ஸ்ரீ மஹா லக்ஷ்மி வாசம் செய்வதால் ஐஸ்வர்யம் நிறைந்த தலம். அதனால் தான் அதிகமான பக்தர்களை தன் பால் ஈர்த்து அனைவருக்கும் நன்மைகளை செய்யும் தலமாக விளங்குகின்றது. மற்றொரு பொருள் வேம்+ கடம் என்று பிரிந்து நம்முடைய பாவங்களிலிருந்து நம்மையெல்லாம் விடுவித்து நமக்கு நற்கதியை அருளவல்ல தலம் என்றும் பொருள் படும். இத்தலத்தில் பெருமாள் அகலகில்லேன் என்று அலர் மேல் மங்கை மார்பில் உறைய நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். வாஸ்து முறைக்கு மிகவும் சிறந்த உதாரணம் இந்த திவ்ய தேசம் அதனால் தான் இங்கு வருவோர்கள் எல்லாரும் செழிப்படைகின்றனர் என்றும் நம்பப்படுகின்றது. இந்த விமானம் "ஆனந்த நிலையம் "என்று அழைக்கப்படுகின்றது. விமானத்திலேயே எம்பெருமாள் விமான வெங்கடேஸ்வரராகவும் சேவை சாதிக்கின்றார். அந்த ஆனந்த நிலயத்தைக் கண்டு நீங்களும் ஆனந்தம் அடையுங்களேன்.


திருவாவினன்குடி (பழனி) :

திருவாவினன் குடி திரு+ + வினன்+கு+டி அதாவது திருமகள் , காமதேனு, சூரியன், நிலமகள், அக்னி வழிபட்ட தலம். ஞானப் பழத்திற்காக அம்மையப்பரிடம் கோபித்துக் கொண்டு கோவணத்துடன், மொட்டையாண்டியாய் ஞானமாகிய தண்டத்தை வலது கையில் பிடித்து இடது கரத்தை இடுப்பில் ஊன்றி ஞான தண்டாயுதபாணியாய்,நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். இந்த குன்றின் மேல் முருகன் வந்து நின்றதால் குன்றிருக்குமிடமெல்லாம் குமரனிருக்கும் இடமாயிற்று. இந்த குன்று சூரபதமனுடைய ஆசிரியர் இடும்பனால் அகத்திய முனிவரின் ஆனைப்படி கைலாய மலையிலிருந்து சிவ மலை சக்தி மலை என்ற இரு குன்றுகளூம் காவடியாகக் கொண்டுவரப்பட்டது , இறையருளால் இங்கு தங்கிவிட்டது. எனவே தான் காவடிகள் செலுத்துவது முருகனுக்கு சிறந்த வேண்டுதல் ஆயிற்று. பழத்தின் காரணமாக குமரன் இங்கு வந்து நின்றதால் இத்தலம் பழனி என அழைக்கப்படுகின்றது.
பழனியின் எழில் மிகு பொன் விமானம்
எனவே தான் முருகனுக்கு பழங்களாலேயே உருவாக்கப்பட்ட பஞ்சாமிர்தம் அபிஷேகப் பொருளாயிற்று. இத்தலத்தின் மூலவர் போகர் என்னும் சித்தரால் நவ பாஷாணத்தால் அமைக்கப்பட்டவர். தமிழகத்து கோவில்களில் அதிக வருமானமுள்ள கோவில். முருகரின் ஆறு படை வீடுகளில் மூன்றாவது படை வீடு இத்தலம். தினமும் தங்கத்தேரில் எம்பெருமான் வலம் வரும் அழகைக் காண கண் கோடி வேண்டும். மின் ஒளியில் அந்த ஞான பண்டிதரின் தங்க விமானம் மின்னும் அழகைத்தான் பாருங்களேன்.
கருமாரியம்மன்


இந்த ஐந்து விமானங்களைத்தவிர பாண்டிச்சேரி மணக்குள விநாயகர், சென்னை கருமாரி அம்மன், ஸ்ரீபெரும்புதூர் இராமானுஜர் மதுரை சொக்கநாதர், மீனாக்ஷி அம்மன், ஒப்பிலிபியப்பன் கோவில் ஆகிய விமானங்களும் பொன் வேயப்பட்டு ஒளிர்கின்றன. சமயம் கிடைக்கும் போது சென்று தரிசித்து வாருங்கள் சூரிய ஒளியில் ஒவ்வொரு சமயத்திலும் அவை காட்டும் இந்திர ஜாலத்தை கண்டு இறையறுள் பெறுங்கள்.
சகல புவனங்களையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் ஆதிபராசக்தி அன்னை கருமாரியாய் எழுந்தருளி அருள் பாலிக்கும் திருவேற்காடு தலத்தின் பொன் விமானம்.

ஸ்ரீபெரும்புதூர் இராமானுஜர் பொன் விமானம்
தான் நரகத்தை அடைந்தாலும் சரி எல்லோரும் உய்ய வேண்டும் என்று திருக்கோட்டியூர் கோபுரத்தில் நின்று திருமந்திரத்தை அனைவருக்கும் உபதேசித்த பகவத் இராமானுஜரின் ஜன்மஸ்தலமும் தானுகந்த மேனியாக அவர் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீபெரும்புதூர் சன்னதி பொன் விமானம்.
* * * * * * * * * *