Tuesday, January 26, 2010

முத்துக்குமார சுவாமி தரிசனம் - 3

கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேள்

மேஷ வாகனத்தில் சேவை சாதிக்கும்
முத்துக்குமார சுவாமி

பண்ணேர் மறையின் பயனே சரணம்
பதியே பரமே சரணம் சரணம்

விண்ணேர் ஒளியே வெளியே சரணம்
வெளியின் விளைவே சரணம் சரணம்
உண்ணே ருயிரே உணர்வே சரணம் உருவே யருவே உறவே சரணம்
கண்ணே மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

திருப்போரூரில் இருந்து சென்னை பூங்கா நகருக்கு மூலவரான கந்த சுவாமி தானே வந்து சேர்ந்த அற்புதத்தை முதல் பதிவில் கண்டோம். அடுத்த பதிவில் உற்சவரான முத்துக் குமார சுவாமியின் வைபவமும் அவரது கற்பக விருட்ச சேவையும் கண்டோம் இனி வரும் பதிவுகளில் அவரது தைப்பூச பிரம்மோற்சவத்தின் மற்ற சேவைகளையும் இத்தலத்தின் மற்ற சிறப்புகளையும் காணலாம்.


ஐந்து நிலை இராஜ கோபுரம்

-->
-->ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்ய தேஜோமய சொரூபியாய் விளங்கும் மணிமிடற்றண்ணலாம் சிவபெருமானது பால நேத்ர உத்பவராய், சரவணப் பொய்கையிலே திருஅவதாரம் செய்து, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, திருவிளையாடல் புரிந்து, அம்மை உமாதேவியாரிடம் சக்தி வேல் பெற்று சூரர் குலத்தை கருவறுத்து தேவர் குழாத்தைக் காத்தருளித் தம்மை வழிபடும் அடியவர் துயர் நீங்க போகாங்க மூர்த்த மாஞ்சக உருவந்தாங்கி ஆங்காங்கு திருக்கோவில் கொண்டருளியிருக்கும் படைவீடு முதலான தலங்களைப் போல தொண்டை மண்டலத்திலே, தருமமிகு சென்னையிலே, இராசப்ப செட்டி தெருவிலே, அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப் பெருங்கருணை என்றும் வாடிய பயிரைக் கண்ட போது வாடினேன் என்று பாடிய வள்ளலார் சுவாமிகளால் " திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி " என்று பாடல் பெற்ற தலம் தான் சென்னை ஸ்ரீ கந்தசுவாமி கோவிலென வழங்கப்படும் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி தேவஸ்தானம். ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள், வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள் முதலாய ஞானியர்களால் பெரிதும் புகழ்ந்து பாடல் பெற்ற தலம்.

பூக்கடை கந்த சுவாமி கோவிலென வழங்கும் ஸ்ரீ முத்துக் குமார சுவாமி தேவஸ்தானம் , சென்னையின் நெரிசல் மிகுந்த பகுதியான பாரிமுனையிலே இராசப்ப செட்டி தெருவிலே கடைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது . வடக்கு நோக்கிய ஐந்து நிலை கோபுரம் நம்மை வா வா என்று அழைக்கின்றது, கோபுரம் முழுவதும் அருமையான சுதை சிற்பங்கள். கோபுர தரி்சனம் கோடி புண்ணியம் என்று இறைவனின் ஸ்தூல ரூபமான கோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் எதிரே முழுமுதற் கடவுளான கணநாதரை தரிசிக்கலாம். உள் வாயிலின் மேலே வள்ளி திருமணக் கோல சுதை சிற்பம் கண்ணுக்கு விருந்து. கோவிலை வலம் வந்தால் முதலில் இத்தலத்து முருகனைப் பாடிப்பரவிய வண்ண சரபம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் மற்றும் தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே என்று பாடிய வள்ளலார் சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஆகியோரின் சுதைசிற்பங்கள். கிழக்குப் பகுதியில் நெடிதுயர்ந்த துவஜஸ்தம்பம், கிழக்கு சுவரில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த ஜன்னல்கள், சிவபெருமான் சன்னிதிற்கெதிராக சிவலிங்க வடிவிலும், கந்த சுவாமி சன்னிதிற்கெதிராக நட்சத்திர வடிவிலும், தெய்வயானை அம்மன், வள்ளியம்மை சன்னதிற்கெதிராக மலர் வேலைப்பாட்டுடனும் கலை நயத்துடன் ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன வெளியே இருந்தே எம்பெருமானையும் தாயார்களையும் தரிசிக்க ஏதுவாக அமைந்துள்ளன.

மலர் வடிவில் ஜன்னல் துவாரங்கள்

துவஜஸ்தம்பத்தை அடுத்து கிழக்கு நோக்கி அருணகிரிநாதர் சன்னதி அதற்கு எதிரே யாகசாலை, அதன் அருகில் கண்ணாடிஅறை மற்றும் ஊஞ்சல் மண்டபம். பின் உற்சவர் மண்டபம், ஆறுமுகனுக்கு அறுகோண ஆஸ்தான மண்டபம், ஒரு சுற்றுடன் விளங்குகின்றது "ஓம் சரவண பவ" என்னும் சடாக்ஷர வடிவாய் விளங்கும் இந்த மண்டபத்தில் மூலவருக்கு இனையான சக்தியுடன் இத்தலத்தில் விளங்கும் பரம ஞான மூர்த்தியான தந்தைக்கே உபதேசம் செய்த ஞான பண்டித சாமி கோடி கோடி மன்மத லாவண்யத்துடன் பொன்னொளி மின்னும் வதனத்தினனாய், தேவிமார்கள் இருவருடனும், மயில் வாகனத்துடன், மன இருள்,அறியாமை, துன்பம் ஆகியவற்றை நீக்கும் சக்தி வேலுடனும் சேவல் கொடியுடனும் முத்துக் குமார சுவாமியாய் அருக் காட்சி தருகின்றார்.
பூரண மலர் அலங்காரத்துடன்
இரட்டைத் தலை சிம்ம வாகனத்தில்
தரிசனம் தரும் முத்துக்குமார சுவாமி
என்ன ஒரு ஈர்ப்பு எம்பெருமானின் திருமுருக வதனத்திலே, அந்த வடிவழகனை விட்டு அகல மனம் மறுக்கின்றது. நம் கண் பட்டுவிடுமோ என்று தான் எம்பெருமானுக்கு திருஷ்டிப் பொட்டு இட்டிருக்கின்றனர். மூலவரைப் போலவே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது உற்சவர் மண்டபம், எதிரேயே கண்ணாடி மண்டபம், எம்பெருமான் சர்வலங்கார பூஷிதராய் எழுந்துருளும் போது நாம் சேவிக்க. மனம் குளிர குஹப் பெருமானின் வடிவழகைக் கண்டு வணங்கி வெளி வந்தால் மண்டபத்தின் முகப்பில் திருக்கோவிலின் முத்திரை எடுப்பாக சலவைக் கற்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆஸ்தான மண்டபத்திற்கெதிரே 24 தூண் மண்டபம். மண்டபத்தின் ஒரு பக்க சுவரில் தெய்வமணிமாலை மற்றும் கந்தர் சரணப்பத்து கல்வெட்டு்களில். மேலே வள்ளி திருமணக் காட்சிகள் சுதை சிற்பங்கள் அருமை.

அடுத்து நவக்கிரக சன்னதி, இதற்கு அருகில் உள்ள மண்டபத்தில் மாரி செட்டியார் இத்திருக்கோவிலை உருவாக்கிய வரலாறு சுதை சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. சரவணப்பொய்கை திருக்குளக்கரையில் சித்தி புத்தி சமேதராய் ஸ்கந்த பூர்வஜன் தனி சன்னிதி, சித்தி புத்தி என்னும் தேவிமார்கள் இருவருடன் அமர்ந்த நிலையில் அருட்காட்சி தருகின்றார் பிள்ளையார். அவருக்கு வலப்பக்கத்திலே , காசி விஸ்வனாதர், விசாலாக்ஷி சன்னதி. சென்னையில் அமைந்துள்ள பல கோவில்கள் போலவே இடப்பற்றாக் குறையினால் திருக்கோவிலின் உள்ளேயே திருக்குளம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. குளக்கரையிலே அற்புதமான சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சரவணப் பொய்கை திருக்குளத்தில் வெல்லம் கரைத்தால் தீராத நோய்கள் எல்லாம் தீருகின்றது. சித்திரை மாதம் தெப்போற்சவம் இத்திருக்குளத்தில் நடைபெறுகின்றது.

இரட்டைத்தலை சிம்ம வாகன தரிசனம்

மேஷ வாகனத்தில் முத்துக்குமார சுவாமி

முருகப்பெருமானுக்கு மூன்று வாகனங்கள் என்பது ஐதீகம் அவையாவன மயில், யானை மற்றும் ஆடு. ஆணவமே வடிவான சூரனை முருகபபெருமான் தனது ஞான சக்தி வேலால் ச்ம்ஹாரம் செய்த போது அவன் சேவலாகவும், மயிலாகவும் மாறினான். மயில் முருருக்கு வாகனமானது, சேவல் அவரது கொடியானது. தெய்வயாணை அம்மையை வளர்த்தது ஐராவதம் என்னும் தெய்வீக யானை, தேவ சேனாதிபதியான முருகருக்கு தெய்வயானை அம்மையை இந்திரன் மணம் செய்து அளித்த போது ஐராவததையும் அளித்தான். எனவே ஐராவதமும் முருகப்பெருமானின் வாகனம் ஆனது. கந்த கோட்டத்திலும் மூலவருக்கு முன்னே பஞ்சலோக ஐராவத வாகனம் பிரதிஷ்டைச் செய்யப்பட்டுள்ளது. கந்த வேளின் மூன்றாவது வாகனம் ஆட்டுக்கிடா, நாரதர் செய்த வேளிவியில் தோன்றிய இந்த முரட்டு ஆட்டுக்கிடாவை அடக்கி தன் வாகனமாகக் கொண்டார். இன்றும் தஞ்சை மண்டலத்தில் சூர சம்ஹாரத்திற்கு முருகர் தகர் என்னும் இந்த ஆட்டுக்கிடா வாகனத்தில்தான் எழுந்தருளுகின்றார்.

இப்பதிவில் முத்துக்குமார சுவாமியின் இரண்டாம் நாள் காலை இரட்டைத்தலை சிம்மவாகன சேவையையும், நான்காம் நாள் காலை மேஷ வாகன சேவையும் கண்டு களிக்கின்றீர்கள் அன்பர்களே.

கந்த கோட்ட திருக்கோவில் வலம் தொடரும்..........

2 comments:

Test said...

கோபுர தரிசனம் மற்றும் கந்தர் அலங்காரம் மிகவும் நன்று,

S.Muruganandam said...

வரும் பதிவுகளையும் வந்து தரிசியுங்கள் முருகருள் பெறுங்கள்.