Monday, January 25, 2010

முத்துக்குமார சுவாமி தரிசனம் - 2

கந்த கோட்டம் உற்சவர் முத்துக்குமார சுவாமிஅருளா ரமுதே சரணம் சரணம்
அழகா அமலா சரணம் சரணம்

பொருளா வெனையாள் சரணம் சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்

மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வாகனனே சரணம் சரணம்

கருணாலயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம்.

மாயோன் திருமாலுக்கும் அவர் மருகன் சேயோன் முருகனுக்கும் பலவித ஒற்றுமைகள் உண்டு. இருவருமே தமிழர் போற்றும் தெய்வங்கள். இருவருக்கும் மனைவியர் இருவர். "மாமனைப் போல் இரு மாதுடன் கூடி, மாலையில் பழமுதிர்ச்சோலையில் ஆடி" என்னும் பாடலை அனைவரும் அறிவர். முருகன் வள்ளியை காதல் புரிந்து கடிமணம் புரிந்து கொண்டார். அது போலவே பல்வேறு சமயங்களிலும் திருமால் காதல் மணம் செய்து கொண்ட வரலாறு உள்ளது. அஹோபிலத்தில் செஞ்சு இனப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார், திருவரங்கத்தில் துலுக்கநாச்சியார். திருகண்ணபுரத்தில் மீனவர் குலப்பெண் பத்மினி என்று சொல்லிக் கொண்டே போகலாம். இருவரும் அசுரர்களை அழித்து தேவர்களை காப்பவர்கள். இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவை மட்டுமல்லாமல் தொண்டை மண்டலத்தில் சில தலங்களில் மாயோன் மற்றும் சேயோன் இருவரும் ஒரே மாதிரி தரிசனம் தருகின்றனர். திருவல்லிக்கேணியிலே உற்சவர் பார்த்தசாரதிப் பெருமாள் முகமெங்கும் முத்துக்களுடன் சேவை சாதிக்கின்றார். மூன்று முறை இப்பார்த்தசாரதியை வார்த்த போதும் அவர் திருமுகத்தில் இவ்வாறு தழும்புகளுடனே அமைந்தாராம். பின்னர் ஒரு அன்பரின் கனவில் இவை மஹாபாரதப் போரில் பீஷ்மரின் அம்பால் உண்டாகிய தழும்புகள் தான் அவ்வாறே சேவை சாதிக்க விரும்புவதாக பெருமாள் உணர்த்தினார். அதுபோலவே கச்சி உற்சவர் வரதராஜப் பெருமாள் பிரம்மா நடத்திய வேள்வித் தீயிலிருந்து தோன்றியவர் என்பதால் அவரது திருமுகத்திலும் நாம் முத்துக்களைக் சேவிக்கலாம். இவ்வாறே கந்த கோட்டத்து உற்சவர் முத்துக் குமார சுவாமியும் தேவியர் இருவரும் முகத்தில் முத்துகளுடன் தரிசனம் தருகின்றனர். திருமுகம் முத்துகளால் நிறைந்துள்ளதால் சுவாமியும் முத்துக்குமார சுவாமி என்னும் காரணப் பெயர் பெற்றார். இனி எவ்வாறு இப்படி முத்துக்களுடன் சுவாமி அமைந்தார் என்னும் வரலாற்றைக் காண்போமா?கேட்ட வரம் தரும் கற்பகநாதனாய் 
கண்கண்ட தெய்வமாய் கலியுகவரதனாய்

கற்பக விருக்ஷ வாகனத்தில் எழிலார் திருமுருகன்

கோவில் வளர வளர கந்த சுவாமிக்கு உற்சவங்கள் செய்து மகிழ விழைந்தனர் அன்பர்கள். ஆகவே உற்சவ மூர்த்தி செய்யும் பணி தொடங்கியது. மெழுகுச் சிலை அமைத்து , ஐம்பொன்னை அற்புதமாக உருக்கி வார்ப்படமாக ஊற்றி எழில் குமரன் சிலையை வார்த்தார் சிற்பி. பின் கட்டை பிரித்து வார்த்தெடுத்த சிலையில் விளங்கும், அந்த அழகன் முருகனை, சிங்கார வேலவனின், எழில் கொஞ்சும் அந்த திருமுகத்தை அமைக்க தலைமை சிற்பி உளி கொண்டு செதுக்க முற்பட்டார், ஆனால் அவருக்கு கிடைத்ததோ ஒரு மின்னல் அதிர்ச்சி, அலமலந்து விட்டார் அவர் அப்படி ஒரு அதிர்ச்சி அவருக்கு கிடைத்தது. அப்படியே தூக்கி வாரிப் போட்டது . அப்படியே அமர்ந்து விட்டார். இனி அந்த தெய்வச்சிலையில் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் சிலையை செப்பனிடுவதை விடுத்து அப்படியே கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார். அவர்களும் உற்சவர் உக்ரமாகவும், மிகவும் சக்தி உடையவராகவும் அமைந்து விட்டார் என்று எண்ணி அவரை வணங்க அஞ்சி ஒரு அறையில் வைத்து வெகு நாட்கள் பூட்டி வைத்து விட்டனர்


கற்பக விருக்ஷம் பின்னழகு

பின்பு அந்த எம்பெருமானின் அருளால் தன் அன்பர்களுக்கு அருள் வழங்க அன்புள்ளம் கொண்ட முருகப்பெருமான் ஒரு அன்பனை அனுப்பினான். அந்த முருக பக்தர் வந்து பல் வேறு பூஜைகள் சாந்திகள் செய்து முத்துக் குமார சுவாமியின் உக்ரத்தை குறைத்த பின் மீண்டும் அவரை வழிபடத் தொடங்கினர். ஆகவே இன்றும் முத்து குமார சுவாமியின் உடம்பு முழுவதும் முத்துக்களாக இருப்பதையும், வலது கண் அப்படியே முழுமை பெறாமல் இருப்பதையும் நாம் காணலாம். தாயார் இருவரும் அவ்வாறே சிறு சிறு முத்துக்களுடன் விளங்குவதையும் காணலாம். எனவே மூலவரைப் போலவே இத்தலத்தில் உற்சவரும் சிறப்பு வாய்ந்தவர்


வனவள்ளி காமதேனு வாகனத்தில்


உற்சவருக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது இத்தலத்தில். அறுகோண வடிவத்தில் நூதன சலவைக் கற்கள் அமைந்த மண்டபத்தில் தேவியருடன் கொலுவிருந்து அருள் பாலிக்கின்றான் முத்துக்குமரன் தன் கருணையை அன்பருக்கு வழங்கியபடி. மேலே கந்தன் கலை அரங்கம் சென்று விமானங்களை தரிசித்தால் உற்சவரின் விமானம் மூலவரின் விமானத்தை விட உயரமாக இருப்பதைக் காணலாம். இத்திருத்தலமும் கந்தசுவாமி கோவிலெுன்னும் முத்துக் குமார சுவாமி தேவஸ்தானம் என்று மூலவர் மற்றும் உற்சவர் பெயரால் அறியப்படுகின்றது. நடுவில் வேல், இருபக்கமும் மயில் மற்றும் சேவல் விளங்க இத்தலத்திற்கு ஒரு தனி முத்திரையே உள்ளது இக்கோவிலுக்கு. 

கஜவல்லி காமதேனு வாகனத்தில்


இவ்வாறு அற்புதமாக தானே வந்து தலையளித்த தனி முதலை அழகன் முருகனை, செங்கல்வராயானை சிவகாமி பாலனை தங்கக் கவசம் பூட்டி பாதுகாக்கின்றனர். முத்துகுமார சுவாமிக்கு வருடத்தில் ஒன்பது நாட்கள் மட்டுமே முழு அபிஷேகம் நடைபெறுகின்றது. மற்ற நாட்களில் ஐயனின் பாதங்களில் மட்டும் பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகின்றது. முழு அபிஷேகம் நடக்கும் சில நாட்கள் சித்திரை வருடப்பிறப்பு, ஆனி திருமஞ்சனம், ஆவணி அவிட்டம், கார்த்திகை ஏகாந்த சேவை, தை பிரம்மோற்சவத்தின் முதல் நாள், தேரிலிருந்துஇறங்கிய பின் , பிரம்மோற்சவம் முடிந்து உற்சவ சாந்தி அபிஷேகம்,பங்குனி உத்திரம் முதலியன.


இப்பதிவில் தாங்கள் காணும் புகைப்படங்கள் தைப்பூச பிரம்மோற்சவ முதல் நாள் மாலை கற்பக விருக்ஷ சேவை காட்சிகள். உற்சவருடன் உள்ள அம்மையர் இருவரும் எப்போதும் பாகம் பிரியாமல் ஐயனுடனேயே சேவை சாதிக்கின்றனர்.

4 comments:

Logan said...

திரு கைலாஷி,

திருக்கார்த்திகை தினத்தன்று தமிழ் கடவுளாம் எந்தன் முருகன் தரிசனத்தை பெற்றேன். பலமுறை சென்று இருந்தாலும் "முத்துக்குமார சுவாமி" பெயர் காரணம் தற்போது தான் அறிந்து கொண்டேன்... தங்கள் நற்சேவைக்கு நன்றி....

இக்கோவிலில் சஷ்டி திருநாட்களில் மூலவர், உற்சவர் முத்துக்குமார சுவாமி, ஆறுமுகன், தண்டயதபணி என தனித் தனியாக அனைத்து சன்னிதிகளிலும் காலை முதல் இரவு வரை சஷ்டி அர்ச்சனை நடைபெறுவது தனி சிறப்பு.

Kailashi said...

//இக்கோவிலில் சஷ்டி திருநாட்களில் மூலவர், உற்சவர் முத்துக்குமார சுவாமி, ஆறுமுகன், தண்டயதபணி என தனித் தனியாக அனைத்து சன்னிதிகளிலும் காலை முதல் இரவு வரை சஷ்டி அர்ச்சனை நடைபெறுவது தனி சிறப்பு.//

ஆம் Logan ஐயா. கந்தர் சஷ்டி ஆறு நாட்களிலும் இத்திருத்தலத்தில் கோடி அர்ச்சனை நடைபெறுவதால் இவ்வாறு அனைத்து சன்னதிகளிலும் அர்ச்சனை நடைபெறுகின்றது. சமஸ்கிருத அர்ச்சனை முடிந்த பிறகு தமிழில் அனைவரும் 108 போற்றிகள் கூற அனுமதிப்பது அடியேனுக்கு மிகவும் பிடிக்கும்.

Kailashi said...

//திருக்கார்த்திகை தினத்தன்று தமிழ் கடவுளாம் எந்தன் முருகன் தரிசனத்தை பெற்றேன்.//

தைக் கிருத்திகை நாள் அன்று முத்துக்குமார சுவாமியின் தங்க மயில் வாகன சேவை( ஐந்தாம் நாள் உற்சவம்) காணும் பாக்கியமும் கிட்டியது அதை பின்னர் பதிவு செய்கின்றேன். வந்து தரிசியுங்கள் ஐயா.

Logan said...

நன்றி ஐயா