Tuesday, December 29, 2009

பஞ்ச லோக படிம ஸ்தலங்கள் தரிசனம்

திருசிற்றம்பலம்

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட

கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சரமுகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை முருகேசனாட

ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு முனியட்ட பாலகருமாட
நரை தும்பை யறுகாட நந்தி வாகனமாட நாட்டியப்பெண்களாட

வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை விருதோடு ஆடிவருவாய் யீசனே சிவகாமி நேசனே யுனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

செப்பறை காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் ஆலயம்

இந்த ஆருத்ரா தரிசன நல்வேளையில் முதலில் காவிரிக் கரையின் தஞ்சை மண்டலத்தின் திருநல்லம் சுயம்பு நடராஜர் தரிசனம் கண்டோம்.

அடுத்து கொங்கு மண்டலத்தின் நொய்யலாற்றங்கரையின் மேலைச் சிதம்பரம் பேரூர் நடராஜர் தரிசனம் கண்டோம்.

இப்பதிவில் நாம் காணப்போகும் தரிசனம் தண்பொருநை என்னும் தாமிரபரணி பாய்ந்து வளம் கொழிக்கும் தென்பாண்டி நாட்டின் செப்பறை மற்றும் இத்தலத்துடன் தொடர்புடைய ஆலயங்களின் ஆனந்த தாண்டவ மூர்த்தியின் தரிசனம் , வாருங்கள் அன்பர்களே.

தில்லை சிற்றம்பலவணார்

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன்; நல் தில்லைசிற் றம்ப்லத்தே தீஆடும் கூத்தன்;இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்க்கலைகள்
ஆர்ப்புஅரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டு ஆர்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொன்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடுஏல்ஓர் எம்பாவாய்!


தென்பாண்டி நாட்டில் தாமிரபரணிக் இரு கரையிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கின என்று புராணங்கள் பேசுகின்றன, எனவே இப்பகுதி சிவலோகம் என்றே அழைக்கப்பட்டது. இந்த புண்ணிய பூமியில் அம்பலவாணரின் பஞ்ச சபைகளில் இரண்டு சபைகள் உள்ளன அவையாவன செப்பம்பலம் என்னும் தாமிர சபை திருநெல்வேலியில் உள்ளது. சித்திர அம்பலம் என்னும் சித்திர சபை குற்றாலத்தில் உள்ளது. இவை மட்டுமல்லாது உலகின் முதல் நடராஜ மூர்த்தம் என்று நம்பப்படும் மூர்த்தம் செப்பறையில் உள்ளது. இச்செப்பறையில் உள்ளது போன்ற நடராஜர் கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம், மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கட்டாரி மங்கலம் ஆகிய தலங்களில் அருள் பாலிக்கின்றனர். இந்த நான்கு தலங்களுடன் சேர்ந்து துருவை என்னும் தலமும் பஞ்ச லோக படிமத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வாருங்கள் தில்லை ஆனந்த கூத்தப் பிரான் எவ்வாறு செப்பறை வந்து சேர்ந்தார் என்று காண்போம்.சிங்கவர்மன் என்னும் மன்னன் சிதம்பரத்தில் ஸ்தாபிதம் செய்ய ஒரு நடராஜர் மூர்த்தத்தை வடிக்க எண்ணி சோழ நாட்டு சிற்பி நமசிவாயமுத்து ஸ்தபதியை கூப்பிட்டு அனுப்பினார். அப்போது என்ன நடந்தது?

( சிங்கவர்மன் அரசவையில் தனது அமைச்சர்களுடன் அமர்ந்திருக்கின்றான் அப்போது அரண்மனை காவலன் வந்து கூறுகின்றான்.)

காவலன்: மன்னர் மன்னா வணக்கம், தங்களைக் காண நமசிவாயமுத்து ஸ்தபதி வந்திருக்கின்றார்.

அரசன்: அப்படியா? மிக்க நன்று, அவரை உரிய மரியாதையுடன் அவரை உள்ளே அழைத்துவா.

(ஸ்தபதி உள்ளே வந்து மன்னனை தண்டனிட்டு நிற்கின்றார்.)

அரசன்: வாருங்கள் ஸ்தபதியாரே, தங்களை அழைத்ததற்கு காரணம், ஐந்தொழில் புரியும் எம் ஐயனுக்கு, முக்கண் முதல்வருக்கு, ஆனந்த கூத்தாடும் நடராசருக்கு, பொன்னார் மேனியருக்கு ஒரு அற்புத சிலை வடிக்க வேண்டும், ஆகம விதிப்படி வடிப்பீர்களாக.

ஸ்தபதி: அப்படியே ஆகட்டும் மன்னா.

அரசன்: அமைச்சரே! சிற்பி கேட்கின்ற அளவு பொன்னும் பொருளும் என் பொக்கிஷத்திலிருந்து அளிக்கவும், ஐயனின் சிலை அற்புதமாக அமைய வேண்டும்.
அமைச்சர்: அதில் ஒன்றும் ஐயம் வேண்டாம் அரசே. அடியேனே முன் நின்று சிற்றம்பலவாணருக்கு அருமையான மூர்த்தம் அமைய வேண்டிய உதவிகளை செய்கின்றேன்.

(சிற்பி தமது சீடர்களுடன் வேயுறு தோளி பங்கரின் சிலை வார்க்கும் பணியை ஆரம்பித்தார். (ஒரிரு மாதம் கழித்து )

அமைச்சர்: அரசே! ஒரு மிக நல்ல செய்தி!

அரசன்: என்ன எம் சபாநாயகர் மூர்த்தம் தயாராகி விட்டதா அமைச்சரே ?
அமைச்சர்: ஆம் ஐயனே, அது தான் அந்த ஆனந்த செய்தி.

அரசன்: வாருங்கள் இப்போதே சென்று சிவகாமி மணாளரின் திருவழகைக் கண்டு களிக்கலாம்.

(அரசனும், அமைச்சரும் மற்ற பிரதானிகளும் சிற்பியின் இல்லத்திற்கு செல்கின்றனர்.)

அரசன்: சிற்பியே! எங்கே என் ஐயன், அம்பலத்தரசரின் அருள் வடிவம் எவ்வாறு வார்த்திருக்கின்றீர்கள். அவரைக் காண இத்தனை நாள் தவம் செய்து கொண்டிருக்கின்றேன். உடனே அவரது எனக்கு தரிசனம் செய்து வையுங்கள்.

சிற்பி: வாருங்கள் அரசே, பூசையறை செல்வோம் அங்கு தான் அம்மையப்பரின் அழகிய திருமூர்த்தத்தை அமைத்திருக்கின்றேன்.

(பொன்னம்பலவரின் முதல் சிலையைக் கண்ட மன்னன் முகத்தில் திருப்தி இல்லை.)

அமைச்சர்: அரசே! என்ன தங்கள் முகம் சூரியனைக் கண்ட தாமரை போல மலரவில்லையே, ஆர்த்த பிறவி துயர் கெட ஆடும் ஐயனின் மூர்த்தம் தங்களுக்கு திருப்தியளிக்கவில்லையா? தங்கள் வதனம் வாடியுள்ளதே.

அரசன்: ஆம் அமைச்சரே! எம் ஐயன் தேவாதி தேவன், சகல புவனத்தையும், படைத்தும், காத்தும், அழித்தும், அருளியும், மறைத்தும் விளையாடும் முதல்வர், திருக்கயிலை மலையில் ஆனந்த தாண்டவம் ஆடுபவர். அவருக்கு அமைந்த மூர்த்தம் செப்பு சிலையாக அமைந்துள்ளதே.

அமைச்சர்: ஐம்பொன் சிலை என்றாலும் அதிகம் செம்பு கலந்துள்ளதால் தங்களுக்கு செப்பு சிலையாக தோன்றுகின்றது அரசே.

அரசர்: பொன்னம்பலத்தில் நிருத்தியம் செய்யும் என் பொன்னார் மேனியருக்கு பொன்னால் மூர்த்தம் அமைந்தால் தான் பொருத்தமாக இருக்கும் உயர்ந்த சொக்கத் தங்கத்தில் அல்லவா அமைய வேண்டும் புது சிலை செய்ய உத்தரவிடுகின்றேன். அது பசும்பொன் சிலையாக அமையட்டும்.

(சிற்பி பொன்னால் சிற்றம்பலவாணருக்கு இரண்டாவது சிலை வடிக்க ஆரம்பித்தார். சிலைப்பணிகளும் முடிந்தன. ஆனால்…)

சிற்பி: அமைச்சரே! என்னவென்று தெரியவில்லை. இவ்வளவு பொன் போட்டும் ஐயனின் சிலை மட்டும் செப்பு சிலையாகவே வந்திருக்கின்றது. இது என்ன என்று புரியவில்லை.

அமைச்சர்: அது எப்படி சாத்தியம், தாங்கள் பொன் அனைத்தையும் நடன சிகாமணி சிலை வடிக்கத்தானே பயன் படுத்தினீர்கள்?

சிற்பி: அமைச்சரே அதில் ஒன்றும் ஐயம் வேண்டாம் அமைச்சரே.

அமைச்சர்: நான் அரசரிடம் சென்று அறிவிக்கின்றேன், ஆனால் இராஜ தண்டனைக்கு தாங்கள் தயாராக இருங்கள்.

( சிற்பி மனப்பூர்வமாக அந்த ஆண்டவன் தாள்களையே பற்றி அவரிடம் வேண்டுகின்றார். முக்கண் முதல்வரே தாங்கள் உண்மையை அறிவீர்கள் அரசனுக்கு தாங்கள்தான் உண்மையை உணர்த்த வேண்டும்.)

இரண்டாவது சிலையை வந்து பார்த்த மன்னன் அச்சிலையும் செப்புச்சிலையாகவே இருந்ததையும் கண்டு கோபம் கொண்டு, சிற்பியை சிறையிலிட உத்தரவிட்டு சென்று விடுகின்றார். இரவில் மன்னன் கனவில் வார் சடை அண்ணல் தோன்றி "நான் உன் கண்ணுக்கு மட்டுமே தங்கமாக தெரிவேன். மற்றவர்கள் கண்ணுக்கு தாமிர மாகவே தெரிவேன். இதுவே என் விருப்பம்!'' எனக்கூறி மறைந்தார்.)

அரசன்: ஐயனே என்ன மடமை. தங்களின் திருவுள்ளம் இது என்ற உண்மை தெரியாமல் சிற்பியை சிறையிலிட்டுவிட்டேனே. ஆண்டவா! என்னை மன்னித்து விடுங்கள் காலை எழுந்ததும் முதலில் அவரை விடுதலை செய்கின்றேன்.

காலை எழுந்தவுடன் அமைச்சரை கூப்பிட்டனுப்பி சிற்பியை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அரசர்: சிற்பியே அடியேன் தான் தவறு செய்து விட்டேன் , இவ்வாறு அமைய வேண்டும் என்பது அந்த ஆண்டவன் திருவுள்ளம். தாங்கள் செய்த அற்புத பணிக்கு இதோ பரிசு பொக்கிஷத்திலிருந்து எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தாங்கள் வடித்த முதல் சிலையையும் தாங்களே எடுத்து செல்லுங்கள்.

இவ்வாறு நம் ஆர்த்த பிறவி துயர் கெட கூத்தாடும் நடராஜப் பெருமானுக்காக வடிக்கப்பெற்ற இரண்டாவது சிலை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முதல் சிலை என்னவாயிற்று என்று அறிய ஆவலாக உள்ளதே. நமது இந்தப் பதிவின் கரு அதுதானே அடுத்து அதைக் காண்போம்.

முதலில் செய்த சிலையை மன்னன் இறைவனின் கட்டளைப்படி சிற்பி ஒருவனிடம் கொடுத்துவிட்டான். அவனது கனவில் தோன்றிய சிவன், "இந்தச் சிலையை சுமந்துகொண்டு தெற்கு நோக்கிச் செல்,'' எனக்கூறி மறைந்தார். அவரும் அச்சிலையை அவர் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு தென் தமிழ் நாட்டுக்கு சென்றார்.

தாமிரபரணியின் வடகரையில் ராஜவல்லிபுரம் கிராமம் உள்ளது. இவ்வூரிலேயே மன்னர் ராமபாண்டியனின் அரண்மனை இருந்தது. இவர் தினமும் திருநெல்வேலியிலுள்ள காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகே சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். . ஒருமுறை தாமிரபரணியில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதால் அவரால் ஆற்றைக் கடக்க அம்மையப்பரை தரிசிக்க முடியவில்லை. அன்று முழுவதும் ராமபாண்டியன் பட்டினியாக இருந்தார். அன்று இரவில் மன்னர் கனவில் நெல்லையப்பர் தோன்றி, "இனிமேல் உன் மாளிகையின் அருகிலேயே நான் கோயில் கொள்ள முடிவு செய்துள்ளேன். சிதம்பரத்திலிருந்து ஒருவன் எனது நடனமாடும் வடிவுடைய விக்ரகத்துடன் வருவான். அந்த விக்ரகத்தை உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டு. கோயில் கட்டுமிடத்தின் அருகிலுள்ள குழிக்குள் எறும்புகள் ஊர்ந்துசெல்லும். அந்த இடத்தில் லிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்துவிடு,'' என கூறி மறைந்தார்.


இவ்வாறு இறைவன் ஆணையிட்ட அதே சமயம் , சோழ நாட்டு சிற்பியும் முதலில் வடித்த நடராஜரின் விக்ரத்தை சுமந்து கொண்டு இறைவனின் விருப்பப்படி தென் திசை நோக்கி வந்தார். வழியில் ஓரிடத்தில் சிலை மிகவும் கனத்தது. அதற்கு மேல் அவரால் சிலையை சுமக்க முடியவில்லை. எனவே அவர் சிலையை அந்த செப்பறை என்ற இடத்தில் வைத்துவிட்டு, களைப்பினால் தூங்கி விட்டார். கண்விழித்து பார்த்தபோது சிலையை காணவில்லை. அவர் பதைபதைத்து மன்னனிடம் முறையிட்டார்.


செப்பறையின் தாமிர அம்பலம்

ராமபாண்டியன் அதிர்ச்சி யடைந்து சிலையை தேடிச்சென்றார். வேணுவனத்தில் ஓரிடத்தில் சலங்கை ஒலியும், யாரோ நடனமாடும் சப்தமும் கேட்டது மேலும் நல்ல அறிகுறிகளும் தென்பட்டன. அந்த இடத்தில் மன்னர் சென்று பார்த்தபோது நடராஜரின் சிலை இருந்ததைக் கண்டார். ஐயன் கனவில் கூறியபடி அதன் பக்கத்திலேயே ஒரு குழியில் எறும்புகள் ஊர்ந்து சென்று மறைந்து கொண்டிருந்தன. ராமபாண்டியன் மகிழ்வடைந்து லிங்கம் ஒன்றை எறும்புகள் ஊர்ந்த குழியின் மீது பிரதிஷ்டை செய்தார். நடராஜருக்கும் தனி சன்னதி அமைத்தார். அவர் கட்டிய கோயில் வெள்ளத்தால் அழிந்துவிட்டது. அதன்பிறகு ஆரை அழகப்ப முதலியார் என்பவர் இப்போதுள்ள கோயிலைக் கட்டினார். தில்லையில் உள்ளது போலவே இங்கும் நடராஜருக்கு சபை அமைந்துள்ளது ஆனால் இங்கு செப்புத்தகடு வேயப்பட்டுள்ளது. செப்பறை என்றாலும் தாமிர சபை என்றுதானே பொருள். இவ்வாறு இறைவனின் திருவுள்ளப்படி முதல் விக்ரகம் செப்பறையில் வந்து அமர்ந்தது. இனி இக்கோவிலைப் பற்றி காண்போமா?

இத்தலத்தில் இறைவன் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். மூலவரான "வேண்ட வளர்ந்தநாதர்' சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே "நெல்லையப்பர்' எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம். நடராஜத் தலம் என்பதால் ஆருத்ரா தரிசனமும், ஆனித் திருமஞ்சனமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனி மாதத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பிரம்மோற்சவம் நடக்கும்போது இங்கும் அதே விழா நடக்கும். இத்தலத்தின் நடராஜப் பெருமானுக்கு "அழகிய கூத்தர்" என்னும் திருநாமம். திருமால், அக்னி, அகத்தியர் மற்றும் பாண்டிய மன்னனுக்கு திருநடனக் காட்சி தந்ததாக ஐதீகம்.


செப்பறைக் கோவில் உள் தோற்றம்


இந்த செப்பறை ஆலயம் இயற்கை எழில் மிக்க கிராமம் ஆகும். திருநெல்வேலி மதுரை சாலையில் தாழையூத்தில் இருந்து பிரியும் சாலையில் சென்றால் செப்பறை நடராஜரை தரிசனம் செய்யலாம். இக்கோவில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 10 கி, மீ தூரத்தில் இராஜவல்லிபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ளது. இனி மற்ற தலங்களில் இதே போல நடராஜ மூர்த்தங்கள் அமைந்தன என்று காணலாமா?


மன்னன் ராமபாண்டியனின் எல்லைக்குள் வீரபாண்டியன் என்னும் சிற்றரசன் இருந்தான். செப்பறையில் இருந்த நடராஜர் சிலையை அவன் கண்டான். ஐயனின் அழகில் மயங்கிய வீரபாண்டியன், அதேபோல தனக்கும் இரண்டு சிலைகள் வேண்டும் என ஸ்தபதியிடம் கூறினான். சிலை செய்யும் பணி துவங்கியது. இம்மூர்த்தத்தில் ஒன்றை கட்டாரிமங்கலத்தில் உள்ள கோயிலிலும், மற்றொன்றை தென் காளத்தி என்று அழைக்கப்படும் கரிசூழ்ந்தமங்கலம் கோயிலிலும் பிரதிஷ்டை செய்ய எண்ணீனான்.

சிலை செய்யும் பணி முடிந்தது. சிலைகளும் சிதம்பரம் நடராஜர் போலவே அற்புதமாகவும் அழகாகவும் கலை அம்சத்துடனும் அமைந்தது. சிலைகளின் அழகைக் கண்டு மன்னன் ஆனந்தம் கொண்டான் அதே சமயம் இதே போல சிலைகள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஸ்தபதியை கொன்றுவிடும்படி காவலாளிகளுக்கு கட்டளையிட்டான். வீரர்கள் ஸ்பதியின் மீது இரக்கம் கொண்டு அவரது கையை மட்டும் வெட்டிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட ராமபாண்டியன், வீரபாண்டியன் மீது கோபம் கொண்டான். ஸ்தபதியின் கையை வெட்டிய வீரபாண்டியனின் கைகளை துண்டித்தான். இவ்வாறு செய்யப்பட்ட இரண்டு சிலைகளும் கட்டாரிமங்கலம் மற்றும் கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.இதன் பிறகு ஸ்தபதிக்கு மரக்கை பொருத்தப்பட்டது. கலையார்வம் மிக்க ஸ்தபதி, மரக்கைகளின் உதவியுடன், முன்னை விட அழகாக மற்றொரு சிலை செய்தார். அந்தச்சிலையின் அழகைப் பார்த்து அதன் கன்னத்தில் கிள்ளினான். அவ்வாறு கிள்ளிய வடுவுடன் கூடிய சிலை கருவேலங்குளம் சௌந்தர பாண்டீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுவே தென்பாண்டி நாட்டில் நடராஜர் அமர்ந்த வரலாறு ஆகும்.

ஐந்து ஆனந்த தாண்டவ மூர்த்திகளிலும் தாங்கள் ஒரு ஒற்றுமையைக் காணலாம். திருவாசி உருண்டையாக இல்லாமல் நீள் வட்டமாக உள்ளது. அதாவது மூர்த்தம் ஸ்ரீசக்ர வடிவமாக ஒடுங்கி அமைந்துள்ளது. வட்டவடிவமாக திருவாசி இருந்தால் அறு கோண சக்கர வடிவாக ஐயன் அகலமாக இருப்பார். ஐயனுடைய ஜடாமுடியையும் கவனியுங்கள். முன் பக்கம் இல்லாமல் பின் பக்கம் தாழ்ந்த சடையாகவே உள்ளது.

திருவாதிரையன்று நான்கு நடராஜர்களையும் தரிசனம் செய்ய விரும்புவர்கள் திருநெல்வேலிக்கு சற்று முன்புள்ள தாழையூத்து என்ற ஊரில் இருந்து ராஜவல்லிபுரம் செல்லும் பிரிவில் சென்று, செப்பறையை அடையலாம். அங்கு உலகின் முதல் நடராஜரை தரிசித்து விட்டு, அங்கிருந்து திருநெல்வேலி பைபாஸ் ரோடு வழியாக பத்தமடை செல்ல வேண்டும். பத்தமடையிலிருந்து கரிசூழ்ந்தமங்கலம் பிரிவில் திரும்பி 3 கி,மீ., தூரத்திலுள்ள கரிசூழ்ந்தமங்கலம் சென்று, கனகசபாபதியை தரிசிக்க வேண்டும். இங்கிருந்து பத்தமடை வழியாக நாகர்கோவில் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., சென்றால் கருவேலங்குளத்தை அடையலாம். இங்கே, கன்னத்தில் கிள்ளப்பட்ட நடராஜரை தரிசித்து விட்டு, களக்காடு, நான்குநேரி, மூலக்கரைப்பட்டி வழியாக கட்டாரிமங்கலத்தை 40 கி.மீ., கடந்து அடையலாம். இந்த நான்கு தலங்களையும் திருநெல்வேலயில் இருந்து காரில் சென்று வந்தால் 4 மணி நேரத்தில் தரிசனம் முடித்து விடலாம்.திருவாதிரை அன்று இந்தக் கோயில்கள் நாள் முழுவதும் திறக்கப்பட்டிருக்கும். பஸ்களிலும் சென்று வரலாம்.

*******


அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2010 நல்வாழ்த்துக்கள்.


இந்த வருடம் ஆங்கில புத்தாண்டு அன்று ஆருத்ரா தரிசனம் வருகின்றது. ஒரு புது வருடத்தை தொடங்க இதை விட ஒரு அருமையான வாய்ப்பு கிட்டுமா? முடிந்தவர்கள் தில்லையில் சென்று சிற்றம்பலவாணரின் மஹா அபிஷேகத்தையும் திருவாதிரை தரிசனத்தையும் அல்லது திருவாரூர் சென்று தியாகராஜப்பெருமானின் வலது பாத தரிசனத்தையும் அல்லது உத்திரகோச மங்கை சென்று மரகத நடராஜர் தரிசனத்தையும் அல்லது பஞ்ச சபைகளின் மற்ற சபைகளில் பஞ்ச கிருத்திய பாராயணரின் நடனத்தையும், திருவொற்றியூரிலே செண்பக தியாகரின் பதினெட்டு வகை நடனத்தையோ கண்டு அருள் பெறுமாறு வேண்டுகின்றேன்.

திருசிற்றம்பலம்

14 comments:

Sundar said...

“அதாவது மூர்த்தம் ஸ்ரீசக்ர வடிவமாக ஒடுங்கி அமைந்துள்ளது ” இதை சற்று விரிவாக்கி சொல்ல முடியுமா

சுந்தரராஜன்

Sundar said...

“அதாவது மூர்த்தம் ஸ்ரீசக்ர வடிவமாக ஒடுங்கி அமைந்துள்ளது ” இதை சற்று விரிவாக்கி சொல்ல முடியுமா

சுந்தரராஜன்

Sundar said...

அழகாக எழுதியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள், ஒரு சிறு சந்தேகம்.

“செப்பறையை அடையலாம். அங்கு உலகின் முதல் நடராஜரை தரிசித்து விட்டு,... “ இதற்கு வேறு ஆதாரம் இருக்கின்றதா? சிதம்பரத்தில் நடராஜர் சில வைப்பதற்கு முன்பு சிலை இருந்தில்லையா? காலத்தினால் இதுதான் முற்பட்டதா? எந்த காலம்?

சுந்தரராஜன்

Kailashi said...

//அதாவது மூர்த்தம் ஸ்ரீசக்ர வடிவமாக ஒடுங்கி அமைந்துள்ளது ” இதை சற்று விரிவாக்கி சொல்ல முடியுமா//

ஐயனின் மூர்த்தத்தில் துடிக்கரமும், அனல் ஏந்திய கரமும் திருவாசியின் மேல் வரும்படி வார்க்கப் படுவதால், வட்ட(circular)திருவாசியில் ஐயனின் மூர்த்தம் அகலமாக இருக்கும்.எனென்றால் விட்டம்(diameter) உயரத்திலும் அகலத்திலும் ஒன்றாக இருக்கும்.

அதே ஸ்ரீ சக்கரத்தில் ஐயனின் திரு மூர்த்தம் அமையும் திருவாசி் நீள் வட்டமாக( elliptical, y axis > x axis) அதாவது உயரம் அதிகமாகவும், அகலம் குறைவாகவும் அமையும்.

படம் வரைந்து விளக்கினால்தான் நன்றாக விளங்கும். இது ஒரு சிற்ப சாஸ்திர உண்மை.

அடியேனிடம் ஆங்கிலத்தில் ஒரு விளக்கம் உள்ளது. விரும்பினால் தங்கள் ஈ.மெயில் முகவரிக்கு அதை பதிவெடுத்து அனுப்பிவைக்கிறேன். தங்கள் விருப்பத்தையும் முகவரியையும் அளிக்கவும்.

Kailashi said...

ஒன்றைக் கூற மறந்து விட்டேன், நேற்று கூத்தப்பிரானின் மஹா ஆருத்ரா தரிசனத்தை ஆயிரம் கால் மண்டபமாம் இராஜ சபையில் தரிசனம் செய்த போது இதே போல ஸ்ரீ சக்ரத்தின் நடுவுள் ஐயன் நடனமாடும் ஓவியத்தையும் காணும் பாக்கியம் கிடைத்தது.

தாங்கள் எப்போதாவது அங்கு சென்று தேவாதி தேவனை நடராஜனை தரிசிக்கும் பேறு பெற்றால் அவ்வோவியத்தையும் காணலாம்.

Kailashi said...

//செப்பறையை அடையலாம். அங்கு உலகின் முதல் நடராஜரை தரிசித்து விட்டு,... “ இதற்கு வேறு ஆதாரம் இருக்கின்றதா? //

தற்போது அடியேனிடம் ஒன்றும் இல்லை. தலவரலாற்றின் அடிப்படையில் எழுதிய தகவல். ஏதாவது கிடைத்தால் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Kailashi said...

// காலத்தினால் இதுதான் முற்பட்டதா? எந்த காலம்?//

ஆருத்ரா தரிசனத்தின் போது இராஜ சபையில் பார்த்த இன்னும் மூன்றும் சித்திரங்கள்.

1. சிங்கவர்மன் சிவகங்கை குளத்தில் மூழ்கி ஹிரண்யவர்மனாக ( ஹிரண்யம்-தங்கம்) வெளி வருதல்.

2. ஹிரண்யவர்மன் நடராஜப் பெருமானுக்கு ஆலயம் அமைத்தல்.

3. ஹிரண்யவர்மனே நடராஜருக்கு பிரம்மோற்சவம் செய்து வைத்தல்.

இவற்றிலிருந்து முற்கால சோழர் காலத்தில் செப்புப்படிமக் கலை தொடங்கி இருக்கலாம். பின்னர் பிற்கால சோழர் காலத்தில் அவை மிகவும் புகழ் பெற்றன.

முற்கால சோழர் சிலைகளில் பறக்கும் ஜடாமுடி இல்லாமல் இருந்த்து, பிற்கால சோழர் சிலைகளில் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம். செப்புச்சிலைகள் வருவதற்கு முன்னர் சித்திரங்களாகவோ கல் சிலைகளாகவோ (லிங்க ரூபமாகவே) நடராஜர் வழிபடபட்டிருக்க வேண்டும்.

குறிப்பாக நமது தமிழ்நாட்டில்தான் எல்லா சிவாலயங்களிலும் நடராஜப்பெருமானுக்கு தனி சன்னதி இருப்பதைக் காணலாம். மற்ற மாநிலங்களில் புடைப்பு சிற்பங்களாகவே கூத்தபிரான் சித்தரிக்கப்படுவதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

//சிதம்பரத்தில் நடராஜர் சில வைப்பதற்கு முன்பு சிலை இருந்தில்லையா?//

ஆதி காலத்தில் இருந்தே யாகத்தில் இருந்து சுயம்புவாகத் தோன்றிய இரத்ன சபாபதியும், நித்ய பூஜைக்காக சிவபெருமானே தனது ஜடாமுடியில் உள்ள சந்திர கிரகணங்களால் உருவாக்கிய ஸ்படிக லிங்கமாகிய சந்திர மௌலீஸ்வரருக்கும் பூஜைகள் நடந்து கொண்டிருக்க வேண்டும். பின் ஹிரண்யவர்மன் காலத்தில் செப்புப் படிமம் ( இது செப்பறை ஐதீகத்துடன் ஒத்து செல்கின்றது) செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கலாம்.

சிதம்பர இரகசியத்தை அறிந்தவர் யாருமில்லை.

Sundar said...

Quote அடியேனிடம் ஆங்கிலத்தில் ஒரு விளக்கம் உள்ளது. விரும்பினால் தங்கள் ஈ.மெயில் முகவரிக்கு அதை பதிவெடுத்து அனுப்பிவைக்கிறேன். தங்கள் விருப்பத்தையும் முகவரியையும் அளிக்கவும்.


My e mail : sudarshan05@gmail.com

Kailashi said...

தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கின்றேன்.

Kailashi said...

சுந்தர் ஐயா மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன், தங்கள் சந்தேகம் தெளிவுற்றதா?

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

கருவேலங்குளம் ஆலயத்திற்கு செல்லும் பாதையைக் காட்டினால் நலம். சமீபத்தில் திருச்செந்தூர் சென்றிருந்தபோது நான் கேட்ட நபர்கள் அனைவரும் சரியான பாதையக் காட்டவில்லை. அவர்களுக்குத் தெரியவில்லை போலும்.

Kailashi said...

பத்தமடை வழியாக நாகர்கோவில் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., சென்றால் கருவேலங்குளத்தை அடையலாம். இது திருநெல்வேலியிலிருந்து செல்லும் வழி. தூத்துக்குடியிலிருந்து செல்லும்வழியை விசாரித்து சொல்லுகின்றேன்.

Sundar said...

நீங்கள் அனுப்பிய மடல் கிடைத்தது, மிக்க நன்றி. முன்பு ஹிந்து பேப்பரில் படித்ததாக ஞாபகம். நீங்கள் அனுப்பியது அது தானா.? நீங்கள் குறிப்பட்ட இரண்டு விதமான படிமங்கள் இருக்கும் ஆலயங்களுக்கு உதாரணம் சொல்ல முடியுமா?

சுந்தரராஜன்

Kailashi said...

ஆம் ஐயா ஹிந்துவில் வந்த கட்டுரைதான். மேற்கூறிய தலங்களில் உள்ள நடராஜ மூர்த்தங்கள் ஸ்ரீசக்ர வடிவில் அமைந்துள்ளன, தற்போது வடிக்கப்படும் மூர்த்தங்கள் அறுகோண சக்கர வடிவில் அமைகின்றன.